என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மகளிர் நலனில் சித்த மருத்துவம்- பெண்களின் எலும்பு மெலிவு நோயும், இயற்கை தீர்வுகளும்
    X

    மகளிர் நலனில் சித்த மருத்துவம்- பெண்களின் எலும்பு மெலிவு நோயும், இயற்கை தீர்வுகளும்

    • வீட்டையும்,குழந்தைகளையும் பராமரிக்க வேண்டிய கவனத்தில் பெண்கள் தங்களை கவனித்துக்கொள்வதில்லை என்பது தான் உண்மை.
    • இரும்பு சத்துக்கள் குறைவதால் அனீமியா எனப்படும் ரத்த சோகை ஏற்படும் என்பதை பலரும் அறிந்திருப்பர்.

    பிரசவத்திற்கு பின்னர் இரும்பு சத்து மாத்திரைகள், கால்சியம் மாத்திரைகள் இவற்றை பெரும்பாலான பெண்கள் முறையாக எடுத்துக்கொள்வதே இல்லை. வாங்கிகொண்டு வந்த மாத்திரைகளை பெரும்பாலானோர் காலாவதியான பிறகு குப்பை தொட்டியில் போடுவது தான் அதிகம். சரி மருந்து மாத்திரைகளை விடுத்து இத்தகைய சத்துக்கள் அடங்கிய உணவையாவது எடுத்துக்கொள்கிறார்களா? என்றால் அதுவும் கிடையாது. வீட்டையும்,குழந்தைகளையும் பராமரிக்க வேண்டிய கவனத்தில் பெண்கள் தங்களை கவனித்துக்கொள்வதில்லை என்பது தான் உண்மை.

    இத்தகைய சத்துக்கள் இரண்டும் பெண்களுக்கு மிகமிக அத்தியாவசியமானவை. இரும்பு சத்துக்கள் குறைவதால் அனீமியா எனப்படும் ரத்த சோகை ஏற்படும் என்பதை பலரும் அறிந்திருப்பர். அதற்கு இணையான மற்றொரு சத்தான கால்சியம் எனப்படும் சுண்ணாம்பு சத்தும் பெண்களுக்கு அவசியம். பிரசவத்திற்கு பின்னர் எலும்புகளையும், மூட்டுகளையும் வன்மைப்படுத்த இந்த சுண்ணாம்பு சத்து மிக அத்தியாவசியமான ஒன்று. தற்போதைய நவீன அறிவியல் இயற்கையாய் உடலில் உற்பத்தியாகும் வைட்டமின் டி-யும் எலும்பு, மூட்டுகளின் வன்மைக்கும் அவசியம் என்கிறது.

    ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு மெலிவு நோய் என்பது 40 வயதைக் கடந்த பெண்கள் அனைவருக்கும் வரக்கூடிய நோய்நிலை. எலும்பு நிறை குறையும் இந்நோய்நிலையில் பின்னாளில் எலும்பு பலவீனம் அடைந்து, அமைப்பும் மோசமடைந்து, எலும்பு முறிவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக மணிக்கட்டு, இடுப்பு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் எலும்பு முறிவுகள் ஏற்படக்கூடும். கைபோசிஸ் எனும் கூன் விழுதல் நிறைய பெண்களுக்கு ஏற்படுதலுக்கும் இது காரணமாகின்றது. மொத்தத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் அமைதியான ஆரோக்கிய அச்சுறுத்தலை பெண்களுக்கு ஏற்படுத்தக்கூடியது.

    பூப்பு சுழற்சியின் மெனோபாஸ் என்னும் இறுதி மாதவிடாய்க்கு பிறகு பெண்களின் ஹார்மோன் சுரப்புகளில் பெருத்த மாற்றம் ஏற்படுகின்றது. பெண் ஹார்மோன் என்று கருதப்படும் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் இறுதி மாதவிடாய்க்கு பிறகு கால்சியம் சத்து குடலில் உறிஞ்சப்படுவது கணிசமாக குறைகிறது. இதனால் எலும்புகள் தேய்ந்து வன்மைக் குறைவு ஏற்பட்டு வயது மூப்பின் இறுதி காலங்களில் பெரும்பாலான பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் எலும்பு முறிவு ஏற்படுகின்றது. ஆகவே, பெண்கள் மிகுந்த அக்கறைகாட்டி எலும்புகளை வன்மைப்படுத்த வேண்டியது அவசியம்.

    சித்த மருத்துவ தத்துவத்தின் படி ஏழு தாதுக்கள் தான் உடலில் முக்கிய ஆதாரங்கள். உணவின் சாரம்,அடுத்து உடலின் ரத்தம் என்று அடுத்தடுத்து உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் ஐந்தாவதாக எலும்புகளை அடைந்து அதனை வன்மைப்படுத்துவதாக அறியப்படுகின்றது. இந்த ஏழு உடல் தாதுக்களை வன்மைப்படுத்தும் படியான உணவு முறைகளை பெண்கள் அனைவரும் பின்பற்றுவது அவசியம். அத்துடன் ஆஸ்டியோபோரோசிஸ் எனும் நோய்நிலையை தீர்க்கும்படியான கால்சியம் சத்துள்ள சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வது அவசியம்.

    சித்த மருத்துவ மூலிகைகளில் பல ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு மெலிவு நிலையைத் தடுப்பதாகவும், நோயைத் தீர்ப்பதாகவும் உள்ளது. அமுக்கராகிழங்கு, பிரண்டை, முருங்கை, எள்ளு, தினை, கருப்பு உளுந்து, தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, கருவேப்பிலை, சிற்றாமுட்டி, மஞ்சள் போன்ற பல எளிய மூலிகைகள் இதில் அடங்கும். இந்த மூலிகைகளை உணவாகவோ, மருந்தாகவோ பெண்கள் முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அமுக்கரா கிழங்கு மற்றும் தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகிய சித்த மருத்துவ மூலிகைகள் பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய புதையல் எனலாம். மூட்டுகள் தேய்மானத்தைக் குறைத்து மூட்டுகளை வன்மைப்படுத்த 'அமுக்கரா சூரணம்' எனும் சித்த மருந்தினை பெண்கள் பாலில் கலந்து எடுத்துக்கொள்ள நல்ல பலன் தரும். இந்த மூலிகை பெண்களின் பல்வேறு நோய்நிலைகளில் ஹார்மோன் மாறுபாடுகளில் நல்ல பலன் தந்து காக்கும். அதே போல் தண்ணீர்விட்டான் கிழங்கு மூலிகையை இறுதி மாதவிடாய் காலங்களில் பெண்கள் அவசியம் பயன்படுத்தி பயனடைய வேண்டும். 'சதாவரி நெய்' எனும் சித்த மருந்து நல்ல பலன் தரும்.

    பால் குடித்தால் நிச்சயம் மூட்டுகளுக்கு வன்மை தான். பாலை அடிக்கடி எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பின்னாளில் எலும்பு முறிவு உண்டாகும் வாய்ப்புகள் குறைவதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் ஏற்கனவே உடல் எடை கூடுதலாய் உள்ள பெண்கள் பாலை தவிர்க்க வேண்டியது அவசியம். அப்போது கால்சியம் சத்துக்கள் எங்களுக்கு எப்படி கிடைக்கும்? என்று கேட்பவர்கள் அனைவரும் பாரம்பரியமாய் சித்த மருத்துவம் கூறும் உணவு வகைகளை மறந்தவர்கள் தான். அவர்கள் கால்சியம் அதிகம் உள்ள,உடல் எடையை கூட்டாத உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது.

    கால்சியம் அதிகம் கொண்ட பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு உருண்டை, தினை உருண்டை, கருப்பு உளுந்து கஞ்சி, எள்ளு உருண்டை இவற்றை அடிக்கடி பெண்கள் எடுத்துக்கொள்வது அவசியம். எள்ளு எனும் எளிய விதையானது 'எறனலாம் திண்மை தரும்' அதாவது எலும்புகளுக்கு வன்மை தரும் என்கிறது அகத்தியர் குணவாகடப் பாடல் வரிகள். கருப்பு உளுந்தின் பயன்களை அறியாத பெண்கள் இல்லை. 'இடுப்புக்கடு பலம் உளுந்து' என்கிறது சித்த மருத்துவம். தினை எனும் சிறுதானியமும், கேழ்வரகு எனும் தானியத்தையும் பெண்கள் அடிக்கடி உணவாக செய்து எடுத்துக்கொண்டாலே எலும்பு மெலிவு அவர்களை அணுகாது.

    'முருங்கையை நட்டவன் வெறும் கையோடு நடப்பான்' என்ற தமிழ் மருத்துவ பழமொழி இன்றைய இளம் தலைமுறைப் பெண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. கால்சியம் மாத்திரைகளை நம்பி வாழும் இன்றைய தலைமுறையினர் அவசியம் தெரிந்துக் கொள்ளவேண்டியது முருங்கை கீரையை தான். உடல் பருமன் உள்ள பெண்கள் பாலுக்கு பதிலாக இதனைப் பயன்படுத்தலாம். முருங்கை கீரையில் பாலில் இருப்பதை விட 17 மடங்கு அதிகம் உள்ளதாக நவீன ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. வெளிநாட்டு உணவை நாடும் நாம், நம்ம ஊர் முருங்கை கீரையை மறந்ததால் ஆரோக்கியம் நம்மை விட்டு நெடுந்தூரம் சென்றுவிட்டது. ஆக,வயது வந்த பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அடிக்கடி முருங்கை கீரையை ரசம் வைத்தோ அல்லது உணவிலோ சேர்த்து எடுக்கவேண்டியது நலத்திற்கான வழி.

    வைட்டமின் டி எனும் உய்வனசத்து, கால்சியத்தின் துணை சத்தாக விளங்கக்கூடியது. நம் உடலில் ஆஸ்டியோபோரோசிஸ் வரவிடாமல் தடுக்க கால்சியத்தோடு வைட்டமின் டி-யும் அவசியம். இது இயற்கையாக சூரிய ஒளியில் உள்ள புறஊதாக்கதிர்கள் தோலில் படும்போது நம் உடலில் உற்பத்தியாகும். ஆக அவ்வப்போது பெண்கள் சூரிய வணக்கம் செய்வதன் மூலமும், வெயில்படும்படி உடல் பயிற்சி செய்வதன் மூலமும் இந்த விட்டமினை உடலில் உற்பத்தி செய்ய முடியும்.

    சுண்டைக்காய் எனும் எளிய சித்த மருத்துவ மூலிகை வயிற்று பூச்சிகளை கொல்ல பலரும் உணவில் சேர்த்துக்கொள்வார்கள். அதுமட்டுமின்றி இந்த மூலிகை கால்சினோஜெனிக் மூலிகை என்ற சிறப்பான பெயர் பெற்றுள்ளது. அதாவது வைட்டமின் டி -யை இயற்கையாக கொண்டுள்ளது என்கிறது நவீன அறிவியல். எளிமையான சுண்டைக்காய்க்கு மிகப்பெரிய மருத்துவ குணம் உள்ளது பாருங்கள்.

    பிரண்டை எனும் கால்சியம் சத்து நிறைந்த எளிய மூலிகை மூட்டுகளையும், எலும்புகளையும் வன்மைப்படுத்தக்கூடியது. இது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆகையால் பிரண்டையை மேல் தோல் சீவி மோரில் ஊறவைத்து கழுவி துவையலாக செய்து உண்ணலாம். இதில் அதிகப்படியான கால்சியம் படிமங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. உடைந்த எலும்புகளை கூட ஒன்று சேர்க்கும் தன்மை இதற்குள்ளது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

    கால்சியம் சத்திற்கு உதவும் எளிய பழ வகைகளில் பேரிச்சையும், அத்தி பழமும் முதலிடத்தை பிடிக்கின்றன. அதிலும் அதிகப்படியான கால்சியம் சத்து அத்தி பழத்தில் உள்ளது. அதனை அடிக்கடி பயன்படுத்துவது மூட்டுகளுக்கு பலம். பாதாம்,முந்திரி தான் கால்சியம் சத்துக்கு முதன்மை என்றில்லை. முளைகட்டிய தானியங்கள் அனைத்திலும் மூட்டுகளுக்கு வன்மை தரும் சுண்ணாம்புச் சத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. வைட்டமின் சி நிறைந்த பழங்களையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவையும் வலிமையான எலும்புகளை உருவாக்க உதவுகிறது.

    அதே போல் 'தங்கப்பால்' என்று வருணிக்கப்படும் பாலில் மஞ்சள் பொடி சேர்த்து குடிப்பதும், பாலில் இஞ்சி சேர்த்து காய்ச்சி எடுத்துக்கொள்வதும் கூட ஆஸ்டியோபோரோசிஸ் நிலையில் நல்ல பலன் தரும். பெண்கள் பாதாம் பால், டீ, காபிக்கு பதிலாக இந்த எளிய பானங்களை எடுத்துக்கொள்வதும் சிறந்தது.

    பெண்கள் அவ்வப்போது முருங்கைக்கீரை சூப், கருவேப்பிலை சூப், முட்டைகோஸ் சூப், காய்கறிகள் சூப் இவற்றை எடுத்துக்கொள்ளலாம். அசைவ உணவு பிரியர்கள் ஆட்டுக்கால் சூப், முட்டை வெண்கரு சூப் போன்றவற்றை எடுத்துக்கொள்வது நோய்நிலையை வரவிடாமல் தடுக்கும். எலும்புகளை வன்மைப்படுத்தும். உணவு சமைக்க எள்ளினை ஆதாரமாக கொண்டு உருவாகும் நல்லெண்ணெய் பயன்படுத்துவதும் எலும்புகளுக்கு வன்மை தரும்.

    மேற்குறிப்பிட்ட எளிய மூலிகைகளையும்,உணவுகளையும் தவிர்த்து, சித்த மருந்துகளான சங்கு பற்பம், பவள பற்பம், சிலாசத்து பற்பம் போன்ற பல பற்ப வகைகள் அதிகப்படியான கால்சியம் சத்தினை பெற்றுள்ளதால் ஆலோசனைப்படி அவற்றை எடுத்துக்கொண்டாலும் நன்மை தரும். சித்த மருந்துகள், இயற்கை உணவுகள் இவற்றை உள்ளுக்கு எடுத்துக்கொள்வதோடு அஸ்வகந்தா தைலம், உளுந்து தைலம், சிற்றாமுட்டி தைலம் போன்ற சித்த மருந்துகளை எலும்புகளின் மேலே தடவி வந்தாலும் நல்ல பலன் தரும்.

    தொடர்ந்து கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பெண்கள் சிலருக்கு வயிறு கோளாறுகள், வயிறு உப்பிசம், வாய்குமட்டல், மலச்சிக்கல் போன்ற உடல் உபாதைகள் வருவதாக உள்ளது. மேலும் கால்சியம் மாத்திரைகளால் குடலில் இரும்பு சத்தும் துத்தநாக சத்தும் உட்கிரகிப்பதில் பாதிப்பும் ஏற்படுவதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றது.

    அதற்கு மாற்றாக சித்த மருத்துவம் தரும் இயற்கையான மூலிகைகளை நாடலாம். இயற்கை உணவு முறைகளை பின்பற்றுவதால் இடுப்பு,முதுகு ஆகிய பகுதிகள் பிரசவத்திற்கு பின் உறுதியாகும். பெண்களுக்கு அதிகம் ஏற்படும் மூட்டு வலி போன்றவற்றில் இருந்து மீண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையில் பயணிக்க முடியும். இதனால் பெண்களின் வாழ்க்கை தரமும் உயரும்.

    தொடர்புக்கு:- drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×