search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இடப்பெயர்ச்சியும் மனித வாழ்க்கை மாற்றமும்
    X

    இடப்பெயர்ச்சியும் மனித வாழ்க்கை மாற்றமும்

    • சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் இடமாற்றம் மனிதர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை எற்படுத்துகிறது.
    • பொதுவாக கல்வியாண்டின் துவக்கத்தில் உத்தியோகஸ்தர்கள் தான் இடப்பெயர்ச்சியை அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.

    ஒவ்வொரு வருடமும் ஆங்கிலப் புத்தாண்டின் ஏப்ரல், மே மாதங்களில் பலரின் எதிர்பார்ப்பு இடப்பெயர்ச்சி. பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் ஜீவிக்க இடம் பெயர்வது இயல்பு. அதுவும் மனிதர்களாய் பிறந்தவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறோம். குறிப்பாக தொழில் உத்தியோகத்திற்காக, பணம் சம்பாதிக்க, மன நிம்மதிக்காக, உல்லாச பயணத்திற்காக கல்விக்காக இடம் பெயருவார்கள்.

    சிலருக்கு வாழ்க்கையில் திருப்புமுனையைத் தரும் இடப்பெயர்ச்சி பலருக்கு அசவுகரியத்தையும் தரும். இந்த கட்டுரையில் இடப்பெயர்ச்சியால் ஏற்படும் சுப அசுபங்களைப் பார்க்கலாம். மனிதர்கள் வாழ்வில் நிகழும் இடப் பெயர்ச்சியை சுய ஜாதக ரீதியான இடப் பெயர்ச்சி, கோட்சார ரீதியான இடப்பெயர்ச்சி என இரண்டாக வகைப்படுத்தலாம்.

    1. சுய ஜாதக ரீதியான இடப்பெயர்ச்சி

    நாம் இருக்கும் வீட்டையும் நாட்டையும் குறிப்பது நான்காமிடம். அந்த வீட்டிற்கு பன்னிரண்டாம் வீடான மூன்றாம் வீடு தான் இடப்பெயர்ச்சியை குறிக்கிறது. நீண்ட தூரப்பயணம் செய்யும் இடப்பெயர்ச்சி ஒன்பதாமிடத்தை குறிக்கும். நீண்ட பயணத்தை மேற்கொண்டு அறிமுகம் இல்லாத மனிதர்களுடன் வாழ்வது

    12-ம் இடம். அதாவது வெளிநாட்டு பயணத்தையும் கூறுமிடம். ஆக ஒருவரின் சுய ஜாதகத்தில் 3,9,12-ம் பாவகங்கள் தசாபுத்தி ரீதியாக செயல்படும் போது இடப்பெயர்ச்சி நிகழும். காலபுருஷ தத்துவத்தின் படி மேஷத்தில் தொடங்கி மீனம் வரை உள்ள பன்னிரண்டு ராசிகளுக்கும் பல்வேறு தத்துவங்கள் ரகசியங்கள் அடங்கியுள்ளன. கிரகங்களின் நகர்வின் அடிப்படையில் பன்னிரு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக நமது ஜோதிட முன்னோடிகள் பிரித்து இருக்கிறார்கள்.

    சரம்

    மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு லக்னங்களும் சரத்தில் அடங்கும்.சரம் என்றால் வெகு சலனமுடையது. தடையற்ற இயக்கம் கொண்ட அமைப்பாகும். சர லக்னத்திற்கு சுபமோ அசுபமோ எளிதில் வந்தடையும். ஒருவடைய வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழி நடத்தும். மாற்றம் வந்த தடமும் இருக்காது. போன சுவடும் தெரியாது. சர ராசிகள் வலிமை பெற்று அதில் நின்று ஒரு கிரகம் தசா புத்திகள் நடத்தினால் ஜாதகருக்கு இடப் பெயர்ச்சி வேகமாக நடக்கும். குடியிருக்கும் வீட்டை அடிக்கடி மாற்றுவார்கள். பார்க்கும் வேலை அல்லது தொழிலை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஒரு வேலையில் 3மாதத்திற்கு மேல் நிலைக்க மாட்டார்கள். வெளியூர், வெளிநாட்டு வேலை, தொழிலுக்கு பணம் செலவழித்துச் சென்று ஊர், பிடிக்கவில்லை அல்லது நாடு பிடிக்கவில்லை என்று பாதியில் திரும்பிவிடுவார்கள். 6 மாதத்திற்கு ஒரு தொழிலை நடத்துவார்கள்.

    உலகத்தில் உள்ள அனைத்து தொழிலையும் கற்றுக் கொள்வார்கள் ஆனால் ஒரு தொழிலைக் கூட உருப்படியாக செய்ய மாட்டார்கள். இவ்வளவு ஏன் பஸ்சில், ரெயிலில் பயணித்தால் கூட இடம் மாறி, மாறி அமர்ந்து பயணிப் பார்கள்.சிறு குழந்தைகளாக இருந்தால் அடிக்கடி பள்ளிக்கூடம் மாறுவார்கள். இவர்கள் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பார்கள். ஆனால் கிடைத்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்த தவறுவார்கள். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கவில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப மிக குறுகிய காலத்தில் எதிலும் வேகமாக விவேகமில்லாத முடிவினை எடுப்பார்கள்.

    சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரத்தில் நின்று ஒரு கிரகம் தசை நடத்தி கடுமையான இடப் பெயர்ச்சியை சந்திப்பவர்கள் தினமும் பிரம்ம முகூர்த்த வேளைகளில் குல தெய்வத்தின் முன்பு நெய் தீபம் ஏற்றி தொடர்ச்சியாக வணங்கி வருவது நல்லதாகும்.

    ஸ்திரம்

    ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கும் ஸ்திர லக்னத்தில் அடங்கும். ஸ்திரம் என்பது சலனமற்றது.

    அசைவற்ற நிலையைக் கொண்ட தன்மையாகும். சுபமோ, அசுபமோ எதிர்பாராத விதத்தில் வந்தடையும். வந்தால் நீண்ட காலத்திற்கு நிலையாக இருக்கும். ஏன், வாழ்நாள் முழுவதும் கூட வழி நடத்தும். ஸ்திர லக்னம் காத்தால் தத்துவத்தை அடக்கியது.

    கொள்கை மற்றும் லட்சிய பிடிப்பு உள்ளவர்கள். இவர்கள் ஒரு தடவை எடுத்த முடிவை யாராலும் மாற்ற முடியாது. அதாவது இவர்கள் பேச்சை இவர்களே கேட்க மாட்டார்கள். அது சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் அதிலிருந்து மாற்ற மாட்டார்கள். எங்கும் எதிலும் நிலைத்து நிற்பார்கள். தாம் எடுத்த முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள். நிலையான வெற்றியை பெறுவார்கள். வாழ்க்கையில் ஜெயிக்காமல் ஓய மாட்டார்கள்.

    ஸ்திர ராசியில் நின்று ஒரு கிரகம்

    சுபவலிமை பெற்று தசை புக்திகள் நடத்தினால் இடப்பெயர்ச்சி யாகி வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்வார்கள். சிறிது சிரமப்பட்டாலும் இடப்பெயர்ச்சியால் நிலையான பல யோகங்களை ஜாதகரின் வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கும். முன்னேற்றங்கள் வளர்ச்சி தங்கு தடையின்றி இருக்கும்.

    ஸ்திர லக்னத்தில் பிறந்தவர்கள், லக்னாதிபதி ஸ்திர ராசியில் நின்றபவர்கள் தொழில், உத்தியோகத்திற்காக இடம் பெயர்ந்தால் நிலையாக அங்கேயே தங்கி விடுவார்கள். இளம் வாலிப பருவத்தில் ஸ்திர ராசியில் நிற்கும் கிரகங்களின் தசை நடந்தால் உயர் கல்விக்காக வெளிநாடு சென்று படித்து அங்கேயே வேலை கிடைத்து செட்டிலாகுவார்கள்.

    ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பத்தில் இருந்து ஒரு கிரகம் தசை நடத்தும் பொழுது தினமும் மகாவிஷ்ணுவிற்கு உரிய காயத்திரி மந்திரங்கள் மற்றும் லலிதா சகஸ்கர நாமம் படித்து வர நன்மைகள் அதிரிக்கும்.

    உபயம்

    மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கும் உபய லக்னத்தில் அடங்கும். உபய லக்னம் சர, ஸ்திர லக்னங்களின் தன்மையையும் உள்ளடக்கியது. அதாவது ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு நகரும் போது கிரக தன்மை சரம். மாறிய பிறகு ஸ்திரம். அதிசார கதியில் அல்லது வக்கிர நிலையில் சஞ்சாரம் செய்து விட்டு இயல்பு நிலைக்கு திரும்புவது உபயம்.

    இந்த லக்னம் அழித்தல் தத்துவத்தையும் தனக்குள் கொண்டுள்ளது.


    பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

    ஒருவருடைய சுய ஜாதகத்தில் உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகள் வலிமை பெற்ற கிரகத்தின் தசை புத்திகள் நடைபெற்றால் இடப்பெயர்ச்சியால் ஜாதகருக்கு தொடர்ந்து பல நன்மைகள் நடைபெறும். கடல் அலை போல் மீண்டும் மீண்டும் அவருக்கு தொடர்ந்து பல நன்மைகள்உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும்.

    இந்த ராசியில் அசுப தன்மை பெற்ற கிரகம் தசை புத்திகள் நடத்தினால் இடப்பெயர்ச்சியால் ஜாதகர் ஒரு பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்குள் மீண்டும் ஒரு பிரச்சினை அவர் வீட்டின் கதவை தட்டும். ஒரு இடப்பெயர்ச்சியை சமாளித்து மீளும் முன்பு மீண்டும் அடுத்த இடப்பெயர்ச்சி தயாராகி விடும். அப்படிச் செய்யலாமா, இப்படி செய்யலாமா என யோசித்து கொண்டே சொதப்பி தமக்கு தாமே சொந்த செலவில் சூன்யம் வைக்கும் புத்திசாலிகள். எதிலும் இரட்டை நிலைதான். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட மாட்டார்கள். ஒவ்வொரு நிமிடமும் சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். மனசு மாறிக்கிட்டே இருக்கும். ஏமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும். உபய லக்னத்தில் நின்று கிரகம் தசை நடத்தும் போது இடப்பெயர்ச்சியால் தொழில், உத்தியோகத்தில் அசவுகரியத்தை சந்திப்பவர்களுக்கு அரச மரப் பிரதட்சணம் மற்றும் வழிபாடு நன்மை தரும்.

    2. கோட்சார ரீதியான இடப்பெயர்ச்சி

    சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய 4-ம் மாத கிரகங்கள். மாதம் ஒரு ராசியில் இருக்கும் என்பதால் இதனால் ஏற்படும் மாற்றங்கள் ஒரு மாதம் வரை நீடிக்கும். செவ்வாயும் மாத கிரகம் என்றாலும் 45 நாட்கள் முதல் 6 மாதம் வரை ஒரே ராசியில் இருப்பதால் இதனால் ஏற்படும் மாற்றங்கள் ஒரு சில மாதங்கள் முதல் ஒரு சில வருடங்கள் நீடிக்கலாம். குரு , ராகு/கேது, சனி இவை நான்கும் வருடங்கள்.

    இடப்பெயர்ச்சியை நிர்ணயிப்பதில் வருடகிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. இவற்றின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால் அவற்றால் ஏற்படும் சுப / அசுப பலன்கள் வருடக் கணக்கில் ஜாதகருக்கு பலன் தரும். குரு பகவான் ஒரு ராசியை கடக்க தோராயமாக ஒரு வருடமாகும். மனிதனின் விருப்பம், எண்ணம், ஆசை போன்றவற்றை நிறைவு செய்பவர். பெரும்பாலும் குருவினால் ஏற்படுத்தப்படும் இடப்பெயர்ச்சி பதவி உயர்வு, ஊதிய உயர்வு, திருமணம், புதிய சொத்து வாங்கி குடியேறுவது போன்ற சுப பலன்களை உள்ளடக்கியிருக்கும்.

    ராகு, கேதுக்கள் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றரை ஆண்டுகள் 18 மாதங்கள் தங்கி பலன்களைத் தருவார்கள். இவர்கள் தங்கள் கோட்சார காலங்களில் வீடு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என அவரவர் வயதிற்கும், தசா புத்திக்கும் ஏற்ற இடமாற்றத்தை வழங்குகின்றன.

    இவர்களால் ஏற்படுத்தப்படும் இடப்பெயர்ச்சி சாதகம் குறைவாகவும், பாதகம் அதிகமாகவும் இருக்கும்.

    அதிக வருடம் அதிகபட்சம் 2½ ஆண்டுகள் ஒரு ராசியில் தங்கி பலன்தருபவர் சனிபகவான்.

    இவரால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் ஜாதகரை பல வருடங்களுக்கு வழிநடத்தும்.

    சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் இடமாற்றம் மனிதர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை எற்படுத்துகிறது. ஜனன ஜாதகத்தில் சனி வலிமை பெற்றவர்களுக்கு, தன் தசா காலத்தில், கோட்சாரத்தில் தான் நின்ற இடத்திற்கு ஏற்ப ஏராளமான நற்பலன்களை சனி பகவான் வாரி வழங்குவார். உயர் பதவி, தொழில், அந்தஸ்து, வாழ்வியல் மாற்றம் தரும் இடப்பெயர்ச்சி என எட்டாத உயரத்தில் ஏற்றி விடுவார். கோட்சாரத்தில் வலிமை இல்லாத இடங்களுக்கு வரும் காலங்களில் நீசத் தொழில், வறுமை, சிறை தண்டனை கொடுத்து வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுப்பார்.

    பொதுவாக அசுப கிரகங்கள் தரும் பலன்களில் ஏற்ற இறக்கம் மிகுதியாகஇருக்கும் என்பதால், நன்மை வந்தாலும் அந்த நன்மையை அனுபவிக்க முடியாத சிரமமும் இருக்கும். சனியின் சாதகமற்ற கோட்ச்சார நிலைகள் சற்று அதிக பாதிப்பைத் தரும்.

    பொதுவாக கல்வியாண்டின் துவக்கத்தில் உத்தியோகஸ்தர்கள் தான் இடப்பெயர்ச்சியை அதிகம் எதிர்பார்க்கிறார்கள். வேலை மற்றும் உத்தியோகத்தை சுட்டிக் காட்டக் கூடிய பாவங்களாக 6 மற்றும் 10-ம் பாவகத்திற்கு விரைய பாவகங்களான ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகங்கள் செயல்படும் பொழுது ஜாதகருக்கு வேலையில் இடமாற்றம் உண்டாகும். அதோடு ஆதிபத்திய ரீதியாக மாற்றத்தை தரக்கூடிய அஷ்டமாதிபதி மற்றும் மூன்றாம் அதிபதி தொடர்புடைய தசாபுத்திகளிலும் மாற்றம் உண்டாகும். விரைவான மாற்றத்திற்கு காரக கிரகம் சந்திரன். ஒருவருடைய ஜாதகத்தில் பிறந்த காலச் சந்திரன் மீது வருட கிரகங்களான குரு, சனி, ராகு-கேது செல்லும்போதும் மாற்றங்கள் கிடைக்கும்.பிறந்த காலச்சந்திரன் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் தசா புத்திகளும் சாதக நிலையில் இருந்தால் மாற்றம் ஜாதகர் விரும்பக் கூடியதாக இருக்கும்.

    தசா புத்தி சாதகமற்ற காலத்தில் ஏற்படும் இடப் பெயர்ச்சியால் மன சஞ்சலம் அதிகமாக இருக்கும்.

    சோதனைகளை சாதனையாக மாற்ற நல்ல இடமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்க கூடியவர்கள் தங்களது பிறந்த நட்சத்திரம் வரக்கூடிய நாளன்று குல இஷ்ட தெய்வ வழிபாடு செய்து மகிழவும்.

    Next Story
    ×