என் மலர்tooltip icon

    செய்திகள்

    பளுதூக்குதலில் கஜகஸ்தான் வீரருக்கு தங்கம்: சதீஷ் குமாருக்கு 11-வது இடம்
    X

    பளுதூக்குதலில் கஜகஸ்தான் வீரருக்கு தங்கம்: சதீஷ் குமாருக்கு 11-வது இடம்

    ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 77 கிலோ உடல் எடைப்பிரிவில் கஜகஸ்தான் வீரர் நிஜத் ரஹிமோவ், மொத்தம் 379 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
    ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 77 கிலோ உடல் எடைப்பிரிவில் கஜகஸ்தான் வீரர் நிஜத் ரஹிமோவ், மொத்தம் 379 கிலோ எடை தூக்கி (ஸ்னாச் 165 கிலோ, கிளன் அண்ட் ஜெர்க் பிரிவு 214 கிலோ) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதில் கிளன் அண்ட் ஜெர்க் பிரிவில் அவர் தூக்கிய 214 கிலோ உலக சாதனையாகும். ஊக்கமருந்து சர்ச்சையால் 2008, 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 5 தங்கப்பதக்கத்தை பறிகொடுத்துள்ள கஜகஸ்தானுக்கு நடப்பு ஒலிம்பிக்கில் கிடைத்த முதல் மகுடம் இதுவாகும்.

    நிஜத் ரஹிமோவும் 2013-ம் ஆண்டு ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 2 ஆண்டுகள் தடையை அனுபவித்தவர் தான். அது மட்டுமின்றி இவர் அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்தவர். அந்த நாட்டுக்காக விளையாடிய ரஹிமோவ் பிறகு கஜகஸ்தானுக்கு இடம் பெயர்ந்தார். தற்போது கஜகஸ்தானுக்காக போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

    சீனாவின் லு ஜியாவ்ஜூன் 379 கிலோவுடன்(ஸ்னாச் 177 கிலோ, கிளன் அண்ட் ஜெர்க் 202 கிலோ) 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கமும், எகிப்து வீரர் முகமது இஹாப் 361 கிலோவுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். ஆண்கள் பளுதூக்குதலில் 1948-ம் ஆண்டுக்கு பிறகு பதக்கம் வென்ற முதல் எகிப்து வீரர் என்ற சிறப்பை முகமது இஹாப் பெற்றார்.

    எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் இறங்கிய இந்திய வீரர் சதீஷ்குமார் 329 கிலோ தூக்கி ஏமாற்றம் அளித்தார். 14 பேரில் அவர் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் தேசிய சாதனையாக 336 கிலோ எடை தூக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×