என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மனிதநேய மகான் ராமானுஜர்
- உடையவர் எனப்பட்ட ராமானுஜர் ஸ்ரீபாஷ்யத்தால், நராயணனைக் காட்ட வேதம் களிப்புற்றது.
- வேத வியாசர், கிருஷ்ண சைதன்யர், ஆதி சங்கரர், ஸ்ரீ ராகவேந்திரர், பன்னிரு ஆழ்வார்கள் என பல மகான்களின் போற்றுதலில் வைணவம் வளர்ந்தாலும், ராமானுஜர் வைணவத்திற்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.
மனிதகுலம்மறக்கமுடியாத, மறைக்கஇயலாத, மறுக்கவொண்ணாத மகான் ஒருவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இம்மண்ணுலகில் உதித்தார். மனிதகுல வரலாற்றில் ஒரு வியப்பூட்டும் தத்துவமேதை, சமூகப்புரட்சியாளர், பூவுலகில் வைகுந்தம் காட்டிய புண்ணியன், மனிதாபிமானம் மிக்க சமுதாயவாதி, சமய சமூக நோக்குக் கொண்ட சமதர்மவாதி,வைணவ நெறியை மக்கள் நெறியாக்கிய வித்தகர், இனம், குலம், மொழிவேற்றுமை இல்லாத அன்புநெறியை வளர்த்தவர். மாற்றுமத மங்கையையும் மனம் திருத்தி துலுக்க நாச்சியாராக வழிபடச் செய்து மதநல்லிணக்கத்துக்கு அடிகோலியவர், குடிநீர்வசதிக்காக கர்நாடக மாநிலம் தொண்டனூரில் பெரியதொரு நீர்த்தேக்கம் அமைத்த சமூகநலத்தொண்டர்
திருமந்திரப்பொருளை அனைவரும் அறிந்து நல்வாழ்வு வாழ திருக்கோஷ்டியூர் கோவில் விமானத்தில் நின்று அனைவரும் உய்ய குரல் ஈந்த குணாளர்.
ஆயிரம் நாவுகளுடைய ஆதிசேஷன் அம்சமாய் காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவாச்சார்யார் காந்திமதி அம்மையார் தம்பதிகளுக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அருளாசியால் 4.4.1017-ல் கலி 4119-ம் வருடம் பிங்கள சித்திரை வியாழக்கிழமை சுக்ல பட்ச பஞ்சமி திருவாதிரையி்ல் ஒரு மகவாக அவதரித்தார்.அம்மகவிற்கு, ராமனுக்கு அனுஜன் (தம்பி) ராமானுஜன் எனும் திருநாமத்தை அவரது தாய்மாமன் பெரிய திருமலை நம்பி சூட்டினார்.
பின்னர் உடையவர் எனப்பட்ட ராமானுஜர் ஸ்ரீபாஷ்யத்தால், நராயணனைக் காட்ட வேதம் களிப்புற்றது.
வேத வியாசர், கிருஷ்ண சைதன்யர், ஆதி சங்கரர், ஸ்ரீ ராகவேந்திரர், பன்னிரு ஆழ்வார்கள் என பல மகான்களின் போற்றுதலில் வைணவம் வளர்ந்தாலும், ராமானுஜர் வைணவத்திற்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.
வைதீகம்' என்ற பெயரில் மேட்டுக்குடி மக்களிடம் கிடந்த வைணவத்தினை பாமரனும் பின்பற்றும் வண்ணம் மாற்றிய தொண்டு மிகப்பெரியது.
கீழ்க்கண்ட நன்னெறிகளை ஒரு மடத்தின் தலைவராக இருந்துகொண்டு தொண்டாற்றிய ராமானுஜர் 120 ஆண்டுகள் இந்த மண்ணுலகில் வாழ்ந்து அருள்பாலித்தவர்.
இறைவன்தான் எல்லாம் என்பது அத்வைதம். இறைவன் வேறு ஜீவாத்மா வேறு என்ற துவைதக் கோட்பாட்டின் எதிர்ப்பதம் இந்த அத்வைதம். துவைதம் என்றால் இரண்டு என்ற சொல்லில் இருந்து வந்தது.
பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணன் ஒருவன் மற்ற எல்லா ஜீவராசிகளும் தனித்தனி என்பது துவைத சித்தாந்தம். அதில் இறைவனை அடைய தன்னை சரண் செய்து கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாக தாபித்தவர்.
ஒருமுறை காஞ்சி மன்னனின் மகளுக்கு மனோவியாதி ஏற்பட்டது. வைத்தியர்கள் அரசிளங்குமரிக்கு பிரம்மராக்சஸ் பற்றிக் கொண்டிருக்கிறது விரட்ட மாந்த்ரீகனைத்தான் அழைத்து வரவேண்டும் என்றனர். யாதவபிரகாசர் அரண்மனையின் அந்தப்புரத்தில் அரசிளங்குமரியிடம் தனக்குத் தெரிந்த மந்திரங்களை பிரயோகித்தார். பிரம்மராட்சசன் நான் இங்கிருந்து அகல வேண்டுமென்றால் உனது சீடனான ராமானுஜனை அனுப்பு என்றது.யாதவப்பிரகாசருக்கு உடன்பாடில்லை என்றாலும் அரசனின் ஆணையை நிறைவேற்றாவிட்டால் அதன் விளைவுகளை சந்திக்க நேரும் என்பதால் ராமானுஜரை அரண்மனைக்கு அனுப்பினார்.
ராமானுஜர் அரண்மனைக்கு சென்றதும் பிரம்மராட்சசன் " நான் இந்த இளவரசியை விட்டு அகலவேண்டுமானால் உங்கள் பாதம் என்மீது படவேண்டும" என்றது. ராமானுஜர் , உருவமற்ற உன் மீது என் பாதங்கள் எப்படி படும்? " என்றார். தங்கள் திருப்பாதங்களை இளவரசியின் தலைமீது வையுங்கள். அது என்மீது படும்" என்றது.
ராமானுஜரும் "நீ அகன்றது எப்படித்தெரியும்? என வினவ"அருகில் உள்ள அரசமரத்தின் பெரியகிளை ஒன்று முறிந்துவிழும்" என்றது. இளவரசியின் சிரசின் மீது ராமானுஜர் தனது பாதத்தை வைக்க அரசமரத்தின் பெரிய கிளை ஒன்று பெருத்த சப்தத்துடன் முறிந்து விழுந்தது. இளவரசியும் மயக்கமுற்று எழுபவளைப் போல எழுந்துவிட்டாள்.அரசனும் மகிழ்வுற்று இராமானுஜருக்கு சிறப்பு செய்து அனுப்பினான். இதைப்போல் பல அற்புதங்கள் அவரது 120 ஆண்டுக்கால வாழ்வில் நிகழ்ந்தது
திருக்கச்சி நம்பி திருக்கோட்டியூர்நம்பி திருமாலையாண்டன், திருவரங்கப்பெருமாளரையர், பெரியநம்பி முதலியோர் இவருக்கு குருவாக அமைந்தனர்
நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழிக்கு அதன் அர்த்தங்களை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் திருக்குருகைப்பிரான் பிள்ளான் மூலம் வியாக்கியானம் இயற்றச் செய்தார். வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு, கூரத்தாழ்வாருடன் காஷ்மீரம் சாரதா பீடத்திலிருந்த போதாயன விருத்தி உரை துணை கொண்டு" ஸ்ரீ பாஷ்யம்" என்னும் தெளிவுரை அருளிச் செய்தார்.
ராமானுஜர் 1. ஸ்ரீ பாஷ்யம், 2) வேதாந்த தீபம், 3) வேதாந்த சங்க்ரஹம், 4) வேதாந்த சாரம், 5) சரணாகதி கத்யம், 6) கீதா பாஷ்யம், 7)ஸ்ரீரங்க கத்யம், 8) ஸ்ரீவைகுண்ட கத்யம், 9) நித்ய கிரந்தம் ஆகிய நூல்களை இயற்றினார்.
திருவரங்கம் திருக்கோவில் நிர்வாகத்தை சீர்திருத்தியதோடு நில்லாமல் காஞ்சிபுரத்தில் தொடங்கிய திக்விஜயம் திருக்குடந்தை, மதுரை, அழகர்கோவில், திருக்குறுங்குடி வழியாக நம்மாழ்வாரின் அவதாரத் தலமாகிய ஆழ்வார்த்திருநகரி சென்றது. ராமானுஜரும் நம்மாழ்வாரின் அவதாரத் தலத்தில் திருவாய்மொழிப் பாசுரங்களை பாடி மகிழ்ந்தார். அங்கிருந்து கேரளதேசம் சென்று திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாபனை சேவித்து விட்டு வடக்கே தனது யாத்திரையை மேற்கொள்கிறார். பாரத தேசத்தில் அவரது திருவடி படாத பகுதிகள் குறைவு.
செல்லுமிடமெல்லாம் அனைத்து வைணவத் தலங்களிலும் ஆழ்வார்களின் நாலாயிர திவ்யபிரபந்தம் ஒலிக்கச் செய்தார். திருவனந்தபுரத்தில் இதனைக் கோவில் நம்பூதிரிகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.
அங்கிருந்து வடக்கு நோக்கி யாத்திரையைத் தொடங்கினார். துவாரகை, வடமதுரை, பிருந்தாவனம், சாலகிராமம், அயோத்தி, பத்ரி, கேதார்நாத், புஷ்கரம் போன்ற புனித தலங்களில் நாராயணனை தரிசித்து இறுதியில் காஸ்மீரத்தில் சாரதாபீடத்தை வந்தடைந்தார். பீடத்தில் இருந்த சாரதாதேவி ராமானுஜருக்கு 'பாஷ்யகாரர்' என்ற பட்டத்தை வழங்கியதாக ஒரு வரலாறு .
சாரதாதேவியின் வேண்டுகோளுக்கிணங்கி அவர் காசி சென்றார். பின் புரி நகரில் எம்பார் என்ற பெயரில் வைணவ மடம் ஒன்றை நிறுவுகிறார். வழியில் ஸ்ரீகூர்மம், சிம்மாசலம் போன்ற இடங்களில் வைணவ நெறியை பரப்பி கருடமலை அடைந்து, தங்கி அகோபிலம் என்ற இடத்தில் ஒரு மடத்தை நிறுவுகிறார். திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையான் நாராயணன் திருமாலின் அம்சமே என நிறுவிதம் சீடர்களுடன் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார்.
ஆதிசேஷன் ராமானுஜராக அவதரித்து பரந்தாமன் திருவுளப்படிக்கு தனக்காக இடப்பட்ட அனைத்து செயல்களையும் செய்து முடித்து தமது நூற்றிருபத்தோராவது வயதில் 1138-ம் ஆண்டில் மீண்டும் பரமபதம் திரும்பினார்.
அனைத்து இடங்களிலும் ராமானுஜர் அவதாரத்திருநாள் நடந்தாலும் அவர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரில் அவதாரத்திருநாள் இவ்வாண்டு ஏப்ரல் 15-ந் தேதி முதல் துவங்கி ஏப்ரல் 26-ந் தேதி வரையும் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தெப்ப உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முக்கியமாக ஏப்ரல் 24-ந் தேதி திருத்தேர் உற்சவமும் 25-ந் தேதி சாற்றுமுறை உற்சவமும் வெகு சிறப்பானவையாகும்,
திருஅவதாரத் திருநட்சத்திர திருநாட்களில் தரிசனம் செய்து வேண்டிய பலன் பெறலாம்.
-இரா.இரகுநாதன்






