என் மலர்
செய்திகள்

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை தீபா கர்மகர் 4-வது இடம்
ரியோ டி ஜெனீரோ:
ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக் இறுதிப்போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை பெற்றவர் தீபா கர்மகர்.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 23 வயதான அவர் ஆர்டிஸ்டிக் ஆல்ரவுண்டு பிரிவில் 51-வது இடத்தை பிடித்தார்.
ஆர்டிஸ்டிக் வால்ட் பிரிவில் தீபா கர்மகர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்து இருந்தார்.
அவர் பங்கேற்ற வால்ட் பிரிவு இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு நடந்தது. இதில் தீபாகர்மகர் மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார். அவர் 15.066 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார். 0.15 புள்ளிகளில் அவர் பதக்க வாய்ப்பை இழந்தார்.
அமெரிக்காவை சேர்ந்த ஹிமோன் பைல்ஸ் தங்கப் பதக்கமும் (15.966 புள்ளிகள்), ரஷிய வீராங்கனை மரியா பசேகா வெள்ளியும் (15.253), சுவிட்சர்லாந்தை சேர்ந்த கியூலியா வெண்கலமும் (15.216) பெற்றனர்.
தீபா கர்மகர் பதக்கம் வெல்லா விட்டாலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்தியர்களின் உள்ளங்களை கவர்ந்தார். சிறிய தொழில் நுட்ப தவறுகளால் அவருக்கு பதக்கம் கிடைக்காமல் போனது. இதற்கு பயிற்சியாளரின் அணுகுமுறையே காரணம். இளம் வீராங்கனையான அவருக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் வைத்து இருந்ததால் இதை விட அவர் முன்னேற்றம் கண்டு இருப்பார்.
ஜிம்னாஸ்டிக் ஆர்டிஸ்டிக் வால்ட் பிரிவில் 4-வது இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்தது குறித்து தீபாகர்மகர் கூறியதாவது:-
நான் 15.016 புள்ளிகள் பெற்றுள்ளேன். இது எனது மிகப்பெரிய ஸ்கோராகும். இதனால் மிகவும் திருப்தியாக இருக்கிறேன். பதக்கம் கிடைத்து இருந்தால் இதை விட சிறப்பாக இருந்து இருக்கும். எனது செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் இதுவாகும். மற்ற வீராங்கனைகள் அனுபவம் பெற்றவர்கள். எனவே எனக்கு வருத்தம் இல்லை.
அடுத்த 4 ஆண்டுகளுக்கு பிறகு (2020) ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது இலக்காகும்.
இவ்வாறு தீபா கர்மகர் கூறியுள்ளார்.






