search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அறம் செய்ய விரும்பு!
    X

    அறம் செய்ய விரும்பு!

    • முகம் தெரியாதவர்க்கும் முகமலர்ச்சியோடு தருவதே உண்மையான அறம் ஆகும்.
    • இதயமுள்ள மனிதன் எவனும் சக உயிர்களின் வருத்தம் கண்டு அவர்களுக்கு உதவ எப்போதும் காத்திருப்பான்.

    அவ்வையின் ஆத்திசூடி வழி அன்றாடம் வாழ்வியல் நடத்த விரும்பும் அன்பு வாசகர்களே! வணக்கம்.

    அறம் என்கிற பொளுக்கு இணையாக, சத்தியம், நேர்மை, ஒழுக்கம், தர்மம், வாய்மை, தானம், ஈகை, கொடை எனப் பலசொற்களை நேர்ப்படுத்தி நாம் விளக்கங்களை அளிக்கலாம். ஆயினும் செய்தல், வழங்குதல் என்னும் செயல்முறையில் வைத்துப் பார்க்கும்போது அறம் என்பதை தருமம், தானம், ஈகை, கொடை ஆகிய நிலைகளில் நெருக்கப்படுத்திப் பொருள் கொள்ளலாம்.

    'அறம் செய்க!' என்னும் கட்டளை வாக்கியத்தை ஔவையார், 'விருப்பத்தோடு அறம் செய்ய முனைக!' எனும் அறிவுரை வாக்கியமாக மாற்றி " அறம் செய்ய விரும்பு!" என்றிருக்கிறார் தமது ஆத்திசூடியில். அருள் சேர்க்கும் தவமும், பொருள் வழங்கும் தானமுமே உலகின் தலைமையான மாண்புகள் என்று சுட்டிக்காட்டும் வள்ளுவர், எதுவுமில்லாதவறியவர்களுக்கு, அவர்களுக்குத் தேவைப்படும் ஒன்றை வழங்குவதே ஈகை, தானம் என்கிறார்.

    'தருவது!' என்பதே மனமுவந்து, மகிழ்ச்சியோடு வழங்குவதாகும். தருபவரும் பெறுபவரும் மகிழ்வில் இணையும் அந்த ஈகைப் பொழுதில் இன்பம் இரட்டிப்பாகி விடுமாம். எப்படியென்றால் பொருள்களை, உதவியைத் தருபவர் விருப்பத்தோடு அந்தச் செயலைச் செய்வதால், அவரும் ஆனந்தத்தோடு இருப்பார்; அவற்றைப் பெறவருபவர்களும் தம்மிடம் இல்லாத பொருள் தமக்குக் கிடைக்கப் போகிறது எனும்போது அவர்களும் மகிழ்ச்சிப் பெருக்கில் களிப்பர். 'ஈத்துவக்கும் இன்பம்' என்று அறச்செயலைப் பெருமைப்படுத்துகிறார் வள்ளுவர்.

    அன்னதானம், கல்விதானம், சொர்ணதானம், ஆடைதானம் என தானங்கள் பலவகையாகத் திகழ்ந்தாலும், அடிப்படையாக வலியுறுத்தப் படுபவை, உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்று மட்டுமே. பூமியில் பிறந்து வாழும் மனிதர் ஒவ்வொருவரும் பசியில்லாத உணவையும், உடம்பை மறைக்கும் ஆடையையும், பாதுகாப்புடன் தங்கி வாழ வீட்டையும் பெறுவதற்கு உரிமையுடையவர்கள். அதனால்தான் பசித்திருக்கும் மனிதனுக்கு உணவு கொடுப்பவர்களை, உயிரையே தந்தவர்களாக உயர்ப்பித்துச் சொல்கிறது நமது பழந்தமிழ் இலக்கியம் (உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!).

    அறம் என்பதை ஒழுகலாறு என்கிற நிலையிலே பார்க்கும்போது, பொன், பொருள், செல்வம் என வைத்திருப்பவர்கள், எதுவுமற்ற ஏழைகளாம் ஏதிலிகளுக்கு, அவர்களுக்குத் தேவையானவற்றைத் தேவையானபொழுது பகிர்ந்து கொடுக்க வேண்டும். இதுவே வாழ்வியல் அறமாகும். வேண்டியவர்கள், உறவினர்கள் போன்றோருக்கு பொருள்கள் வழங்குவதும், உதவிகள் செய்வதும் தருமத்தின்கீழ் வராது; அவை கடமையின்கீழ் நின்று போகும். முகம் தெரியாதவர்க்கும் முகமலர்ச்சியோடு தருவதே உண்மையான அறம் ஆகும்.

    'ஆத்திசூடி' வழியாகத் தமிழ் எழுத்தின் முதல் எழுத்தைக் கற்க முனைகிற குழந்தைகளுக்கு ஔவையார் கற்பிக்க முனையும் முதல் அறமே,"அறம் செய்ய விரும்பு!" என்பதே ஆகும். அது என்ன அறம் செய்ய விரும்பு? அறம் செய்! என்று சுருங்கச் சொன்னால் விளங்கிக் கொள்ள முடியாதா?. செய்வதற்குமுன் அதற்கு விருப்பம்வேறு படவேண்டுமா? நல்ல கேள்விதான்.

    ஒரு நகரத்தின் நடுவே உள்ள ஒரு கோவிலில் ஒருநாள் நண்பகலில் ஒர் பேரதிசயம் நடந்தது. வானத்திலிருந்து ஒரு பெரிய தங்கத் தாம்பாளம் பறந்துவந்து அந்தக் கோவிலின் பிரகாரத்துக்குள் விழுந்தது. கோவில் அர்ச்சகர் உள்பட பலரும் ஆவலோடு ஓடிவந்து அந்தத் தங்கத் தாம்பாளத்தை எடுக்க முயற்சித்தனர். அப்போதும் ஒரு அதிசயம் நடைபெற்றது; அவர்களது யார் கை பட்டாலும் அந்தத் தங்கத் தாம்பாளம் பித்தளைத் தாம்பாளமாக மாறியது; கையை எடுத்தவுடன் தங்கமாக மாறியது. கூடியிருந்தவர்களுக்கு அந்தத் தாம்பாளம் புதிராக இருந்தது.

    அப்போது அந்தக் கோவிலின் கோபுரக் கலசத்திலிருந்து ஓர் அசரீரி ஒலித்தது. "வானத்திலிருந்து இங்கு வந்திருக்கும் அந்தத் தங்கத் தாம்பாளம் தர்மநெறி தவறாத ஒரு புண்ணியவானுக்கு உதவுவதற்காக வந்தது ஆகும். உங்களில் யாராவது தர்ம சிந்தனை உள்ளவராக இருந்து, அவர் போய் அந்தத் தாம்பாளத்தைத் தொட்டால், அது பித்தளையாக மாறாமல் தங்கமாகவே இருக்கும்!. அப்படிப்பட்ட அறமனம் உடையவர் வரும்வரை கோயில் மண்டபத்தில் இந்தத் தாம்பாளத்தை மக்கள் பார்வையில் படும்படி வைத்து விடுங்கள். யார் வேண்டுமானாலும் வந்து, அந்தத் தங்கத் தாம்பாளத்தைத் தொடலாம்; அது பித்தளையாக மாறாமல் இருந்தால் எடுத்துக்கொண்டு சென்று தரும காரியங்களுக்குப் பயன்படுத்தலாம்!".

    சுந்தர ஆவுடையப்பன்


    அன்று முதல் ஒரு மண்டபத்தில் பொதுமக்கள் பார்வையில் படும்படியாகவும், அவர்கள் கரங்களால் தொடும்படி வசதியாகவும் அந்தத் தாம்பாளம் வைக்கப் பட்டது; அதற்குத் தங்கத் தாம்பாள மண்டபம் என்றும் பெயர் சூட்டப்பட்டது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கடந்தோடிவிட்டன. தான தருமச் சிந்தனையுள்ள எந்த நல்ல மனிதனும் வந்து அந்தத் தாம்பாளத்தைத் தொடவேயில்லை.

    நாடெங்கும் தங்கத் தாம்பாளச் செய்தி பரவியது; மக்கள் கூட்டம் கூட்டமாய்ப் படையெடுத்துக் கோவிலுக்கு வந்தவண்ணமாக இருந்தனர். வந்தவர் யாரும் மூலவர் சன்னதி நோக்கிப் போகவில்லை; மாறாகத் தங்கத் தாம்பாள மண்டபத்திற்கு மட்டும்போய், பித்தளையாக மாறுகிறதா இல்லையா எனத் தொட்டுப்பார்த்துத் தொட்டுப்பார்த்துத் தோற்றுப்போய் ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    ஒருநாள், ஒரு கிராமத்து விவசாயி அந்தக் கோவிலுக்குச் சாமி கும்பிடுவதற்காக வந்தார். கூட்டம் முண்டியடித்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார். ஓர் ஆசாமி கோவிலுக்குள் நுழையும் பரபரப்பில், கோவில்வாசலில் உட்கார்ந்திருந்த கண்தெரியாத ஒரு பிச்சைக்காரரை மிதித்துத் தள்ளிவிட்டுச் சென்றதைப் பார்த்தார். பதறிப்போன விவசாயி, அந்தப் பிச்சைக்காரரைக் கோவிலுக்குள் ஒரு ஓரமாகத் தூக்கிப்போய் உட்கார வைத்துவிட்டு, "ஐயா! உங்களைப் போன்றவர்களுக்கு உதவ என்னிடம் காசு இல்லை; நான் ஒரு ஏழை விவசாயி! மன்னித்து விடுங்கள்!" என்று கூறிவிட்டு, சாமி சன்னதிக்குள் சென்றார்; அங்கே கூட்டமே இல்லை.

    அர்ச்சகர் தீபாராதனை காட்ட, மனமுருகி இறைவனிடம் பிரார்த்தனை செய்த ஏழை விவசாயி, "கடவுளே! நாட்டில் இல்லாதவர்கள் பெருகிக் கொண்டே போகிறார்கள்; இருப்பதை அடுத்தவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும் என உண்மையிலேயே நினைக்கிற என்னைப் போன்றவர்களும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். வாசலில் பார்த்த கண்தெரியாதவர் போன்றோர்க்கு உதவ மனம் ஆசைப்படுகிறது! ஆனால் பொருள் வசப்பட மறுக்கிறது! அருள் செய்!" என்று வேண்டிக்கொண்டார்.

    பிறகு அர்ச்சகரிடம் விவசாயி, ஏன் அந்த மண்டபத்தைச் சுற்றியே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது? என்று கேட்கத், தாம்பாளத்தட்டு விஷயத்தை அர்ச்சகர் சொன்னார். "ஏன் நீங்களும் சென்று அந்தத் தாம்பாளத்தைத் தொடக்கூடாது?" என்று கேட்டுவிட்டு விவசாயியைத் தங்கத் தாம்பாள மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார் அர்ச்சகர். அங்கே விவசாயிக்கு அதிசயம் காத்திருந்தது.

    அந்தத் தங்கத் தாம்பாளத்தை விவசாயி தொட்டதும், அது பித்தளையாக மாறவில்லை; தங்கமாகவே தங்கி விட்டது. அர்ச்சகர் உட்பட அங்கு கூடியிருந்த கூட்டத்தினர் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்தத் தாம்பாளத்தின் தங்கத்தை வைத்து, வெளியில் காத்திருக்கும் கண்தெரியாத பிச்சைக்காரர்கள் முதற் கொண்டு இல்லாதவர் எல்லோருக்கும் உதவிகள் செய்ய வேண்டும் என்று மனத்தில் நினைத்துக்கொண்டு கிளம்பினார் விவசாயி.

    ஆம்! அறம் செய்யப் பொருள் வேண்டுமே என்று நினைத்தார் அந்த ஏழை விவசாயி; பொருள் கிடைத்துவிட்டது. பலர் அறம் செய்ய வேண்டியிருக்கிறதே என்று பொருள்களை வேண்டா வெறுப்பாக வழங்குவர். அறம் செய்வதற்கும், பொருள்களை, உதவிகளை வழங்குவதற்கும் நல்லமனமும் விருப்பப்படும் கள்ளமில்லா முயற்சியும் இருந்தால் மட்டுமே போதும். வேண்டிய பொருள் வசதிகளும், செல்வவளமும் தாமாய் வந்து சேர்ந்து விடும்.

    இந்தத் தங்கத் தாம்பாளக் கதையில் ஓர் அழகான தத்துவமும் பொதிந்திருக்கிறது; யாரெல்லாம் உண்மையான விருப்பத்துடன் தந்து உதவ முன்வருகிறார்களோ அவர்களது பொருள்களெல்லாம் மதிப்புடைய தங்கத்தைப்போலப் பயன்களை வாரிவழங்கும். தர்ம சிந்தனை இல்லாதவர்கள் கைகளில் தங்கமே இருந்தாலும் அது பித்தளையைப் போலப் பயன்குறைந்து மதிப்பிழந்து போகும்.

    'கொடுத்தால் பெறலாம்' என்பது கொடுக்கல் வாங்கல் உலகில் பரவலாக வலியுறுத்தப்படும் ஒரு கோட்பாடு. பணத்தைக் கொடுத்துப் பொருள்களைப் பெறலாம். பொருள்களைக் கொடுத்துப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். உழைப்பைக் கொடுத்துப் பணத்தையோ பொருள்களையோ பெற்றுக் கொள்ளலாம். இவை சமூக நடைமுறையில் வணிகப் பயன்கொள்ளல் முறைகளுள் ஒன்று. இவை தவிர விதைத்துப் பெறுகிற விளைச்சல் முறையும் உண்டு. அது ஒன்று கொடுத்துப், பலவாகப் பெறும் கொடைமுறை. இம் முறை இயற்கையுடன் மனிதன் நடத்தும் கொடுக்கல் வாங்கல் முறை ஆகும். அது படைப்புச் சக்தியுடன் நடத்தி அன்பைக் கற்றுக்கொள்ளும் ஆனந்த முறை.

    அறம் செய்வது என்பது ஒன்றைக்கொடுத்து அதற்கு இணையாகவோ, குறைவாகவோ, அல்லது கூடுதலாகவோ எதையுமே எதிர்பார்க்காமல் செய்கிற கருணைமுறை. வருத்தப்படுகிற சக உயிரின் துயரத்தைத் துடைக்க, உணவாகவோ, உடையாகவோ, பொருளாகவோ, உதவியாகவோ தந்து, அவர்கள் அதைப்பெற்று, துயரங்களில் இருந்து வெளியேறி மகிழும் அழகைக் கண்குளிர மனம் குளிரக் கண்டுமகிழும் அமுத நிலை.

    நம் தமிழ்மரபில் வாழ்ந்த வள்ளல்களான பாரி, காரி, ஓரி, பேகன், அதியமான், ஆய், குமண வள்ளல் போன்றோர் வரலாற்றைப் படித்தால், அவர்கள் தங்களிடமிருந்த பொருள்வளத்தை முழுமன விருப்பத்தோடு வாரி வழங்கியவர்கள். இன்ன செய்தால் இன்ன கிடைக்கும் என்ற கணிதச் சமன்பாடு எதுவும் அவர்களிடம் இருந்ததாய்த் தெரியவில்லை.

    முல்லைக்குத் தேரையும் மயிலுக்குப் போர்வையையும், ஔவைக்கு நெல்லிக்கனி யையும் வழங்கியதில் பெரும்பொருள் சார்ந்த கொடைமரபு எதுவும் அடங்கியிருக்கவில்லை. முல்லைக்கொடி படர ஒரு சாதாரணக் குச்சியை வெட்டச்சொல்லி நட்டிருக்கலாம். ஊர்ந்து வந்த விலை உயர்ந்த தேரை நிறுத்திவிட்டுச் சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை. மயிலுக்கும் யாதேனுமொரு சாதாரணப் போர்வையைப் போர்த்தியிருக்கலாம்; ஔவைக்குத் தருவதற்கு நெல்லிக்காய் ஒன்றும் விலை உயர்ந்த விருதுப் பொருளுமல்ல.

    இவையெல்லாம் பொருள்மதிப்பற்றவை; ஆனால் அவற்றைச் செய்ததன் மூலம் சக உயிர்களுக்கு இரங்கிடும் செயல்மதிப்புடையனவாக வள்ளல்களை உயர்த்திவிட்டன. எல்லா உயிர்களையும் சமமெனப் பாவிக்கும் உயிரிரக்கக் கோட்பாடு, ஒரு மனிதனை இதயமுள்ள மனிதனாக்குகிறது. இதயமுள்ள மனிதன் எவனும் சக உயிர்களின் வருத்தம் கண்டு அவர்களுக்கு உதவ எப்போதும் காத்திருப்பான். அந்தக் காத்திருப்பே ஒவ்வொரு மனிதரையும் அறம் செய்ய விரும்பும் மனிதராக உயர்த்திப் புகழ் பெற வைக்கும்.

    தொடர்புக்கு 9443190098

    Next Story
    ×