search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  திரைக் கடல் பயணம்- யார் கையில் தமிழ்த் திரையுலகம்?
  X

  திரைக் கடல் பயணம்- யார் கையில் தமிழ்த் திரையுலகம்?

  • ஒரு படம் இயக்கிய இயக்குநர்கள் முதல் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இயக்குநர்கள்வரை அவர்கள் அடங்குவர்.
  • ஒரேயொரு படம் என்றாலும் அதனை மறக்க முடியாத படைப்பாக ஆக்கி அளித்தவர்களும் உள்ளனர்.

  வெளியில் இருந்து பார்க்கையில் நமக்குத் திரைப்படங்கள் மீதும் திரைப்படக் கலைஞர்கள் மீதும் தோன்றுகின்ற வியப்பு அடங்கவில்லைதான். திரைப்படமாவது நாடகமே நடிப்பே என்றாலும் அதனைக் காட்சிப்படுத்துகின்ற பாங்கில் மயங்கிவிடுகிறோம். வெளிப்புறத்தினர்க்குத் திரைப்படம் வியப்பாகத் தோன்றுவது இயல்பு. திரைத்துறைக்கு உள்ளேயே இருப்பவர்களின் வியப்பு யார்மீது இருக்கும்? இயக்குநர் மீதே என்று உறுதியாகச் சொல்லலாம். அவரிடமுள்ள காட்சிப்படுத்தும் திறன்தான் ஒரு திரைப்படத்தினைத் தனித்தன்மையுடையதாக, கண்ணிமைக்காமல் காணத்தக்கதாக மாற்றுகிறது.

  நாற்பதாண்டுகளாகத் திரைத்துறையில் இருக்கும் முதலாளி ஒருவர் "எனக்குப் படமெடுப்பதில் உள்ள அடிப்படை எதுவுமே தெரியாது. அது நம்ம மூளைக்கு எட்டல. அது தெரிந்தால் நானே இயக்குநர் ஆகியிருப்பேனே." என்கிறார். திரைப்படம் என்னும் காட்சிக்கலை ஓர் இயக்குநரின் கைவண்ணம்.

  திரைப்படம் என்னும் கப்பலுக்குத் தலைவர் இயக்குநரே என்பார்கள். அவர் வேண்டுகின்ற வேலைக்குப் பிற கலைஞர்கள் தம் பங்களிப்பினை ஆற்ற வேண்டும். இப்படித்தான் ஒரு திரைப்படம் உருவாகிறது. தமிழ்த் திரையுலகில் வெளிவந்த சில பல ஆயிரம் படங்களில் பங்களித்த இயக்குநர்கள் மூவாயிரத்தினர் முதல் நான்காயிரத்தினர்வரை இருப்பார்கள். இது என் கணிப்புத்தான். ஒரு படம் இயக்கிய இயக்குநர்கள் முதல் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இயக்குநர்கள்வரை அவர்கள் அடங்குவர்.

  ஒரு படத்தை இயக்கிய பின்னர்க் காணாமல் போனவர்கள் என்று ஆயிரக்கணக்கில் இருப்பர். பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்கள் எனச் சில நூறு இயக்குநர்கள் தேறுவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்கள்தாம் பெரிய சுற்று வந்தவர்கள். அவர்களே ஓர் இயக்குநராகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஒரேயொரு படம் என்றாலும் அதனை மறக்க முடியாத படைப்பாக ஆக்கி அளித்தவர்களும் உள்ளனர். இயக்குநர் பாலசந்தரின் நெடுநாள் உதவியாளர் அனந்து இயக்கிய 'சிகரம்' என்ற படம் அத்தகையது.

  தமிழ்த் திரைப்படத்துறை தொடக்கத்தில் முதலாளிகளின் கைகளில்தான் இருந்தது. ஒரு படத்தை எடுத்துவிட வேண்டும் என்று எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்னர்த் தவித்து அலைந்தவர்கள் முதலாளிகள்தாம். மும்பைக்கும் கொல்கத்தாவிற்கும் சென்று படங்களை எப்படி உருவாக்கி வெளியிடுகிறார்கள் என்று கற்று வந்து இங்கே செயல்படுத்தினார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளி சுந்தரம் வெளிநாட்டுக் கல்வி கற்றவர். அவருடைய கவனம் அங்கிருந்த காலத்திலேயே அந்நாட்டுத் திரைத்துறைமேல் ஊன்றியிருந்தது. சுந்தரனாரும் மெய்யப்பனாரும் ஜூபிடர் பிக்சர்சாரும் ஒரு திரைப்படத்தினை உருவாக்குவதற்கு படப்பிடிப்புக் கூடமே முதலீடு என்பதனை உணர்ந்திருந்தனர். இருண்ட கூடத்தினுள் வேண்டியவாறு வெளிச்சத்தைப் பாய்ச்சித்தான் படத்தினை எடுக்க முடியும். அதற்குப் பெரிய பெரிய கூடங்கள் வேண்டும்.

  எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முன்னர்க் கூரைவீடுகளும் ஓட்டு வீடுகளுமே கட்டிடங்களாக விளங்கின. அரசுக் கட்டிடங்களும் பொது நிலையங்களும்தாம் உயரமான கூரைகளோடு இருந்தன. அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றிய சில பல தொழிற்சாலைக் கட்டிடங்களைக் கூறலாம். அப்படிப்பட்ட காலகாலத்தில் திரைத்தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற வேட்கையோடு பெருங்கட்டிட வளாகங்களை நம் முதல் தலைமுறைத் திரைப்பட முதலாளிகளே எழுப்பிக் காட்டினர். இத்தொழில் கைவிடாது என்று நம்பி அங்குமிங்கும் துணிந்து கடன்வாங்கினர். அம்முதலாளிகளின் கனவுதான் இங்கே படத்தொழில் தோன்றிச் சிறக்கப் பதியமிட்டது. இன்றைக்குத்தான் படமெடுக்க வேண்டும் என்ற வேட்கையில் ஒரு கதாசிரியரோ இயக்குநரோ அலைகின்றார்களே தவிர, அன்றைக்கு அவ்வாறு அலைந்தவர்கள் பட முதலாளிகள்.

  அந்தப் படத்தினை எடுப்பதற்கு ஓர் இயக்குநர் தேவைப்பட்டார். கதை தேவைப்பட்டது. வெளிநாடுகட்குச் சென்று ஒளிப்பதிவு நுட்பங்களைக் கற்றுக்கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் தேவைப்பட்டார். நடிகர்கள், இசையமைப்பாளர்கள், படத்தொகுப்பாளர்கள், அரங்க வடிவமைப்பாளர்கள், ஒலி அமைப்பினர் எனப் பலரும் தேவைப்பட்டார்கள். முற்காலத்தில் ஓர் இயக்குநரே தேர்ந்த படத்தொகுப்பாளராக இருப்பார். பழைய திரைப்படங்களின் இயக்குநர்கள் பலரும் தேர்ந்த படத்தொகுப்பாளர்களே. படத்தொகுப்பாளராகத் திரைப்படம் கற்று இயக்கத்திற்கு வந்தவர்கள்தாம் எம். ஏ. திருமுகமும், எஸ். பி. முத்துராமனும். அந்தத் திறமைதான் அவர்களை எண்ணிலடங்காத படங்களை இயக்க வைத்தது.

  உலகத் திரைப்பட இயக்குநர்கள் வரிசையில் செம்மாந்து அமர்ந்திருக்கும் அகிரா குரோசாவா கூறுகிறார் : "நான் என்னுடைய படத்தொகுப்பு மேசைக்கு வேண்டிய படச்சுருள்களை ஆக்கி எடுத்து வருவதற்காகவே படம்பிடிக்கச் செல்கிறேன்." படத்தொகுப்பின் இன்றியமையாமையைச் சொல்வதற்கு இதற்கு மேலும் சொற்கள் இல்லை.

  எல்லிஸ் ஆர் டங்கன் என்கின்ற அமெரிக்கர் இங்கே பதின்மூன்று படங்களை இயக்கி இருக்கிறார். பட முதலாளிகள் தாங்கள் உருவாக்க விரும்பிய தமிழ்ப் படங்களை எடுத்துத் தரச்சொல்லி அவரைப் பணிக்கு அமர்த்திக்கொண்டார்கள். பிறகுதான் அவர்களிடமிருந்து படமாக்கு முறைகளைக் கற்றுக்கொண்டு நம்மவர்கள் இயக்குநர்களாகத் தொடங்கினர். அவர்களுக்கு உறுதுணையாக விளங்கியவர்கள் ஒளிப்பதிவாளர்கள். அவர்களும் பெரிய மேதைகள். இப்படி முதலாளிகளின் கைகளில் பிள்ளைக் காலத்தைக் கழித்த தமிழ்த் திரைத்துறை இயக்குநர்களின் கைகளுக்குப் பிறகுதான் வந்து சேர்கிறது.

  தமிழ்த் திரைப்படங்கள் அரசர் கதைகளோடு வந்தவரைக்கும் அவற்றைப் படமாக்கும் முறைகளில் பெரிதாய் வேறுபாடில்லை. நிகழ்காலக் கதைகளோடு திரைப்படங்கள் உருவானபோது அங்கே இயக்குநரின் கைவரிசை வந்து சேர்ந்தது. அத்தகைய இயக்குநர்களில் ஒருவராக கே. சுப்ரமணியத்தைச் சொல்லலாம். அவரே கல்கியின் 'தியாக பூமி' என்னும் கதையைத் திரைப்படமாக்கியவர்.

  நிகழ்காலத்தைக் காட்டும் சமூகக் கதைகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கின்ற தயக்கம் தொடக்கத்தில் இருந்தது. அதனை உடைத்தெறிந்த படம் 'பராசக்தி.' இரண்டாம் உலகப்போர்ச் சூழல், கடல்கடந்து பிழைக்கச் சென்றவர்கள் அகதிகளாகத் திரும்பி வருதல், தாய்த்திருநாட்டின் ஏழ்மை என்று அப்படம் துணிந்து பேசியது. அதன் பிறகு பட முதலாளிகளுக்குத் திறமையான இயக்குநர்களும் கதாசிரியர்களும் தேவைப்பட்டார்கள்.

  பட முதலாளிகளாக அவர்கள் பேரரங்குகளை அமைத்துத் தரலாம். பெரும் பொருட்செலவு செய்யலாம். படப்பிடிப்பு நிலையங்களில் வேண்டிய மேம்பாடுகளை நிறுவலாம். தொடக்கக் காலப் படங்களுக்கு அவையே தேவைப்பட்டன. அதனால்தான் திரைப்படங்கள் பெருமுதலாளிகளின் படப்பிடிப்பு நிலையங்களில் இளமையைக் கழித்தன என்றேன். அந்த வளர்ச்சியை உரியவாறு எட்டியதும் திரைப்படம் என்னும் அறிவியல் கலைக்கு மேலும் பல திறமைகள் தேவைப்பட்டன. அப்போதுதான் இயக்குநர்கள் முன்னுக்கு வந்தனர்.

  படமுதலாளிகளிடமிருந்த திரைப்படத் துறையை இயக்குனர் கைக்கு வரச் செய்தவர் என்று ஸ்ரீதரைச் சொல்லலாம். அவருடைய படங்கள் இயக்குநரின் வெளிப்பாட்டுக் களங்களாக விரிந்தன. கல்யாணப் பரிசு என்ற படம் காண்போர் மனத்தைப் பதைபதைக்க வைத்துவிட்டது. அதே காலகட்டத்தில் வெளியான 'நாடோடி மன்னன், உத்தமபுத்திரன்' போன்ற திரைப்படங்கள் வேறு வகையான களிப்பினை மக்களுக்குத் தந்தன. இவையாவும் முதலீடு தாண்டிய கலையுழைப்பால் விளைகின்றன என்று மெய்ப்பித்தன. பிறகு ஸ்ரீதரின் காதல் கண்ணீர்ப் படங்கள் ஒருவழியில் சென்றன. அவருடைய 'காதலிக்க நேரமில்லை' நகைச்சுவை வகைமைக்குப் புதிய முத்தாய்ப்பு.

  பட முதலாளிக்குக் 'காதலிக்க நேரமில்லை' போன்ற ஒரு திரைப்படத்தில் பங்களிக்க என்ன உண்டு ? அங்கேதான் திரைப்படங்கள் இயக்குநரின் ஊடகமாக முழுவளர்ச்சி அடைந்தன. பிறகு கே. எஸ். கோபாலகிருஷ்ணன், பீம்சிங், பாலசந்தர் என்று அந்தக் கொடி பறந்து பாரதிராஜாவிடம் பட்டொளி வீசியது. அவருடைய வருகைக்குப் பின்னர் முழுமையாகவே இயக்குனரின் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டது தமிழ்த்திரை.

  இயக்குநரின் செல்வாக்கோடு திரைப்படங்கள் அடங்கிவிட்டனவா என்றால் அதுவும் இல்லை. இளையராஜாவின் வருகைக்குப் பின்னர்த் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைப்பாளர் என்பவர் ஐம்பது விழுக்காடுவரைக்கும் வேண்டியவரானார். முன்னதாக கே.வி. மகாதேவன், விசுவநாதன் போன்றோர் திரைப்பாடல்களைத் தவிர்க்க முடியாத இனிமைச்சேர்ப்பு ஆக்கியிருந்தனர். பாடல்கள் இல்லாத படங்களைக் கற்பனை செய்யவே இயலாது. இளையராஜாவினால் பின்னணி இசைக்கு மிகப்பெரிய தேவைப்பாடு உருவானது. படத்தினை முன்னே பின்னே எடுத்து வந்தாலும் பாடல்களும் பின்னணி இசையும் காப்பாற்றின. சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்ட படம் இசையினால் மிகப்பெரிய வருவாயைத் தந்தது. எண்பதுகள் முழுவதும் அவருடைய இசையில் வெளியான படங்கள்தாம் நிறைந்திருந்தன. புதிய நாயகர்கள் அவருடைய இசை வலுவினால் சந்தை மதிப்பு பெற்றனர். அவர் ஏற்படுத்திய தாக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் ஏ.ஆர்.ரகுமானையும் கூற முடியும்.

  அகல்திரைப் படங்கள் (சினிமாஸ்கோப்) பொதுவான பிறகு ஒளிப்பதிவாளர்கள் முன்னிலைக்கு வந்தனர். பி.சி.ஸ்ரீராமின் வருகைக்குப் பின்னர் ஒரு ஒளிப்பதிவாளரும் மலைக்க வைக்கலாம் என்பது உறுதிப்பட்டது. முன்னதாகவே வின்சென்ட், பாலுமகேந்திரா, நிவாஸ், அசோக்குமார் போன்ற ஒளிப்பதிவாளர்கள் பலர் தனித்துத் தெரியத் தொடங்கினர். தொண்ணூறுகளுக்குப் பிறகு பெரிய திரையில் கண்களை நிறைக்கும் காட்சிச் சட்டகங்களை ஆக்கித் தர ஒளிப்பதிவாளர்கள் தேவைப்பட்டனர். இன்றைக்கும் திரைப்படத்தின் முதன்மையான ஆக்குநர் ஒளிப்பதிவாளர்கள்தாம். நல்ல ஒளிப்பதிவாளர் வாய்க்கப்பெற்ற இயக்குநர்தாம் எப்போதும் வெற்றி பெற்றிருக்கிறார்.

  திரைப்படங்கள் எப்போதேனும் திரையரங்குகளின் கட்டுப்பாட்டிலோ, சேர்ப்பனையாளர்கள் எனப்படுகின்ற வினியோகஸ்தர்களின் கட்டுப்பாட்டிலோ இருந்ததுபோல் நினைவில்லை. ஆனால் அவர்கள் அதன் வணிகத்தில் இடைநின்றிருக்கிறார்கள். நல்ல படம் என்று தெரிந்துவிட்டால் அதற்குப் பெரிய திறப்பினை ஏற்படுத்தி வரவு காணவே முயன்றிருக்கிறார்கள். ஒரு படம் நன்றாக வந்துவிட்டது என்று தெரிந்தால் அவர்களே அதன் மதிப்பினை ஏற்றுகிறார்கள்.

  வணிகப் பார்வையில் கடந்த இருபதாண்டுகளாகத் தமிழ்த்திரைப்படங்கள் தொலைக்காட்சி நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டன என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அது நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கலாம். வணிக வெற்றியை வைத்தே கலைஞர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கின்றன. கொரோனா தொற்றுக்குப் பிறகு இணையப்பட நிறுவனத்தினர் (ஓ.டி.டி.) ஒரு தரப்பினராக உருவெடுத்துள்ளனர். நிகழ்கால நிலைமைகள் நெரிசல் தணிந்து தமிழ்த் திரைத்துறையில் மீண்டும் கலைஞர்களின் கைகள் ஓங்கும் என்றே நம்புவோம்.

  தொடர்புக்கு:-

  kavimagudeswaran@gmail.com

  செல்: 86081 27679

  Next Story
  ×