என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

அம்பிகையின் பீஜமந்திர மகிமை- டாக்டர் சுதா சேஷய்யன்
- அம்பிகை அதனை அப்படியே ஏற்றுக் கொண்டாள். மகனின் அன்பு என்றே வாங்கிக் கொண்டாள்.
- தன் தந்தையும் மகனும் செய்த தவறை லீலாவதியும் உணர்ந்தாள். பொருள் புரியாமல் கூறினாலும் அம்பிகையின் மந்திரம் காத்து ரட்சிக்கும்.
கோசல நாட்டை துருவசிந்து என்னும் மன்னர் ஆண்டு வந்தார். தேவியின் பக்தரான இவர், விதி வசத்தால் கானகத்தில் உயிரிழந்தார். இவரின் இரண்டு மனைவியருக்கும் ஆளுக்கு ஒரு மகன். முதல் மனைவி மனோரமையின் மகன் சுதர்சனன், சில மாதங்கள் மூத்தவன்; தந்தையையும் தாயையும் போலவே பக்தன். தர்ம சிந்தையுள்ளவன். இளையவளின் மகனான சத்ருஜித், தன்னுடைய தாய்வழிப் பாட்டனார் யுதாஜித்தின் சொற்களைக் கேட்டு, ஆணவத்தினால் பாழ்பட்டான். துருவசிந்து இறந்துவிட, அடுத்தது பட்டம் யாருக்கு என்னும் வினா எழுந்தது. முறைப்படி சுதர்சனனுக்குத்தான் உரிமை. என்றாலும், யுதாஜித்தும் சத்ருஜித்தும் சண்டையிட்டு, சுதர்சனனையும் மனோரமையையும் விரட்டிவிட்டனர். கைப்பொருளையும் அணிந்திருந்த சொற்ப நகைகளையும்கூட இழந்துவிட்ட மனோரமை, எப்படியோ தப்பிப் பிழைத்து, பாரத்வாஜருடைய ஆச்ரமத்தை அடைந்தாள். சின்னஞ்சிறு மகனுடன் தஞ்சம் புகுந்தாள்.
ஒருமுறை, சுதர்சனனும் மனோரமையும் ஆசிரமத்தில் இருப்பதை அறிந்த யுதாஜித், சுதர்சனுடன் சண்டையிடுவதற்காகவே வந்தான். இருந்தாலும், பாரத்வாஜ் முனிவருடைய இடையீட்டாலும், எந்த விதத்திலும் பிறருக்கு இடையூறு செய்யாமல் இருக்கும் சுதர்சனனைப் பற்றி அவர் கூறிய நல்வார்த்தைகளாலும் அதிர்ச்சியடைந்து திரும்பினான். கையில் பொருளில்லாமலும் ஆள்பலம் இல்லாமலும் இருக்கிற சுதர்சனனால் என்ன செய்துவிட முடியும் என்னும் இறுமாப்பு, யுதாஜித்துக்கும், அவன் வழியாக சத்ருஜித்துக்கும் இருந்தது.
இதற்கிடையில், வழிபோக்கர்கள் யாரோ சிலர் உச்சரித்த 'கிலீப' என்னும் சொல், சுதர்சனன் காதில் விழுந்தது. என்ன என்றே புரியாமல், ஏதொவொரு ஈர்ப்பில், அதனை உச்சரிக்க முற்பட்டான். முழுமையும் வாயில் வராமல், 'கிலீ' என்று மட்டுமே சொல்லப் பழகி, அதையே திரும்பத் திரும்பச் சொன்னான் (கிலீப என்றால் ஆணுமின்றி பெண்ணுமின்றி இடையாக இருத்தல் என்று பொருள்).
'கிலீம்' என்பது அம்பிகையின் பீஜ மந்திரம். பொருள் தெரியாமல், யதேச்சையாகத்தான் சுதர்சனன் கூறினானென்றாலும், அம்பிகை அதனை அப்படியே ஏற்றுக் கொண்டாள். மகனின் அன்பு என்றே வாங்கிக் கொண்டாள்.
இளைஞனான மலர்ந்திருந்த சுதர்சனன், ஆற்றங்கரையில் அமர்ந்திருக்க, அவன் முன் பிரசன்னமான தேவி, வில், அம்புகள், வஜ்ஜிர கவசம் ஆகியவற்றைக் கொடுத்து மறைந்தாள். வந்தவளின் பிரகாசத்தையும் பேரழகையும் கண்டு வியந்த சுதர்சனன், 'அம்மா' என்று அடிபணிந்து வணங்கினான்.
இதற்கிடையில், காசி தேசத்து அரசர் சுபாஹு, தம்முடைய மகள் சசிகலைக்குத் திருமணம் செய்விக்க எண்ணினார். மகள் நிரம்ப புத்திசாலி. ஆற்றங்கரைப் பகுதிகளில் உலாவியிருந்த காசி தேச ஒற்றர்கள் சிலர், சுதர்சனனின் அழகாலும் தேஜசாலும் வசீகரிக்கப்பட்டு, சசிகலையிடம் அவனைப் பற்றிச் சிலாகித்தனர்.
சுதர்சனனைக் காணவேண்டுமென்றும் அவனே தனக்கு மணவாளனோ என்றும் சசிகலை நினைக்கத் தொடங்கினாலும், நாடிழந்த நிலையில், எந்த நேரமும் வலிமைமிக்க யுதாஜித்தால் அழிக்கப்படலாம் என்னும் அபாயம் நிறைந்த அவன் கதை அவளைக் கவலைக்குள் ஆழ்த்தியது. அம்பிகையை வேண்டத் தொடங்கினாள். தந்தை என்ன சொல்வாரோ, என்ன செய்வாரோ என்னும் கலக்கம் பிறந்தது.
சுதர்சனன், வழக்கம்போல், அம்பிகையின் பீஜத்தை உச்சாடனம் செய்து வந்தான். அவனுடைய நல்ல உள்ளத்தையும் அடக்கமான சிந்தனைகளையும் அம்பிகை ரசித்தாள். சிருங்கிபேரத்து வேடராஜாவின் உள்ளத்தைத் தூண்டிவிட்டாள். சுதர்சனனின் பாட்டன் காலத்திருந்தே அயோத்தியோடு நட்பில் இருந்த வேடராஜா, காணாமல் போன இளவரசன்போல் யாரோ ஓர் இளைஞன் பாரத்வாஜ் ஆசிரமத்தில் இருப்பதைக் கேள்வியுற்று, ஆடை அணிகலன்களோடு காண வந்தார். நான்கு குதிரைகள் பூட்டிய தேர் ஒன்றையும் பல்வகை திரவியங்களையும் சுதர்சனனுக்குச் சமர்ப்பித்தார். என்ன தோன்றியதோ, கண் மூடி தியானத்தில் அமர்ந்தவர், சிறிது பொழுது கழித்து, 'இழந்த அரசை அம்பாள் உனக்கு அளிப்பாள்' என்று கூறிவிட்டு அகன்றார்.
காசி மன்னர் மகளுக்கு இச்சா சுயம்வரம் செய்யத் தீர்மானித்தார். அரசர்களையும் இளவரசர்களையும் சபையில் கூடச் செய்து, மணமகளையே தேர்ந்தெடுக்கச் செய்வதே இச்சா சுயம்வரம். சுயம்வர நாள் நெருங்க நெருங்க, சசிகலை கவலைக்குள்ளானாள். அம்பிகையைச் சரண் புகுந்தாள். கனவில் காட்சி கொடுத்த தேவி, கவலை வேண்டாம் என்றும், சுதர்சனனே இவளுக்கு மணவாளனாகி, இழந்த நாட்டையும் மீட்டு, பேரரசன் ஆவான் என்றும் அருளினாள்.
நம்பிக்கையுடன் சுயம்வர நாளை வரவேற்கத் தலைப்பட்டாள் சசிகலை. மகன் சுயம்வரம் செல்கிறேன் என்றபோது, மனோரமைக்குக் கவலையான கவலை. யுதாஜித் வருவாரே, மகனுக்குத் தீங்கு விளைவிப்பாரே என்னும் தவிப்பு. மகனைத் தடுக்க முயன்றாள். முடியவில்லை. 'தேவியின் துணை இருக்கும்போது என்னம்மா அச்சம்?' என்றவன் சிரித்துக் கொண்டே கூறினான். முன்னும் பின்னும் அம்பிகையே துணை இருக்கட்டும் என்னும் பொருள் படியான தேவி கவச சுலோகம் ஒன்றைக் கூறிக் கொண்டே மனோரமை தானும் உடன் புறப்பட்டாள்.
சுயம்வரப் பகுதியை அடைந்த சுதர்சனனை, அங்கு வந்திருந்த யுதாஜித்தும் சத்ருஜித்தும் கண்டனர். எப்படி வரலாம் என்று சண்டையிட்டனர். பிற அரசர்களில் சிலர், யுதாஜித் பக்கம் சேர்ந்துகொள்ள, இன்னும் சிலர், வசதியில்லாத சுதர்சனன் பங்கு பெறுவதைக் கண்டு ஏன் அச்சப்படவேண்டும், புத்திசாலியான சசிகலை ஒன்றுமில்லாத அவனைத் தேர்ந்தெடுக்கமாட்டாள் என்று சமாதானம் பேசினர்.
சுயம்வர நாளும் வந்தது. சர்வசுலங்கார பூஷிதையாக சபா மண்டபவாயிலுக்கு வந்த சசிகலை, தந்தையைத் தனியாக அழைத்தாள். சுதர்சனனை மணாளனாக நினைத்துவிட்ட தன்னை மற்றவர்கள் ஏன் பார்க்கவேண்டும், எனவே தான் உள்ளே வரப்போவதில்லை என்றும், தன்னை சுதர்சனனுக்குத் திருமணம் செய்து வைக்கும்படியும் கூறினாள்.
மண்டபத்தில் யுதாஜித் செய்து கொண்டிருந்த அமளி துமளியைக் கண்டு பதைத்துப் போயிருந்த சுபாஹு, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். மகளின் உறுதியைத் தட்டிவிட முடியாமல், சுயம்வரம் மறுநாளைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.
மாலை நேரம். தந்தையிடம் வந்த மகள், தன்னையும் சுதர்சனனையும் நகருக்கு அப்பால் விட்டுவிடும்படியும், தாங்கள் மனோரமையோடு கானகம் சென்று பிழைத்துக் கொள்வதாகவும் கூறினாள்.
செல்ல மகளை அப்படியே அனுப்பி விடமுடியுமா?
என்ன வருகிறதோ பார்க்கலாம் என்று முடிவெடுத்த சுபாஹு, இரவே, அரண்மனை தேவி விக்கிரகத்திற்கு முன்னர், அரசியும் மனோரமையும் நெருங்கிய அமைச்சர்களும் மட்டுமே சூழ்ந்திருக்க, சசிகலைக்கும் சுதர்சனனுக்கும் திருமணம் செய்து வைத்தார்.
காலையில், திருமணச் செய்தியை சபையில் தெரிவித்து, அனைவரிடமும் ஆசிகளைக் கோரினார். இன்னொரு பக்கம், நகரை விட்டு நீங்குவதற்காக மணமக்கள் புறப்பட்டனர். நகர எல்லை வரையாவது அவர்கள் தேரில் செல்லட்டும் என்று கருதிய சுபாஹு மன்னர், அவ்வாறே அவர்களை அனுப்பினார்.
தேரைக் கண்ட சத்ருஜித் சீற்றமுற்றான். எப்படியாவது சசிகலையை அபகரித்து விடவேண்டுமென்று தீர்மானித்து, சண்டையிட முனைந்தான். யுதாஜித்தும் இன்னும் பல அரசர்களும் அவனுடன் இணைந்தனர்.
ஒரு பக்கம் சுபாகூவின் படைகள், இன்னொரு பக்கம் இணைந்த படைகள் – யுத்தம் வலுத்தது. இத்தனைக்கும் நடுவில், தேர் நின்று போயிருக்க, சுதர்சனன் இறங்காததைக் கண்டு சுபாஹுவிற்குச் சினம் மூண்டது. 'ஏ முட்டாளே, உனக்காகத்தானே இத்தனை சண்டை. உதவிகூட செய்யமாட்டாயா' என்று சீறிக் கொண்டே தாரின் சீலையை இழுக்க…உள்ளே… கண்மூடி அம்பிகையை தியானித்துக் கொண்டிருந்தான் சுதர்சனன்.
சுபாஹுவின் கூச்சல் கேட்டு விழித்த சுதர்சனன், கைகளில் வில்லையும் அம்புகளையும் ஏந்திக் கொண்டே இறங்கினான்.
இதற்குள்ளாக, சிங்கமொன்று கர்ஜித்துக் கொண்டே அங்கு வர, அதன்மீது… பட்டாடையில் பளபளத்தபடியும், பற்பல திருக்கரங்களில் பற்பல ஆயுதங்களைத் தாங்கியபடியும் சாட்சாத் அம்பிகையே போருக்கு எழுந்தாள். பெண்ணாக மட்டுமே சிலருக்கும், அம்பிகையாகச் சிலருக்கும் இவள் காட்சி கொடுக்க…. யுதாஜித்தும் சத்ருஜித்தும் மூடத்தனமாகப் பாய்ந்தார்கள். பெண் ஒருத்தி என்ன செய்துவிடமுடியும் என்று தோள் தட்டினார்கள்.
அம்பிகை மெல்லத் திரும்பி, சுதர்சனனை நோக்கினாள். மந்திரத்தால் கட்டுண்டவனாக அம்புகளைப் பொழியத் தொடங்கிய சுதர்சனனின் அஸ்திரங்கள் யுதாஜித் மீதும் சத்ருஜித் மீதும் பாய…அங்கேயே அப்போதே இருவரும் மாண்டனர். அம்பிகை புன்னகைத்தாள். பிற அரசர்கள் யாவரும் திசை தெரியாமல் ஓடினர். பின்னர் என்ன? சுதர்சனனுக்கு மீண்டும் ஆட்சி கிட்டியது என்பதும் சசிகலையின் மகிழ்ச்சி எல்லை கடந்தது என்பது சொல்லித் தெரியவேண்டுமா?
அயோத்தியை அடைந்த சுதர்சனன், சத்ருஜித்தின் தாய் லீலாவதியைச் சந்தித்து வணங்கி மன்னிப்புக் கோரினான். மனோரமையும் சக மனைவியை ஆரத் தழுவினாள். தன் தந்தையும் மகனும் செய்த தவறை லீலாவதியும் உணர்ந்தாள். பொருள் புரியாமல் கூறினாலும் அம்பிகையின் மந்திரம் காத்து ரட்சிக்கும். துன்பம் வரும் வேளையில், அம்பிகையே கவசமாவாள். போகிற பாதைகளில், முன்னும் பின்னும் இவளே துணை வருவாள்.
தொடர்புக்கு:- sesh2525@gmail.com