என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

எழில் மிகுந்த ஓம் கடற்கரை- களிப்பூட்டும் கோகர்ணம்
- கோகர்ணத்தில் ஆத்மலிங்கத்தை நிலைபெறச் செய்த மகா கணபதியை முதலில் தரிசிப்போம்.
- சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பழமையான சிவத்தலம் திருக்கோரணம்.
'கணேசா கடற்கரை' - கர்நாடகாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கு இப்படியும் ஒரு பெயர் உண்டு. ஏன் தெரியுமா?
காசர்கோடு, மங்களூரு, ஆனகுடே, குந்தபுரா, இடுகுஞ்சி, கோகர்ண் என்று புகழ்பெற்ற 6 கணபதி கோவில்கள் இப்பகுதியில் உள்ளன. கதிரவன் தோன்றி மறைவதற்குள் ஒரே நாளில், குடும்பத்துடன் சென்று வணங்கினால் ஆனைமுகத்தானின் அருள் பெற்று குறைவின்றி நல்வாழ்க்கை நடத்தலாம் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
எங்களது ஆன்மீக உலாவும் கோகர்ணத்து மகாகணபதியை வணங்கித் தொடங்கியது. மங்களூருவுக்கு வடக்கே முர்டேஸ்வர். அதற்கும் வடக்கே கோகர்ணம். கடற்கரை நகரங்கள். மேற்கே கடல் என்றால், வழி முழுவதும் ஏற்ற இறக்கமாக மலைகள், நீண்டுயர்ந்த தென்னை, பாக்கு மற்றும் பலா மரங்கள், இடையிடையே ஆறுகள். மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கே தான் பெரிய ஆறுகள் என்று பார்த்தால், மேற்கிலும் பலபல சிறிய ஆறுகள் - தூய்மையான நீருடன் மரங்கள் சூழ உள்ளது அழகோ அழகு.
கோகர்ணம் மங்களூருவில் இருந்து 238 கிமீ தொலைவில் வடக்கு கன்னரா மாவட்டத்தில், கங்காவல்லி, ஆகனாசினி என்ற இரு ஆறுகளுக்கிடையில் அழகிய கடற்கரைகள் அமைந்த சிற்றூர். இந்த ஆறுகள் கடலில் சங்கமிக்கும் இடம் பசுவின் காது போல் அமைந்திருப்பதால் கோகர்ணா. கோ - பசு, கர்ணா - காது. பூகோள அமைப்பின் படி இது தான் பெயர்க் காரணம்.
கோகர்ணத்தில் ஆத்மலிங்கத்தை நிலைபெறச் செய்த மகா கணபதியை முதலில் தரிசிப்போம். ஊரின் நடுவில் ஒரு சிறிய தெருவுக்குள் தான் மகாகணபதி கோவில், மகாபலேஸ்வர் கோவில் உள்ளன.
கோவிலின் முன்புறம் ஓடு வேய்ந்து கேரள பாணியில் இரண்டு அடுக்காக உள்ளது. கருவறைக்குள் சென்று நம் பிள்ளையாரைத் தொட்டு வணங்கலாம். வலம் வரலாம். 5 அடி உயரத்தில் இரண்டு கரங்கள், தூக்கிய துதிக்கை, பானைத் தொந்தி, குட்டைக் கால்கள், ஆனை போல் வளைந்த நெற்றியுடன் கற்பகக் களிறாகவே காட்சி அளிக்கிறார்.
இரு கரங்களுடன் கணபதி வடிவத்தைப் பார்த்தால் பழமையான சிலையாகத் தோன்றியது. விநாயகர் வழிபாடு தோன்றிய காலத்தால், நான்கு கரங்கள், ஆசனத்தில் அமர்ந்த கோலம் எல்லாம் இல்லாமல், இயற்கையாக ஆனையாகவே பழங்குடி மக்கள் வழிபட்டிருக்கலாம்.
அழகிய ஆனை முகத்தானை அன்புடன் வணங்கி, அவரால் கோகர்ணத்தில் நிலைபெறச் செய்த உலகின் ஒரே ஆத்ம லிங்கமான அருள்மிகு மகாபலேஸ்வரரைக் காணலாமா!
சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பழமையான சிவத்தலம் திருக்கோரணம். கர்நாடகாவின் வடக்கு கன்னர மாவட்டத்தில் அரபிக்கடலோரம் அமைந்துள்ள அழகிய சிற்றூர். தேவாரப் பாடல் பெற்ற ஒரே ஒரு துளு நாட்டுத் தலம் கோகரணம். சம்பந்தரும் கோகரணத்து இறைவனை ஏத்தி ஒரு பதிகம் பாடியுள்ளார்.
கருவறைக்குள் சென்று தொட்டு வழிபடலாம். வழக்கமாக நாம் காணும் லிங்கம் போல் அல்லாமல், குழிக்குள் சிறிய வடிவில் அமைந்துள்ளது.
'தெற்கின் காசி' என்று போற்றப்படும் திருக்கோகர்ணத்தில் ஈசன் உலகின் ஒரே ஆத்ம லிங்கமாக, 'மிக வல்லமை யுடையவர்' என்று 'மகாபலேஸ்வர்' ஆக எழுந்தருளியுள்ளார்.
கர்நாடகாவின் 7 முக்தித் தலங்களில் உடுப்பி, கொல்லூர், சுப்ரமணியா, கும்பசி, கோட்டீஸ்வரா, சங்கரநாராயணா ஆகிய இவற்றுடன் கோகர்ணமும் ஒன்று ஆகும். நீத்தார் கடன் இங்கு செய்யப்படுகின்றது.
பொற்செல்வி ஜெயபிரகாஷ்
கயிலையில் இருந்து ராவணன் கொண்டு வந்த ஆத்மலிங்கம் இது என்று கூறப்படுகிறது. இலங்கை கொண்டு செல்லும் வழியில், சிறுவனாக நின்றிருந்த விநாயகரிடம் சற்று நேரம் வைத்திருக்குமாறு கூற, அவர் கீழே வைத்து விடுகிறார்.
அப்புறம் நடந்தது என்ன? சீரங்கத்துக் கதை தான்! வீபிஷணன் இலங்கை கொண்டு சென்ற பள்ளி கொண்ட பெருமாள் திருவடிவத்தை, உச்சிப் பிள்ளையார் சீரங்கத்தில் தரையில் வைத்து, அங்கு நிலை பெறச் செய்தது போல், இங்கும் ஆத்மலிங்கத்தை கணபதி தரையில் வைத்து சிவனாரைக் கோகரணத்தில் இருக்கச் செய்து விடுகிறார். பிள்ளையாருக்கு இலங்கை மேல் என்ன கோபமோ!
ராவணன் தன் பலமனைத்தும் கொண்டு லிங்கத்தைத் தூக்க முயல, முடியவில்லை. ஈசனும் 'மிக வலிமையுடையவராக' 'மகாபலேஸ்வர்' ஆனார். லிங்கமும் பசுவின் காது போல் குழைந்ததால் தலம் கோகரணம் ஆனது.
ராவணன் கோபத்துடன் தூக்க முயன்ற போது லிங்கத்தின் சில பகுதிகள் தாராஸ்வர், குணவந்தேஸ்வர், முர்டேஸ்வர், ஷீஜேஸ்வர் போன்ற இடங்களில் விழ, அவையும் கோகரணத்துடன் சேர்ந்து சிவன் அருள் புரியும் பஞ்ச தலங்களாயின.
இனி கோவிலுக்குள் செல்வோம். மகாகணபதி கோவிலுக்கு அருகில் இருக்கின்றது. திராவிடக் கட்டிடக் கலை மரபில் கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில். கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் சேர்ந்திருக்க, முன்னால் கொடிமரம். கருவறை விமானம் நம் கோவில்களில் இருந்து சற்றே மாறுபட்டு இருந்தது. வலம் வரும் பிரகாரம், அதை அடுத்து சுற்று மண்டபத்துடன் மதில் சுவர்.
கொடி மரத்தின் அருகே மதிலை ஒட்டிய மண்டபத்தில், பெரிய மாடு இருந்தது. நிஜமான நந்தியை சுவாமியின் முன்னால் பார்த்தது இங்கு தான்.
ஈசனின் வலப்புறத்தில் கேரள பாணியில் புதுப்பிக்கப்பட்ட சிறு கோவில் இருந்தது. அம்மன் கோவிலாயிருக்க வேண்டும். 51 சக்தி பீடங்களில் கர்ண (காது) சக்தி பீடம்.
முன் மண்டபத்தில் சிந்தாமணி கணபதி, துர்க்கை சன்னதிகள் இருபுறங்களிலும் உள்ளன. பெரிய சதுரத்தூண்களில் வீரபத்திரர், காளி வேறு சில சிற்பங்கள் தெரிந்தன. எதையும் நின்று பார்க்க முடியவில்லை.
கருவறைக்குள் சென்று சுவாமியைத் தொட்டு வணங்கலாம், எப்படி இருப்பார், நன்றாகப் பார்க்க முடியுமா என்றெல்லாம் ஆவலுடன் உள்ளே நுழைகிறோம்.
தரையில் பித்தளைத் தொட்டி போன்ற அமைப்பு. அதனுள் கருங்கல்லால் ஆன ஆவுடையார் வடிவம். அதன் நடுவில்ஒரு சிறிய வட்டப் பள்ளம். அதன் ஓரத்தில் வெள்ளி பூச்சு இருந்த இடம் விஷ்ணு பாகமாம். பள்ளத்தில் உள்ள நீரைக் கண்ணில் ஒற்றித் தெளித்துக் கொள்ளலாம். பள்ளத்தின் நடுவே, கீழே கருப்பாகத் தெரிந்ததே லிங்கத்தின் மேற்பகுதி. அதையும் தொட்டு வணங்கலாம். மண்டியிட்டுக் குனிந்து தான் தொட முடிந்தது.
ஆத்ம லிங்கத்தின் உச்சிப் பகுதியே நாம் காண்பது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தின் போது முழுமையாகக் காணலாம்.
பார்த்தாலே வேண்டியது அளிக்கும் கோகர்ணத்து ஈசனைத் பார்த்து, தொட்டுத் வணங்கிய நிறைவுடன், இயற்கை அழகை ரசிக்க ஓம் கடற்கரை சென்றோம்.
புகழ் பெற்ற அருள்மிகு மகாகணபதி, மகாபலேஸ்வர் கோவில்களுடன், கோகரணத்தின் கடற்கரைகளும் சிறப்பு வாய்ந்தவை. கோவிலின் முன்னால் சற்று தூரத்தில் கோகர்ணம் கடற்கரை உள்ளது.
கோவிலின் அருகே உள்ள கடற்கரை தவிர, ஓம், ஹாப்மூன், பாரடைஸ், கடலெ மற்றும் பல கடற்கரைகளும் உள்ளன.
'ஓம்' கடற்கரை அருகே வண்டிகள் செல்லப் பாதை உள்ளது. ஆனால் அங்கிருந்து சுமார் 125 பெரிய படிகள் இறங்கிச் செல்ல வேண்டும். கைப்பிடிகளும் இல்லை.
கடற்கரை என்றாலே கால்கள் புதைய நடக்கும் வெண் மணற்பரப்பு, அலைகளின் ஓசை என்று நாம் பார்த்த வங்கக் கடல் போல் இல்லாமல், கடலின் அருகே மலைகள், பாறைகள், மரங்கள், கொஞ்சம் மணல் என்று இருந்தது.
சமஸ்கிருத 'ஓம்' மாதிரி வடிவத்தில் மாசுபடாத, இயற்கை எழில் நடம் புரியும் அழகிய இடம்.
இயற்கையை ரசித்து அனுபவிப்பவர்கள், மலையேற்றம், கடல் விளையாடல் விரும்புபவர்களுக்கு கோகரணத்து கடற்கரைகள் உகந்த இடமாகும்
தொடர்புக்கு-anarchelvi@gmail.com






