search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஒருநாள் கிரிக்கெட்: லாதம், சவுத்தி அரை சதத்தால் நியூசிலாந்து 190 ரன்கள் சேர்ப்பு
    X

    முதல் ஒருநாள் கிரிக்கெட்: லாதம், சவுத்தி அரை சதத்தால் நியூசிலாந்து 190 ரன்கள் சேர்ப்பு

    தரம்சாலாவில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் லாதம், சவுத்தியின் அரை சதத்தால் நியூசிலாந்து 190 ரன்கள் சேர்த்துள்ளது.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று மதியம் 1.30 மணிக்கு இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா அறிமுக வீரராக இடம்பிடித்தார். நியூசிலாந்து அணியில் டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத கோரி ஆண்டர்சன், டிம் சவுத்தி ஆகியோர் இடம்பிடித்தனர்.

    நியூசிலாந்து அணியின் கப்தில் மற்றும் லாதம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஒவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசிய கப்தில் கடைசி பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அறிமுக போட்டியில் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தி பாண்டியா அசத்தினார்.

    அடுத்து கேப்டன் வில்லியம்சன் களம் இறங்கினார். இவர் 3 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது நியூசிலாந்து அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து லாதம் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். 7-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டெய்லர் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். டெய்லர் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.

    இதனால் 6.1 ஓவரில் 33 ரன்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து கப்தில், வி்ல்லியம்சன், டெய்லர் ஆகிய முக்கியமான விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 4-வது விக்கெட்டுக்கு லாதம் உடன் கோரி ஆண்டர்சன் ஜோடி சேர்ந்தார்.

    இந்தியாவின் அபார பந்து வீச்சால் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தார்கள். கோரி ஆண்டர்சன் 4 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரோஞ்சியை ரன் கணக்கை துவக்கவிடாமல் பாண்டியா பெவிலியின் திருப்பி அனுப்பினார். அப்போது நியூசிலாந்து 12.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் சேர்த்திருந்தது.

    19-வது ஓவரை பகுதி நேர பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் நீசத்தை 10 ரன்னுடனும், அடுத்த பந்தில் சான்ட்னெரை டக்கிலும் வெளியேற்றினார் ஜாதவ். இதனால் 65 ரன்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    ஒருபக்கம் விக்கெட் மளமளவென சரிந்தாலும் மறுமுனையில் லாதம் சிறப்பாக விளையாடினார். 8-வது விக்கெட்டாக  பிரேஸ்வெல் களம் இறங்கினார். லாதம் 30-வது ஒவரின் முதல் பந்தில் 1 ரன் எடுத்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். 77 பந்தில் 5 பவுண்டரியுடன் இந்த ரன்னைத் தொட்டார். பிரேஸ்வெல் 15 ரன்கள் எடுத்த நிலையில் மிஸ்ரா பந்தில் ஆட்டம் இழந்தார்.

    நியூசிலாந்து 106 ரன்களுக்குள் 8 விக்கெட்டை இழந்தது. அடுத்த இரண்டு விக்கெட்டுக்களையும் விரைவில் சரித்து விடலாம் என்று எண்ணிய இந்திய பந்து வீச்சாளர்களுக்கு 9-வது விக்கெட்டுக்கு லாதம் உடன் இணைந்த சவுத்தி அதிர்ச்சி கொடுத்தார். அவர் பவுண்டரி, சிக்சருமான விளாசினார்.

    லாதம் நிதானமாக நின்று அரைசதம் அடிக்க சவுத்தி அதிரடியாக விளையாடி 45 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 55 ரன்கள் குவித்தார். சவுத்தி 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ப்ரா பந்தில் கேட்ச் கொடுத்தார். அதை உமேஷ் யாதவ் பிடிக்க தவறினார். இதனால் சவுத்தி அரைசதம் அடித்தார்.

    லாதம் - சவுத்தி ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 58 பந்தில் 71 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. கடைசி விக்கெட்டாக சோதி களம் இறங்கினார். இதன்பின்னும் நிதானமாக விளையாடினால் சரியாகாது என்று நினைத்த லாதம் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். ஆனால் மறுமுனையில் சோதி 1 ரன்கள் எடுத்த நிலையில் மிஸ்ரா பந்தில் ஆட்டம் இழக்க நியூசிலாந்து அணி 43.5 ஓவரில் 190 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. லாதம் 98 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 79 ரன்கள் சேர்த்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் பாண்டியா, மிஷ்ரா ஆகியோர் தலா 3 விகெட்டும், உமேஷ் யாதவ், ஜாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    நியூசிலாந்துர் அணி 190 ரன்னில் சுருண்டதால் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×