search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை ரியோவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்
    X

    முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை ரியோவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்

    தென்ஆப்பரிக்கா கிரிக்கெட் அணிக்காக விளையாடிய முன்னாள் வீராங்கனை சன்னெட்டே வில்ஜோன் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணியில் கடந்த 2000-ம் ஆண்டு இடம் பிடித்தவர் சன்னெட்டே வில்ஜோன். இவர் 2002-ம் ஆண்டு வரை 17 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார்.

    சிறந்த ஆல் ரவுண்டரான இவர் 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் விளையாடியுள்ளார். முதல் இன்னிங்சில் 17 ரன்னும், 2-வது இன்னிங்சில் 71 ரன்னும் சேர்த்தார்.

    தென்ஆப்பிரிக்கா அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பின்னர், கிரிக்கெட்டிற்கு முழுக்கு போட்டுவிட்டு தடகளத்தில் ஆர்வம் காட்டினார். ஈட்டி எறிதல் போட்டியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவர், தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்தார்.

    லண்டனில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் நான்காவது இடம்பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

    ஆனால், தற்போது ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 64.92 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். குரோசியா வீராங்கனை 66.18 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

    இதன்மூலம் கிரிக்கெட்டில் இருந்து தடகளத்திற்கு திரும்பி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெயரை சன்னெட்டே வில்ஜோன் பெற்றுள்ளார்.
    Next Story
    ×