என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  இயற்கை தந்த அமிர்தம் தாய்ப்பால்
  X

  இயற்கை தந்த அமிர்தம் தாய்ப்பால்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் பல்வேறு உலக நாடுகளில் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம்.
  • ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்களும், அதனால் பல கிருமி தொற்றுக்களும் அடிக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

  ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் பல்வேறு உலக நாடுகளில் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகின்றது. தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை தாய்மார்களுக்கு ஏற்படுத்தும் வண்ணம் தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

  குழந்தைகள் பிறந்த ஒரு மணி நேரத்திலேயே தாய்ப்பால் சுரப்பது இயல்பு. அதுவே குழந்தைகளுக்கு அமிர்தம். குறைந்தது ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு இதுவே ஊட்டமளிக்கும் உணவு.

  நவீன கால பெண்கள் பலர் அழகுக்கு முக்கியத்துவம் தருவதாக எண்ணி, மூன்று மாதங்களிலேயே பாலூட்டுவதை நிறுத்துவதால் வருங்கால சந்ததி நிச்சயம் வலுவிழந்து நிற்கும். ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்களும், அதனால் பல கிருமி தொற்றுக்களும் அடிக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

  தாய்ப்பால் என்பது மிகச்சிறந்த ஊட்டச்சத்து. அதில் 88 சதவீத அளவு நீர்ச்சத்து உள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு நீர்சத்து இழப்பு ஏற்படாமல் தடுக்கக்கூடிய தன்மை இதற்கு உண்டு. மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு சத்து 4 சதவீதம், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான புரதசத்து 1 சதவீதம் அளவுக்கு உள்ளது.

  குழந்தைகளில் மட்டுமே சீரணிக்கக்கூடிய லாக்டோஸ் எனும் கார்போஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது. மேலும் அத்தியாவசிய வைட்டமின்களான ஏ,சி, டி, ஈ ,ரிபோபிளவின், நியாசின் ஆகியவையும் தாய்ப்பாலில் உள்ளது. கால்சியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற பல தாதுஉப்பு சத்துக்களும் இதில் அடங்கும்.

  இவை அனைத்தும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக கட்டமைக்கும் தன்மையும், வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மையும் உடையது.

  தாய்ப்பாலில் உள்ள தாதுஉப்பு சத்துக்களான, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ஜின்க் ஆகிய சத்துக்கள் குழந்தைகள் குடலில் உட்கிரக்கும் தன்மை அதிகம். மாட்டுப்பால் கொடுத்தால் அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உட்கிரகிக்கப்படாமல் வெளியே போகும். ஆகவே ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே மிகுந்த பயன் தரும்.

  குறைந்தது ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது அவசியம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இதற்கிடையில் குழந்தைகளுக்கு புட்டிப்பால் பழகுதல் என்பது அவர்களுக்கு உடல்நல தீங்கினை விளைவிக்கும். புட்டிப்பாலை பழக்குவதால் பாலுடன் சேர்த்து, அதில் உள்ள காற்றும் உறிஞ்சப்பட்டு குழந்தைகளின் வயிற்றில் சேர்வதால் அவர்களுக்கு வயிறு மந்தம் , அஜீரணம் வாந்தி, ஆகிய அசீரண தொந்தரவுகள் ஏற்படுத்தி உடல் எடையை குறைக்கும். அசவுகரியத்தை உண்டாக்கும். பாலின் மீது வெறுப்பினையும் இது உண்டாக்கும். ஆதலால் குழந்தைகள் உடல் நலனை கருத்தில் கொண்டு நவீன கால பெண்கள் புட்டிப்பாலை தவிர்ப்பது நல்லது.

  இவ்வாறு குழந்தைகளின் அமிர்தமாகிய தாய்ப்பாலை அதிகரிக்க, பாலூட்டும் தாய்மார்கள் நல்ல சத்தான உணவை எடுத்துக்கொள்வது அவசியம். அவர்கள் இயல்பான கலோரி அளவான 2000 என்கிற அளவை விட, 500 கலோரி அதிகமாக அதாவது 2500 கலோரி அளவுக்கு உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

  புரதச் சத்து அதிகம் உள்ள முளை கட்டிய தானிய வகைகள், கேழ்வரகு, உளுந்து, பயறு வகைகள் போன்றவற்றை கஞ்சியாகவோ, களியாகவோ,அடையாகவோ செய்து எடுத்துக்கொள்ள பால் சுரப்பு அதிகரிப்பதோடு, பிரசவத்திற்கு பின் பலவீனமான இடுப்பு எலும்பும் வலுப்பெறும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

  'அதிசய மரம்' என்று ஆங்கிலத்தில் வருணிக்கப்படும் முருங்கை மரத்தின் கீரை தாய்ப்பாலினை சுரக்கச் செய்யும் அற்புத மூலிகை. இதனை 'தாய்மையின் சிறந்த நண்பன்' என்றே கூறலாம். ஏனெனில் இது தாய்ப்பாலை பெருக்குவதோடு பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் சிறந்த மூலிகை நண்பனாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  முருங்கைக்கீரையை பனைவெல்லம் சேர்த்து சூப் போலவோ,அல்லது இஞ்சி, பூண்டு, மிளகு,பெருங்காயம், உப்பிட்டு சூப் போலவோ அல்லது அடையாகவோ செய்து எடுத்துக்கொள்ள நற்பலனைத் தரும்.

  முருங்கை இலை கிடைக்காத தருணங்களில் கல்யாண முருங்கை இலையை பயன்படுத்தலாம். பொதுவாக கீரைகளை சேர்த்தோ அல்லது காய்கறிகளை சேர்த்தோ சூப் போல வைத்து பருகலாம். அதில் உள்ள சத்துக்கள் உடனடியாக குடலில் உட்கிரகிக்கப்பட்டு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

  கனிவகைகளை பொருத்தமட்டில் அனைத்துமே நற்பலனைத் தரும். முக்கியமாக எளிதாக கிடைக்கும் துவர்ப்பு சுவையுடைய அத்திக்காய் பிஞ்சினை பொரியலாகவும், பப்பாளி காயினை கூட்டாகவும் செய்து எடுத்துக்கொள்ள சிறந்த பலன் தரும். அத்துடன் பட்டாணி, மூக்கடலை ஆகிய எளிய கொட்டைவகைகளை சுண்டல் செய்து எடுத்துக்கொள்ளலாம்.

  தாய்ப்பால் பால் சுரப்பை அதிகரிக்க தாய்மார்கள் பருப்பு வகைகளை ஆமணக்கு எண்ணையில் வேகவைத்து எடுக்கலாம். சித்த மருத்துவ நூலான அகத்தியர் குணவாகடம் ஆமணக்கு எண்ணையைப் பற்றி கூறுமிடத்தில் குழந்தைகளை தாய்ப்பால் வளர்க்கும் என்று கூறுவது மிகச்சிறப்பு.

  அவ்வப்போது இயற்கை தந்த எளிய, இனிய, கால்சியம் மாத்திரைகளான எள்ளு உருண்டை, கேழ்வரகு உருண்டை, திணை உருண்டை இவற்றை எடுக்கலாம். இவையும் தாய்ப்பால் சுரப்பை தூண்டுவதுடன், தாய்க்கு இடுப்பு வலிமை தரும்.

  பல ஆண்டுகாலமாக தாய்ப்பால் சுரப்பை அதிகமாக்க உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளிலும் பயன்படுத்தப்படும் எளிய சித்த மருத்துவ கடைசரக்கு வெந்தயம் தான். வெந்தயக் களி எனும் பாரம்பரிய உணவு தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதுடன், பிரசவத்திற்கு பின் ஏற்படும் ரத்தசோகைக்கும் நல்ல பலன் தரும். வெந்த + அயம் என்ற அதன் பெயரிலே அது அதிக இரும்புசத்து கொண்டது என்ற பொருள் விளங்குகிறது.

  வெந்தயத்தில் 50 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது . நூறு கிராம் வெந்தயத்தில் 26 கிராம் புரதம், 6 கிராம் வரை கொழுப்புச்சத்தும், 44 கிராம் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. மேலும் வெந்தயம் இரும்பு, சோடியம் போன்ற அத்தியாவசிய தாதுஉப்புக்களும், வைட்டமின் தையமின் ஆகியவற்றின் இயற்கையான ஆதாரமாக உள்ளது.

  பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில், பாலூட்டலை எளிதாக்க உலகெங்கிலும் உள்ள பெண்கள் வெந்தயத்தை உட்கொள்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுவது பாரம்பரிய மருத்துவத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் வண்ணம் உள்ளது.

  வெந்தயத்தை லேசாக வறுத்து பொடித்து பாலில் சேர்த்து காய்ச்சி கஞ்சியாக்கி அல்லது பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாக கிண்டி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் ஆதலால் ஆஸ்துமா வியாதி உள்ள தாய்மார்கள் தவிர்ப்பது நல்லது.

  தாவர உணவுகள் மட்டுமல்லாது அசைவ பிரியர்கள் பாலூட்டும் காலங்களில் மாமிச உணவுகளை சேர்க்கலாம். அதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியாக மாமிசக்கால் சூப், சுறா மீன் புட்டு செய்து சாப்பிட பால் சுரப்பை அதிகரிக்கும். இறால் மீன் வகைகள், நாட்டு கோழிக்கறி ஆகிய அனைத்து மாமிச உணவுகளும் நல்லது தான். மாமிச உணவினால் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது, சூடாகி விடும் என்று தவறுதலாக எண்ணி தவிர்ப்பது நல்லதல்ல. தினசரி ஒரு முட்டை எடுத்து கொள்ளுதல் கூட அவசியம் தான்.

  மன அழுத்தம், கவலை ஆகியவைகளால் தாய்ப்பால் சுரப்பு பாதிக்கப்படும். ஆகையால் மனமகிழ்ச்சிக்கு அவ்வப்போது மணத்தக்காளி கீரையை உணவில் சேர்க்கலாம். மனதுக்கு களி அதாவது மனதுக்கு மகிழ்ச்சி தரும் என்பது இதன் தமிழ்ப் பெயரிலே பொருள் விளங்கும்.

  இவ்வாறாக இயற்கை தந்த பாரம்பரிய உணவு வகைகள் ஒருபுறமிருக்க, தாய்ப்பாலை பெருக்க சித்த மருத்துவத்தில் பல்வேறு எளிய மூலிகைகள் சொல்லப்பட்டுள்ளது . காலம் காலமாக பிரசவித்த பெண்களுக்கு வழங்கப்படும் சித்த மருந்துகளாகிய சவுபாக்கிய சுண்டி லேகியம், பிரசவ நடகாய லேகியம். சதாவேரி லேகியம், ஆகியவை பாட்டி வைத்தியமாகவே பல வீடுகளில் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  பூண்டு, இஞ்சி, சோம்பு போன்ற எளிய மூலிகை கடைச்சரக்குகளும், ஓரிலைத் தாமரை, சதாவேரி, பாலைக்கொடி போன்ற சித்த மருத்துவ மூலிகைகளும் நல்ல பலன் தருவதாக உள்ளது ஆய்வுகளின் முடிவில் உறுதியும் செய்யப்பட்டுள்ளது.

  தினசரி ஐந்து பல் பூண்டினை பாலில் சேர்த்து வேக வைத்து பாலோடு சேர்த்து பூண்டையும் எடுத்துக் கொள்ள தாய்ப்பால் பெருகும். பெருஞ்சீரகம் எனும் சோம்பினை அவ்வப்போது கஷாயமாக்கியும், கஞ்சி செய்தும் எடுக்கலாம். இஞ்சி அடிக்கடி உணவிலோ பாலிலோ சேர்த்து காய்ச்சி குடிக்க அல்லது உணவில் துவையல் செய்தும் எடுக்க பால் சுரப்பை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. தாய்பால் கொடுப்பதனால் சேய்க்கு மட்டுமல்லாமல், தாய்க்கும் எண்ணற்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

  நவீன கால பெண்களை அதிகம் பாதிக்கும் மார்பக புற்று நோய், சினைப்பை புற்று நோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஆகியவை வராமல் தடுக்கப்படுவதாகவும், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கப்படும் என்றும், பிரசவத்திற்கு பின் வயிறு சுருங்க ஏதுவாக இருக்கும் என்பன போன்ற பல்வேறு நன்மைகள் உடையதாக உள்ளது.

  அதிக நாட்கள் தாய்ப்பால் பெரும் குழந்தைகள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உடையதாக உள்ளதும், மேலும் அவர்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நோய் எதிர்ப்புசக்தி சார்ந்த நோய்கள் வருவது தடுக்கப்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுவது கூடுதல் சிறப்பு.

  குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுப்பது தாய், சேய் இருவருக்கும் நல்லது என எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இன்றளவும் இந்தியாவில் 47 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே 6 மாதத்திற்கு முழுமையான தாய்ப்பால் கிடைப்பதாகவும், அவைகள் மட்டுமே உடல் பலத்துடன் இருப்பதாகவும் ஆய்வறிக்கை கூறுவது வருந்தத்தக்க நிகழ்வு தான். பல்வேறு காரணங்கள் கருதி நவீன கால வாழ்வியலில் பணிசுமைக் காரணமாக பெண்கள் பாலூட்டுவதை ஒரு வருடத்திற்குள்ளே நிறுத்தி விடுகின்றனர் என்பது தான் உண்மை. இதனால் உடல் வலுவான ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

  ஆரோக்கியமான குழந்தைகள் தான் வருங்கால வலுவான சமுதாயத்தின் தூண்கள். இதைப் புரிந்துக்கொண்டு நம் வாழ்வுடன் ஒன்றிணைந்த சித்த மருந்துகளையும், பாரம்பரிய உணவு முறைகளையும் கடைப்பிடித்து தாய்மார்கள் செயல்பட்டால், பல்வேறு நோய்களில் இருந்து தாயும் சேயும் மீளமுடியும்.சமுதாயம் வலுப்பெறும்.

  தொடர்புக்கு:

  drthillai.mdsiddha@gmail.com

  Next Story
  ×