என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

முன்னோர்களின் நல்லாசிகளைப் பெறுவது எப்படி?
- ஒருவர் பிறந்த மதம், பரம்பரை வம்சம், குலம், கோத்திரம் ஆகியவற்றை தெரிவிப்பது ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானமாகும்.
- பித்ருக்களின் நல்லாசிகளைப் பெற்றால் மனித குலம் சுகமாக வாழ முடியும் என்பது புலனாகிறது.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம். எல்லா பாக்கியங்களும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நூற்றுக்கு பதினைந்து சதவிகிதம் பேர்தான் எல்லா வளங்களையும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள். பெரும்பாலானோர் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலையிலேயே வாழ்கிறார்கள். சிலர் கடுமையாக உழைக்கிறார்கள். திட்டமிட்டு வாழ்கிறார்கள். ஆனாலும் வாழ்க்கையில் ஏற்றம் இல்லை. ஆனால், ஒரு சிலருக்கோ எந்தவித முயற்சியும் இல்லாமலே நினைத்ததெல்லாம் நடந்து விடுகிறது. இது போன்ற சில ஏற்ற இறக்கங்களுக்கு பித்ருக்கள் தோஷமே காரணம். பித்ருக்கள். என்பவர்கள் நமது குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள்.
ஒருவர் பிறந்த மதம், பரம்பரை வம்சம், குலம், கோத்திரம் ஆகியவற்றை தெரிவிப்பது ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானமாகும். ஒருவரின் சுய ஜாதகத்தில் ஒன்பதாமிடம், ஒன்பதாம் அதிபதி பலம் பெற்றால் முன்னோர்களின் நல்லாசி, நல்ல குரு அமைவது, புனித யாத்திரை, தந்தை வழி சொத்து, பங்காளி வகையான சொத்துகளை அனுபவிப்பது, யானை, குதிரை, உயர் ரக சொகுசு வாகனம் அமைவது, வேதசாஸ்திர சடங்குகளைக் கடைப்பிடிப்பது, உடன் இருப்பவர்களை சுகமாக வைத்துக்கொள்வது, பரம்பரை கவுரவத் தொழில், கூட்டுத் தொழில், வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றம், முக்தி போன்ற புண்ணிய பலன்கள் வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும். ஆக பித்ருக்களின் நல்லாசிகளைப் பெற்றால் மனித குலம் சுகமாக வாழ முடியும் என்பது புலனாகிறது.
எளிமையாக பித்ருக்களின் நல்லாசியை பெறுவது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம். பித்ரு தோஷம் என்பது ஒருவருடைய முன்னோர்கள் செய்த அதீத பாவ கர்ம வினைத் தொகுப்புக்களின் மிச்சம், அவர்களின் சந்ததிகளுக்கு பலாபலன்களாக வந்திருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
முன்னோர்கள் செய்த பாவங்கள், அடுத்தடுத்த தலைமுறையில் வாழ்பவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். அந்தப் பாவங்கள் அவர்களின் சந்ததிகளுக்கு பாதிப்புகளை கொடுத்துக் கொண்டே இருக்கும். ஜாதகர் தவறுகள் செய்யாமல் இருந்தாலும் பிரச்சனை தேடி வருகிறது என்றால் அது முன்னோர்களின் பாவங்களாகக் கூட இருக்கலாம். பூர்வீகச் சொத்துக்கள் எப்படி அடுத்தடுத்த தலைமுறைக்கு வருகிறதோ, அதேபோல பூர்வீக சாப பலன்களும் பின் தொடர்ந்து வரும். அதனால் தான் நமது முன்னோர்கள் புண்ணியம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை பாவம் சேர்த்து வைக்கக் கூடாது என்று சொல்லி வைத்தார்கள். அதே போல் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆன்மா நற்கதி அடைய உரிய வழிபாட்டு முறையை பின்பற்றா தவர்களையும் பித்ரு தோஷம் தாக்கும்.
ஒருவருடைய சுய ஜாதகத்தில் பித்ருக்கா ரகனான சூரியன் நிலை, ஜாதகருடைய முன்னோர்களின் நிலையினையும் பித்ரு தோஷத்தையும் உணர்த்தும். கால புருஷ 5ம் அதிபதி பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன், கால புருஷ 9-ம் அதிபதி பாக்கியாதிபதி குரு ஆகிய இரண்டும் நல்ல நிலையில் இருந்து லக்ன சுபர் சம்பந்தம் பெறுவது முன்னோர்களின் நல்லாசியை உணர்த்தும் கிரக அமைப்பாகும்.
சூரியன் நிழல் கிரகமான ராகு கேதுவுடன் இணைந்து இருப்பது, வலுப்பெற்ற சனியின் பார்வையில் சூரியன் இருப்பது, சூரியன் சனி பகவானுடன் இணைந்து இருப்பது, சூரியனும் சந்திரனும் இணைந்து அமாவாசை நிலையில் இருக்கும் பொழுது வலுப்பெற்ற சனியின் தொடர்பு அல்லது ராகுவின் தொடர்பில் இருப்பது, காலபுருஷ பாக்கிய அதிபதியான குரு ராகுவுடன் இணைந்து இருப்பது மேற்கண்ட அமைப்பிற்கு எவ்வித சுபர் தொடர்புமின்றி இருப்பது பித்ரு தோஷ அமைப்புகளாக சொல்லப்படுகின்றன. சுருக்கமாக சுய ஜாதக ரீதியாக 5,9ம் இடம் அதன் அதிபதி குரு, சூரியன் பாதிப்பு பித்ரு தோஷத்தை உணர்த்தக் கூடிய அமைப்புகளாக ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.
உளவியல் ரீதியாக பாவம் புண்ணியம், பற்றி ஆய்வு செய்தால் வாழும் காலத்தில் உரிய வசதி வாய்ப்புகள் இருந்தும் பெற்றோர்களை, தாத்தா, பாட்டியை வயோதிகர்களை, கஷ்டத்தில் வாழும் உடன் பிறந்தவர்களுக்கு உதவாததும் பித்ரு தோஷத்தை ஏற்படுத்தும். பாவம், புண்ணியம் என்ற அடிப்படையில் இது போன்ற காரணங்களை முன்வைத்தாலும் ஒருவரது வீட்டில் உள்ளே நுழைந்தவுடன் பித்ரு தோஷம் இருப்பதை உணரமுடியும். வீடு முழுவதும் அலங்கோலமாக குப்பைகள், அழுக்குத் துணிகள், தலைமுடிகள் இறைந்து கிடைப்பது, வீட்டின் சுவர்கள் வெள்ளை அடிக்காமல் இருப்பது, வீட்டில் உள்ள காலண்டர்கள் கிழிக்காமலும் பழைய தேதியை மாற்றாமல் இருந்தாலும் வீட்டில் கிழக்கு பகுதியில் சூரிய ஒளி குறைவாக விழுந்தாலும் அங்கே பித்ரு தோஷம் தலைவிரித்து ஆடுகிறது.
பரிகாரம் 1
ஒவ்வொரு ஆன்மாவும் எத்தனையோ பிறவிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. அத்தனைப் பிறப்பிலும் பலப்பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறது. அதற்கு பெயரே "சஞ்சித கர்மா " எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இப்பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே 'பிராரப்தக் கர்மா' எனப்படுகிறது. இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல் இப்பிறவி முடிவடையாது. ஆன்மா இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது. இது தவிர 'ஆகாம்ய கர்மா' என்று ஒன்றுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள இப்பிறவியில் ஆன்மா செய்யும் நல்ல,கெட்ட செயல்களால் ஏற்படுவது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது. அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் வாழ்க்கை அமையும். துக்கமும்,சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்மகதியே. இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என அனைத்து மதங்களும் போதிக்கிறது.
அவரவரின் நல்ல கெட்ட காலங்களுக்கு அவரவர் மட்டுமே பொறுப்பு. இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நாம் எப்படி வாழ வேண்டும் என்பது நமது கையிலேயே உள்ளது. ஒருவர் செய்யும் நற் செயல்களையும், வினை செயல்களையும் ஜாதகர் மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறார் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப வாழ்வியல் முறையை ஏற்படுத்திக் கொண்டு வினைப் பதிவை குறைக்க முடியும்.
பரிகாரம் 2
விதி, மதி, கதி விதி என்பது லக்னம். ஜோதிட ரீதியாக லக்னம் என்பது விதியாக, ஒருவரின் தலையெழுத்தாக அமைகிறது. மதி என்பது சந்திரன். 5-ம்மிடம் எனும் பூர்வ பூண்ணிய பலத்தால் விதிக்கப்பட்டதை மதியால் எப்படி சாதகமாக மாற்றி அமைப்பது என்பதை காட்டுகிறது. கதி என்பது சூரியன். 5ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய பலத்தால் மதியால் மாற்றியமைக்கப்பட்டதை 9-ம்மிடம் எனும் பாக்கிய பலத்தால் சாதகமாக கிடைக்க வழிவகை செய்யப்படுவதை குறிக்கிறது..
பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
வாழ்வில் விதி, மதி, கதி நன்கு அமைந்தவர்களுக்குத்தான் சகல வெற்றிகளும் கூடி வருகின்றன. சாதாரணமாக இருப்பவர்கள் கூட மிக பெரிய சாதனை மனிதராக மாற்றுவது இத்தகைய அமைப்பினால்தான். ஆக உலகில் வாழும் அனைத்து உயிர்களும் உயிர்ப்புடன் இருக்க ஆதாரமாக இருப்பது விதி (லக்னம்) சூரியன் (கதி), சந்திரன் (மதி) என்பது புலனாகுகிறது.
விதியை மாற்ற கதி என்ற சூரியனையும் வழிபட வேண்டும். நவகிரகங்களில் சூரியன் முதன்மையான கிரகமாகும். பிரபஞ்ச சக்தி உண்மையா? என நாத்திகம் பேசுபவருக்கு நெத்தியடி கொடுக்கும் கண் கண்ட தெய்வம் சூரியன்.ஒன்பது கிரகங்களில் நம் கண்ணுக்குத் தெளிவாக புலப்படுபவர் சூரியபகவான். மாறாத குணம் உள்ளவர். பேதமின்றி எல்லாருக்கும் ஒளி கொடுப்பவர். ஒளி இல்லாத இடத்தில் கண்ணிருந்தும் காணமுடியாது. நம் கண்ணுக்குள் ஒளியாய் இருந்து நம்மை வழி நடத்திச் செல்பவர். சூரியன் அழியா புகழை கொடுப்பார். சமூக சேவையில் நாட்டத்தை கொடுப்பார். எளிமையாக இருக்க கற்றுக் கொடுப்பார். இரக்க உணர்வை கொடுப்பார். எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பதால் சூரியனைப் பித்ரு காரகன், தந்தைக்காரன் என்று அழைக்கிறோம்.
எனவே சூரியனின் ஒளிக்கதிர்கள் வீட்டிற்குள் புகும் படியான வீட்டில் வசிப்பது மிக முக்கியம்.
மூலாதாரம் தொடங்கி சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ராரம் என்பவையே அந்த ஏழு ஆதாரச் சக்கரங்கள். இந்த ஏழு சக்கரங்களின் வழியே உடலில் உள்ள ஆன்மா பயணிக்கும். இந்த சக்ரங்களுக்கு உயிரூட்ட தினமும் சூரிய நமஸ்காரம் எனும் யோகாசனப் பயிற்சியை கடைபிடிக்க வேண்டும். இதனால் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. ரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. உடலில் உள்ள நச்சுப் பொருள்கள் மூச்சு மண்டலத்தில் இருந்து வெளியேற்றுவதால் அக, புற கழிவுகள் நீங்கி ஆன்மா சுத்தமடைகிறது. ஆன்மா சுத்தியடைவதால் முன் வினை கர்மா பாதிக்காது. தினமும் காலையில் சூரியன் உதயமாகும் நேரத்தில் ஆதித்ய இருதயம் கேட்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும்.
3. உலவியல் ரீதியான பொதுவான பரிகாரங்கள்.
விதியின் பிடியிலிருந்து விடுபட தினமும் காலை எழுந்தவுடன் வீடு வாசலை சுத்தம் செய்து வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும். நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் செய்வது மட்டுமே. பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம். நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த் துக்கொள்ளவேண்டும். அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே பலனாகப் பெறுகிறோம்.தூய மனதுடன் உண்மையான அன்புடன் நடக்க வேண்டும்.
எதிலும், எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை. முதல்நிலை ஒளி கிரகமான (சூரியன், சந்திரன்) ( தந்தை, தாய் கிரகம்) வலுவாக இருப்பது , நிச்சயமாக ஒரு ஜாதகத்தில் நல்ல பலனைத் தரும். எனவே சூரியன், சந்திரன் இணையும் அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட வேண்டும்.
அமாவாசையன்று பட்சிகள், கால்நடைகள் தானியம், பழங்கள், கீரைகள் வழங்க வேண்டும். ஒவ்வொரு அமாவாசைகளின் போதும் அல்லது பெற்றோர்கள் முன்னோர்கள் இறந்த திதி நாட்களில் தர்ப்பணம் செய்வது நல்லது. ஒவ்வொரு மாதமும் ஜாதகர் பிறந்த நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று ஆலயங்களை தூய்மை செய்து இறைவனிடம் மனமுருகி சரணடைந்து வழிபட வேண்டும்.
அமாவாசை மற்றும் சனிக்கிழமை நாட்களில் முன்னோர்களிடம் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக மானசீகமாக பேசி நல்லாசி பெற வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானம் மூலமே உயர்வானதை அடைய முடியும். மனிதர்களாய் வாழும் காலத்தில் தனது விருப்பங்களை ஆசைகளை அடைய உதவும் ஸ்தானமாகும். மேலே கூறிய வழிபாடு மற்றும் பரிகார முறையை பயன்படுத்தி சுய ஜாதகரீதியான ஒன்பதாமிடத்தை பலப்படுத்தி முன்னோர்களின் நல்லாசியை பெற நல்வாழ்த்துக்கள்.






