என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

விதவிதமான மருத்துவ பலன் கொண்ட வெந்தயம்
- விதை மட்டுமின்றி கீரையும் நல்ல மருத்துவ குணம் மிகுந்த உணவாகும்.
- வெந்தயக் கீரை குளிர்ச்சியைத் தரக்கூடியது. மலச்சிக்கலை நீக்கும் தன்மை உடையது.
நம் வீடுகளில் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் அற்புதமான மருந்துகளில் ஒன்று வெந்தயம். நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் இந்த வெந்தயமானது பலவிதமான உடல் உபாதைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஒரு மருத்துவ குணம் மிக்க உணவுப் பொருள் ஆகும். இதன் விதை மட்டுமின்றி கீரையும் நல்ல மருத்துவ குணம் மிகுந்த உணவாகும். இதனை எளிதாக நம் வீடுகளிலேயே வளர்க்க இயலும்.
வெந்தயக் கீரை குளிர்ச்சியைத் தரக்கூடியது. மலச்சிக்கலை நீக்கும் தன்மை உடையது. வெந்தயத்தின் இலை மற்றும் விதைகளில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின்-பி6, வைட்டமின்-சி, இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
வெந்தயக் கீரையை வேகவைத்து தேன்விட்டு கடைந்து உட்கொண்டால் மூலம், குடல்புண் இவை போகும். இதன் இலையை அரைத்து வீக்கத்திற்கு கட்டலாம். கீரையை வேகவைத்து வெண்ணெய் உடன் சேர்த்து வதக்கி உண்டால் உடலில் பித்தம் அதிகரிப்பதால் உண்டால் மயக்கம் தீரும். வெந்தயக் கீரை மற்றும் வெந்தயம் இரண்டுமே ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையது. வெந்தயத்தை இளவறுப்பாக வறுத்து, பொடி செய்து வெதுவெதுப்பான நீரில் கலந்து உண்டுவர ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கலை நீக்கும். ரத்த சோகை நீங்கும்.
வெந்தயத்தை கஞ்சியாக செய்து உண்டுவந்தால் ரத்த சோகையை நீக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களில் பால் சுரப்பைத் தூண்டும். வெந்தயம், பெருங்காயம், கறிமஞ்சள் இவற்றை சமபாகம் எடுத்து நெய்விட்டு வறுத்துப் பொடி செய்து மதிய உணவுடன் கலந்து உண்ண வயிற்றுப்புண், பொருமல் தீரும். மேலும் கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.
வெந்தயத்தில் உள்ள 4-ஹைட்ராக்சி ஐசோலியூசின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது.
வெந்தயத்தை நீரில் நன்றாக ஊறவைத்து, அரைத்து முகத்தில் தடவி உலர்ந்ததும் கழுவிவர முகம் பொலிவு பெறும். பாலுடன் சேர்த்து அரைத்தும் முகத்தில் பூசி வரலாம். இரவு முழுவதும் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து, அந்த நீரினைக் கொண்டு முகத்தினை கழுவிவர சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்குவதோடு தோலிற்கு ஈரப்பதத்தையும் தருகிறது.
மேலும் இதில் உள்ள வைட்டமின்-சி முகப்பருக்கள் ஏற்படுவதை தவிர்ப்பதோடு, முகச்சுருக்கத்தினை குறைக்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்து முடிஉதிர்வை கட்டுப்படுத்தும்.
வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க, முடிஉதிர்வை கட்டுப்படுத்துவதோடு, முடியின் வறட்சி தன்மையை நீக்கி, மிருதுவைத் தரும்.
வெந்தயத்தை தேங்காய் எண்ணையுடன் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்திவர முடிஉதிர்வைத் தடுக்கும். தலையில் பொடுகுத் தொல்லை மற்றும் அரிப்பு காணப்பட்டால் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் தயிருடன் கலந்து அரைத்து தலையில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வர பொடுகுத் தொல்லை படிப்படியாகக் குறையும்.
ஊறவைத்த வெந்தயத்தினை கறிவேப்பிலை உடன் சேர்த்து அரைத்து தலையில் பூசிக் குளித்து வர இளநரையைக் கட்டுப்படுத்தும்.
வெந்தயத்தை ஊறவைத்து, தேங்காய் பாலுடனோ அல்லது சிறிதளவு தேங்காய் எண்ணைய்யுடனோ அரைத்து தலையில் பூசி குளித்து வர கேசத்தின் வறட்சி நீங்கி மிருது தன்மை அடையும்.
வெந்தயத்தின் ஆன்டி ஆக்ஸிடென்ட் தன்மையால் இது உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. வெந்தயம் ஊற வைத்த தண்ணீர் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியைக் கட்டுப்படுத்துகிறது. இதில் காணப்படும் பீனாலிக் பொருள்கள், ஸ்கோபோலெடின் போன்ற வேதிப்பொருள்கள் சில பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படுகின்றது.
வெந்தயக் கீரையில் காணப்படும் காலாக்டோமென் மற்றும் பொட்டாசியம் இதயத்தின் செயல்பாட்டினை சீர் செய்கிறது. இதில் உள்ள வைட்டமின்-கே எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. வெந்தயக் கீரையானது சூப், சப்பாத்தி மற்றும் சாலட் போன்ற பலவித உணவு வகைகள் செய்யப் பயன்படுகிறது. மேலும் இதனை விளக்கெண்ணையில் வதக்கி உண்டால் மூல நோயைக் கட்டுப்படுத்தும்.
மேலும் வெந்தயமானது ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்பீரோன் போன்ற இனப்பெருக்க ஹார்மோன்களின் செயல்பாட்டினை சீர்செய்வதாக தற்கால ஆராய்ச்சி தரவுகள் குறிப்பிடுகின்றன. எனவே இவை பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நீர்கட்டி மற்றும் ஆண்களின் மலட்டுத் தன்மை போன்ற குறைபாடுகளில் இருந்து வெளிவர உதவுகின்றன. வெந்தயத்தில் உள்ள பீனாலிக் பொருள்கள் ரத்த உறைவு உருவாவதை தடுத்து ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. இதனால் மார்படைப்பு, பக்கவாதம் போன்றவை வராமல் தடுக்கப்படுகின்றன.
எனவே வெந்தயமானது சரும பாதுகாப்பு, கேச பாதுகாப்பு போன்றவற்றோடு எலும்புகளுக்கு வன்மை, சீரான செரிமானம், இருதயத்தின் செயல்பாடு, குடலுக்கு வன்மை போன்ற பலன்களைத் தருகிறது. மேலும் மாதவிடாய் கோளாறுகள், சர்க்கரை நோய், உடல் பருமன், ஆண் மலட்டுத் தன்மை போன்ற குறைபாடுகளைச் சீர் செய்கிறது.
இத்தகைய எளிதில் கிடைக்கக்கூடிய மருத்துவ குணம் மிகுந்த உணவுப் பொருளான வெந்தயம் மற்றும் அதன் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மேற்கூறிய பலவிதமான பிணிகளில் இருந்து விடுபடலாம்.






