search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பாட்டில் இருக்கும் சங்கதி- அறம் பாடிய பட்டுக்கோட்டையார்
    X

    பாட்டில் இருக்கும் சங்கதி- அறம் பாடிய பட்டுக்கோட்டையார்

    • நம்மைச் சுற்றி நடக்கிற விசயங்கள் தான் பலபேரை கவிஞர்களாக ஆக்கியிருக்கு, சில கவிஞர்களை அற்புதமான கவிதைகளை படைக்க வச்சிருக்கு.
    • சின்ன வயதில் அவர் தன் அண்ணணுடன் சேர்ந்து பொண்ணுப் பார்க்க போய் இருக்கிறார்.

    நம்மைச் சுற்றி நடக்கிற விசயங்கள் தான் பலபேரை கவிஞர்களாக ஆக்கியிருக்கு, சில கவிஞர்களை அற்புதமான கவிதைகளை படைக்க வச்சிருக்கு. இசையமைப்பாளர்களை சிறந்த இசையை படைக்க வைத்திருக்கிறது. அந்த மாதிரியான சில சுவாரசியமான நிகழ்வுகளை இந்தப் பகுதியில் காணலாம்.

    முதலில் என் அபிமான கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வாழ்வில் நடந்ததை பார்ப்போம். பட்டுக்கோட்டையார் பல்துறை வித்தகராவார். அவர் கவிஞர், விவசாயி என 14 துறைகளில் வித்தகராம்.

    சின்ன வயதில் அவர் தன் அண்ணணுடன் சேர்ந்து பொண்ணுப் பார்க்க போய் இருக்கிறார். அவரது அண்ணனுக்கு அப்போது கல்யாணம் ஆகவில்லை.

    பொண்ணைப் பார்த்தாச்சு.. தங்கள் முடிவை வீட்டுக்கு போனதும் லட்டர் போட்டு தெரிவிப்பதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.

    பொண்ணு எப்படி இருக்கா? என்று பட்டுக்கோட்டையாரிடம் கேட்கிறார் அவரது அண்ணன்.

    அண்ணனுக்குப் பார்த்தப் பெண்ணை வர்ணிப்பது முறையில்லையே என்று எண்ணிய அவர், பொண்ணு நல்லா இருக்காங்க என்று சொன்னார்.

    எனக்கு இல்லடா அந்த பொண்ணு... உனக்கு பார்த்தது தான். இப்ப சொல்லு பொண்ணு எப்படி இருக்கா? என்றார் சகோதரர்.

    உடனே எழுதுகிறார்...

    ஆடைகட்டி வந்த நிலவோ-கண்ணில்

    மேடை கட்டி ஆடும் எழிலோ

    குளிர் ஓடையில் மிதக்கும் மலர்

    ஜாடையில் சிரிக்கும் இவள்

    காடுவிட்டு வந்த மயிலோ

    நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

    என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தன்னுடைய மனதில் தேக்கி வைத்திருந்த ஆசையை எல்லாம் ஒரு நிமிடத்தில் கவிதையில் எழுதி தள்ளிவிட்டார்.

    ஒரு முறை பட்டுக்கோட்டையார் வீட்டில் மனைவியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். அது இரவு நேரம். வெண்ணிலா தன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது. அப்போது அவரது மனைவி, "நீங்க ஆசையாக எனக்கு ஒரு கடிதம் எழுதி தூது அனுப்பனும்னா, யாரைவிட்டு தூதுவிடுவீங்க?" என்று கேட்டார்.

    அதற்கு பட்டுக்கோட்டையார் "எல்லா கவிஞர்களும் யாரை தூது அனுப்புவார்களோ... அது மாதிரி இந்த வெண்ணிலாவை தான் தூது அனுப்புவேன்" என்றாராம்.

    அடுத்த நாள் விடிகாலையில் எழுதுகிறார் "எல்லாரும் இந்நாட்டு மன்னர்" படத்துக்காக...

    "என்னருமைகாதலியே வெண்ணி லாவே

    நீ இளையவளா மூத்தவளா

    வெண்ணிலாவே.." என்று.

    முந்தின நாள் இரவு தனக்கும் தன் மனைவிக்கும் நடந்த நிகழ்வை வைத்துக்கொண்டு அந்தப் பாடலை எழுதிமுடித்தார்.

    பட்டுக் கோட்டையாரின் ஆரம்பக்கால வாழ்க்கைப் போராட்டம் நிறைந்ததாக இருந்தது. இதனைப் பார்த்து மனம் வருந்திய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், "எதுக்கு சென்னையில் கிடந்து கஷ்டப்படுற... ஊருல விவசாயம் இருக்கு... நிலம் இருக்கு. பேசாமல் அங்கே போய் பொழப்ப பாரு. இந்த சினிமாவை நம்பி இருக்காதே. ஊருக்கு போ!" என்று கூறியுள்ளார்.

    அதற்கு பட்டுக் கோட்டையார் என்ன சொன்னார் தெரியுமா?

    "போய் வர கார் இருக்க

    புழல் ஏரி நீர் இருக்க

    பொன்னுசாமி சோறு இருக்க

    போவேனோ நான்

    சென்னையை விட்டு

    தங்கமே தங்கமே"

    என்று கவிதையில் பதில் அளித்தாராம்.

    பொன்னுசாமி ஓட்டல் அதிபர் தான் பட்டுக்கோட்டையாருக்கு தங்க இடம் கொடுத்து, அவர் ஸ்டூடியோவுக்கு போயிட்டு வர தன்னுடைய அம்பாசிடர் காரையும் கொடுத்து உதவியிருக்கிறார்.

    அந்த அளவுக்கு நட்பு பாராட்டியதால் பட்டுக்கோட்டையாரின் மேற்கண்ட கவிதைவரிகளை பொன்னுசாமி ஓட்டலில் எழுதிவச்சிருக்காங்க. இன்னிக்கு போனாலும் அதை நாம் காணலாம்.

    பட்டுக்கோட்டையாரின் கோபம் உலகம் அறிந்தது. அவரை யாரும் எளிதில் சமாதானப் படுத்திவிட முடியாது. அந்த கோபம் தான் அவருக்குள் இருந்த கம்யூனிசம். அவருக்குள் இருந்த புரட்சிதான் அவருடைய பாடல்களில் தெறிந்தன.

    ஆரம்பக் காலத்தில் சினிமாவுக்கு பாட்டெழுதும் வாய்ப்புக்காக அவர் ஒரு படத்தயாரிப்பாளரை தொடர்ந்து அணுகியுள்ளார். ஆனால் அவரோ கண்டுக் கொள்ளவே இல்லையாம். பார்க்கக் கூட அனுமதிக்கவில்லை. ஒரு நாள் அலுவலக கேட்டில் இருந்தே திரும்பிப் போக வைக்கிறார்கள்.

    இதனால் கோபமடைந்த பட்டுக் கோட்டையார் என்ன செய்தார் தெரியுமா? கேட்வாசலில் வாட்ச்மேன் காலிசெய்து போட்டிருந்த சிகரெட் அட்டையை எடுத்து தனது உள்ளக் கொதிப்பை எழுதினார்...

    "தாயால் பிறந்தேன்

    தமிழால் வளர்ந்தேன்

    நாயே நீயார்

    என்னை நாளை வா

    என்று சொல்ல?"

    என்று காட்டமாக எழுதுகிறார்.

    அறிஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் தெரியும்.. இதற்கு அறம்பாடுதல் என்று பொருள். கவிஞர்கள் அறம்பாடினால் அது சாபம் விட்டமாதிரி.

    அந்த அட்டையை தயாரிப்பாளரிடம் கொண்டு போய் கொடுக்குமாறு வாட்சுமேனிடம் கொடுத்தார் பட்டுக் கோட்டையார்.

    வாட்ச்மேன் அதைவாங்கிக் கொண்டு அலவலகத்துக்கு உள்ளே செல்கிறார். அப்போது எதிரே வந்த கவிஞர் கு.மா.சுப்பிரமணியம் அந்த அட்டையை வாங்கி பார்க்கிறார். அதில் எழுதியிருப்பதைப் படித்ததும் அதிர்ந்து விட்டார். பட்டுக்கோட்டையார் அறம்பாடி இருப்பது அவருக்கு தெரிந்து விட்டது.

    வாட்ச்மேனிடம் உடனே அந்த பையனை கூப்பிடுயா என சத்தம் கொடுத்துக்கொண்டே கவிஞர் கு.மா.பா.வெளியே ஓடிவருகிறார். அதற்குள் பட்டுக்கோட்டையார் சைக்கிளில் அங்கிருந்து கிளம்பிச்சென்று விட்டார்.

    உடனே கவிஞர் கு.மா.பா. அந்த தயாரிப்பாளரிடம் "இது உமக்கு நல்லதில்லை. அவன் சாபம் விட்டுட்டு போயிருக்கான்" என்றார். அதற்கு தயாரிப்பாளர் "அவன் சாபம் என்னை என்ன பண்ணும்?" என்றாராம்.

    இந்த சம்பவம் நடந்த 3வருடக் காலத்துக்குள்ளாகவே அந்த தயாரிப்பாளர் தொழில் நொடிந்து நடுத்தெருவுக்கு வந்ததாக சொல்லுவார்கள். கவிஞர்கள் அறம் பாடினால் அது பலிக்கும் என்பார்கள். பட்டுக்கோட்டையாரின் அறம் பலித்துவிட்டது.

    பட்டுக் கோட்டையாருக்கு தான் முதல் வாய்ப்பு கொடுத்தது பற்றி எம்.எஸ்.விஸ்வநாதன் எத்தனையோ மேடைகளில் சொல்லியிருக்கிறார். அதில் ஒரு சுவாரசியமான விசயம் என்னவென்றால், "என்னத்த எழுதிட போவுது இந்த தம்பி" என்று சந்தேகத்தில் கூப்பிட்டு எழுத சொன்ன போது, பட்டுக்கோட்டையார்..

    "குட்டி ஆடு தப்பிவந்தா

    குள்ள நரிக்குச் சொந்தம்" என்ற பாடலை எழுதுகிறார். இந்த பாடலின் கடைசி வரியில்,

    சட்டப்படி பார்க்கப் போனா எட்டடித்தான் சொந்தம் என்று எழுதியிருப்பார்.

    பாட்டெல்லாம் கம்போஸ் செய்து முடித்தப் பின்னர் எம்.எஸ்.வி., பட்டுக்கோட்டையாரிடம் கேட்டாராம்..

    "அது என்னய்யா எல்லாரும் ஆறடி என்று தானே சொல்லுவார்கள். நீ என்ன எட்டடி என்று எழுதி இருக்கே?" என்று கேட்டுள்ளார்.

    "மத்தவங்களுக்கு எப்படி என்று எனக்கு தெரியாது. நானோ 6 அடி 2 அங்குலம். எனக்கு எப்படி ஆறு அடி போதும்? அதனால்தான் எட்டடிஎன்று எழுதினேன்" என்றாராம். பட்டுக்கோட்டையாரின் இந்த பதிலைக் கேட்டு எல்லாரும் சிரித்தார்களாம்.

    பட்டுக்கோட்டையார் கடவுள் நம்பிக்கை அற்றவர், நாத்திகவாதி. அவரை வைத்து சவுபாக்கியவதி என்ற படத்தில் ஒரு பக்தி பாடலை எழுத அந்த படத்தின் இசையமைப்பாளர் பென்டுலாயா நாகேஸ்வரராவ் விரும்புகிறார்.

    பட்டுக்கோட்டையார் நாத்தி கராச்சே, அவர் இந்து மத புராணக்கதைகளைப் படித்திருக்க வாய்ப்பில்லையே. அவர் எப்படி பக்தி பாடல் எழுத முடியும் என்று மற்றவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    அதற்கு பட்டுக்கோட்டையார் "நான் கடவுளை நம்பாதது வேறு விசயம், இது என்னோட தொழில். அதுக்கு என்ன செய்யனுமோ அதைச் செய்வேன்" என்றாராம்.

    "தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா..." என்ற பக்திப் பாடலை எழுதினார். டி.எம்.எஸ். குரலில் அற்புதமாக அமைந்த பாடல் அது.

    இந்தப் பாடலைக் கேட்டு எல்லோரும் வியந்து போனார்கள். பழுத்த சைவ பக்தர் ஒருவரால் தான் இப்படிப்பட்ட பாடலை எழுத முடியும். உங்களுக்கு எப்படி சாத்தியப்பட்டது? என்று கேட்டபோது..

    என்னுடைய பக்தி தொழில் மேல், என்னுடைய காதல் தமிழ் மேல். இந்த பக்தியும் காதலும் தான் அதற்கு காரணம். அது உங்களுக்கு பக்தியாக தெரிகிறது அவ்வளவுதான் என்றாராம்.

    பட்டுக்கோட்டையாரின் வாழ்க்கை வெறும் 29 வருஷம் தான் என்ற போதிலும் அவர் சாதித்து காட்டியதோ ரொம்ப ரொம்ப பெருசு.

    நிஜ வாழ்க்கையில் நடக்கிற சம்பவங்கள் தான் பல கவிதை களுக்கு இன்ஸிபிரேஷனாக இருந்தது என்று சொன்னேன் அல்லவா? இது பட்டுக் கோட்டைக்கு மட்டுமல்ல பல பேருக்கும் பொருந்தும்.

    கவியரசர் கண்ணதாசன் "அண்ணன் என்னடா..தம்பி என்னடா... அவசரமான உலக த்திலே" என்ற பாட்டை எப்போது எழுதினார் என்று எல்லோருக்கும் தெரியும். தன்னுடைய சகோதரர்கள் எல்லாம் கைவிட்ட பிறகு நஷ்டப்பட்டு விட்டோம் என்று எண்ணியயோது தான் அந்தப்பாடலை எழுதினார்.

    மெல்லிசை மன்னர் ஒரு சமயம் நீண்ட நேரம் தூங்கிக் கொண்டு இருந்ததால் கவியரசர் பாடல் எழுத காத்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் உருவானது தான் " அவனுக்கென்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் நானலல்வோ" என்ற பாடல்.

    எத்தனையோ கவிதைகளை எழுதி எழுதி கொடுக்கிறார் வாலிசார். அது சரியில்லை, இது சரியில்லை என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள்.

    ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன வாலி சார், "ஒன்ன நெனச்சா என்னய்யா பாட்டு வரும்? எனக்கு ஒரு பாட்டும் வரல... இது தான் கடைசியா வந்த பாட்டு" எனறு கோபமாக விட்டெறிந்து விட்டு போறாரு..

    "உன்னை நெனச்சி பாட்டுப் படிச்சேன்.. தங்கமே ஞான தங்கமே..." என்ற அந்தப்பாடல் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும்.

    இந்த பாடலை எழுதிக் கொடுத்த போது வாலி அவர்கள் ராஜா சார் கிட்டேயும், கமல் சார்கிட்டேயும் பேசவே இல்லையாம். வெறுத்து அவர் பேசின வார்த்தைகளை அப்படியே கவிதையாக்கி இருக்கிறார். அந்த பாடல் தான் அவருக்கு விருது வாங்கித் தந்தது.

    பல்லவி மட்டும் வந்து விழுகிறது வைரமுத்து சாருக்கு. " விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே" என்று.

    அதற்கு அடுத்த வரிகளை எழுத வரவில்லை. அங்குமிங்கும் சுற்றி சுற்றி வருகிறார். ஆனால் வார்த்தைதான் வந்த பாடில்லை. வெளியே வந்து புல் வெளியில் உலாவிக் கொண்டு இருக்கிறார்.தொலைவில் கொலுசு சத்தம் கேட்கிறது. அதை கேட்டதும் சரணம் வந்து விழுகிறது....

    " உன் வெள்ளி கொலு சொலி வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்" என்று தொடர்ந்து எழுதி முடிக்கிறார். குறுகிய காலத்தில் எழுதிய பாடல் அது.

    அடுத்து ஒருகாலக் கட்டத்தில் இந்தி சினிமா பக்கம் திரும்பிய இசை ரசிகர்களை ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமா பக்கம் திருப்பிய சம்பவங்கள் பற்றி பார்ப்போம்.

    தொடர்புக்கு:-

    info@maximuminc.org

    Next Story
    ×