search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டாள்தனமான 100 மீட்டர் பைனல் அட்டவணை: போட்டி அமைப்பாளர்கள் மீது உசைன் போல்ட் சாடல்
    X

    முட்டாள்தனமான 100 மீட்டர் பைனல் அட்டவணை: போட்டி அமைப்பாளர்கள் மீது உசைன் போல்ட் சாடல்

    100 மீட்டர் ஓட்டத்திற்கான இறுதிப் போட்டி மற்றும் அரையிறுதி போட்டி ஆகியவற்றிற்கான இடைவெளி மிகவும் குறைவாக இருந்தது என்று உசைன் போல்ட் குற்றம்சாட்டியுள்ளார்.
    பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. உலக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 100 மீட்டர் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உசைன் போல்ட் 9.81 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார்.

    ஏற்கனவே 9.58 வினாடிகள் கடந்து சாதனைப் படைத்துள்ளவர் போல்ட். இதுதான் இதுவரை உலக சாதனையாக இருக்கிறது. பிரேசில் ஒலிம்பிக்தான் தனது கடைசி ஒலிம்பிக் தொடராக இருக்கலாம் என்று போல்ட் குறிப்பிட்டு வருகிறார். இதனால் முடிந்த அளவு சிறந்த ஓட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணினார். ஆனால், போட்டியின் அட்டவணை அதற்கு தகுந்த வகையில் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    அரையிறுதி போட்டி முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் இறுதிப் போட்டி தொடங்கப்பட்டு விட்டது. இதனால் சரியான வேகத்தில் தன்னால் ஓட முடியவில்லை என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார். அரையிறுதியில் 9.86 வினாடிகளில் கடந்த அவர், இறுதிப் போட்டியில் 9.81 வினாடிகள் எடுத்துக் கொண்டார்.

    இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில் ‘‘யார் இந்த அட்டவணையை முடிவு செய்தது என்று எனக்கு தெரியவில்லை. இது உண்மையிலேயே முட்டாள் தனம். இதனால்தான் ஓட்டம் மெதுவாக இருந்தது. ஒரு போட்டியில் ஓடி முடித்துவிட்டு உடனடியாக அடுத்த போட்டிக்கு தயார் ஆனதால் மீண்டும் அங்கே வேகமாக ஓட வழியில்லாமல் போனது.

    பயிற்சி எடுத்துக் கொள்ளும் இடத்திலேயே நான் முதன்முறையாக ஜாக்கிங் செய்து இறுதிப் போட்டிக்கு தயார் ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தகுதிச் சுற்றைவிட அரையிறுதி சிறப்பாக அமைந்தது’’ என்றார்.

    இறுதிப் போட்டியில் சுமார் 70 மீட்டர் வரை உசைன் போல்ட் பின்தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் சிறப்பாக செயல்பட்டு 3-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றார்.
    Next Story
    ×