என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பாரதியை கண்டேன் எனும் தலைப்பில் கண்ணதாசன் கவிதைகள்
    X

    பாரதியை கண்டேன் எனும் தலைப்பில் கண்ணதாசன் கவிதைகள்

    • இருபதாம் நூற்றாண்டில் ஏராளமான கவிஞர்கள் தமிழகத்தில் உருவாகி இருக்கிறார்கள்.
    • பாரதி வாழ்ந்த காலத்தில் அவரைத் தாங்கி பிடிப்பதற்கு எவருமே முன்வரவில்லை.

    இருபதாம் நூற்றாண்டில் ஏராளமான கவிஞர்கள் தமிழகத்தில் உருவாகி இருக்கிறார்கள். அவர்களில் மிக மிக முக்கியமான கவிஞராக ஒளிவீசி திகழ்ந்தவர் மகாகவி பாரதியார் என்றால் அது மிகை ஆகாது. புயல் போல புறப்பட்டு வந்து புரட்சிக் கனல்கக்கும் அனல் கவிதைகளை அள்ளி வீசி அயர்ந்து தூங்கிய மக்களைத் தட்டி எழுப்பி சுதந்திர ஜோதியை மக்கள் மனங்களில் ஏற்றியவன் பாரதி.

    பாரதியை தொடர்ந்து பாவேந்தர் பாரதிதாசன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை,கவியோகி சுந்தானந்த பாரதியார் என்ற வரிசையில் நமது கண்களுக்கு அடுத்தாற் போல வந்து நிற்பவர் கவியரசர் கண்ணதாசன்.

    இருபதாம் நூற்றாண்டில் புற்றீசல் போல புறப்பட்டு வந்த கவிஞர்களில் மரபுக் கவிஞராக இருந்தாலும் சரி அல்லது புதுக்கவிதை கவிஞர்களாக இருந்தாலும் சரி பாரதியின் தாக்கம் இல்லாமல் எழுதியவர்கள் எவரும் இல்லை என்பதே உண்மை .

    பாரதியை எல்லோருக்கும் பிடித்துப்போனதற்கு காரணம் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்து காட்டியதுதான்.. மனதிற்குள் என்ன நினைத்தானோ.. அதைத்தான் எழுதினான் எதை எழுதினானோ அதன்படி வாழ்ந்து காட்டினான் பாரதி.

    பாரதி வாழ்ந்த காலத்தில் அவரைத் தாங்கி பிடிப்பதற்கு எவருமே முன்வரவில்லை. பசி, பட்டினி, வறுமை ஆகிய கொடுமைகள் பாரதியை வாட்டி எடுத்தன... அப்படி இருந்தும் அவன் யாருக்கும் எதற்கும் வளைந்து கொடுத்ததில்லை ..நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாமை என்ற கொள்கைகளோடு இறுதி மூச்சு வரை வாழ்ந்து 39 -ம் அகவையிலேயே மறைந்துவிட்ட மகா கவிஞன் பாரதி... அந்த மகாகவியைப் பற்றி நமது கவியரசர் கண்ணதாசன் பார்வை என்ன என்பதை "பாரதியை கண்டேன்" என்ற தலைப்பிலே கண்ணதாசன் எழுதிய கவிதையிலே பார்ப்போம்...

    பொதுவாக கவிஞர்கள் எல்லோருமே சிந்தனை வயப்பட்டவர்களாகவே காட்சி தருவார்கள் ... சில நேரங்களில் புற உலகை மறந்து விடுவார்கள். அப்படித்தான் மகாகவி பாரதியும் தீவிர சிந்தனையோடு படங்களில் வீர திருவிழிப் பார்வையோடு புகைப்படத்திலே காட்சி தருகிறார். அவரது தோற்றமே அப்படித்தான்.

    அன்றொரு நாள் கற்பனைக் குதிரையில் ஏறி வான்வெளியில் பறக்கிறார் கண்ணதாசன்...ஆங்காங்கே காண கண்கொள்ளாக் காட்சிகளை எல்லாம் கண்டு மகிழ்கிறார். ஓரிடத்தில் மகாகவி பாரதி நிற்பதை பார்த்து விடுகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு கண்ணதாசன் மனம் பூரிக்கிறது. மகிழ்ச்சியின் வெள்ளம் மனமெல்லாம் கரைபுரண்டோடுகிறது. வைத்த விழி வாங்காமல் பாரதியை பார்த்துக் கொண்டே இருக்கிறார். காணக் கிடைக்காத காட்சி அல்லவா இது ..

    அடடா...என்ன மிடுக்கான தோற்றம்.. எப்பேர்பட்ட சிந்தனை, எப்பேர்பட்ட கவித்துவம்,அழகாக நறுக்கி விடப்பட்ட முறுக்கு மீசையுடனும் முண்டாசு தலைப்பாகையுடனும் காண்போர் வியக்கும் கம்பீரம் என்ன? முத்தமிழில் எழுதி தமிழகத்தை தனது வீர கவிதைகளில் மூழ்கடித்த பெருமைக்கு சொந்தக்காரன் அல்லவா பாரதி...ஆனால் இதுவரை எங்கும் காணாத ஒரு துன்ப நிலையில் அல்லவா இப்போது காட்சி தருகிறான்.என்ன நேர்ந்தது நமது மகாகவிக்கு? உடனேயே தனது எழுதுகோலை எடுக்கிறார் கண்ணதாசன்

    வானவெளி வீதியிலே

    பாரதியை கண்டேன் ...

    வைத்த விழி வாங்காமல்

    பார்த்தபடி நின்றேன்

    மோனவெளி வீதியிலே

    மூச்சடங்கி நின்றான் ...

    மூன்று தமிழ் ஆய்ந்த கவி

    முன் நடந்து சென்றேன் ...

    கூனலிளம் வெண்நிலவின்

    குளிர் முகத்து நடுவே

    குத்துகிற மீசையையும்

    கூர்விழியும் கண்டேன் ...

    தேனமுது பாவலனின்

    சிந்தை மிடை ஏதோ ...

    தீராத துன்ப நிலை

    சிந்துவதைக் கண்டேன்

    என்று முதல் கவிதையை நிறைவு செய்கிறார் கண்ணதாசன். சரி பாரதியிடம் பேசித்தான் பார்ப்போமே... அவன் மனதில் என்ன இருக்கிறது என கேட்டு தான் பார்ப்போமே...

    ஏடா பாரதி! என்னடா சுகமா

    என்ன சிந்தனை? எதிலே நாட்டம்?

    என்று கேள்வி தொடுக்கிறார் கண்ணதாசன். பாரதியும் பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்.

    வாடா தம்பி! வாழ்க நீ பாண்டியா..!

    வாட்ட முகத்தின் நாட்டம் கேட்டியோ...!

    பாடா இயற்கை பாடுதல் கேட்டுப்

    பாடிப் பாடி நான் படைத்தவை பற்பல

    வாடா மலர்களை வழங்கினேன் எனினும்

    வாடி வாடி நான் மறைந்ததை அறிவாய்...

    இன்று மண்டபம் எழிலுறக் கட்டுவர்..

    இருபதாயிரம் பேர்கள் திரட்டுவர்..

    கொன்று போட்டு என் பிணத்தினி லேறுவர்...

    கொட்டுமுரசென பாடல்கள் பாடுவர்...

    அன்று சோற்றுக் காதரவானவர்

    ஆரு மில்லை...! அடா இவர் உன்னையும்

    தின்று தீர்த்தபின் தேமதுரத் தமிழ்

    செய்தவன் எனத் திருவிழா கூட்டுவார்...!

    என்று கண்ணதாசன் பாண்டிய நாட்டுக்காரர் என்பதால் "வாடா பாண்டியா" என்று அழைக்கிறார் பாரதியார்... காலத்தால் நிலைத்து நிற்கக்கூடிய வாடாமலர் கவிதைகளை வழங்கிய நான் வாடி வதங்கிய நிலையை நீ அறிய மாட்டாயா கொட்டுமுரசு கவிதைகளை எட்டுத்திக்கும் சென்று சேரும்படி எழுதிக் குவித்த எனக்கு நான் உயிரோடு இருக்கும் வரை யாரும் உதவிட முன் வரவில்லையே பிணமான பின்னர் மணிமண்டபம் கட்டி என்ன பலன்? மக்களை திரட்டி மாநாடு நடத்தி என்ன பயன்? உனக்கும் இதே கதி நேராமல் பார்த்துக் கொள் என்று பாரதி எச்சரித்தது போல் கண்ணதாசன் எழுதியிருக்கிறார்.

    உண்மைதான் 39 வயதுக்குள் பாரதி படைத்த இலக்கியங்கள் எத்தனை எத்தனை... "சாகா வரம் பெற்ற அந்த மகாகவி மறைந்த போது சுடுகாட்டுக்கு பூதவுடலை சுமந்து சென்ற மனிதர்களின் எண்ணிக்கையை விட பாரதி உடலில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கை அதிகமாய் இருந்தது" என்று கவிப்பேரரசு வைரமுத்து குறிப்பிட்ட அந்த வைர வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

    படைப்பாளிகள் இறைவனுக்கு சமமானவர்கள் அதனால் தான் திரைப்பட பாடல் ஒன்றில் "படைப்பதனால் என்பேர் இறைவன்" என்று எழுதியிருப்பார் கண்ணதாசன்.

    ஏர்பிடித்து உழுதிருந்தால் கூட பசி இல்லாமல் நான் வாழ்ந்திருப்பேன். நாட்டுக்காக உழைத்தவனுக்கு கிடைத்த பரிசு இதுதான் என்று பாரதியின் துக்கத்தை தூக்கிப் பிடிக்கிறார் கண்ணதாசன். வாழ்பவருக்கு சோறு தராதவன் மண்டபம் கட்டினால் என்ன? மாளிகை கட்டினால் என்ன?

    அன்று இலங்கையை ஆயிரம் படை கொண்டு வென்றதை சொல்லி சொல்லி என்ன பயன்? இன்று இலங்கையில் ஆதரவற்ற நிலையில் இருப்பவன் உனது தொப்புள்கொடி உறவு என்று எப்போது நினைக்கப் போகிறாய்? என்றெல்லாம் பாரதி கேள்வி எழுப்புவதாக எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.

    "தருமமானது தமிழர் நாட்டில்..

    தம்பி நீ.. இவர் தலை கவிழ்ந்தாரென

    பொருமிச் சாவதும் போர் செய்யச் சொல்வதும்

    பொருத்தமற்றது.. உன் பெற்றவர் உற்றவர்

    கரும மட்டும் கணக்கிலேற்றுவாய்

    கண்கள் மூடும் முன் கவலையை மாற்றுவாய்".

    இனிமேல் உனது சொந்த பந்தங்களுக்கு மட்டும் பாடுபடு. அதை மட்டும் உனது கணக்கில் வை. மற்றவரை தூக்கித் தூரப் போடு என்று பாரதி பேசுவதாக பேசுகிறார் கண்ணதாசன்.

    சோர்ந்து கூறும் சொற்களோ பாரதி

    தூய தேன் தமிழ் பாவினம் பற்பல

    ஆய்ந்து வைத்தவன், அன்னையின் நாட்டினர்

    அடிமை தீர்த்திடும் போர் முரசானவன் வேய்ந்த கூரையாய் வெள்ளொளிக் கைகளால்

    வீர நாட்டினைக் காக்கத் துடித்தவன்

    தேர்ந்த பாவலன் செந்தமிழ்ச் சாரதி

    சிந்தை நொந்தியோ? செப்படா பாரதி

    என்று இப்படிப்பட்ட பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரனை நீ இப்படி சிந்தை நோகலாமா பாரதி என்று தனது கவிதையில் கேள்வி எழுப்புகிறார் கண்ணதாசன். இதையெல்லாம் எண்ணி பார்க்கின்றபோது...

    சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் - வெறும்

    சோற்றுக்கு வந்திங்கே பஞ்சம்

    என்று ஏற்கனவே பாரதி பாடியவரிகள் தான் வந்து கண் முன்னே நிற்கின்றன. பழம் பெருமை பேசி இனி பலனில்லை. அதைச் சொல்ல ஆளே இல்லை. தேறுதல் சொல்லி தேற்றுவாரும் இல்லை. காற்றிலே ஏறி அவ்விண்ணையும் சாடுவோம் என்று பாரதி எழுதியது என்னமோ உண்மைதான். ஆனால் இப்போது நிலைமை வேறாக அல்லவா இருக்கிறது.

    ஆற்றுவாரில்லை... தேற்றுவாரில்லை

    அலறு நெஞ்சினை மாற்றுவாரில்லை

    காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவேன்

    கடல் கடந்த நாடுகள் பலவினும்

    தூற்றுகின்ற உமியெனப் பறப்பதும்

    துயரை நீக்கிட வழியிலாதிருப்பதும்

    கண்டு கண்டு வேகிறேன்.. தம்பி - இக்

    காதகர் தமை நம்பி என் பிள்ளைகள்

    துண்டு துண்டாய் விழுகிறார் பாரடா...

    சூழி லங்கை நாட்டினை பாரடா..

    அண்டையுள்ள நாட்டினில் சாகிறான்

    அண்ணனோ வெறும் மாடு போல் நிற்கிறான்

    கண்டதுண்டோ எங்கணும் இத்தகு

    கைகளற்ற கோழையர் குழுவினை

    என்று... பதறி துடிக்கிற பாரதியின் நெஞ்சத்தை அப்படியே படம் பிடித்து காட்டுகிறார் கண்ணதாசன்.

    ஆங்கிலேயர்கள் உலகையே ஆண்டவர்கள். அவர்களுக்கு ஒரு துன்பம் நேர்ந்த போது, அதாவது உலகப் போரின் போது, இங்கிலாந்துக்கு பின்னடைவு ஏற்பட்ட போது, அதனை முறியடித்து காட்டிட அந்த தேசமே பொங்கி எழுந்து போர்க்களத்தில் குதித்தது. அப்படிப்பட்ட வீரம் உன்னிடம் வேண்டாமா என்று தமிழனைப் பார்த்து பாரதி கேள்வி கேட்பது போல் கவிதையை வடித்திருக்கிறார் கண்ணதாசன்.

    ஆங்கிலர்க்கு வேறொரு நாட்டினில்

    அவதி நேர்ந்ததென் றறிந்த வேளையில்

    வீங்கு தோளுடன் ஆங்கில நாட்டினர் வேலெடுத்துப் பாய்வரே... தம்பி நீ

    ஓங்கி நின்ற தமிழரின் பிள்ளையாய்

    உடலெடுத்து என்னடா புண்ணியம்...?

    எண்ண எண்ணத் துடிக்கிற தேயடா

    எந்த நாட்டினில் இந்த அநீதியை

    மண்ணில் விழுந்த மழையென போற்றுவர்?

    என்றபடி அந்தக் கவிதையை கொண்டு வந்து நிறுத்த... பாரதி உரைத்த இந்தப்

    பாடலை கேட்டேன்... நெஞ்சின்

    வேரதிர்ந்ததடா! என்று கவிதையை முடிக்கிறார் கண்ணதாசன்.

    மகாகவி பாரதியார் தன்னுடைய துயரங்களை ஒரு நாளும் வெளிப்படுத்தியதில்லை. நாட்டைப் பற்றியும் பிறர் படும் துன்பங்களைப் பற்றியும் அதிகமாக பாடியிருக்கிறார். இப்படி தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் வீரத்தோடு திகழ்ந்த ஒரு மாபெரும் மகாகவியை உயிருள்ள போதே இந்த நாடு கொண்டாடி இருக்க வேண்டாமா? என்பதுதான் கண்ணதாசனின் கேள்வி. வருங்காலத்தில் இப்படி ஒரு நிலைமை எந்தவிதமான கவிஞருக்கும் வந்து விடக்கூடாது என்று எண்ணியதன் வெளிப்பாடுதான் கண்ணதாசனின் இந்த கவிதை வரிகள்.

    உயிருள்ள போதே படைப்பாளிகளை இந்த நாடு போற்ற வேண்டும், கொண்டாட வேண்டும் என்ற உயரிய கருத்தினை உள்ளடக்கியே இப்படி ஒரு சித்திரத்தை பாரதியை மையப்படுத்தி தீட்டியிருக்கிறார் கண்ணதாசன். இந்த சீரிய சிந்தனையை ஒன்றிய அரசும் மாநில அரசும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே நமது அன்பான, பணிவான வேண்டுகோள் ஆகும்.

    அடுத்த வாரம் சந்திப்போம்.

    Next Story
    ×