என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    காமராஜரைப் பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதைகளும், திரைப்பட பாடல்களும்...
    X

    காமராஜரைப் பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதைகளும், திரைப்பட பாடல்களும்...

    • உள்ளத்தை உருக்குவது கவிதை என்றால்... இதயத்தை வருடுவது பாட்டாகும்.
    • நமது கவியரசர் கண்ணதாசன் கவிதை, பாட்டு இரண்டிலுமே மிகப்பெரிய மேதை.

    கவிதை என்பது இலக்கணத்தின் பாற்பட்டது. பாட்டு என்பது இசையின் பாற்பட்டது. உள்ளத்தை உருக்குவது கவிதை என்றால்... இதயத்தை வருடுவது பாட்டாகும். கேட்பவர்களை கிறுகிறுக்க வைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது பாட்டாகும்.

    அதனால்தான் நமது மகாகவி பாரதியாரும்

    "பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தை

    பாலித்திட வேணும்."-என்று பாடினார்...

    நமது கவியரசர் கண்ணதாசன் கவிதை, பாட்டு இரண்டிலுமே மிகப்பெரிய மேதை. ஈர்ப்பு நிறைந்த திரை உலகம் கவிஞரை கவ்விப் பிடித்துக் கொண்டிருந்தது. அதனால்தான் கவிஞரும் அதனுடைய அன்பான அரவணைப்பில் சொக்கிப்போய் தன்னால் முடிந்த அளவுக்கு பாட்டுக்களை எழுதிக்குவித்துக் கொண்டிருந்தார்.

    காமராஜரைப் பற்றி நிறையக் கவிதைகளை அவர் எழுதியிருந்தாலும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சூழ்நிலைக்கேற்றவாறு பெருந்தலைவரைக் கொண்டு வந்து திரைப்பாட்டிலே நிலை நிறுத்தி விடுவார். அப்படி எழுதுவதில் அவருக்கு அலாதி சுகம் ஒன்று இருந்தது.

    ஒரு கால கட்டத்தில் ஒரு சில சூழ்நிலைகளால், தவிர்க்க முடியாமல் காமராசரைப் பிரிந்து வெளியே வந்து விட்டார். இருந்தாலும் அந்தப் பிரிவு நீண்ட நாள் நீடிக்கவில்லை. சில கோபதாபங்களில் பிரிந்து விட்ட காதலர்களின் நிலையும் அப்படித்தான். மீண்டும் சேருவதற்கு சந்தர்ப்பம் எப்போது அமையுமென்று கொக்கு மீனுக்கு காத்திருப்பது போல் காத்திருப்பார்கள். அப்படித்தான் காத்திருந்தார் கண்ணதாசன்.

    இந்திரா காங்கிரசில் வந்து கண்ணதாசன் இணைந்தாரே ஒழிய நினைப்பெல்லாம் காமராஜர் மேலேயே இருந்தது. பிரிவு ஏற்பட்டு அதை அனுபவிக்கும் போதுதான் அந்தப் பிரிவின் வலி எத்தகையது என்பது விளங்கும்.

    கண்ணதாசனுக்கு காமராஜரைப் பிரிந்த துயரம் அவரை வாட்டிக் கொண்டே இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் "பட்டணத்தில் பூதம்" என்ற படத்திற்குப் பாடல் எழுதும் வாய்ப்பு வந்தது. அந்தப்படத்திலேதான்

    "சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி-என்னைச்

    சேரும் நாள் பார்க்கச் சொல்லடி...

    வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி...

    வேலன் இல்லாமல் தோகை ஏதடி..."

    என்ற பாட்டை எழுதினார் கண்ணதாசன். இனிமேல் தூது போவதற்கெல்லாம்வேலை இல்லை. அவரில்லாமல் நானில்லை என்கிற அளவுக்கு எழுதியதோடு நில்லாமல்...

    நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ?

    நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ...?

    என்ற வரிகளையும் எழுதி தனது நிலைப்பாட்டை பாட்டுக்குள் கொண்டு வந்து வெளிப்படுத்தி விட்டார் கண்ணதாசன்.

    மேலும் 1972-ம் ஆண்டு வெளியாகி சிவாஜி நடிப்பில் வெற்றிகரமாக ஓடிப்பேரெடுத்த "பட்டிக்காடா பட்டணமா" படத்திலும்

    சிவகாமி உமையவளே முத்துமாரி-உன்

    செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி

    மகராசன் வாழ்கவென்று வாழ்த்துக்கூறி

    மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி

    என்ற பாட்டினை எழுதி பெருந்தலைவருக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தார் கண்ணதாசன்.

    அர்ச்சுணர்க்கு கீதை சொன்னான்

    அண்ணலவன் கண்ணனடி...

    தந்தையிடம் மந்திரத்தை

    சாற்றியவன் கந்தனடி

    எல்லோர்க்கும் கல்விதந்தான்

    சிவகாமிச் செல்வனடி...

    என்று மாணிக்கத்தொட்டில் என்ற படத்திற்காக, தெய்வங்களோடு உயர்ந்த இடத்தில் காமராஜரை வைத்து எழுதியுள்ளார், கண்ணதாசன்.

    காமராஜர் என்றால் காங்கிரஸ் என்றும் காங்கிரஸ் என்றால் காமராஜர் என்றும்தானே எல்லோருமே பேசுகிறார்கள். தமிழகத்தில் இந்த காங்கிரஸ் பேரியக்கத்தை தனது வியர்வையும், ரத்தத்தையும், கடுமையான உழைப்பையும் சிந்தித்தான் இந்த உயரத்துக்கு கொண்டு வந்துள்ளார் காமராஜர். அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி ஏற்பட்டது இந்த பிரிவினை?

    ஏதோ ஒரு கோபத்திலும் நானும் இந்திரா பக்கம் சாய்ந்து விட்டேனே என்று வருந்தினார் கண்ணதாசன். இப்படிப்பட்ட பிரிவு இந்த தேசத்திற்கு நல்லதல்ல.. கட்சிக்கும் நல்லதல்ல. எனவே ஏதாவது ஒரு பரிகாரம் இதற்கு தேடியே ஆக வேண்டும். மனதிலே உறுதி பூண்டு விட்டார் கண்ணதாசன்.

    அந்த காலக்கட்டத்தில் (1972)தான் குமுதம் வார ஏட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு கவிதை எழுதிக் கொண்டிருந்தார் கண்ணதாசன். அதற்கு ஏராளமான வரவேற்பு இருந்தது. இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்றெண்ணி "அந்த மனிதனை அழையுங்கள்" என்ற தலைப்பிலே ஒரு கவிதையை எழுதினார் கண்ணதாசன்.

    எப்பொழுதுமே கண்ணதாசனின் பேச்சுக்கும், எழுத்துக்கும் காங்கிரசாரிடம் மிகப்பெரிய மரியாதை இருக்கும். எனவே கண்ணதாசனின் காமராஜர் பற்றிய அந்தக் கவிதையை ஒருமுறைக்குப் பலமுறை காங்கிரசார் அனைவருமே படித்துக் கண்ணீர் சிந்தினார்கள். நடந்த பிரிவுக்காக வருந்தினார்கள். கண்ணதாசன் கவிதை ஏற்படுத்திய தாக்கம் அது...

    இதே... அந்தக்கவிதை...

    "அந்த மனிதனை அழையுங்கள் -உங்கள்

    அன்னைக் கோவிலுக்கு அவனோர் கோபுரம்...!

    முன்னம் உலகின் முடியுடை மன்னன்

    தன்னந் தனியே தவம்புரிகின்றான்

    பன்னாள் உலகைப் பரிபாலித்தவன்

    தன்னால் இன்னும் தாய்பெறும் சேவை

    ஆயிரம் உண்டவன் அதற்கோர் இலக்கணம்!

    மூவர் முனிவன் முந்நூறு ஆண்டுகள்

    காணா வாழ்வைக் களிப்புறத் தந்தவன்..."

    என்று இந்தக் கவிதையில் காமராஜரை ஒவ்வொரு வரியிலும் படம்பிடித்து நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் கண்ணதாசன்.

    மேலும், நீங்கள் செய்த இந்த மாபெரும் பிழைக்கு, ஒரே ஒரு பரிகாரம் இருக்கிறது. அதை முதலில் செய்யுங்கள் என்று காங்கிரசாருக்கு வேண்டுகோள் விடுக்கிறார் கண்ணதாசன்.

    "வாழும் மன்னனை வரவு வையுங்கள்

    அவனால் இன்னும் ஆவண கோடி

    அவனை நம்புவோர் ஆயிர மாயிரம்...

    வளர்ந்த முறையும் வாழ்ந்த தன்மையும்

    நாணயம், நேர்மை, நன்மை மிகுந்தன.

    வெள்ளி மடத்து வேந்தன் இளங்கோ

    பள்ளி விடுத்து பாரர சொழித்து

    கோமுனி என்னக் குறைத்து வாழ்ந்ததுபோல்

    வாழும் மன்னனை வரவு வையுங்கள்...!

    வண்டினம் முரல முயங்கும் பொய்கையின்

    வெண்டா மரையை வேரறுக்காதீர்

    குற்றம் நாடிக் குணமும் நாடிடின்

    குற்றம் பத்து குணமோர் ஆயிரம்

    உள்ளம் தவறிலை! உலகம் அறியும்

    நல்லோர் மேலோர் நன்றியை மறவார்

    வல்லான் வீட்டு வாசல் தட்டுக...

    தந்தை ஒருநாள் தடியால் அடிப்பினும்

    தந்தை தந்தையே! தழுவுவான் மறுநாள்

    அந்த மனிதனை அழையுங்கள்! உங்கள்

    அடுத்த கட்டத்தை அழகுற நடத்த... ஐயா

    இந்த நானிலம் இன்புறுதற்கே..."

    என்று முடிகிறது அந்தக்கவிதை...

    கவிதையைப் படித்த ஒவ்வொரு காங்கிரஸ்காரர்களும் கண்கலங்கினார்கள். தவறு செய்து விட்டோமே என்று பலர் கை பிசைந்து நின்றார்கள். இந்தக்கவிதைக்கு நாடெங்கும் நல்ல வரவேற்பிருந்தது. பொது மக்களிடமும் இருந்தும் பாராட்டுக்குள் குவிந்தன....

    இதற்குப் பிறகு தான் கண்ணதாசனுக்கும் ஒரு நிம்மதி பிறந்தது. இந்தக் கவிதை வெளி வந்ததற்குப் பிறகு சந்தித்துக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் மத்தியில் ஒரு இணக்கம் தெரிந்தது. முகமும், அகமும் மலர்ந்திட பேசிக் கொள்வதைப் பார்க்க முடிந்தது.

    ஆனால், மேலிடத்தில் உள்ளவர்கள்... அவர்கள் அவ்வளவு இணக்கமாக இல்லை. பதவியில் உள்ளோர், பக்கமே சுற்றி சுற்றி வந்தார்கள். ஆனால் பெருந்தலைவர் அவர்களுக்கு இந்தக் கோஷ்டிகளில் எப்போதுமே நம்பிக்கையில்லை. நமது பக்கம் இருந்த இவர் அந்தப் பக்கம் போய் விட்டாரே என்ற கவலை தலைவருக்கு கொஞ்சமும் இல்லை. அவரது கவலை எல்லாம் நாட்டைப் பற்றித்தான். மக்களைப் பற்றித்தான்.

    இந்தச் சூழ்நிலை, இந்த மனிதர்களின் இயல்பு எல்லாமே கண்ணதாசனுக்குத் தெரியும். ஊத வேண்டிய சங்கை ஊதி விட்டோமென்ற திருப்தி மட்டும் அவருக்கு இருந்தது. ஒரு கடுகளவு கூட தன்னலமில்லாமல் இந்த நாட்டையே உயர்த்திப் பிடித்து, தூக்கி நிறுத்திய அந்த மாமனிதர் பக்கமே கண்ணதாசனுடைய இதயம் இருந்தது.

    தன்னைப் பற்றிய துயரங்களை, கவலைகளைக் கவிதையாக்கும் பொழுது கூட அதிலே எங்காவது ஓரிடத்தில் காமராஜர் பெயரைக் கொண்டு வந்து நிறுத்தி விடுவார் கவிஞர்...

    சீசரைப் பெற்றதாயும்

    சிறப்புறப் பெற்றாள்

    நாசரைப் பெற்ற தாயும்

    நலம்பெறப் பெற்றாள், காமராசரைப் பெற்ற தாயும்

    நாட்டிற்கே பெற்றாள்; என்னை

    ஆசையாய்ப் பெற்ற தாயோ

    அழுவதற்கென்றே பெற்றாள்

    என்று கண்ணதாசனின் தனது சோகத்தைச் சொல்லுவதற்காக எழுதப்பட்ட கவிதையிலும் காமராஜர் இருக்கிறார் பாருங்கள்.

    "தங்கதுரை" என்ற திரைப்படத்திற்குப் பாடல் எழுதப்போன கவிஞர்.

    "ஏழையெனப் பிறந்தவன்தான்

    பாண்டி நாட்டிலே - அவன்

    ஏழைக் கெல்லாம் கல்வி தந்தான்

    பிறந்த நாட்டிலே...

    அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தான்

    அழகு மொழியிலே- அவன்

    அறிஞனாக உயர்ந்து நின்றான்

    இமயம் வரையிலே..."

    -என்று மகிழ்ச்சியாக எழுதிவிட்டுத்தான் திரும்பினார். கண்ணதாசன் எழுதினால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவருடைய கருத்துக்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டனர். அப்படிப்பட்ட மரியாதை கண்ணதாசனுக்கு இருந்தது. காமராஜர் உயிரோடிருக்கும் போது அவரைப் புகழ்ந்து எழுதுவது என்பது வேறு. அவர் மறைந்ததற்குப் பின்னாலும் அதே பாசத்தோடு எழுதுவதுதானே உண்மையான அன்பிற்கு அடையாளம் 1978-ம் ஆண்டு வெளிவந்த "என்னைப் போல் ஒருவன்" என்ற படத்திலே டி.ஆர்.ராமண்ணா இயக்கத்திலே வெளிவந்த பாடல் இது...

    "தங்கங்களே... நாளைத்

    தலைவர்களே

    நம்தாயும் மொழியும் கண்கள்

    சிங்கங்களே வாழும் தெய்வங்களே

    நம்தேசம் காப்பவர் நீங்கள்

    நம் தாத்தா காந்தி, மாமா நேரு

    தேடிய செல்வங்கள்- பள்ளிச்

    சாலை தந்த ஏழைத் தலைவனை

    தினமும் எண்ணுங்கள்"

    என்று அற்புதமான வரிகளில், காந்திக்கும், நேருவுக்கும் அடுத்தபடியாக காமராஜரை வரிசைப்படுத்தியிருக்கிறார் என்றால் காமராஜரின் மீது கண்ணதாசன் பக்தியை என்னவென்று சொல்வது?

    "வானில் பறக்கும் மணிக்கொடியாடு அடிபட்டவன்

    வந்தே மாதரம் என்றதனாலே உதைபட்டவன்

    ஆண்டுகள் பல அந்நியன் காலில் மிதிபட்டவன் -இந்த

    அனுபவம் வருமென அறியாமலே சிறைப்பட்டவன்"

    இதுவும் காமராஜரைப் பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதை தான். அடிமை இந்தியாவில் காமராஜர் பட்ட துன்பங்களை, நான்கு வரியில் நறுக்காகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்...

    அடுத்த வாரம் சந்திப்போம்.

    Next Story
    ×