என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய மக்களிடம் மன்னிப்பு கோரிய தீபா கர்மாகர்
    X

    இந்திய மக்களிடம் மன்னிப்பு கோரிய தீபா கர்மாகர்

    தீபா கர்மாகர் தனது டுவிட்டர் பக்கத்தில் எனது அன்பான 130 கோடி இந்திய மக்களே உங்களது கனவை என்னால் நனவாக்க முடியவில்லை என்று மன்னிப்பு கோரியுள்ளார்.
    ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற திரிபுராவை சேர்ந்த 23 வயதான தீபா கர்மாகர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ‘வால்ட்’ பிரிவில் தகுதி சுற்றில் 8-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சரிப்படுத்தியதுடன், புதிய வரலாறும் படைத்தார்.

    தீபா கர்மாகர் பதக்கம் வெல்லாவிட்டாலும் உடல் திறமைக்கும், மன உறுதிக்கும் கடும் சோதனையாக விளங்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார். தீபா கர்மாகர் வெளிநாடுகளில் பயிற்சி எதுவும் பெறாமலே இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை மங்கையாக கருதப்படும் தீபா கர்மாகர் 2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கமும், கடந்த ஆண்டில் நடந்த உலக போட்டியில் 5-வது இடமும் பிடித்து இருந்தார்.

    இதற்கிடையில் தீபா கர்மாகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது அன்பான 130 கோடி இந்திய மக்களே. உங்களது கனவை என்னால் நனவாக்க முடியவில்லை. இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நடந்து முடிந்தது குறித்து (தோல்வி) என்னை நானே பழித்து கொள்வதை நிறுத்தமாட்டேன்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    தீபா கர்மாகரின் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஜிம்னாஸ்டிக்சில் எந்தவொரு இந்தியரும் செய்யாத சாதனையை புரிந்து இருக்கும் தீபா கர்மாகருக்கு, 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றவரான அபினவ் பிந்த்ரா உள்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    ‘நீங்கள் தான் எங்களது ஹீரோ’ என்று அபினவ் பிந்த்ரா கருத்து தெரிவித்துள்ளார். ‘ஜிம்னாஸ்டிக்சுக்கு எந்தவித உள்கட்டமைப்பு வசதியும் இல்லாத நாட்டில் உங்களது திறமை மிகப்பெரிய அருமை’ என்று ஷேவாக் கூறியுள்ளார். ‘தீபா கர்மாகர் நீங்கள் எங்கள் எல்லோரையும் பெருமைப்பட வைத்து இருக்கிறீர்கள்’ என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×