என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    குருவின் வக்கிரத்தால் பாதிக்கப்படும் 7 ராசிகள்
    X

    குருவின் வக்கிரத்தால் பாதிக்கப்படும் 7 ராசிகள்

    • நவகிரகங்களின் இயக்கமே மனிதர்களுக்கு உயர்வையும், தாழ்வையும் தருகிறது.
    • மிகச் சுருக்கமாக உலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பவர் குருபகவான்.

    நவகிரகங்களின் இயக்கமே மனிதர்களுக்கு உயர்வையும், தாழ்வையும் தருகிறது. இதில் வருட கிரகங்களின் வரிசையில் முழுச் சுபரான குரு பகவானின் கோட்சாரம் மனிதர்களுக்கு மிக முக்கியமானதாகும். தற்போது தனது சொந்த வீடான மீனத்தில் ஆட்சி பலம்பெற்று பல்வேறு பலன்களை வழங்கிக் கொண்டு இருக்கும் குருபகவான் 29.7.2022 முதல் 24.11.2022 வரை மீன ராசியில் சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் அடைகிறார். தனகாரகன் எனப்படும் குருபகவான் பணம், தங்கம், குழந்தைகள், யானை, மஞ்சள் நிறப் பொருட்கள், கோடிக்கணக்காக பணம் புரளும் இடங்கள், வங்கி, கோவில்கள், நீதித்துறை, ஆன்மீக நாட்டம், சாஸ்திர ஞானம், பிராமணன், நீதி, அமைச்சர், ஆலோசனை வழங்குதல் ஆகிய அனைத்திற்கும் காரகராவார்.

    மிகச் சுருக்கமாக உலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பவர் குருபகவான். இவர் தொழில் காரகன். சனியின் நட்சத்திரத்தில் வக்ரம் அடைவதால் உலக பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் மிகுதியாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் கொடுக்கல், வாங்கலில் வம்பு, வழக்குகள் அதிகரிக்கும்.

    தங்கத்தின் பயன்பாடு அதிகரிக்கும். பழைய தங்கத்தை புதிய தங்கமாக மாற்றும் ஆர்வத்தில் பலர் பூர்வீக, குடும்ப, பாரம்பரிய குடும்ப நகைகளை இழப்பார்கள்.பண வீக்கம் ஏற்படலாம். பங்குச் சந்தை ஆர்வலர்கள் நிதானித்து செயல்பட வேண்டும். நோய் தாக்கம் அதிகரிக்கும். நாடாளுபவர்களுக்கும் பொது மக்களுக்கும் இணக்கமற்ற சூழ்நிலை உண்டாகும்.

    அரசியல்வாதிகளுக்குள் ஒற்றுமை குறைவு, கட்சி பூசல்கள் அதிகரிக்கும். சமூக மற்றும் அரசியல் காரணங்களால் மதச் சண்டைகள், விவாதங்கள் அதிகரிக்கலாம். உயர் பதவியில் உள்ள நீதிபதிகள், குருமார்கள், பணப்பொறுப்பில் உள்ளவர்கள், ஆசிரியர்கள் போன்றோரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். பல வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு வராக்கடன்கள் அதிகமாகும். பணமோசடி சம்மந்தப்பட்ட வழக்குகள் பெருகும். அரசு அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் சேமிப்பு, நகை சீட்டு போடுபவர்கள் கவனமாக இருக்கவேண்டும். குழந்தைகளை கவனமாக பராமரிக்க வேண்டும்.

    குருவின் வக்கிரத்தால் 12 ராசிகளுக்கும் ஏற்படும் சாதக, பாதகங்களை கீழே காணலாம்.

    மேஷம்

    விரயங்கள் மருத்துவச் செலவுகள் விலகும் காலம். மேஷ ராசிக்கு 9,12-ம் அதிபதியான குருபகவான் 10, 11-ம் அதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பனிரெண்டாம் இடமான அயன, சயன விரய ஸ்தானத்தில் வக்ரம் அடைகிறார். இதனால் தீய, கெட்ட சிந்தனைகள் நீங்கி தெளிவு பிறக்கும்.

    அவமானங்கள், அவ நம்பிக்கைகள் விலகி குடும்ப பிரச்சினைகள் பேச்சு வார்த்தையின் மூலம் சுமூகமான முடிவிற்கு வரும். கடனுக்காக அல்லது குடும்ப பிரச்சினைக்காக தலைமறைவாக வாழ்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள். பண விஷயத்தில் சற்று நெருக்கடி குறையும். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் உண்டாகும். பங்குச் சந்தை முதலீட்டில் ஆதாயம் உண்டாகும். காரிய அனுகூலம், பொருளாதார வளர்ச்சி, குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் தொழில் விருத்தியை ஏற்படுத்தி தருவார். சிலருக்கு இரண்டாவது தொழில் தொடங்கும் எண்ணம் அதிகரிக்கும்.

    நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சையில் வாழ்ந்தவர்கள், படுக்கையில் விழுந்தவர்கள் மூட்டு அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிகிச்சைக்காக பணி விடுப்பில் இருப்பவர்கள் மீண்டும் வேலைக்குச் செல்லலாம். உரிய இழப்பீட்டுத் தொகை, காப்பீட்டுத் தொகை கிடைக்கும். ஓய்விற்காக வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் மகன் அல்லது மகள் வீட்டிற்குச் சென்றவர்கள் தாயகம் திரும்பலாம். மறுதிருமண முயற்சிகள் நிறைவேற வியாழக் கிழமை மாலை 7 மணி முதல் 8 மணி வரை சனி ஓரையில் சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.

    ரிஷபம்

    தொழிலில் உத்தியோகத்தில் ஏற்றம் உண்டாகும். ரிஷப ராசிக்கு 8,11-ம் அதிபதியான குருபகவான் பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் 9,10-ம் அதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரமடைகிறார். இதனால் மனம் பற்றற்ற நிலையை விரும்பும். சிலருக்கு தனிமையாக வாழ வேண்டும் என்ற உணர்வு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். மனம் எளிமையை விரும்பும்.

    வெளிநாட்டை சார்ந்த வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு இந்த காலம் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தை விட செலவுகள் அதிகமாகும். மருத்துவச் செலவுகள் கை மீறிப்போகலாம். சிலர் குடும்ப உறுப்பினர்களால் கடன் பட நேரும். தொழில் நெருக்கடி இருக்கும். தொழில் வாய்ப்புகள் கைநழுவிப் போகும். வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். முதலாளி-தொழிலாளி கருத்து வேறுபாடு மிகும் அல்லது தொழிலாளிகள் மூலம் வழக்கை சந்திக்க நேரும். வேலை பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேறுபாடு நிலவும். சிலர் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை காரணமாக வேறு வேலை மாற நேரும் அல்லது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. சம்பளம் இல்லாமல் வேலைக்கு பார்க்கும் நிலை இருக்கும்.தொழிலை தக்க வைக்க கடுமையான முயற்சியையும் போராட்டத்தையும் அதிக உழைப்பையும் செலவிட வேண்டும். தந்தை வழிச் சொத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சித்தப்பா, பெரியப்பாவின் மூலம் தீர்த்து வைக்கப்படும். முன்னோர்கள் வழி நரம்பு சம்பந்தமான நோய்க்கு உடனே சிகிச்சை எடுத்தல் அவசியம். சனிக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரையான குரு ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    மிதுனம்

    விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம் மிதுன ராசிக்கு 7, 10-ம் அதிபதியான குருபகவான் 8, 9-ம் அதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் வக்ரம் அடையும் காலத்தில் நல்ல வேலையில் கை நிறைய சம்பளம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். நம்பிக்கை துரோகம் ஏற்படும் என்பதால் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. திடீர் பண வரவு வரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது.

    குல தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். குல தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். ஒரு சில குடும்பங்களில் குல தெய்வ கோவிலில் யாருக்கு முதல் மரியாதை என்ற கருத்து வேறுபாடு ஏற்படும். ஒரு சிலருக்கு பூர்வீகத்தை விட்டு இடம் பெயர நேரும். பூர்வீகம் தொடர்பான அனைத்து செயல்களிலும் தடை தாமதம் ஏற்படும். பாகப் பிரிவினையில் கருத்து வேறுபாடுமிகும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு பங்கு குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    புதிய முதலீடு செய்ய ஏற்ற காலம் அல்ல. முதலீட்டை காப்பதில் கவனம் தேவை. செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடுபவர்கள் சுயஜாதகத்தில் உங்களின் நேரம், காலம் அறிந்து செயல்படுவது நலம். ஒரு சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதி வந்து மன சஞ்சலத்தை அதிகரிக்க செய்யும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை புதன்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரையான குரு ஓரையில் மகா விஷ்ணுவை வழிபடவும்.

    கடகம்

    விருப்பங்கள் நிறைவேறக்கூடிய காலம். கடக ராசிக்கு 6, 9-ம் அதிபதியான குரு பகவான் 7, 8-ம் அதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் வக்ரம் அடையும் காலத்தில் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். தொழில் துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் சுகமான அனுபவங்கள் ஏற்படும். உங்கள் ஆற்றலையும் திறமையையும் பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு என அனைத்து நன்மைகளும் உண்டாகப் போகிறது. நிறைவேறாத முயற்சிகள் நிறைவேறும் மனதை ஆட்டிப்படைத்த இனம் புரியாத வேதனைகள் மறையும். அரசியலில் இருந்து விலகி இருப்பது நல்லது. யாருக்கும் தீங்கு செய்வதை நினைத்துப் பார்க்க வேண்டாம். புறம் பேசுவது கூடாது. உயர் கல்வி முயற்சியில் தடை ஏற்படும்.

    பிறருக்கு பொறுப்பு கையெழுத்திட்ட ஜாமீன் தொகை வந்து சேரும். புதிய திருப்பங்கள் ஏற்படும். தாய், தந்தை உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். பண பற்றாக்குறை நீங்கும் திடீர் பண வருமானம் பெருகும். திருமணம் ஆன தம்பதிகள் தங்கள் பிரச்சினையை மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் தற்போது நிலைமை சீராகும்.

    திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையான குரு ஓரையில் தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

    சிம்மம்

    பதவியை தக்க வைப்பது கடினம். ராசிக்கு 5,8-ம் அதிபதியான குரு பகவான் 6, 7-ம் அதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் எட்டாம் இடத்தில் வக்ரம் அடையும் காலத்தில் பல வழிகளில் வருமானம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் பெரிய தாக்கம் ஏற்படாது. சேமித்த பணம் செல்வாக்கு கூடும். 5-ம் அதிபதி குரு வக்ரம் பெறுவதால் பதவி பறிபோகும். நம்பியவர்களே எதிரியாகுவார்கள். வேலையில் சுமை கூடும். 6-ம் அதிபதி சனியின் பார்வையும் 8-ம் இடத்திற்கு இருப்பதால் குருவின் வக்ர காலத்தில் தொழில் உத்தியோகம் தொடர்பான வம்பு வழக்குகள் ஏற்படலாம். முடிந்த வரை வம்பு வழக்கை தவிர்க்க வேண்டும். ஏதேனும் காரணத்திற்காக கோர்ட் கேஸ் பிரச்சினை வந்தால் வழக்கை நிலுவையில் வைக்க வேண்டும் அல்லது மத்தியஸ்தர்களிடம் சென்று சமாதானம் பேச வேண்டும். ஏற்கனவே உங்களுக்கு எதிராக உள்ள வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு எதிராக வரலாம்.

    குரு இந்த காலகட்டத்தில் உங்களின் நண்பன் யார்? எதிரி யார்? என்பதை அடையாளம் காட்டி விடுவார். தனிமையை விரும்ப செய்வார். தத்துவஞானி போல் பேச வைத்து விடுவார்.சிலருக்கு தான் சேமித்த பணம் விருப்பமில்லாமல் செலவிட வேண்டிய நிலை ஏற்படும். தந்தை யுடனான உறவு சீராக இருக்க, உரிய மரியாதை கொடுத்து எதையும் பேசி தீர்க்கவும். கல்லூரி படிப்பை தேர்வு செய்வதில் மனத் தடுமாற்றம் அதிகரிக்கும். முழு கவனத்துடனும் சரியான திட்டமிடலுடனும் செயல்படுதல் அவசியம். ஞாயிற்றுகிழமை காலை 11 மணி முதல் 12 மணி வரையான குரு ஓரையில் சிவ தரிசனம் செய்யவும்.

    கன்னி

    மன சஞ்சலத்தை கட்டுப்படுத்த வேண்டிய காலம். ராசிக்கு 4,7-ம் அதிபதியான குரு பகவான் 5, 6-ம் அதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 7-ம் இடத்தில் வக்ரம் அடையும் காலத்தில் கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படும்.

    பொருளாதார நெருக்கடி, வேலை இழப்பு, தொழில் நட்டமும் ஏற்படலாம். மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். தீர்க்கமான முடிவு செய்யும் திறன் குறையும். கோபம், டென்சன் மிகுதியாகும். பூர்வீக சொத்தில் சிக்கல், புகழுக்கு பங்கம் ஏற்படுதல் போன்ற சில கெடுபலன்கள் ஏற்படலாம். வாழ்க்கையில் சில திடீர் மாற்றங்கள் உண்டாகும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பேசவேண்டும்.

    இந்த காலகட்டத்தில் வருமானத்தை மறு முதலீடாக மாற்றக்கடாது. கடன் வாங்கக் கூடாது. இரு வேறு மனநிலையில் செயல்படுவீர்கள். திடீர் திடீரென்று முடிவினை மாற்றி செயல்படுவீர்கள். சில நேரங்களில் அவை நன்மையாகவும் பல நேரங்களில் தீமையாகவும் முடிந்து விடும். கணவன் மனைவி இடையே நெருக்கம் குறையும்.

    புத்திர பேறு ஏற்படுவதில் கால தாமதம் உண்டாகும். எது எப்படி இருந்தாலும் ராசியை குரு பார்ப்பதால் பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. யோகா, தியானத்தின் மூலம் நல்ல பலன்களையும், மன அமைதியையும் பெறலாம்.புதன் கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையான சனி ஓரையில் சரபேஸ்வரரை வழிபடவும்.

    துலாம்

    இழந்த வாய்ப்புகள் மீண்டும் தேடி வரும் காலம். ராசிக்கு 3,6-ம் அதிபதியான குருபகவான் 4,5-ம் அதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராசிக்கு 6ல் வக்ரமாகும் காலத்தில் குடும்பத்தில் நல்ல உறவும், அமைதி, நிம்மதியும் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் பங்கேற்பீர்கள். பிரமாண்ட புதிய வாய்ப்புகள் தேடி வரும். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். பண வரவு இருந்தாலும் கடன் பிரச்சினையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு, மேலதிகாரிகளிடம் நற்பெயர், மரியாதை அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடு பலன் தரும்.

    உத்தியோகம் தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். சிலருக்கு விரும்பிய ஊருக்கு பணி மாற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சில்லரை வியாபாரிகளுக்கு தொழிலில் புதிய மாற்றம், ஏற்றம் உண்டாகும். ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும்.

    எப்பொழுதோ வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும். இட விற்பனையில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். விற்க முடியாத சொத்துக்களை விற்க முடியும்.

    வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டமாக பணம் கிடைக்கும். அரை குறையாக நின்ற பணிகள் துரிதமாகும். எதிர் காலம் பற்றிய கவலைகள் அகலும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட எல்லைத் தகராறு சுமூகமாகும். ஜாமீன் வழக்கிலிருந்து விடுதலை கிடைக்கும். வெள்ளிக்கிழமை 10 மணி முதல் 11 மணி வரையான குரு ஓரையில் மகாலட்சுமியை வழிபடவும்.

    விருச்சிகம்

    விழிப்புணர்வு கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம். ராசிக்கு 2,5-ம் அதிபதியான குருபகவான் 3,4-ம் அதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் அடையும் காலத்தில் வேலையில் பளு அதிகரிக்கும். உடல் சோர்வுகள் வந்து நீங்கும்.ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். சில ஒழுக்கமற்ற வாழ்க்கை முறை நோயை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    பணப்பரிவர்த்தனையில் கவனம் தேவை. வரவை விட அதிகமாக செலவாகும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாட்டை , வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிறர் விவகாரஙகளில் தலையீட்டை குறைத்தல் நலம்.

    கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வங்கிகள், வட்டித் தொழில், சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில், மிகப் பெரிய முதலீட்டில் தொழில் நடத்துபவர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொடுத்த பணம் வசூலாகுவதில் தடை, தாமதம் ஏற்படலாம். முறையற்ற ஆவணங்களால் வம்பு, வழக்கு, பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    சொத்து தொடர்பான விசயங்களை ஒத்தி வைப்பது நல்லது. தாய்வழிச் சொத்தால் சில மன பேதம் ஏற்படலாம். மனச் சோர்வு, வேலை ஆட்களால் பிரச்சினை, காரியத்தில் சில தடைகள், சகோதரிகளிடம் மனஸ்தாபம் உண்டாகுதல் போன்ற விஷயங்கள் ஏற்படலாம். சில விஷயங்களில் அசுப பலன்களைப் பெற நேர்ந்தாலும், ராசியை குரு பார்ப்பதால் பாதகங்களை சாதகமாக மாற்றக் கூடிய திறமையும் உண்டாகும். செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரையான சனி ஓரையில் முருகப் பெருமானை வழிபடவும்.

    தனுசு

    புதிய மாற்றங்கள் ஏற்படும் காலம். ராசி மற்றும் நான்காம் அதிபதியான குரு 2, 3-ம் அதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் பெறும் காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில், வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சமூக சேவை, சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு அதிக பயணங்கள் செல்ல நேரும். பண வரவு அதிகரிக்கும் செலவுகள் கூடும். வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் நிற்பதால் கடினமான மற்றும் அடுத்தவர் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்தில் சிறு சிறு மனக்கசப்பு தோன்றி மறையும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் அன்பும் அரவணைப்பு இருந்தாலும். சில முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அவசரப்படாமல் ஆலோசனை செய்து முடிவு செய்யவும். ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வியில் சிறு தடை அல்லது மந்த நிலை இருக்கும். சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது. அவசர தேவைக்கு நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று தற்போதைய நிதி நிலையை சரி செய்ய முடியும்.

    ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களைக் காணலாம். சிலருக்கு தாய் வழியில் பண உதவி கிடைக்கும். உங்களின் அறிவுத் திறன் அதிகரிக்கும். நீங்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் நல்ல முடிவைப் பெறுவீர்கள்.

    வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையான குரு ஓரையில் தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

    மகரம்

    ஏற்றமும் இறக்கமும் நிறைந்த காலம். ராசிக்கு 3,12-ம் அதிபதியான குருபகவான் ராசி மற்றும் தன ஸ்தான அதிபதி சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் பெறுவதால் தொழில், புதிய வாகனம் வாங்கும் யோகம் வரும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.பழைய கடன் பிரச்சினை நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் பொறுப்பெடுத்து கவனித்துக் கொள்வது நல்லது. உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூறுவதைத் தவிர்க்கவும். 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் உள்ள கேதுவிற்கு சனியின் 10ம் பார்வை இருப்பதால் தொழில் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைக்க நேரும்.

    வேலையாட்கள் பிரச்சினை உருவாகும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உருவாகும். வீண் பழி உருவாகும் என்பதால் பெண்கள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. மறைமுக எதிரி தாக்கம் உருவாகும். உங்களின் இயல்பான பணிகளை வெற்றிகரமாக செயல்படுத்த இயலாது.

    உங்களின் நடவடிக்கைகளில் சுயநலம் மிகும். உங்களின் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டே இருப்பீர்கள்.

    கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் அதிக முயற்சி செய்ய நேரும்.உங்களின் முயற்சிகள் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கும். பல சமயங்களில் உங்களுடைய செயல்கள் பிறருடைய மனதை வருந்த வைக்கும்.அலுவலகத்தில் உயரதிகாரிகளின் கண்டிப்பை எதிர்கொள்வீர்கள். வேலை மாற்றம் செய்ய விரும்புபவர்கள் புதிய வேலைக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்கி விட்டு பழைய வேலையை விட வேண்டும்.

    சனிக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரையான குரு ஓரையில் தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

    கும்பம்

    வீண் விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய காலம்.

    ராசிக்கு 2, 11-ம் அதிபதியான குருபகவான் ராசி, 12-ம் அதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மிகுதியாக இருக்கும். பணம் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு கரையக்கூடும். பேச்சில் தெளிவின்மை இருக்கும்.

    குடும்ப வாழ்வில் ஆர்வம் இருக்காது. குடும்பத்தில் சுகமும் துக்கமும் மாறி மாறி இருந்து கொண்டே இருக்கும்.கடுமையான வாக்கு பிரயோகம், கூசாமல் பொய் பேசுதல் ஆகியவைகளால் குடும்பத்தில் தேவையில்லாத பிரிவினை உண்டாகும். சிலருக்கு உண்மையே பேச முடியாத சூழ்நிலை ஏற்படும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத கெட்ட பெயர் ஏற்படும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போன்ற இனம் புரியாத மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.

    குலப் பெருமையை காப்பாற்ற போராட நேரும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சினைகள் இழுபறியாக இருக்கும். தந்தை வழி உறவினர்களிடம் சிறு சிறு மனத்தாங்கல் இருக்கும். உரிமைக்காகவும், நியாயத்திற்காகவும் போராடுவீர்கள். பொதுக் காரியங்களுக்காக அதிக நேரம் செலவு செய்வீர்கள். சமூக அந்தஸ்து மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் குடும்பத்தில் நிம்மதி குறையும். தந்தையின் ஆரோக்கியம் சீராகும். நிம்மதியான உறக்கம் இருக்காது. சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

    மீனம்

    புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டிய காலம்.

    ராசி மற்றும் பத்தாம் அதிபதியான குரு பகவான் 11,12ம் அதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராசியில் வக்ரம் பெறுவதால் தொழில் தொடங்க விரும்பினால் அது லாபம் தரக்கூடியதாக அமையாது. இந்த நேரத்தில் குறுகிய கால முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். நீண்ட கால முதலீடுகள் நன்மைகளைத் தரும்.

    எந்த முடிவை எடுப்பதற்கு முன்பும் பெற்றோரின் ஆலோசனையை பெறவும். வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்காது. அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் மன பேதம் ஏற்படும்.தொழில் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் பேச வேண்டும். நண்பர்களுடன் வீண் வாக்கு வாதம் ஏற்படலாம்.

    கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடு வரும் அல்லது தொழில் நிமித்தமான பிரிவைத் தரும்.

    காதல் விவகாரங்களை ஒத்திப்போடுவது நல்லது. மாமியார், மருமகள் பிரச்சினை தலை தூக்கும். பொருளாதார சிக்கல், உடன் வேலை செய்பபவர்களால் வம்பு, கெட்ட பெயர் ஏற்படும். உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் தயக்கம் இருக்கும். அப்படியே உங்கள் கருத்துக்களை முன் வைத்தாலும் அது எடுபடாது. புகழ் அந்தஸ்து கவுரவம் மட்டுப்படும். அதனால் பணத்தையும், நேரத்தையும் இழக்க வேண்டியது இருக்கும். வணிகர்கள் பணம் தொடர்பான கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாட்டு முயற்சி தடைபடும். ராசி அதிபதியே வக்ரம் அடைவதால் தொட்டது துலங்காது. மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வியாழக்கிழமை சித்தர்கள் ஜீவ சமாதியில் அன்னதானம் வழங்கவும்.

    Next Story
    ×