என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஒரு வழிப்போக்கனின் பார்வை- உங்கள் நண்பர்கள் எப்படி?
- காதலுக்கு அடுத்தபடியாக இலக்கியத்தில் அதிகம் பேசப்பட்டது நட்புதானே.
- நமது நட்பு வட்டத்தில் வெவ்வேறு தன்மை கொண்ட ஏழுபேர் இருப்பது நல்லது என்கிறார்கள்.
முருங்கைக்காய் வாங்கினாலும் முறுக்கிப் பார்த்து வாங்குகிறோம். வெண்டைக்காயை ஒடித்துப் பார்த்து வாங்குகிறோம். தேங்காயை வாங்குமுன் கொட்டிப் பார்க்கிறோம். ஒருநாள் சமையலுக்கான காய்கறிகளுக்கே இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறோமே. ஏன்? இல்லை என்றால் சமையல் ருசிக்காது.
மாடு வாங்க சந்தைக்குச் செல்கிறவர்கள், அவசரப்பட்டு உடனே வாங்கிவிட மாட்டார்கள். ஒரு மாடு வாங்குவதற்குமுன் நான்கைந்து மாடுகளைப் பார்ப்பார்கள்.
புதிதாக மாடு வாங்குபவர்கள், முடிந்தவரை தலையீத்து மாடுகளைத் தவிர்த்து விடுவார்கள். மாட்டின் வயதை அறிய, அதன் பற்களைப் பார்ப்பார்கள். வயதான மாடென்றால், பற்கள் தேய்ந்தும் கறைபடிந்தும் சந்து விழுந்தும் அசைந்தும் காணப்படும். மாடுகளை அவிழ்த்து விட்டு சிறிது தூரம் நடக்க வைத்துப் பார்ப்பார்கள்.
சுழிகள் மீது நம்பிக்கை உடையவர்கள் - நெற்றி ராஜ சுழி, பொடனி ராஜ சுழி, முதுகு ராஜ சுழி ஆகிய மூன்று சுழிகளைப் பார்த்துதான் வாங்குவார்கள். இப்படி பல விஷயங்களைக் கவனத்தில் கொண்டு, குணநலன்மிக்க மாடுகளைத்தான் தேர்வு செய்து விலைபேசி முடிப்பார்கள்.
செருப்பு வாங்குவதற்குப் பல கடைகள் ஏறி இறங்கி, ஒரு முழு நாளையும் செலவழிப்பவர்கள் உண்டு. பொதுவாக, எந்த ஒன்றையும் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது மனித இயல்பு. அதுதான் அறிவார்ந்த செயல். ஆனால், நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் அப்படி நாம் கவனம் செலுத்துகின்றோமா.
எந்தக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றோம். எதைக் கொண்டு மனிதர்களைத் தீர்மானிக்கின்றோம்.
ஒரு மனிதனின் சுபாவம், வாழ்க்கை நிலை ஆகியவை எப்படி இருக்கும் என்பதை சாமுத்திரிகா லட்சணம் கூறுகிறது. அங்க அமைப்புகளைக் கொண்டு, மனிதர்களின் வெவ்வேறு இயல்புகளை அது விளக்குகிறது.
புருவங்கள் ஒரே அளவில் மெல்லியதாக ஒருமுனை கனத்தும், மறுமுனை சிறுத்தும் அமையப் பெற்றவர்கள் பிறர்க்கு உதவும் நல்ல குணம் படைத்தவர்களாகவும், எவருடனும் அன்பாகப் பேசும் தன்மை கொண்டவராகவும் இருப்பார்களாம்.
அடர்ந்த ரோமத்துடன் நீண்டு வளைந்த புருவங்களைக் கொண்டவர்கள், வீண்வம்பு வளர்த்து சண்டைக்கு இழுப்பவர்களாகவே இருப்பார்களாம். இப்படி ஒவ்வொரு அங்க அமைப்புக்கும் உரிய குணநலன்களைக் கூறுகின்ற சாமுத்திரிகா லட்சணம் நம்பக்கூடியதோ இல்லையோ, அது ஒருபுறம் இருக்கட்டும்.
ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, ஒவ்வொருவரின் அங்க அமைப்புகளையும் மதிப்பீடு செய்து பார்த்துப் பழகுவது சாத்தியமா!
பின்னர் எப்படிதான் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது? மிக எளிது. அவர்களின் வார்த்தைகளும் செயல்களுமே எடைக்கற்கள். அவற்றின் மூலமே அவர்களை நீங்கள் நிதானித்துவிடலாம்.
சிறந்த நண்பர்கள் கண்ணாடியும் நிழலும் போல. கண்ணாடி பொய்சொல்லாது. நிழல் நம்மை விட்டு நீங்காது. நல்ல மனிதர்களை நண்பர்களாகப் பெற்றவர்கள் பராக்கிரமசாலிகள். ஏனெனில், ஒரு மாபெரும் படைபலத்தின் வலிமை நல்ல நட்பிற்கு உண்டு.
அதனால்தான், இலக்கியங்கள் வகைப்படுத்தியிருக்கும் உறவுகளில் நட்பு சிறப்பிடம் பெற்றிருக்கின்றது. நட்புக்காக திருக்குறளில் நான்கு அதிகாரங்கள். உறவுகளை விலக்கும் சமண முனிவர்களால் எழுதப்பட்ட நாலடியாரில்கூட நட்பை மையப்படுத்தி மூன்று அதிகாரங்கள்.
காதலுக்கு அடுத்தபடியாக இலக்கியத்தில் அதிகம் பேசப்பட்டது நட்புதானே. அன்பு, காதல், நட்பு ஆகிய மூன்றும் வெவ்வேறானவை. இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு மெல்லிய நூலிழை இருக்கத்தான் செய்கிறது. கவனமாகக் கையாளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இம்மூன்றும் வசப்படும்.
பொதுவாகவே, நமது கருத்து அல்லது ரசனையுடன் யார் பொருந்திப் போகிறார்களோ அவர்களுடன்தான் நாம் நட்பு கொள்கிறோம். ஆனால், நமது நட்பு வட்டத்தில் வெவ்வேறு தன்மை கொண்ட ஏழுபேர் இருப்பது நல்லது என்கிறார்கள்.
உங்களைவிடப் பொறுமைசாலியான ஒருவர், தைரியசாலியான ஒரு பலசாலி, நீங்கள் முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடிய ஒருவர், ஆன்மிகச் சிந்தனை கொண்ட ஒரு நபர், உங்களுடன் நீண்ட கால நட்பில் உள்ள ஒரு தோழர், ஞானமாகப் பேசக்கூடிய ஒருவர், தவறுகளைச் சுட்டிக் காட்டக்கூடிய நேர்மையான ஒரு மனிதர்.
இப்படி வெவ்வேறு இயல்புடைய நபர்களை நண்பர்களாகக் கொள்ள வேண்டிய அவசியமென்ன? அப்படியானால்தான், வாழ்வைக் குறித்த விரிந்த பார்வையை நாம் பெற முடியும்.
பல்வேறு காய்கனிகள், உணவு வகைகள். ஒவ்வொன்றிலும் ஒருவிதச் சத்து இருக்கிறது. அதேபோல், வெவ்வேறு சிறப்பியல்புகளைக் கொண்ட நண்பர்கள் நமக்கு அவசியம். பலதரப்பட்ட நண்பர்கள் பல்வேறு கருத்துகளைக் கொண்டு வருவார்கள். நம்முடைய வாழ்க்கையைப் பல்வேறு விதங்களில் செழிப்படையச் செய்வார்கள்.
அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைக்கப் பெறுவதே மாபெரும் வரம். நல்ல நட்பு ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திவிடும். பொல்லாத நட்பு அவன் வாழ்க்கையையே அழித்துவிடும்.
பசுக்களால் தங்களுக்குப் பிரியமானவர்களின் உணர்வைப் புரிந்து கொள்ள முடியுமாம். தங்கள் எஜமானனோ அல்லது அதனுடன் நெருங்கிப் பழகும் ஒருவரோ மனச்சோர்வுடன் இருந்தால், மாடுகளும் சோர்வடைந்துவிடும். அப்போது, பசுக்கள் மன அழுத்தத்துடன் காணப்படுவதும், அதன் இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளன.
அதுபோலத்தான் நல்ல நண்பர்களும். இருவருமே ஒருவர் உணர்வை ஒருவர் அறிவார்கள். எண்ண ஓட்டங்கள் ஒருமித்திருக்கும்.
கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பை இன்று வரை இலக்கியங்கள் போற்றிக் கொண்டாடுகின்றன. என்ன காரணம்?
புலவர் பிசிராந்தையாரின் நாடு பாண்டி நாடு. எனினும், சோழ மன்னனான கோப்பெருஞ்சோழனின் நல்லியல்புகளைக் கேள்விப்பட்டு, அவன் மீது பேரன்பு கொண்டார்.
புலவரின் பிசிர் என்ற ஊரிலிருந்து நெடுந்தொலைவில் இருந்தது சோழனின் உறையூர். எனவே, சோழனைக் கண்டுவர பிசிராந்தையாரால் முடியவில்லை.
அக்காலத்தில் மிகச்சிறந்த கவிதைகளை எழுதிப் புகழ்பெற்றிருந்தார் பிசிராந்தையார். அவரின் புலமையைக் கேள்விப்பட்டிருந்த சோழனுக்கும் அவர் மீது அளப்பரிய அன்பு. பாண்டி நாட்டுக்குச் செல்வோர் மூலமாகத் தன் அன்பை அவ்வப்போது தெரிவித்து வந்தான்.
இந்நிலையில், கோப்பெருஞ்சோழனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் இடையே பிரச்சினை. தந்தையோடு போரிட்டு ஆட்சியைக் கைப்பற்ற தயாராயினர் பிள்ளைகள். மனம்நொந்துபோனான் மன்னன்.
புதல்வர்களுக்கு ஆட்சியை வழங்கிவிட்டு, வடக்கிருந்து உயிர்நீத்திட புறப்பட்டான் சோழன். இந்தச் செய்தி எதுவும் பிசிராந்தையாருக்குத் தெரியாது.
வடக்கிருக்கச் சென்ற சோழன், உடன் சென்ற பொத்தியார் என்னும் புலவரிடம், 'என் நண்பர் பிசிராந்தையார் என்னைக் காண வருவார். அவரிடம் என் அன்பைத் தெரிவித்துவிடுங்கள்' என்றான்.
'மன்னா, அது எப்படி சாத்தியம்? இங்கு நடக்கின்ற எதுவும் அவருக்குத் தெரியாது. இதுவரை நீங்கள் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டதும் இல்லையே!'
'அவர் நிச்சயம் என்னைக் காணவருவார். என்னருகில் அவருக்கு ஓர் இடத்தை விட்டு வையுங்கள்' - உறுதியுடன் சொன்னான் சோழன்.
நட்பின் மிகுதியால் உணர்ச்சிவசப்பட்டு மன்னர் இப்படிப் பேசுகிறார் என்று அருகிருந்த எல்லோரும் கிசுகிசுத்தனர். அது மன்னன் காதில் விழுந்தது. உடனே அவர்களைப் பார்த்து,
'பிசிரோ னென்பவன் னுயிரோம் புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நல்லலன் மன்னே'
என்று கூறினான் மன்னன்.
'பிசிர் என்னும் ஊரினரான என் நண்பர், நான் செல்வச் செழிப்பாக இருந்த வேளை என்னைக் காண வருபவர் அல்லர். நான் துன்பமுற்றிருக்கும் வேளையிலேயே வரக்கூடியவர். எனவே, நிச்சயமாக வருவார்' என்று சோழ மன்னன் கூறிய அந்தச் செய்தி புறநானூற்றுப் பாடலில் இடம்பெற்றுள்ளது.
உடனிருந்த யாரும் அதை நம்பவில்லை. ஆயினும் மன்னனின் வேண்டுகோளை ஏற்றனர்.
நீரும் உணவும் இன்றி வடக்கிருந்து உயிர்நீத்தான் சோழன். அவன் இறந்த ஓரிரு நாட்களில், அவன் கூறியதைப் போலவே பிசிராந்தையார் அங்கு வந்தார். செய்தி அறிந்து ஆறாத் துயர்கொண்டார். மன்னன் வடக்கிருந்து உயிர்நீத்த இடத்திற்கு அருகே தாமும் வடக்கிருந்து உயிர்நீத்தார்.
உண்மை நட்பு அத்தனை வலிமையானது. ஆத்மார்த்தமான நட்புறவு துன்பத்தில் துணைநிற்கும்; தோள்கொடுக்கும். நம்பிக்கை வெளிச்சத்தைக் கொடுக்கும்.
சிரித்துச் சிரித்துப் பேசுபவர்களை எல்லாம் நல்ல நண்பர்கள் என்று எண்ணிவிடாதீர்கள். உங்கள் தனிப்பட்ட விஷயங்களைத் துருவித் துருவிக் கேட்பவர்களை எல்லாம், உங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்று நம்பிவிடாதீர்கள்.
உங்கள் வளர்ச்சியை விரும்பாத சிலர், உங்கள் அருகில் உள்ள நண்பர்களாகவே இருக்கக்கூடும். அவர்கள் உங்களை ஒருபோதும் வளரவிட மாட்டார்கள். எனவே, அப்படிப்பட்டவர்களை விட்டு விலகுவதுதான் உங்களுக்கு நல்லது.
சிலர் நல்லது செய்வதுபோல் தவறான பாதைக்கு உங்களை இழுத்துச் செல்வார்கள். முதலில் உங்களுக்குப் புரியாது. பிரச்சினையில் நீங்கள் சிக்கிக் கொண்டதும் அவர்கள் நழுவி விடுவார்கள்.
அலுவலகத்தில் உங்களுக்குப் பதவி உயர்வு வராமலிருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்வார்கள். உங்களுக்காகப் பரிதாபப்படுவதுபோல் உங்களிடம் காட்டிக் கொள்வார்கள்.
தங்களின் சுயலாபத்திற்காகவே உங்களை ஒட்டிக் கொண்டிருப்பவர்களும் உண்டு. அவர்கள் உங்கள் நலனைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டார்கள்.
உங்களிடத்தில் வந்து, மற்றவர்களைப் பற்றி அடிக்கடி அவதூறு பேசுபவர்கள் ஆபத்தானவர்கள். அவர்களிடம் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், அவர்கள் எல்லாரைப் பற்றியும் எல்லாரிடத்திலும் அப்படிதான் பேசுவார்கள். உங்களைப் பற்றி என்னவெல்லாம் பேசுவார்களோ, உங்களுக்குத் தெரியாது.
கைகுலக்குகிறவர்களை எல்லாம் நண்பர்களின் கணக்கில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். தெளிவான பார்வை இன்றி, கண்டவர்களையும் நண்பர்களாக நம்பி நம்பித் தங்கள் வாழ்க்கையை இழந்தவர்கள் பலர்.
எனவே, நண்பர்களைச் சேர்த்துக் கொள்வதில் பொறுமையாகச் செயல்படுங்கள். தவறான வழியில் சேர்த்த செல்வங்கள் நிலைப்பதில்லை. அது போலவே, தவறான நட்பு நன்மை புரிவதுமில்லை; நிலைப்பதுமில்லை.
அதற்காக, எல்லோரையும் சந்தேகக் கண்ணோட்டத்துடனே பார்க்கக் கூடாது. நம் அருகில் நல்லவர்களும் இருக்கிறார்கள். நல்லவர்கள் என்றும் நல்லவர்களே. சுத்தமான தேன் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாது. உண்மையான நட்பும் அப்படிதான்.
நண்பர்கள் இல்லாத வாழ்க்கை சாட்சியில்லாத மரணத்திற்குச் சமம் என்று சொல்வதுண்டு. நண்பர்கள் இல்லாத வாழ்க்கை நீரில்லாத அருவிப் பாறை. நண்பர்களைச் சம்பாதிக்கத் தெரியாதவனுடைய வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதில்லை.
நட்பு என்பது மிகப்பெரிய செல்வம். அது விலைமதிக்க முடியாத கோஹினூர் வைரத்தைப் போன்றது.
தனித்தன்மை, காரட் எடை, நிறம், வெட்டு மற்றும் தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில் வைரத்தின் மதிப்பு மற்றும் விலை நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த மதிப்பீட்டின்படி கோஹினூர் வைரம்தான் உலகிலேயே மிக விலை உயர்ந்தது.
நல்ல நண்பர்கள் கோஹினூர் வைரத்திற்கு நிகரானவர்கள். உன்னத சிந்தனை, உண்மை மிளிரும் பேச்சு, நேர்மையான பார்வை, நல்வழிப்படுத்தும் பண்பு, வேஷமற்ற அன்பு ஆகியவையே நல்ல நண்பர்களுக்கான லட்சணங்கள்.
உங்கள் நண்பர்கள் எப்படி? அவர்களுக்கு நீங்கள் எப்படி? சிந்தித்துப் பாருங்கள். நட்பின் மேன்மை போற்றப்பட வேண்டும். நல்லுறவு என்றென்றும் காக்கப்பட வேண்டும்.
ஒரு துளி கண்ணீரைத் துடைப்பது நட்பு அல்ல; மறுதுளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மையான நட்பு என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.






