search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியால் நட்சத்திர வீரர்கள் உருவெடுப்பார்கள்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சற்குணம்
    X

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியால் நட்சத்திர வீரர்கள் உருவெடுப்பார்கள்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சற்குணம்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியால் நிறைய நட்சத்திர வீரர்கள் உருவெடுப்பார்கள் என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்ஸ்மேன் தலைவன் சற்குணம் நம்பிக்கை தெரிவித்தார்.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் நெல்லை மாவட்டம் டி.கள்ளிகுளத்தை சேர்ந்த தலைவன் சற்குணம் இடம் பிடித்துள்ளார். துடிப்புமிக்க 30 வயது பேட்ஸ்மேனான தலைவன் சற்குணம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முதலாவது டிவிசன் லீக் ஆட்டத்தில் முச்சதம் அடித்த 3 வீரர்களில் ஒருவர் என்ற பெருமைக்குரியவர்.

    2013-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக ஆடிய அனுபவம் கொண்ட தலைவன் சற்குணம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில் ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது என்பது கூடுதல் நெருக்கடியாகும். அதேநேரத்தில் அந்த போட்டியில் விளையாடியதன் மூலம் ஜாம்பவான் வீரர்களுடன் பழகும் அரிய வாய்ப்பும், நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்ற அனுபவமும் கிடைத்தது. ஐ.பி.எல். மூலம் டேரன் சேமி (வெஸ்ட் இண்டீஸ்) சங்கக்கரா (இலங்கை), ஸ்டெயின் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிட்டியது. அவர்களிடம் இருந்து ஆட்டம் தொடர்பான நிறைய ஆலோசனை பெற்றேன். தற்போதும் அவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். டேரன் சேமி சென்னை வந்தால் எங்கள் வீட்டுக்கு வர தவறமாட்டார்.

    கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் உயர்ந்த நிலையை எட்ட முடியும். சிறந்த வீரராக நீடிக்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். சிறந்த வீரர்கள் தங்களது கடினமான உழைப்பாலும், துணிச்சலான ஆட்டத்தின் மூலம் நெருக்கடியை சமாளிப்பதாலும் தான் உயர்ந்த நிலையில் நீடிக்கிறார்கள். நாமும் கடினமாக உழைத்தால் உன்னத நிலையை எட்ட முடியும். 20 ஓவர் போட்டியை பொறுத்தமட்டில் நெருக்கடியை எப்படி கையாள்கிறோம் என்பது முக்கியமானது.

    ஐ.பி.எல். போட்டி நமது நாட்டில் பல நட்சத்திர வீரர்களை அடையாளம் காணவும், அவர்கள் அடுத்த நிலைக்கு முன்னேறவும் முக்கிய காரணமாக விளங்கி வருகிறது. இதேபோல் தமிழக பிரிமீயர் லீக் போட்டியின் மூலம் நிச்சயமாக நிறைய நட்சத்திர வீரர்கள் உருவெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

    20 ஓவர் போட்டியில் தொடர்ந்து கவனம் செலுத்துவதுடன், வருங்காலத்தில் சினிமா துறையில் ஈடுபடும் எண்ணமும் எனக்கு இருக்கிறது. எனது அண்ணன் கரிகாலன் நடிகர் என்பதால் திரை உலகுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. படத்தில் நடிப்பது தொடர்பாக இயக்குனர் ஹரியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.

    மேற்கண்டவாறு தலைவன் சற்குணம் தெரிவித்தார்.
    Next Story
    ×