என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.வி.சிந்து தங்கம் வெல்வாரா? - ஸ்பெயின் வீராங்கனையுடன் இன்று பலப்பரீட்சை
    X

    பி.வி.சிந்து தங்கம் வெல்வாரா? - ஸ்பெயின் வீராங்கனையுடன் இன்று பலப்பரீட்சை

    ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் பெண்கள் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து ஸ்பெயின் வீராங்கனையுடன் இன்று மோதுகிறார். அவர் 120 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்கி பி.வி.சிந்து தங்கம் வென்று முத்திரை பதிப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    ரியோ டி ஜெனீரோ:

    ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து புதிய வரலாறு படைத்தார். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதன்மூலம் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார்.

    இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் 2-வது பதக்கம் ஆகும். மல்யுத்தத்தில் அரியானா வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலம் பெற்றுக் கொடுத்து இருந்தார்.

    பேட்மின்டன் போட்டியில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா நேவால் மீது தான் அனைவரது எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அவர் 2-வது சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் பி.வி.சிந்து மிகவும் சிறப்பாக செயல்பட்டு கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதில் இடம் பிடித்தார். போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அவர் அபாரமாக விளையாடி வருகிறார்.

    தெலுங்கானாவை சேர்ந்த 21 வயதான பி.வி.சிந்து உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளார். அவர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் 8-ம் நிலை வீராங்கனையையும், கால்இறுதியில் இரண்டாம் நிலை வீராங்கனையையும் தோற்கடித்தார்.

    நேற்று நடந்த அரை இறுதியில் ஜப்பானை சேர்ந்த 6-வது வரிசையில் உள்ள ஒகுகராவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை பி.வி.சிந்து படைத்தார். அவர் இறுதிப்போட்டியில் உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்திக்கிறார். இறுதிப் போட்டி இன்று மாலை 6.55 மணிக்கு நடக்கிறது.

    கரோலினாவை வீழ்த்தி பி.வி.சிந்து தங்கம் வெல்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று இருந்தார்.

    கரோலினாவை வீழ்த்துவது பி.வி.சிந்துவுக்கு மிகவும் சவாலானதே. ஆனால் மிகவும் சிறப்பாக விளையாடி வருவதால் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். இருவரும் மோதிய போட்டியில் சிந்து 2 ஆட்டத்திலும், கரோலினா 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    120 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்கி பி.வி.சிந்து தங்கம் வென்று முத்திரை பதிப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×