என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஆரோக்கியம் அளிக்கும் அஞ்சறைப்பெட்டி- செரிமான மண்டலத்தை சீர் செய்யும் 'புளி'
- நம் உணவில் புகுந்து மனதினையும், நம் நாவின் சுவைமொட்டுக்களையும் வேட்டையாடும் தன்மையுடையது இந்த புளி.
- புளி பாரம்பரியமாக பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழர்களின் சமையல்கலையில் நீங்காத இடம் பிடித்திருக்கும் அஞ்சறைப்பெட்டி மூலிகைச்சரக்கு புளி. புளி என்று சொன்னதுமே, வாயில் ஒருவித கூச்சத்துடன் உமிழ்நீர் சொட்ட சொட்ட இச்சு கொட்டும் ஒரு உணர்வுக்கு உரித்தான மகத்தான மூலிகைப் பொருள் என்பது நாம் அறிந்ததே. கிழக்கு ஆப்ரிக்கா நாட்டை பூர்வீகமாக கொண்ட புளி, இந்தியாவின் காடுகளில் மட்டுமின்றி பெரும்பாலான ஊர்களில் வளரும் சிறப்பு மிக்கது. நம் உணவில் புகுந்து மனதினையும், நம் நாவின் சுவைமொட்டுக்களையும் வேட்டையாடும் தன்மையுடையது இந்த புளி.
புளி பாரம்பரியமாக பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மடகாஸ்கர் தீவுகளில் மலச்சிக்கலை போக்கவும், உடல் வெப்பத்தைக் குறைக்கவும் மூலிகை மருந்தாக புளியம் பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் புளியை சர்க்கரையுடன் சேர்த்து இனிப்பான உருண்டைகளாக செய்து உண்ணப்படுகிறது. இந்த புளி உருண்டைகள் 'இனிப்பான இறைச்சி' என்றும் கருதப்படுகின்றன. நைஜீரியா நாட்டின் கிராமப்புற மக்கள் ஊறவைத்த புளி பழங்களை மலச்சிக்கலை போக்க பயன்படுத்தி வருகின்றனர்.
மலச்சிக்கலைப் போக்கும் அஞ்சறைப்பெட்டி மூலிகைகள் வரிசையில் வெந்தயத்திற்கு அடுத்தாற் போல் புளியும் சேருவது குறிப்பிடத்தக்கது. புளியில் கணிசமான அளவு நார்சத்து உள்ளதே அதன் மலமிளக்கி தன்மைக்கு காரணமாகிறது. அதில் 13 சதவீதம் அளவு நார்சத்து உள்ளது. மேலும் உடல் நலனுக்கு இன்றியமையாத வைட்டமின்களான வைட்டமின் ஏ, வைட்டமின் சி கிட்டத்தட்ட 6 சதவீதமும், வைட்டமின் கே, வைட்டமின் ஈ ஆகியனவும் உள்ளன. குறிப்பாக அதிக அளவு வைட்டமின் பி-1 அதாவது 36 சதவீதம் அளவிற்கும், நியாசின் 12 சதவீதம் அளவிற்கும், போலிக் அமிலம், வைட்டமின் பி-6, வைட்டமின்- பி-2 ஆகிய வைட்டமின்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாம் ரசத்திற்கு பயன்படுத்தும் புளியின் பழத்தில் உடலுக்கு சத்தாகும் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய கனிம உப்புகள் மட்டுமின்றி, வயோதிகத்தை தடுக்கும் தன்மையுள்ள தாது உப்புக்களான செலினியம், செம்புச் சத்து, துத்தநாகச் சத்து ஆகியனவும் உள்ளது. இதன் மூலம் புளியானது உடல் ஆரோக்கியத்திற்கு கூரை அமைக்கும் என்பது விளங்குகிறது. இதில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருப்பதால் நரம்புத்தசை செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. மொத்தத்தில் புளியின் பழம் ஊட்டச்சத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
தில்லைவாணன்
உலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி, நமது உடலுக்கு அத்தியாவசிய அமினோஅமிலங்கள் என்று கருதப்படும் மூலக்கூறுகளில், டிரிப்டோபான் தவிர, மற்ற அனைத்து அமினோ அமிலங்களுக்கு புளியம் பழம் சிறந்த ஆதாரமாக உள்ளது கூடுதல் சிறப்பு.
சித்த மருத்துவத்தில் அறுசுவை மருத்துவம் என்ற ஒன்று உண்டு. இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உப்பு ஆகிய ஆறு சுவைகளும் நமது உணவில் அன்றாடம் சேர்க்க வேண்டுமென சித்த மருத்துவம் கூறுகின்றது. சில சுவைகளை அதிகம் நாடும் நாம், சில சுவைகளை ஒதுக்குவதே நோய்களுக்கு காரணம் என்கிறது சித்த மருத்துவம். அந்த வகையில் புளிப்பு சுவைக்கு, நாம் எளிமையாக உணவில் சேர்க்கும் புளி அறுசுவை மருத்துவத்துக்கு கிடைத்த வரம்.
புளிப்பு சுவையும், வெப்ப வீரியத் தன்மையும் கொண்ட புளியின் பழமானது சித்த மருத்துவ நோய்க்கூறுகளான வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் வாதம் எனும் வாயுவையும், பித்தத்தையும் அதிகரிக்கும் என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. அதனால் தான் பெரும்பாலான வாதநோய் நிலைகளிலும், பித்த நோய் நிலைகளிலும் இதனை உணவில் சேர்க்கக்கூடாத பத்திய பொருளாக சித்த மருத்துவர்கள் கூறுவதன் பின்னணி. இருப்பினும் பழம்புளி உடலுக்கு நன்மை செய்யும் என்று சித்த மருத்துவம் கூறுவதால், அதனை பயன்படுத்துவது நலம் பயக்கும்.
புளியின் புளிப்புத்தன்மைக்கு அதில் உள்ள மாலிக் அமிலம், மற்றும் டார்டாரிக் அமிலம் ஆகிய அமில வேதிப்பொருட்கள் முக்கிய காரணமாக உள்ளன. தலையில் கிரீடமாக வெளிநாட்டினர் வைத்துக் கொண்டாடும் ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் எளிமையாக நம்ம ஊர் புளியம்பழத்தில் உள்ளது சிறப்பு. அதே போல் திராட்சையில் உள்ள டார்டாரிக் அமிலம் புளியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய அமிலப் பொருட்களால் கூட புளிக்கு மலத்தை இளக்கி வெளிப்படுத்தும் தன்மை உண்டு. ஆதலால், நாம் உணவில் பயன்படுத்தும் புளி ரசம் செரிமானத்தைத் தூண்டி மலத்தை எளிதாக வெளியேற்றும்.
புளியில் சிட்ரிக் அமிலம், பார்மிக் அமிலம், அசிட்டிக் அமிலம் ஆகிய அமில வேதிப்பொருட்களும் உள்ளது. புளியில் உள்ள கடிச்சின், எபிகடிச்சின், ஏபிஜெனின் ஆகிய வேதிப்பொருட்கள் அதன் புற்றுநோயை தடுக்கும் தன்மைக்கு காரணமாக உள்ளன. புளியைக் கொண்டு வெள்ளெலிகளில் நடத்திய ஆய்வில், பெருங்குடல் புற்றுநோயை தடுப்பதில் நல்ல பலன் தருவதாக முதல்நிலை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் உடலில் பாகோசைட்டோஸிஸ் எனும் நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மையை அதிகரிப்பதன் மூலம், புளி நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுவது சிறப்பு.
மாறிவிட்ட உணவு முறைகளால், மாறிவிட்ட தண்ணீரின் இயல்பினால் சிறுநீரக கல்லடைப்பு என்பது இக்கால கட்டத்தில் பெருகிவிட்டது. பெரும்பாலான ஸ்கேன் பரிசோதனையில் இந்த சிறுநீரக கற்கள் காணப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இத்தகைய சிறுநீரக கற்கள் தென் இந்தியாவைக் காட்டிலும், வட இந்தியாவில் அதிகம் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதன் காரணத்தை ஆராய்ந்தால் புளியின் பயன்பாடு தான் என்பது திகைப்பூட்டுவதாக உள்ளது. புளியை அதிக அளவில் பயன்படுத்தும் தென் இந்தியாவில் சிறுநீரக கற்கள் அதிலும் முக்கியமாக கால்சியம் ஆக்சலேட் கற்கள் உருவாவது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுவது கூடுதல் சிறப்பு.
தினசரி புளியை உணவில் சேர்ப்பது இதயத்திற்கும் நன்மை பயப்பதாக உள்ளது. தொற்றா நோய்க்கூட்டங்களில் அதிகரித்து வரும் இதயநோயான மாரடைப்புக்கு முதன்மை ஆதாரமாக இருப்பது ரத்தத்தில் முறை தவறி அதிகரித்து காணும் கொழுப்பு தான். இந்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது என்பது உடல் பருமனையும், இதய நோய்களையும் தடுக்கும்.
அந்த வகையில் புளி ரத்தத்தில் உள்ள கொழுப்பினைக் குறைத்து இதயத்திற்கு நன்மை பயப்பதாக உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், புளியின் சாரத்தை மருந்தாக்கி ஒரு மாதகாலம் எடுத்துக்கொண்டதில் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு 13 புள்ளிகள் குறைவதாகவும், எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பின் அளவு 20 புள்ளிகள் குறைவதாகவும் முதல்நிலை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பசியின்மைக்கு புளியுடன், லவங்கப்பட்டை. ஏலக்காய், மிளகு, அத்துடன் வெல்லநீர் சேர்த்தரைத்து உருண்டையாக்கி வாயில் போட்டு சுவைத்து வருவது பாரம்பரிய வழக்கமாக இருந்து வந்துள்ளது. இஞ்சி, பூண்டு, மிளகு, பெருங்காயம் சேர்த்து உருவாகும் தமிழனின் பாரம்பரிய உணவான ரசத்திற்கு கிருமிகளைக் கொல்லும் தன்மையுண்டு என்கின்றன சமீபத்தில் வெளியான ஆய்வுக்கூட பரிசோதனை முடிவுகள்.
புளியின் நிறத்திற்கு காரணம் அதில் உள்ள ஆந்தோசயனின் மற்றும் லுயுகோ ஆன்தோசயனிடின் ஆகிய வேதிப்பொருட்கள் என்கிறது நவீன அறிவியல். இதே ஆன்தோசயனின் நிறமி தான் கருப்பு கவுனி அரிசியின் மருத்துவ மகத்துவத்திற்கும் காரணமாகின்றது. ஆகையால், நன்மை தரும் பல மருத்துவ குணங்களுக்காக கருப்பு கவுனி அரிசியைப் போன்று புளியும், கொண்டாடப்பட வேண்டிய பாரம்பரிய மூலிகை உணவு.
புளியும், உப்பும் சரி பங்கு சேர்த்து அரைத்து கிருமி தொற்றுக்கு ஆளான உள்நாக்கு வளர்ச்சி மீது பூசி வர வீக்கம் குறையும் என்கிறது சித்த மருத்துவம். புளியை வெந்நீரில் கரைத்து வாய்கொப்பளிக்க தொண்டைப்புண் நீங்கும். அடிபட்ட வீக்கத்தைக் குறைக்க புளியையும், உப்பையும், மஞ்சளுடன் சேர்த்து பற்றாக்கி பூசி வரும் பழக்கம் இன்றும் கிராமங்களில் இருந்து வருகின்றது. சாதாரண சளிக்கு புளியுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து சூப் செய்து குடிக்கும் பழக்கமும் நம்மில் பலருக்கு உண்டு
பல்வேறு நோய்நிலைகளில் உண்டாகும் நாட்பட்ட மலச்சிக்கல் மட்டுமின்றி இன்றைய துரித உணவுகளால் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் புளியுடன், நிலாவாரை இலைப் பொடி, தனியா விதைப்பொடி சேர்த்து வெந்நீரில் கரைத்து குடித்து வர நல்ல பலன் தரும் என்கிறது சித்த மருத்துவம்.
புளிக்கரைசலில் ஊறவைத்து வேக விடுவதினாலே, காய்கறிகளின் நலம் பயக்கும் கனிம சத்துக்களும், பிற சத்துக்களும் வீணாகாமல் காக்கப்படுவதாக அறிவியல் கூறுகின்றது. இது நம் முன்னோர்களின் ஆரோக்கியமான சமையல் கலைக்கு கிடைத்த அறிவியல் அங்கீகாரம்.
புளியின் பழம் குடலில் உள்ள மென்மையான தசைகளை தளர்ச்சி அடைய செய்வதன் மூலம் கழிச்சல் நிலையில் பலன் தருவதாக உள்ளது. இவ்வளவு மகத்துவம் இருப்பினும் வயிறு உப்பிசம், அடிக்கடி ஏப்பம், வயிற்றில் அதிக அமில சுரப்பு நிலையால் அவதிப்படுபவர்கள், மற்றும் தோல் ஒவ்வாமையால் வருந்துபவர்கள் அளவோடு பயன்படுத்துவது நல்லது.
புளியம் பழத்தை மிளகாய், உப்புடன் சேர்த்தரைத்து மசாலா கலந்த நொறுவைத்தீனியாக உமிழ்நீர் சொட்ட உட்கொண்ட ஒரு காலத்தில், "ரத்தம் சூடாகும்; பித்தம் கூடும்; அளவாய் எடுத்துக்கொள்" எனும் எச்சரிக்கை வார்த்தைகளால் பாட்டி வைத்தியமாய் சித்த மருத்துவம் நிலைத்து நிற்கின்றது. எனவே இதனை அளவோடு பயன்படுத்த வேண்டியது நலத்திற்கு நலம் பயக்கும்.
பல நூறு ஆண்டுகளாக நாம் பயன்படுத்தி வரும் மசாலாப் பொருட்களும், அவை சேரும் சாம்பாரும், புளி சேர்ந்த ரசமும், இன்னபிற உணவுக் கலவைகளும், சுவையளிக்கும் உணவாக மட்டுமின்றி, நலமளிக்கும் மருந்தாக நமது சீரண மண்டலத்தைக் காத்து வருவது இதில் வெளிப்படையாக தெரிகின்றது. புளி நமது ஆரோக்கியத்திற்கு பக்கபலம்.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com






