என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

உடலுக்கு ஆற்றல் தரும் விதைகளின் மருத்துவ பயன்கள்
- நம் அன்றாட உணவில் நாம் பெரும் அளவில் காய்கள், கீரைகள், பழங்களையே உபயோகப்படுத்துகின்றோம்.
- மாதுளை விதை, தாமரை விதை, தர்பூசணி விதை, சப்ஜா விதை, பப்பாளி விதை போன்றவையும் மருத்துவ குணம் உள்ளவை.
நம் அன்றாட உணவில் நாம் பெரும் அளவில் காய்கள், கீரைகள், பழங்களையே உபயோகப்படுத்துகின்றோம். விதைகளை நம் உணவில் சேர்க்கும் அளவு மிகவும் குறைவே. ஆனால் ஒரு தாவரம் முளைப்பதற்கு தேவையான அனைத்து வகை ஊட்டச்சத்துக்களும் விதைகளிலேயே சேமிக்கப்படுகின்றன. இந்த சேமிப்பு பொருட்கள் அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவை. பெரும்பாலான விதைகளில் செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், மருத்துவ பயனுடைய குளுக்கோஸைடுகள், கொழுப்பு எண்ணெய், தாவர புரதங்கள் போன்றவை உள்ளன. மேலும் செலினியம், மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம் போன்ற நுண் தாதுக்களும், வைட்டமின் ஈ, வைட்டமின் - எ போன்ற பல வைட்டமின்களும் பெரும்பாலான விதைகளில் காணப்படுகின்றன. இத்தகைய மருத்துவ பயனுடைய விதைகளின் முக்கியமான மருத்துவ குணங்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம் .
1.சூரிய காந்தி விதை
இவ்விதைகளில் உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி 6, வைட்டமின் - சி, வைட்டமின் - ஈ, வைட்டமின் - பி, கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம் போன்ற நுண் தாதுக்களும் உள்ளன. இதனை அளவுடன் எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மை தரும். பெரும்பாலும் 30 கிராமிற்குள் எடுத்துக் கொள்வது சிறப்பு. இவ்விதைகள் இரத்தத்தின் கொலஸ்டிரால் அளவை கட்டுப்படுத்துகின்றன. நரம்புகளுக்கு வன்மை அளிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்றன. சருமத்திற்கு பளபளப்பை அளிக்கின்றன.
2.எள் விதை
இதில் கால்சியம், வைட்டமின் - பி, வைட்டமின் - ஈ, இரும்புச் சத்து, செஸமின், செஸமோலின், பைட்டோஸ்டீரால் ஆகிய வேதிப்பொருள்களும், லினோலியிக் மற்றும் ஒலியிக் அமிலங்களும் உள்ளன.
எள்விதை எலும்புகளுக்கு வன்மை தருகிறது. உடலின் கொலஸ்டீரால் அளவை கட்டுப்படுத்தி இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. உடலில் ஏற்படும் காயங்களை விரைவில் குணமாக்குகிறது. கண்ணுக்கு குளிர்ச்சியை தருகிறது. இவ்விதையை தண்ணீரில் ஊற வைத்து அருந்த தடைப்பட்ட மாதவிடாயை சீர் செய்கிறது.
மேலும் பனை வெல்லத்துடன் சேர்த்து அருந்தும் போது உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் இரும்புச்சத்து முழுமையாக கிடைக்கிறது.
3.பூசணி விதை
பூசணியில் மஞ்சள், வெண்மை பெரும்பாலும் கிடைக்கின்றன. இவை இரண்டின் விதைகளும் ஏறத்தாழ ஓரே மாதிரியான மருத்துவ கொண்டுள்ளன. இதில் வைட்டமின் - ஈ, புரதம், நார்ச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம் போன்றவை உள்ளன.
இவ்விதையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைக்கசிவை குறைக்கும். இவ்விதை சிறுநீரை பெருக்கும் தன்மை உடையது. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் இதனை அளவுடன் மருத்துவ ஆலோசனையின் கீழ் உண்பது சிறந்தது.
4.வெள்ளரி விதை
இதில் வைட்டமின் - சி, வைட்டமின் - ஏ, கால்சியம், சோடியம், மாங்கனீசு, ஜிங்க் போன்ற பல நுண்தனிமங்கள் உள்ளன. வெள்ளரி விதை உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. சருமத்தின் ஈரத்தன்மையை பாதுகாக்கிறது. சிறுநீர் எரிச்சலை நீக்கும் தன்மை உடையது. நமது சித்த மருத்துவத்தில் கல்லடைப்பிற்கான மருந்துகளில் இவ்விதை சேருகிறது.
5.அலிசி விதை
இதில் லினோலியக் அமிலம், லினோலெனிக் அமிலம், வைட்டமின் - எ, அமிலம், வைட்டமின் - சி, வைட்டமின் - ஈ, பொட்டாசியம், இரும்பு, ஜிங்க், மெக்னீசியம் போன்ற தனிமங்களும் உள்ளன. மேலும் இதில் இருக்கக் கூடிய நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்குகிறது.
இதன் கொழுப்பு அமிலங்கள் இருதயத்தை பாதுகாக்கின்றன.
இதனை தண்ணீரில் ஊற வைத்து அருந்த சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்றவை நீங்கும் என நமது சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.
நந்தினி
6.ஆளி விதை
சிலர் ஆளி விதை மற்றும் அலிசி விதை இரண்டும் ஒன்று நினைக்கின்றனர். இவை இரண்டும் வெவ்வேறான தாவரங்களில் இருந்து பெறப்படுகின்றன. இரு விதைகளும் வெவ்வேறானவை.
இதில் நார்ச்சத்துடன், வைட்டமின் - ஏ, வைட்டமின் - ஈ, வைட்டமின் - சி, இரும்புச் சத்து போன்றவை உள்ளன. இரத்தசோகை உடையோர்க்கு இவ்விதை ஒரு நன்மருந்தாகும். இவ்விதையின் சூரணத்தை சர்க்கரையுடன் சேர்த்து அருந்த அசீரணம், சீதபேதி தீரும். கர்ப்ப காலத்தின் ஆரம்ப நிலைகளில் இதனை தவிர்ப்பது நலம்.
7.கருஞ்சீரகம்
இதில் தைமோகுயினோன், வைட்டமின்-எ, வைட்டமின்-சி, வைட்டமின்-ஈ. பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன. இதில் தைமோகுயினோன் "தன்னுடல் எதிர்ப்பு நோயில்" (ஆட்டோ இம்யூன் டீஸீஸஸ்) ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
இதனை வெந்நீர் விட்டரைத்து தலைவலி, மூட்டு வீக்கத்திற்கு வெளிப்புறமாக பூசலாம். மேலும் நல்லெண்ணையில் கலந்து கரப்பான் போன்ற தோல் நோய்களுக்குப் பூசலாம்.
8.முருங்கை விதை
இதில் ஒலியிக் அமிலம், கால்சியம், ஜிங்க், செலினியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் - சி, வைட்டமின் பி காம்பளக்ஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை உள்ளன.
இவை எலும்புக்கு வன்மை தரக்கூடியவை. தாதுவிருத்திக்காக செய்யப்படும் பல மருந்துகளில் இவ்விதைகள் பயன்படுகின்றன. இதனை பொடி செய்து பாலுடன் கலந்து அருந்தி வர உடலுக்கு வன்மை பயக்கும்.
9.சியா விதைகள்
இதில் ஆல்பா லினோலியிக் ஆசிட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், தையமின், நியாசின் போன்றவை உள்ளன. இவ்விதைகள் குருதி அழுத்தத்ததை கட்டுப்படுத்துகின்றன. இருதய நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. உடல் எடை குறைப்பில் சிறிதளவு பங்களிக்கின்றன.
10.கழற்சி விதை
இதில் மிர்ஸ்டிக் ஆசிட், ஸ்டியரிக் ஆசிட், பால்மிடிக் ஆசிட் போன்ற பல உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவ்விதை அண்ட வாதம், முறையற்ற மாதவிடாய் போன்ற பல நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுகிறது. மருத்துவரின் ஆலோசனையின் படி தகுந்த அளவில் எடுப்பது நலம் .
11. தேற்றான் விதை
இதில் புருசின், சைட்டோஸ்டீரால் , ஸ்டிக்மா ஸ்டீரால், நோவா கெயின் போன்ற வேதியியல் கூறுகள் உள்ளன. இவ்விதையை பொடித்து கலங்கிய நீரிலிட அந்நீரானது தெளிவடையும். உடலுக்கு குளிர்ச்சி தரும். வயிற்றுக்கடுப்பு, வெள்ளைப்படுதல் , சிறுநீர் எரிச்சலைத் தணிக்கும். இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
பெரும்பாலும் அனைத்து விதைகளிளும் வைட்டமின்-ஈ, ஒலியிக் அமிலம், லினோலியிக் அமிலம், செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை ஆண், பெண் இருபாலருக்கும் இனப்பெருக்க ஹார்மோன்களில் செயல்பாட்டினை சீர்செய்து மகப்பேறு அமைவதற்கு வழிவகை செய்கின்றன. தற்போது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சீட் சைக்ளிங் எனப்படும் விதை சுழற்சிமுறை இயற்கை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
மாதவிடாய் சுழற்சியின் 1-14 நாட்கள் வரை ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோனும், 15-28 நாட்கள் வரை புரோஜெஸ்டிரான் எனும் ஹார்மோனும் முக்கிய பங்குவகிக்கின்றன. விதை சுழற்சியில் 4 விதைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மாதவிடாய் சுழற்சியின் முதல் 15 நாட்களில் 1-2 டேபிள் ஸ்பூன் அளவு அலிசி விதை மற்றும் பூசணி விதைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இவ்விரு விதைகளில் உள்ள ஜிங்க், ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள், லிக்னன்ஸ், பைட்டோ ஈஸ்ட்ரோஜென் போன்றவை ஈஸ்ட்ரோஜென் அளவை சரியாக வைக்கின்றன. மேலும் கருமுட்டையின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. மாதவிடாய் சுழற்சியின் 15-28 நாட்கள் வரை 1-2 டேபிள் ஸ்பூன் அளவு எள் விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைக்க பரிந்துரைக்கப்படுகின்றன. சூரிய காந்தி விதைகள் இவ்விதைகளில் உள்ள வைட்டமின் - ஈ, சரியான அளவில் progesterone-ஐ சுரப்பிக்கச் செய்கிறது கருமுட்டையை கருப்பையில் பதிய வைத்தல், கருவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.
ஆனால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி உடையவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி இவ்விதை சுழற்சி முறையை தொடங்குவது நல்லது. மேலும் நாம் மேலே குறிப்பிட்டுள்ள பல விதைகளில் வைட்டமின்-சி, வைட்டமின்-ஈ, ஜிங்க், செலினியம் போன்றவை உள்ளன. இவை விந்தணு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றன. பூசணி விதை, கருஞ்சீரக விதை, எள் விதை, அலிசி விதை போன்றவை இதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
நாம் மேலே குறிப்பிட்டவை தவிர மாதுளை விதை, தாமரை விதை, தர்பூசணி விதை, சப்ஜா விதை, பப்பாளி விதை போன்றவையும் மருத்துவ குணம் உள்ளவை. எனவே இத்தகைய மருத்துவ பயனுடைய விதைகளை நம் அன்றாட உணவில் அளவுடன் சேர்த்துக்கொள்வதன் மூலம் நோயற்ற வாழ்கையை அமைத்துக்கொள்ள பேருதவியாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.






