என் மலர்

  செய்திகள்

  கைப்பந்து குடும்பத்தில் இருந்து உருவான பேட்மிண்டன் புயல்
  X

  கைப்பந்து குடும்பத்தில் இருந்து உருவான பேட்மிண்டன் புயல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாய்னா நேவாலுக்கு நிகராக விளையாட முடியும் என்பதை பி.வி.சிந்து நிரூபித்து காட்டி விட்டார் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
  இந்தியாவில் பேட்மிண்டன் அரங்கில் சாய்னா நேவால் ‘சுனாமி’ அடித்துக்கொண்டிருந்த போது, சூறாவளியாக பிரவேசித்தவர் தான் பி.வி.சிந்து. சர்வதேச போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து தனக்கு என்று ஒரு இடத்தை நிலை நிறுத்திக்கொண்டார். சாய்னா நேவாலுக்கு நிகராக தன்னாலும் விளையாட முடியும் என்பதை நிரூபித்து காட்டி விட்டார் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

  ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று புதிய அத்தியாயம் படைத்திருக்கும் சிந்து யார்? அவரது மறுபக்கம் என்ன என்பதை பார்க்கலாம்.

  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசிக்கும் சிந்துவின் குடும்பம் இயற்கையாகவே விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டது. அவரது தந்தை பி.வி.ரமணா முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர். கைப்பந்து போட்டிக்கு அளித்த பங்களிப்புக்காக அர்ஜூனா விருது பெற்றவர். தாயார் பி.விஜயாவும் கைப்பந்து வீராங்கனை தான்.

  விஜயா, விஜயவாடாவில் பிறந்தாலும் சில ஆண்டுகள் குடும்பத்தினருடன் சென்னை தியாகராயநகரில் வசித்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே விஜயா முடித்தார். தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக 1977 ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை தேசிய போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். சிந்துவின் தாத்தா பிரம்மய்யா தெலுங்கு பட அதிபர் ஆவார்.

  இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் திவ்யா டாக்டர். கணவருடன் அமெரிக்காவில் குடியேறி விட்டார். 2-வது மகள் தான் பி.வி. சிந்து.

  சிறு வயதில் பயிற்சிக்காக சிந்துவை உள்விளையாட்டு அரங்குக்கு அவரது பெற்றோர் அழைத்து செல்வார்கள். ஆனால் சிந்துவின் மனதில் கைப்பந்து மீது நாட்டம்வரவில்லை. அதே உள்விளையாட்டு அரங்கில் பக்கத்தில் சிலர் ஜாலியாக ஆடிக்கொண்டிருந்த பேட்மிண்டன் தான் அவரை கவர்ந்தது. அது முதல் பேட்மிண்டன் ராக்கெட்டை எடுத்து சும்மா விளையாடிக் கொண்டிருப்பார். 2001-ம் ஆண்டு ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் பட்டத்தை இந்திய வீரர் கோபிசந்த் கைப்பற்றிய போது, வெகுவாக ஈர்க்கப்பட்ட சிந்து, ‘இனி பேட்மிண்டன் தான் வாழ்க்கை’ என்ற முடிவுக்கு வந்தார்.

  ‘நம்மை போன்றே கைப்பந்து நட்சத்திரமாக உருவாக வேண்டும்’ என்று அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தவில்லை. மகளின் விருப்பத்திற்கே விட்டு விட்டனர். ‘நான் பேட்மிண்டன் விளையாட ஆசைப்பட்ட போது எனது மனதை மாற்றக்கூட எனது பெற்றோர் முயற்சிக்கவில்லை’ என்று சிந்துவே பெருமையாக கூறுவது உண்டு.

  சிந்து பேட்மிண்டன் ஆடத் தொடங்கிய போது அவரது வயது 8½. பேட்மிண்டனில் தனி கவனம் செலுத்த கோபிசந்தின் பயிற்சி அகாடமியில் சேர்த்து விட்டனர். அப்போது செகந்திரபாத்தில் வசித்ததால் பயிற்சி மையத்திற்கு வருவதற்கு தினமும் 56 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டி இருந்தது. சிந்துவின் அலைச்சலைப் பார்த்து பரிதாபப்பட்ட அவரது பெற்றோர் பயிற்சி மைய பகுதிக்கு தங்கள் வீட்டை மாற்றினர்.

  கோபிசந்தின் பட்டறையில், பட்டை தீட்டப்பட்ட சிந்து படிப்படியாக பேட்மிண்டன் தொழில்நுட்பங்களை கற்றார். பள்ளி, ஜூனியர் அளவிலான போட்டிகளில் பங்கெடுத்தார்.

  சிந்துவின் முன்மாதிரி, பிடித்த பேட்மிண்டன் வீரர் எல்லாமே கோபிசந்த் தான். அவரது வார்த்தெடுப்பில் கச்சிதமான ஒரு பேட்மிண்டன் மங்கையாக 2011-ம் ஆண்டில் வெளி உலகுக்கு அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு ஆசிய ஜூனியர் போட்டியில் வெண்கலமும், காமன்வெல்த் இளையோர் போட்டியில் தங்கமும் வென்றார். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகளிலும் பதக்கத்தை பெற்றார்.

  என்றாலும் 2013-ம் ஆண்டு சீனாவில் நடந்த உலக பேட்மிண்டனில் வெண்கலத்தை வென்ற போது தான் விளையாட்டு ஆர்வலர்கள், ரசிகர்களின் பார்வை ஒட்டுமொத்தமாக சிந்துவின் பக்கம் திரும்பியது. உலக பேட்மிண்டனில் முத்திரை பதித்த முதல் இந்திய வீராங்கனையாக மின்னினார்.

  2014-ம் ஆண்டு மீண்டும் உலக பேட்மிண்டனில் வாகை சூடி, இந்த போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற மகத்தான சாதனையை மேலும் அழுத்தமாக பதிய வைத்தார். இந்தோனேஷிய போட்டி, மலேசிய மாஸ்டர்ஸ், மக்காவ் ஓபன் ஆகிய சர்வதேச தொடர்களிலும் பட்டம் வென்று அசத்தினார்.

  இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக இப்போது ரியோ ஒலிம்பிக் பதக்கம் அமைந்திருக்கிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று புகழின் உச்சத்துக்கே சென்று விட்ட சிந்து, தனது குருநாதர் கோபிசந்தின் கனவையும் நனவாக்கி இருக்கிறார்.

  தன் உடலை உறுதியாக வைத்துக்கொள்வதற்காக இனிப்புகளையும், சாக்லெட்டுகளையும் சிந்து தொடுவதே இல்லை. காபி குடிக்கும் பழக்கமும் கிடையாது. ஐதராபாத் பிரியாணி என்றால் கொள்ளை பிரியம்.

  வெளிநாடு போட்டிகளில் விளையாடும் போது நேரம் கிடைத்தால் ‘ஷாப்பிங்’ சென்று ஏதாவது பரிசு வாங்கி வருவது சிந்துவின் வழக்கம். ஆனால் இந்த முறை அதை எல்லாம் விட உயர்ந்த பரிசாக ஒலிம்பிக்கில் பதக்கத்தை வாங்கி விட்டார். ‘ஒரு பெற்றோருக்கு இதை விட என்ன பெருமை வேண்டும்’ என்று நெகிழ்ச்சியில் வினவுகிறார், அவரது தந்தை ரமணா.
  Next Story
  ×