search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுழற்பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தை தவறாக கணித்து விட்டனர்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் பதானி பேட்டி
    X

    சுழற்பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தை தவறாக கணித்து விட்டனர்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் பதானி பேட்டி

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் தங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தை தவறாக கணித்து விட்டதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் பதானி கூறியுள்ளார்.
    சென்னை :

    முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், தூத்துக்குடி பேட்ரியாட்சும் மோதின. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணி கவுசிக் காந்தி (59 ரன்), அபினவ் முகுந்த் (82 ரன், நாட்-அவுட்), கேப்டன் தினேஷ் கார்த்திக் (55 ரன்) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. மெகா இலக்கை நோக்கி தொடர்ந்து ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, சுழற்பந்து வீச்சாளர் கணேஷ் மூர்த்தி வீசிய முதல் ஓவரிலேயே தலைவன் சற்குணம், கேப்டன் சதீஷ் உள்பட 4 வீரர்களின் விக்கெட்டுகளை தாரை வார்த்தது. ஆரம்பத்திலேயே விழுந்த அடியால் நிமிர முடியாமல் போய் விட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18.5 ஓவர்களில் 93 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் மகுடத்தை சூடியது.

    தோல்விக்கு பிறகு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி: போட்டியின் முடிவை நிர்ணயிப்பதில் ஆடுகளத்தின் தாக்கம் முக்கிய பங்கு வகித்ததா?

    பதில்: இந்த தொடரில் இதுவரை நடந்த ஆட்டங்களிலேயே நேர்த்தியான ஆடுகளம் இது தான். நாங்கள் மந்தமாக செயல்பட்டு விட்டோம். முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், எல்லா வகையிலும் கடினமாகி விட்டது. ஆனால் தூத்துக்குடி அணியினர் மிக உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள்.

    கேள்வி: எது திருப்புமுனை?

    பதில்: 216 ரன்கள் இலக்கை துரத்திப்பிடிப்பது எளிதான காரியம் அல்ல. இப்படிப்பட்ட சூழலில் ரன் கணக்கை தொடங்கும் முன்பே 4 விக்கெட்டுகளை இழப்பது நல்ல நிலை கிடையாது. முதல் ஓவரில் இருந்தே அவர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டனர். எங்களது பந்து வீச்சு, பேட்டிங் எல்லாமே சொதப்பலாகி விட்டது. வகுத்த திட்டங்களும் களத்தில் எடுபடவில்லை. ஆனால் எல்லா பெருமையும் தூத்துக்குடி அணியையே சாரும். அபினவ் முகுந்த், கவுசிக் காந்தி, தினேஷ் கார்த்திக் ஆகியோரின் பேட்டிங் அருமையாக இருந்தது.

    கேள்வி: டாஸ் எப்படி?

    பதில்: இது போன்ற பெரிய போட்டிகளில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தொடரில் கூட 2-வது பேட் செய்த அணி (சேப்பாக்கம் மைதானத்தில்) 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்க ஒன்று. இது போன்ற போட்டிகளில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் டாசின் பங்கு நிச்சயம் முக்கியத்துவம் பெறுகிறது.

    கேள்வி: முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை இழந்தது குறித்து...?

    பதில்: 0-4 என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட பிறகு, எஞ்சிய பேட்ஸ்மேன்களிடம் ‘முடிந்த வரை ஆட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள், 10 ஓவருக்குள் 70 ரன்களை கடக்க முயற்சி செய்யுங்கள்’ என்று அறிவுறுத்தினோம். ஆனால் உண்மையில் இது ஒரு நல்ல ஆடுகளம். பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடியிருக்கலாம். ஆனால் அந்த தருணத்திலேயே, ஆட்டம் எங்களது கையை விட்டு போய் விட்டது.

    கேள்வி: உங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் பற்றி?

    பதில்: ஆடுகளத்தை எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் வேறு விதமாக கணித்து விட்டனர். அதாவது முந்தைய (அரைஇறுதி) ஆட்டத்தை போன்றே இன்றைய ஆட்டத்தின் ஆடுகளமும் (பிட்ச்) இருக்கும் என்று (தவறாக) நினைத்து விட்டனர். அதே சமயம், கடந்த ஆட்டத்திற்குரிய ஆடுகளத் தன்மையை விட இது இன்னும் சிறப்பாக இருந்தது என்பது என்னை போன்ற அனுபவசாலிகளுக்கு தெரியும். இந்த ஆடுகளத்தில் எங்களது பந்துவீச்சில் வித்தியாசத்தை காட்டியிருக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் எளிதில் எதிர் கொண்டு ஆடும் வகையில் பந்துவீசி விட்டனர். இது எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக போய் விட்டது. ஆனால் எங்களது பந்து வீச்சாளர்களுக்கு இது ஒரு படிப்பினை.

    கேள்வி: இந்த தொடரில் இருந்து எது போன்ற அம்சங்களை சாதகமாக எடுத்துக் கொள்கிறீர்கள்?

    பதில்: இறுதிப்போட்டிக்கு முன்பு வரை நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி இருந்தோம். 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று லீக் சுற்றில் முதலிடத்தை பிடித்தோம். இவை எல்லாம் சாதகமான விஷயங்கள். துரதிர்ஷ்டவசமாக, இறுதிப்போட்டியில் எங்களது செயல்பாடு மோசமாக அமைந்து விட்டது. தூத்துக்குடி அணியில் எல்.பாலாஜி, தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் தங்களது அனுபவத்தை பயன்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்தினர். ஆனால் எங்கள் அணியில் நிறைய பேர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு புதுசு. ஓய்வின்றி அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் ஆடியதால் வீரர்கள் சோர்ந்து அது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். எது எப்படியோ, இறுதியில் எங்களை விட தூத்துக்குடி வீரர்கள் அபாரமாக விளையாடி விட்டனர்.

    இவ்வாறு பதானி கூறினார். 
    Next Story
    ×