என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கலைஞரைக் காதலியாக்கி கண்ணதாசன் எழுதிய பிறந்த நாள் கவிதை
    X

    கலைஞரைக் காதலியாக்கி கண்ணதாசன் எழுதிய பிறந்த நாள் கவிதை

    • அன்று கலைஞரைப் பற்றி கண்ணதாசன் வழங்கிய கவிதையைத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.
    • ஏறக்குறைய பத்தாண்டு கால இடைவெளிக்கு பின்னர் இருவர் நெஞ்சிலும் நட்புமலர் பூத்திருக்கிறது.

    கலைஞரும் கண்ணதாசனும் இதயத்தால் இணைந்த இனிய நண்பர்கள் என்பதை இந்த நாடே நன்கறியும். இருவரும் சமகாலத்தில் திரைத்துறைக்கு வந்து வசனத்தில் கலைஞரும், பாடல்களில் கவிஞரும் மாபெரும் வெற்றி பெற்று திரைஉலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள்.

    சேலம் மார்டன் தியேட்டரில் இருவருமே ஒன்றாய் பணியாற்றிய காலங்களைப் பற்றி இருவருமே பழைய நினைவுகளை பல நேரங்களில் பேசியும், எழுதியும் பதிவு செய்துள்ளார்கள். மிகவும் நெருக்கமானவர்களை, "வாய்யா போய்யா" என்று வாஞ்சையுடன் அழைப்பது கலைஞரின் இயல்பு. அதே போன்றுதான் கண்ணதாசனும்.... இருவருமே வாய்யா... போய்யா.... என்றுதான் பேசிக் கொள்வார்கள்.

    இவர்கள் இருவரின் நட்புக்கு வித்திட்டதே எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணிதான்... கருணாநிதி என்று ஒருவர் வந்திருக்கிறார். மிகச்சிறப்பாக வசனம் எழுதுகிறார் என்று கருணாநிதி வசனம் எழுதிய "அபிமன்யூ" படம் பார்க்க கண்ணதாசனை அழைத்துக் கொண்டு போன வரும் சக்கரபாணிதான்.. பின்னர் காரில் கலைஞரை அறிமுகப்படுத்தி வைத்தவரும் சக்கரபாணிதான்.

    "ஒடிந்த வாளானாலும் ஒருவாள் கொடுங்கள்

    அண்ணன் செய்த முடிவை கண்ணன் மாற்றுவதற்கில்லை

    அர்ச்சுணன் துளைக்க முடியாத சக்கரவியூகத்தை

    துளைத்து விட்டானென்றால், அங்கேதான்

    இருக்கிறது ஆச்சாரியாரின் விபீஷண வேலை"

    என்று கருணாநிதியின் வசனத்தை வெகுவாகப் பாராட்டி, கட்டித் தழுவினார் கண்ணதாசன். அன்றிலிருந்து இருவருமே மிக மிக நெருக்கமான நண்பர்களாகவே ஆகி விட்டனர்.

    எங்கள் இருவருடைய சந்திப்பு காதலன்-காதலி சந்திப்பு போல் உணர்ச்சிகரமாக இருந்தது என்று கண்ணதாசன் தனது "வனவாசம்" நூலிலே குறிப்பிட்டுள்ளார்.

    1949-ம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையிலே, சென்னை ராபின்சன் பூங்காவிலே, தி.மு.க. ஆரம்பிக்கப்பட்ட போது நீயும் என்னோடு வாய்யா என்று கண்ணதாசனை அழைத்துக் கொண்டு போனார் கலைஞர். பொள்ளாச்சியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக் கூட்டத்திற்கும் கண்ணதாசனை அழைத்துக் கொண்டு போனவரும் கலைஞரே. கண்ணதாசனின் நெற்றியிலே இருந்த விபூதியை துடைக்கச் சொல்லி இப்போது கவிஞர் கண்ணதாசன் பேசுவார் என்று ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்த வரும் கலைஞரே... கவிஞர் என்ற அடைமொழியை வழங்கியவரும் கலைஞரே.

    காரைக்குடியிலே 1950-ல் நடை பெற்ற கண்ணதாசன் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசிய வரும் கலைஞரே. இப்படி நகமும் சதையுமாக இருந்த இருவரின் நட்பிலே விரிசல் ஏற்பட்டு கழகத்தை விட்டு வெளியேறி, தமிழ்த் தேசிய கட்சியை ஈ.வெ.கி. சம்பத் அவர்களோடு இணைந்து ஆரம்பித்து, வெகுதூரம் விலகி வந்து விட்டார் கண்ணதாசன். பின்னர் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையை ஏற்று 1964-ல் காங்கிரசிலே இணைந்து தீவிரமாகப் பணியாற்றி விட்டு 1971-ல் இந்திரா காங்கிரசிலே இணைந்து விட்டார் கண்ணதாசன். படிப்படியாக அரசியலில் தனது கடின உழைப்பாலும், மதியூகத்தாலும் முன்னேறி, தமிழகத்தின் முதல்-அமைச்சராகவே ஆகி விட்டார் கலைஞர். அப்போது தி.மு.க.வுக்கும் இந்திரா காங்கிரசுக்கும் கூட்டணி ஏற்பட்டதில் மீண்டும் கலைஞரும் கவிஞரும் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள். விரிசல் ஏற்பட்டிருந்த அவர்களின் நட்பு மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தது.

    அப்போது முதல்-அமைச்சராக இருந்த கலைஞரின் பிறந்தநாள் விழாவுக்கு கண்ணதாசன் தலைமையிலே தான் சேலத்திலும், சென்னையிலும் கவியரங்கம் நடைபெற்றது. அன்று கலைஞரைப் பற்றி கண்ணதாசன் வழங்கிய கவிதையைத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

    ஏறக்குறைய பத்தாண்டு கால இடைவெளிக்கு பின்னர் இருவர் நெஞ்சிலும் நட்புமலர் பூத்திருக்கிறது. "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ" என்பது பொதுவான பொன்மொழி. பழைய நினைவுகள் வந்து அலை மோதும்போது நெஞ்சம் படபடக்கத்தான் செய்யும். கண்ணதாசனையும் அது விட்டு வைக்க வில்லை. கலைஞர் மீது கொண்டிருந்த அப்பழுக்கற்ற அந்த அற்புதமான காதலை கவிஞரின் வார்த்தைகளில் காண்போம்.

    "சந்தனக் காட்டி னுள்ளே

    சதிராடும் தென்றல் போலே

    மந்திர நடையும் கொஞ்சும்

    மயக்குறு மொழியும் கொண்டு

    செந்தமிழ் எழுந்தாற் போல

    சேயிழை ஒருத்தி வந்தாள்" என்று கலைஞரைச் சந்தனத் தென்றலாகவும், அவருடைய வசனத்தை மயக்குறு மொழியாகவும், செந்தமிழே எழுந்தது போல் தனது காதலியாக கலைஞர் தோன்றினார் என்கிறார் கண்ணதாசன்.

    எனக்குமோர் காதலுண்டு

    இதயத்தின் உள்ளே தூங்கும்

    வனக்கிளி அவளை இன்னும்

    மறக்கவே முடியவில்லை

    நினைக்கையில் இனிக்கும் அந்த

    நெய்வாசக் குழலி யின்று

    எனக்கொரு கவிதையானாள்

    இதுதான் நான் கண்டன இன்பம்-என்று நினைக்கும் போதே இனிக்கும் கலைஞர் என்னும் அந்த வனக்கிளி எனக்கொரு கவிதை யாகவே காட்சியளிக்கிறார். அதுதான் நான் பெற்ற இன்பம் என்கிறார் கண்ணதாசன்.

    அவருடைய பெயர் கருணை நிதியம் என்றும் ஊர் திருவாரூர் என்றும் வசனம் எழுதிய பராசக்தி, மந்திரிகுமாரி படங்களை எல்லாம் கவிதையில் வருமாறு, அற்புதமாக அந்தக் கவிதையை வடித்திருக்கிறார் கண்ணதாசன்.

    கன்னியின் பேரைக் கேட்டேன்

    "கருணையின் நிதியம்" என்றாள்

    மன்னிய உறவைக் கேட்டேன்

    "மந்திர குமாரி" என்றாள்

    பன்னிநான் கேட்டபோது

    "பராசக்தி" வடிவமென்றாள்

    சென்னைதான் ஊரா என்றேன்

    திருவாரூர் நகர மென்றாள்...

    இப்படி எல்லாம் பொருந்தி வருமாறு கவிதை எழுதும் திறமை, கண்ணதாசனுக்கு மட்டுமே உண்டு. சமயமறிந்து செயலாற்றுகிற தந்திரமும், சாமர்த்தியமும் மின்னலாய் உதிர்க்கின்ற புன்னகையும் கலைஞருக்கே உரித்தானது. அந்த உத்திகளில் ஒன்று கூட எனக்கு வராது... மந்திரம் போட்டது போல என் மனதையே சிறையாக்கி குடியிருக்கும் சிந்தைக்கினிய காதலியாய் கலைஞரை வர்ணிக்கிறார் கண்ணதாசன்.

    தந்திரம் அறிவாள்-மெல்லச்

    சாகசம் புரிவாள்... மின்னும்

    அந்திவான் மின்னல் போல

    அடிக்கடி சிரிப்பாள்... நானும்

    பந்தயம் போட்டுப் பார்த்து

    பலமுறை தோற்றேன்! என்ன

    மந்திரம் போட்டா ளோஎன்

    மனதையே சிறையாய்க் கொண்டாள்..

    என்று கலைஞரின் திறமையையும், தனது இயலாமையால் தோற்றுப் போனதையும் கவிதையில் கொண்டு வந்து நிறுத்துகிறார் கண்ணதாசன்.

    ஏதோ ஒரு காரணத்துக்காக ஊடல் கொண்டு பிரிந்தவர்கள்... சந்தர்ப்பவசத்தால் இணையும் போது கிடைக்கிற சுகமே அலாதியானது என்பதை....

    ஊடலில் தோற்றார் தாமே

    உறவினில் வெல்வாரென்றும்

    கூடலை ரசிப்பா ரென்றும்

    கோமகன் உரைத்தான், அன்று

    ஊடலில் தோற்றேன், வந்த

    உறவிலே மகிழ்ந்தேன்; இன்று

    கூடலில் சுகம் காண்கின்றேன்

    குறைகாணக் கண்கள் இல்லை...

    என்ற வரிகளில் நாசூக்காக கண்டசுகத்தை வெளிப்படுத்துகிறார் கண்ணதாசன்.

    காதலில் மயங்கிக் கிடக்கும் போது காதலர்களின், நடை, உடை, பாவனை எப்படியெல்லாம் இருக்கும்? பார்த்தும் பார்க்காதது போல ஒருவரை ஒருவர் ஏமாற்றுகிற நாடகமும் அங்கே நடக்கும். வெளித்தோற்றத்தில் வேதனை கொண்டவர்களைப் போல பாவனை காட்டி விட்டு உள்ளுக்குள்ளே காதலர்கள் இன்புறுகிற காட்சியும் நடக்கும் என்று இந்த சந்தர்ப்பத்தில் காதலர்களின் பொதுவான இயல்புகளை நன்றாகவே படம் பிடித்துக் காட்டுகிறார் கண்ணதாசன்.

    காதலன் தழுவும் போது

    கண்புதைத் திருப்பாள் கொண்ட

    காதலன் காணா னாகில்

    கண்பதித் திருப்பாள்... இன்ப

    வேதனையாலே கொஞ்சம்

    விம்முவாள் துடிப்பாள்... எல்லாச்

    சோதனை முடியும் மட்டும்

    சுகமாக ரசிப்பாளன்றோ...?

    நானொரு முத்தம் தந்தால்

    நங்கை தன்இதழ் களாலே

    தானொரு முத்தம் தந்து

    தலைகோதி வேர்வை போகப்

    பூநறுங் காற்று வீசிப்

    புன்னகை புரிவாள்; இன்னும்

    ஏனிந்தப் பார்வை என்று

    எதனையோ கேட்டு வைப்பாள்...

    கலைஞரை காதலியாக்கிப் பாடுகிற சாக்கில், காதலர்களின் பரிபாஷைகளை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் வேலைகளை எல்லாம் புட்டுப் புட்டு வைக்கிறார் கண்ணதாசன்.

    காதலன்.. காதலியை சாதாரணமாக இயல்பாக உற்று நோக்கினாலும்... உன் பார்வையில் ஏதோ உட்பொருள் ஒன்று தெரிகிறதே என்று காதலி சண்டைக்குப் போவாளாம்... அது என்ன? இது என்ன? என்றெல்லாம் கேட்டு வைப்பாள் என்கிறார் கண்ணதாசன்.

    நீயும் என்னோடு காட்டுக்கு வந்தால், மென்மையான உனது பாதங்களை பருக்கை கற்கள் பதம்பார்த்து விடுமே... என்று சீதையிடம் ராமன் சொன்ன போது... "நின் பிரிவினும் சுடுமோ பெருங் காடு" என்று கம்பன் கவிதையை நினைவிலே நிறுத்தி உதாரணம் காட்டுகிறார் கண்ணதாசன். அது மட்டுமல்ல... காதலனைப் பிரிந்து வந்த காதலி.. பிரிவின் துயரைத் தாங்காமல் காதலன் இருக்கும் திசையை நோக்கி... தன்னிடமிருந்த கிளி ஒன்றைப் பறக்க விட்டு... அதைப் பிடிப்பது போல் பாசாங்கு செய்து.... ஏ... கிளியே... ஓடாதே... ஓடாதே என்று துரத்துவது போல காதலன் இருக்கு மிடம் நோக்கிச் செல்லுகிற காட்சியை கம்பன் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறான். இதோ அந்த கவிதை...

    யாழ்ஒக்கும் சொல் பொன் அணையாள்,

    ஓர் இகல் மன்னன்

    தாழத்தாழாள், தாழ்ந்த மனத்தாள், தவிர்க்கின்றாள்...

    ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள்,

    அவன் நிற்கும்

    சூழற்கே தன்கிள்ளையை ஏவித் தொடர்வாளும் அவளே, என்ற பாட்டை எல்லாம் நெஞ்சிலே நிறுத்தித்தான் கீழ்க்காணும் கவிதையை வடித்திருக்கிறார் கண்ண தாசன். அத்தோடு நில்லாமல் குறளையும் துணைக்கு அழைத்து கொள்கிறார்.

    "ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும்

    கூடலில் காணப்படும்" என்று குறளில் வருவது போல் ஊடல் அமர்க்களத்தில் நான்தான் தோற்றேன். அதனால் கலைஞர் என்னும் காதலியை வென்றேன். இந்த வெற்றியின் சுகத்தை இப்போது அனுபவிக்கின் றேன் என்கிறார் கண்ணதாசன்...

    "ஊடுதல் காமத்திற்கு இன்பம், அதற்கின்பம்

    கூடி முயங்கப் பெறின்"- என்னும்

    குறளுக்கேற்ப கலைஞர் என்னும் காதலியோடு ஊடல் நீங்க இறுகத்தழுவி நான்காணும் உச்சகட்ட இன்பத்தை என்னால் உரைக்க இயலாது. ஆகவே உங்களால் காணவும் இயலாத அளவுக்கு திரைப்போட்டு விட்டேன் என்று நினைத்து நினைத்து இறும்பூது எய்துமாறு இந்த கவிதையை வடித்தி ருக்கிறார் கண்ணதாசன்.

    "காதலி இணக்கம் பற்றிக்

    கம்பனும், பின்னால் அங்கே

    பேதுறும் மயக்கம் பற்றிப்

    பெருமறைக் குறளும் சொன்ன

    நீதிகள் நெறிகள் யாவும்

    நீங்காது கொண்டாள் எந்தன் காதலி

    என்கிறார் கண்ணதாசன். அத்தோடு விட வில்லை. இன்று காலையில் அந்த கலைஞர் என்னும் காதலி வரவில்லை. அதனால் நான் வருந்தவில்லை.

    மாலையில் வருவாள்-வண்ண

    மாலைகள் பெறுவாள்-இன்பச்

    சோலையில் என்னைக் கொண்டு

    சுவையுலாக் கொள்வாள்...

    மாலைபோல் நானும் அன்னாள்

    மார்பிலே நடனம் செய்வேன்...

    தனிமையில் நாங்கள் ஒன்றாய்த்

    தழுவுதல்... அரவணைத்தல்

    இவையெல்லாம் நீங்கள் காண

    அனுமதி இல்லை.... என்றே

    அவைதனில் திரையைப் போட்டேன்

    என்று கலைஞர் மீது கொண்ட காதலை பளிச்சென்று உரைக்கிறார் கண்ணதாசன்.

    கண்ணதாசன் பாடிய அற்புதமான இந்த கவிதை கேட்டு பழைய உரசல்கள் எல்லாம் பறந்து போயின... புனர் ஜென்மம் எடுத்தது போல் எல்லாமே மறந்து போயின. அவையோர் அனைவரும் ஆரவாரித்து மகிழ்ந்தனர். பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து இருந்ததால் தொண்டர்களின் அன்புப்பிடிக்குள்ளே இருந்து கலைஞரால் அன்று காலை நடைபெற்ற கவியரங்கிற்கு வர இயலவில்லை. அதைத்தான் இன்று காலையில் அவளைக் காணவில்லை என்று நயம்பட உரைத்துள்ளார் கண்ணதாசன்....

    அடுத்த வாரம் சேலத்தில் நடைபெற்ற கவியரங்கக் கவிதை பற்றிப் பார்ப்போம்.

    Next Story
    ×