என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இதயம் ஒரு கோவில்- முழு உடல் பரிசோதனை அவசியம் ஏன்?
    X

    இதயம் ஒரு கோவில்- முழு உடல் பரிசோதனை அவசியம் ஏன்?

    • இதயம், நுரையீரல், மூளை, கல்லீரல், சிறுநீரகம், கை, கால் என அனைத்து உறுப்புகளுமே சிறப்பாக செயல்பட வேண்டும்.
    • சில லட்சங்கள் கொடுத்து வாங்கக் கூடிய ஒரு காருக்கே இப்படி பல சோதனைகளை பார்க்கும் நாம் ஏன் நம் உடல் மீது அக்கறை செலுத்தக்கூடாது.

    மனித உடல் ஒரு ஆலயம். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்றோடு ஒன்று சார்ந்தே இயங்கி வருகின்றன. இதயம் பழுதடைந்து விட்டால் உடல் இருந்தும் பயன் இல்லை. அதேபோல உடல் நலம் சரியாக இல்லாமல் இதயம் மட்டும் வேலை செய்தாலும் பயன் இல்லை. எனவே இதயம், நுரையீரல், மூளை, கல்லீரல், சிறுநீரகம், கை, கால் என அனைத்து உறுப்புகளுமே சிறப்பாக செயல்பட வேண்டும்.

    புதிய கார் ஒன்று வாங்குகிறோம். முதல் 3 மாதங்கள் கார் நிறுவனமே காரை முழுவதுமாக சோதித்து சர்வீஸ் செய்து கொடுத்து விடுவார்கள். அதன்பிறகு நாம் தான் காரை சர்வீஸ் செய்து கொள்ள வேண்டும். காரின் என்ஜின், கார்பரேட்டர், பெட்ரோல் டேங்க், டயர் ஆகியவை சரியாக செயல்படுகிறதா, பிரேக் நன்றாக பிடிக்கிறதா, எங்காவது சத்தம் வருகிறதா? என ஒர்க்ஷாப் ஊழியரிடம் பார்க்கச் சொல்லி சர்வீஸ் செய்து கொள்கிறோம்.

    சில லட்சங்கள் கொடுத்து வாங்கக் கூடிய ஒரு காருக்கே இப்படி பல சோதனைகளை பார்க்கும் நாம் ஏன் நம் உடல் மீது அக்கறை செலுத்தக்கூடாது. நம் உடல் விலைமதிப்பற்றது அல்லவா? உதாரணத்துக்கு சென்னையில் இருந்து வெகுதூர பயணமாக கன்னியாகுமரி செல்கிறோம் என வைத்துக் கொள்வோம். 300 கிலோ மீட்டர், 400 கிலோ மீட்டர் செல்லக்கூடிய பயணத்துக்கு முன்பு காரை ஒர்க்ஷாப் கொண்டு சென்று முழுவதுமாக பரிசோதித்து விடுகிறோம். குடும்பமாக கன்னியாகுமரி போகிறோம், நல்லா பரிசோதியுங்கள், சுற்றுலா சென்று திரும்ப 1000 கிலோ மீட்டர் ஆயிடும் என்று சொல்லி விட்டு என்ஜின், டயர், பிரேக், ஆயில் என அனைத்தையும் சோதிக்கச் சொல்வோம். எல்லாம் சரியாக இருக்கிறது என்று திருப்தி அடைந்த பின்னரே காரில் புறப்படுகிறோம்.

    இப்படி காரை பரிசோதிக்காமல் சென்றோம் என்றால் நள்ளிரவில் எங்காவது ஒரு இடத்தில் கார் பழுதாகி நிற்க வாய்ப்புள்ளது. ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் நின்று விட்டால் குடும்பத்துடன் செல்லும் போது பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும். அந்த நள்ளிரவு நேரத்தில் எங்கே போய் ஒர்க்ஷாப்பை தேடுவது? எனவே சாதாரணமாக நாம் பயணிக்கக் கூடிய காருக்கே முழு பரிசோதனை தேவைப்படுகிறது. அதேபோலத்தான் நம் உடலுக்கும் முழு உடல் பரிசோதனை அவசியமாகிறது.

    உங்களுக்கு 30 வயது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் பிறந்து 30 வயது ஆகி விட்டது. 30 ஆண்டில் உங்கள் உடல் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அந்த சமயம் ஆஸ்பத்திரிக்கு சென்று நம் உடலை முழுவதுமாக சோதித்துக் கொள்வது தான் முழு உடல் பரிசோதனை. நோய்களை முன்னரே கண்டறிவதன் மூலம் பெரிய பாதிப்புகளில் இருந்தும், பொருளாதார ரீதியாகவும் தப்பி விடலாம். அந்த வகையில் முழு உடல் பரிசோதனை உதவிகரமாக இருக்கும்.

    நான் ஏன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், எனக்கு தான் எந்த பிரச்சினையும் இல்லையே. நான் ஆரோக்கியமாகத் தானே இருக்கிறேன். நன்றாக நடக்கிறேன், மூச்சு வாங்குவது இல்லை, நெஞ்சு வலி இல்லை, நன்றாக பசிக்கிறது, சிறுநீர் பிரச்சினை இல்லை என உடலில் எந்தவொரு குறைபாடும் இல்லாத நான் ஏன் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நான் ஆஸ்பத்திரிக்கு போனால் டாக்டர் அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்வார். சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது, ரத்த அழுத்தம் உள்ளது என்று சொல்லி கட்டுப்பாடு விதிப்பார். வேண்டவே, வேண்டாம் ஆளை விடுங்கள் என நீங்கள் சொல்லலாம்.

    இப்படி எந்த குறைபாடும் இல்லை என்று கூறுபவர்களிடம் கூட ரத்த அழுத்த பரிசோதனை செய்தால் உயர் ரத்த அழுத்தம் இருக்கும். 120/80 இருக்க வேண்டிய ரத்த அழுத்தம் 200/120 என்ற அளவில் இருக்கும். உயர் ரத்த அழுத்தமானது எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் உடலில் இருக்க கூடியது. இது எந்தநேரம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. உயர் ரத்த அழுத்தம் மூளையில் உள்ள ரத்தக்குழாயை வெடிக்கச் செய்யும் தீவிரத்தன்மை உடையது. எனவே 30 வயதை கடந்து விட்டால் ஆஸ்பத்திரிக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.

    முழு உடல் பரிசோதனை எப்படி செய்கிறார்கள் என்பதை பார்ப்போம். காலையில் வெறும் வயிற்றில் வரச்சொல்வார்கள். காலை 7 மணிக்கு ரத்தம் மற்றும் சிறுநீரை சோதனைக்காக எடுப்பார்கள். பின்னர் சாப்பிட்டு விட்டு 2 மணி நேரம் கழித்து ரத்தம் எடுப்பார்கள். அடுத்து 3 மாத சராசரி ரத்த அளவு (எச்.பி.ஏ1 சி) பார்ப்பார்கள். மேலும் கல்லீரல், சிறுநீரக செயல்பாட்டை சோதிப்பார்கள். கொழுப்பின் அளவை பார்ப்பார்கள்.

    தொடர்ந்து வயிற்று பகுதியில் ஸ்கேன் எடுத்து கல்லீரல் எப்படி இருக்கிறது. பித்தப்பையில் கல் இருக்கிறதா என்று பார்ப்போம். சிறுநீரகம் சரியாக வேலை செய்கிறதா, கல் அடைப்பு எதுவும் இருக்கிறதா என்று பார்ப்போம். ரத்த அழுத்தமானது நிற்கும் போது, படுத்த நிலையில், உட்கார்ந்த நிலையில் என்ன அளவில் இருக்கிறது என்று பரிசோதிப்போம்.

    இதுதவிர 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை மருத்துவர்கள் கேட்பார்கள். கண் சரியாக தெரிகிறதா, காது கேட்கிறதா, நாக்கை நீட்டச் சொல்லி தொண்டையில் எதுவும் வலி இருக்கிறதா, இலகுவாக விழுங்க முடிகிறதா, பசி எடுக்கிறதா, ஜீரணம் ஆகிறதா, மலம் கழிப்பதில் பிரச்சினை இருக்கிறதா, சிறுநீர் எரிச்சலாக வருகிறதா, கை, கால் வலி இருக்கிறதா, தூக்கம் நன்றாக வருகிறதா? என உடல் நலம் சார்ந்த பல கேள்விகளை கேட்டு விடைபெறுவார்கள்.

    படுக்க வைத்து வயிற்றில் ஏதாவது கட்டி இருக்கிறதா, கழுத்தில் எதுவும் நெரி கட்டி இருக்கிறதா, கை, கால்களின் வலிமை எப்படி இருக்கிறது, மூட்டு இணைப்புகள் தேய்ந்து உள்ளதா என சோதனை செய்வார்கள்.

    எக்கோ பரிசோதனை செய்து இதய வால்வுகள் எப்படி செயல்படுகிறது. இதயத்தின் அளவு சரியாக உள்ளதா, வீங்கி இருக்கிறதா, இதயம் பலமாக உள்ளதா என்பது போன்ற சோதனைகளை செய்து பார்ப்பார்கள். அடுத்து மூவிங் பெல்டில் நடக்க வைத்து இ.சி.ஜி. பார்ப்போம். இதயத்துக்கு ரத்த ஓட்டம் குறைவாகச் சென்றால் இந்த சோதனையில் கண்டுபிடித்து விடலாம்.

    எக்கோ, இ.எம்.டி. இ.சி.ஜி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை போன்றவற்றை எடுத்து விட்டு ஏதாவது சந்தேகம் இருந்தால் குறிப்பிட்ட அந்த உறுப்புக்கு மட்டும் தனியாக எக்ஸ்ரே அல்லது ஸ்கேன் செய்து பார்க்கப்படும். தீராத தலைவலி இருக்கிறது என்றால் தலையில் சி.டி. ஸ்கேன் எடுத்து பார்ப்பார்கள். நடந்தால் நெஞ்சு வலிக்குது என்றால் அதற்கு 128 சிலைஸ் சி.டி. ஸ்கேன் எடுப்பார்கள். அவசியம் இருந்தால் இதயநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் பரிசோதிப்பார்கள். இதேபோல் மற்ற நோய்களுக்கும் தேவைப்பட்டால் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் சோதனை செய்து பார்ப்பர்.

    பெண்கள் என்றால் பெண் மருத்துவர்கள் மூலம் கேள்வி கேட்பார்கள். மாதவிடாய் உள்ளிட்ட பெண்கள் எதிர்கொள்ளும் உடல் நல பிரச்சினைகளை கேட்டு சிகிச்சை அளிப்பார்கள். 30 வயதில் பார்க்க தொடங்கும் முழு உடல் பரிசோதனையை 70 வயது வரைக்கும் செய்து கொள்ளலாம். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அரைநாள் நம் உடலுக்கு நேரம் ஒதுக்கிக் கொள்வது நல்லது.

    முழு உடல் பரிசோதனையில் ஏதாவது ஒரு நோய் அறிகுறியை கண்டுபிடித்து சிகிச்சை அளித்து விட்டோம் என்றால் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியாக வாழலாம். உங்கள் குடும்பத்தினரும் சந்தோஷமாக இருப்பர். இதுபோன்ற எந்தவொரு சோதனைகளையும் செய்யாமல் திடீரென்று மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரியில் போய் படுத்துக் கொண்டால் உங்களை நம்பி இருக்கும் குடும்பத்தினர் நிலை என்னவாகும். உங்கள் உடலை பரிசோதனை செய்து கொள்வது உங்களுக்காக மட்டுமல்ல, உங்களை சார்ந்து இருக்கும் குடும்பத்தினருக்காகவும் தான். உடலில் உள்ள அனைத்துமே நன்றாக செயல்பட வேண்டும், அப்படி செயல்பட்டால் தான் எந்த பணியிலும் நாம் முழு மனதுடன் செய்ய முடியும்.

    நன்மைகள் என்ன?

    பல், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பல உறுப்புகளில் ஏற்படும் நோய்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். இதயம், சிறுநீரகம், கல்லீரல், மார்பகம், பெண்களுக்கு கர்ப்பப்பை போன்ற உறுப்புகளில் ஏற்பட இருக்கும் நோய்களை இதன்மூலம் கண்டறிய முடியும். சர்க்கரைநோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், இதன்மூலம் எச்சரிக்கையாக இருந்து, சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகளைக் கடைப்பிடித்து, அதைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். புற்றுநோய் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிவதால் நோயைக் குணப்படுத்துவது எளிமையாகும்.

    பொதுவாக, 35 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தப் புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற ஏதாவது மரபு வழி நோய்கள் இருந்தால் அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 35 வயதுக்கு முன்பாக இந்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், போதிய உடலுழைப்பு இல்லாமல் உட்கார்ந்த நிலையிலேயே பணியாற்றுபவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் போன்றோர் வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் இதைச் செய்துகொள்ள வேண்டும்.

    மருத்துவ காப்பீடு அவசியம்

    திடீரென நோய் வருகிறது, சிகிச்சைக்கு ஒரு லட்சம், 2 லட்சம் ஆகிறது என்றால் பணத்துக்கு எங்கே செல்வது? அதற்கு தான் மருத்துவக் காப்பீடு உள்ளது.

    மோட்டார் சைக்கிள், கார் வாங்கினால் அதற்கு ஆண்டுதோறும் இன்சூரன்சு கட்டுகிறோம். வாகனம் எதாவது விபத்தில் சிக்கிக் கொண்டால் அதனால் ஏற்படும் இழப்பு தொகையை அந்த காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது. இப்போதெல்லாம் செல்போனுக்கே காப்பீடு பண்றோம். அப்படியிருக்கையில் நமது உடலுக்கு மருத்துவக்காப்பீடு செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். இப்போது ஏராளமான காப்பீடு நிறுவனங்கள் வந்து விட்டன. ஏதாவது ஒரு நிறுவனத்தில் உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கு மருத்துவக்காப்பீடு செய்து கொண்டால் அவசர மருத்துவ செலவுக்கு பயன் அளிக்கும்.

    விபத்து ஏற்பட்டாலோ அல்லது இதய அறுவை சிகிச்சை, பைபாஸ் அறுவை சிகிச்சை என ஏதாவது பெரிய தொகை செலுத்தி மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டால் மருத்துவக்காப்பீடு நமக்கு உதவியாக இருக்கும். இந்த நாகரீக உலகில் யாருக்கு வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம், விபத்து நிகழலாம். எனவே உஷாராக இருப்பது நல்லது. அந்த சமயத்தில் போய் யாரிடம் கடன் வாங்குவது, எந்த நகையை அடகு வைப்பது? எனவே காப்பீடு என்பது அத்தியாவசியமான ஒன்று ஆகும்.

    காப்பீட்டில் ஆயுள்காப்பீடு, மருத்துவக்காப்பீடு என்று 2 வகை உள்ளது. இரண்டையும் குழப்பக் கூடாது. ஆயுள்காப்பீடு நம் எதிர்கால நன்மைக்காக பணம் போடுவது. மருத்துவக்காப்பீடு என்பது அவசர கால மருத்துவ சிகிச்சைக்கான காப்பீடு ஆகும். மருத்துவத்துக்கான செலவை அந்த காப்பீடு நிறுவனமே ஏற்றுக் கொள்ளும்.

    தொடர்புக்கு: info@kghospital.com, 98422 66630

    Next Story
    ×