search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அமெரிக்காவில் விநோத சட்டங்கள்!- என்.சி. மோகன்தாஸ்
    X

    அமெரிக்காவில் விநோத சட்டங்கள்!- என்.சி. மோகன்தாஸ்

    • ஆறு , நதி , குளம் என எங்கும் எவரும் நேராய் போய் மீன் பிடித்து விட முடியாது.
    • மான்களோ, காட்டுப் பன்றிகளோ பெருத்து விட்டால் அரசாங்கமே போய் வேட்டையாடுங்கள்...! என அனுமதிக்கும்.

    அமெரிக்காவின் சட்ட திட்டங்கள் கடுமை என்றாலும் கூட, அவற்றில் சில சட்டங்கள் வினோதமும் கூட! அதில் ஒன்று முடி திருத்தம்!

    நம்மூரில் எளிதாய் நடப்பவைகள் கூட அங்கு விலை அதிகம். காய்கறி, மளிகை, துணிகள் முதல் காலனிகள் வரை யம்மாடி! மருத்துவத்துக்கு.. யம்மம்மா! கார் வாஷுக்கு எவ்ளோ தெரியுமா... 24 ஆயிரம் ரூபாய்!

    பணம் ஒரு பக்கமிருக்க, ஒவ்வொன்றிற்கும் அப்பாயின்மென்ட் என்பது மகா ரோதனை !

    அதனால் அமெரிக்கா செல்பவர்கள் உடல்நலம் பரிசோதித்து, வேண்டிய மருந்துகள், உபயோகிக்கும் பொருட்கள் என கையோடு எடுத்துச் செல்வர்.

    முடிவெட்ட அங்கு ரூபாய் 2000 என்பதால் இங்கேயே (ஒட்ட) வெட்டிக் கொண்டு செல்பவர்களும் உண்டு. (ஹி..ஹி-அடியேனும்!)

    இம்முறை அதையும் மீறி முடி வளர்ந்துவிட யோகிபாபுவுக்கு போட்டி வேண்டாம். காசு போனாலும் பரவாயில்லை என்று ஒரு வழியாய் மனதை தேற்றிக் கொண்டேன். ஆனால் அப்பாயின்மென்ட் இழுத்தடித்தது.

    அப்புறம் எங்கள் மாப்பிள்ளை வசிக்கும் காலனியிலேயே வீட்டில் வைத்து வெட்டுகிறார்கள் என்று கேள்விப்பட்டு, அப்பாயின்மென்ட் வாங்கிவிட்டேன்!

    அவர் ரஷ்ய பெண்ணாம். வீட்டில் அனைத்து வசதிகளும் வைத்து மிகச் சிறப்பாக மிக நேர்த்தியாக வெட்டிவிட்டார். கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் , பணிவாக பக்குவமாக!

    இதுவே அப்பாயின்மென்ட் எடுத்து கடைக்கு சென்றால் கூட படுத்தி எடுத்து விடுவர். மனிதாபிமானமே இல்லாத வகையில் புல் வெட்டுவது போல மிஷின் போட்டு விரட்டியடிப்பர்.

    இந்த ரஷ்ய அக்காவிடம் பேச்சு கொடுக்க (முடி திருத்தர்கள் பேச சளைப்பதில்லையே!) சில விஷயங்களை சொல்லி விசனப்பட்டார்!

    பாஷை பிரச்சினையில் அது புரியாமல் போக நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பியூட்டிஷின்களான ரோஷினி மற்றும் ரம்யாவிடம் விசாரித்த போது அம்மாடியோவ்!

    ஒரு முடிவெட்டும் தொழிலுக்கு இம்புட்டா என்கிற மலைப்பு!

    அமெரிக்கர்களின் தோல் ரொம்ப மிருதுவானதாம். சின்னச் சின்ன செதுக்கங்கள் கூட நச்சு பண்ணி விடக் கூடுமாம்.

    அதனால் ஏகப்பட்ட கெடுபிடியாம். பியூட்டிஷினுக்கு ஒரு வருட படிப்பு! முடி திருத்தத்திற்கு 8 மாதம்! அதுவும் நேராய் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும். படிப்போடு பிராக்டிகல் கிளாஸ்களும் உண்டு!

    அதன் பின் ஒன்று எழுத்து அடுத்து பிராக்டிகல் என இரண்டு பரீட்சைகள்! அவைகள் கடுமையாக இருக்கும். எந்த சால்சாப்புக்கும் அங்கே இடம் கிடையாது.

    அவற்றில் பாஸ் செய்தால் தான் லைசன்ஸ்! லைசன்ஸ் பெற்றாலும் கூட யாரும் உடனே சொந்தமாய் தொழிலில் இறங்கிவிட முடியாது.

    அனுமதி பெற்றுள்ள சலூனில் குறிப்பிட்ட காலம் பணிபுரிந்தாக வேண்டும். நம்ம ஊரு போல ஒரு கத்திரிக்கோலை தொடர்ந்து பலருக்கும் உபயோகிக்க முடியாது. சானிடைஸ் செய்யணும். தரமான கிரீம்களை பயன்படுத்தனும்.

    இந்த லைசன்ஸ் எடுக்க செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா...? ரூபாய் 25 லட்சம்!

    இந்த தொகைக்கு நம்மூர் அரசு கல்லூரியில் மருத்துவம் அல்லது பொறியியல் பட்டமே பெற்று விடலாமே!

    கையோடு அங்குள்ள இன்னொரு லைசன்ஸ் சமாச்சாரத்தையும் சொல்லத் தோன்றுகிறது. அது மீன்பிடிப்பு !

    ஆறு , நதி , குளம் என எங்கும் எவரும் நேராய் போய் மீன் பிடித்து விட முடியாது. அதற்கும் இங்கு லைசென்ஸ் வேண்டும். மீன்பிடிப்பதற்கென்று ஒரு இதம் பதம் இருக்கின்றது. இங்கிதம்! சட்ட திட்டம்! கட்டுப்பாடுகள்!

    அவைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். மீன்களின் அளவு , சீதோஷ்ண நிலை இவற்றை பொறுத்து அது வேறுபடும்.

    கடல் மீன்களை பிடிக்கமட்டும் பிரச்சனை இல்லை. படகுகளுக்கு தனி வரைமுறைகள் உண்டு. மீன்பிடிப்பு என்பது அங்கு விலை உயர்ந்த பொழுதுபோக்கு.

    ஆமாம்.. இதற்காக லைசன்ஸ்க்கு மனு தாக்கல் செய்யணும். அதற்கு குறைந்தபட்சம் ரூபாய் 5 ஆயிரம். ஒரு மாதம் , வருடம் என அந்த கட்டணம் எகிறும்.

    வெயில் நேரங்களில் மீன்கள் தண்ணீருக்கு அடியில் சென்று விடும். அதனால் மீன்பிடிக்க உகந்த நேரம் மாலை தான். மீன் பிடிக்க வேண்டி பிரத்யேக தூண்டில்கள் உள்ளன. இதற்கான கடைகளுக்கு சென்றால் அவர்களே பயிற்சி தருவார்கள். லைசன்ஸ் எடுத்தும் தருவார்கள். தூண்டில் புழுக்களும் அங்கேயே கிடைக்கும்.

    அப்புறம் லைசன்ஸ் எடுத்துவிட்டால் போதும் என மீன்பிடித்துவிட முடியாது. அதற்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் முன்பதிவு அடிப்படையிலேயே போகவேண்டும்.

    பிடிக்கும் மீன்களையும் கூட நாம் எடுத்து வர முடியாது. ஆசை தீர பிடித்து பிடித்து திரும்ப நீரிலேயே விட்டுவிட்டு ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டும்.!

    மீன்கள் அதிகரிக்கும் போது அரசாங்கம் தெரிவிக்கும். அப்போது மீன்களை பிடித்து எடுத்துச் செல்லலாம்.

    அதுவும் கூட எத்தனை மீன்கள்-என்ன வகையான மீன்களை பிடிக்கிறோம்-எடுத்துச் செல்கிறோம் என கணக்கு கொடுக்க வேண்டும். அது கெட்டது போ!

    அதுபோல வேட்டையாடுவதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன.

    ஆதி காலத்தில் அமெரிக்காவிற்கு மனிதர்கள் வந்தபோது சாப்பாடு எதுவும் கிடையாது. மீன் மற்றும் மிருகங்களை வேட்டையாடி சுட்டுத் தான் சாப்பிட்டார்கள்.

    அந்த பழக்கம் இப்போது பொழுதுபோக்காக நடக்கிறது. இதற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம்.

    பறவைகள் மிருகங்கள் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி துப்பாக்கிகள்!

    வேட்டையையும் எந்த நேரத்திலும் செய்து விட முடியாது. இதற்காக காடுகளை பகுதி பகுதியாய் பிரித்து வைத்துள்ளனர். விடுமுறையிலோ வார இறுதி நாட்களிலோ அவர்கள்.... வேட்டையாடு...விளையாடு!

    துணைக்கு நாய்களை வைத்துக்கொண்டு கிளம்பிவிடுவர். காட்டிலேயே தங்குவதற்கு குடில்கள் உண்டு. மிருகங்களை சுடுவதற்கு பயிற்சி வேண்டும்.

    அவற்றை காலில் சுட்டுக் காயப்படுத்த கூடாது. சுட்டால் அவை சாக வேண்டும். அவற்றை எடுத்து வந்து புட்சரிடம் (வெட்டி தருபவர்கள்) கொடுத்து கூறு போடுவர். பிறகு பதப்படுத்துபவரிடம் (டாக்சி டெர்மிஸ்ட்) கொடுத்து வாங்கி வந்து குளிர்சாதனத்தில் வைத்து மாத கணக்கில் சாப்பிடுபவர்களும் உண்டு.

    மான் வேட்டை என்பது அங்கு மிகப் பிரபலம்!

    சமயத்தில் சாலைகளுக்கு குறுக்கே மான் வந்துவிட்டால் ஆபத்து. காரையே அது பதம் பார்த்து விடும்.

    அப்படி மானை தட்டி விட்டால்-உடன் அதிகாரிகளுக்கு தெரிவித்தாக வேண்டும். ஒரு வேளை தெரிவிக்காமல், அடுத்து வரும் கார் நபர் புகார் அளித்தால் போச்சு... தண்டனை தான்.

    அங்கே மான் வேட்டை பொதுவாக கூடாது. ஆனால் மான்களோ, காட்டுப் பன்றிகளோ பெருத்து விட்டால் அரசாங்கமே போய் வேட்டையாடுங்கள்...! என அனுமதிக்கும்.

    என்ன ஒரு வினோதம்!

    தொடர்புக்கு:-ncmohandoss@yahoo.com

    Next Story
    ×