search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்துக்கு எதிராக மும்பை 431 ரன்கள் குவிப்பு - பவார், சூர்யகுமார் யாதவ் அபாரம்
    X

    பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்துக்கு எதிராக மும்பை 431 ரன்கள் குவிப்பு - பவார், சூர்யகுமார் யாதவ் அபாரம்

    நியூசிலாந்து அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ், கவுஸ்டப் பவார் ஆகியோரின் சதத்தால் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 431 ரன்கள் குவித்துள்ளது.
    இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் மும்பை அணிக்கெதிராக விளையாடி வருகிறது.

    நேற்று தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

    மும்பை அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு அந்த அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் டாம் லாதம் (55), வில்லியம்சன் (50), ராஸ் டெய்லர் (41), சான்ட்னெர் (45) ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள்.

    பின்னர் மும்பை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் மும்பை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் பிஸ்டா ரன்ஏதும் எடுக்காமல் அவுட்டானார். பவார் 5 ரன்னுடனும், அர்மான் ஜாபர் 24 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். அர்மான் 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரோகித் சர்மா 18 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 86 பந்தில் 9 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 103 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பவார் சரியாக 100 ரன்கள் அடித்து ரிட்டையர்டு மூலம் வெளியேறினார்.

    5-வது விக்கெட்டுக்கு கேப்டன் தாரேவுடன் லாட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. தாரே 53 ரன்களும், லாட் 86 ரன்களும் அடிக்க மும்பை அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 431 ரன்கள் குவித்துள்ளது.

    தற்போது வரை மும்பை அணி 107 ரன்கள் முன்னிலைப் பெற்றது. கடைசி நாளான நாளை மதிய உணவு இடைவேளை வரை இந்தியா அதிரடியாக விளையாடி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்து, அதன்பின் நியூசிலாந்து அணியை மாயாஜால சுழற்பந்தால் ஆல்அவுட் செய்தால் மும்பை அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. பெரும்பாலும் இந்த போட்டி டிராவில் முடியவே வாய்ப்புள்ளது.
    Next Story
    ×