என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மகளிர் நலனில் சித்த மருத்துவம்
    X

    மகளிர் நலனில் சித்த மருத்துவம்

    • பெண்களுக்கும் சித்த மருத்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
    • ஒரு வீட்டில் அனைவரும் நலம் என்று அறிந்தால் அதற்கு காரணம் அந்த வீட்டின் ஆரோக்கியமான சமையலறை தான்.

    வீட்டு சமையலறையில் உள்ள அஞ்சறைப்பெட்டி சரக்குகளை மருத்துவமாய் பயன்படுத்த தெரிந்தவர்கள் பெண்கள் தான். மணமான தேநீரும், அதைத் தர நல்ல குணமான மகளிரும் வீட்டை அலங்கரித்தால் போதும் அந்த வீட்டில் எந்த நோயும் அண்டாது.

    தலைவலி வந்தால் தேநீரில் தட்டி போட்ட சுக்கு, தனியா, மிளகுடன் கொஞ்சம் பனங்கருப்பட்டியும் பதமாய் சேர்த்து, கொடுக்கும் கைகளில், வலி நிவாரணி மாத்திரையை விட அதிக மருத்துவ குணம் உள்ளது என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

    பெண்களுக்கும் சித்த மருத்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வீட்டில் உள்ளவர்களின் உடல் நலனில் மிகுந்த அக்கறை காட்டுபவர்கள் அவர்கள் தான். ஒரு வீட்டில் அனைவரும் நலம் என்று அறிந்தால் அதற்கு காரணம் அந்த வீட்டின் ஆரோக்கியமான சமையலறை தான்.

    சித்த மருத்துவத்தின் அட்சய பாத்திரங்கள் பெண்கள். முக்கியமாக குடும்பத்தில் உள்ளவர்களின் நலனைக் காக்கும் நலக்கண்ணாடிகள் அவர்கள். அத்தகைய ஆரோக்கியத்தை சமைத்து, அனைவருக்கும் பரிமாறும் பெண்கள், அவர்கள் நலனில் அக்கறை காட்டுவதோ சிறிது மெத்தனப்போக்குத் தான்.

    'பெண்கள் நாட்டின் கண்கள்' என்பது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல. இத்தகைய வாசகத்தில் சமூக அக்கறையுடன் கூடிய உள்ளார்ந்த பொருள் அடங்கியுள்ளது. பெண் என்றவள் பண்பானவள், அன்பானவள், மென்மையானவள், பொறுமையானவள், பெண் என்றால் அழகு என்று பெண்மையை போற்றும் பலரும் அவர்கள் உடல் நலத்தை பற்றி பேசுவதில்லை.

    இன்னும் சொல்லப் போனால். அவர்கள் உடல் நலத்தின் மீது அவர்களே அக்கறை காட்டுவதும் குறைவு தான். சில பெண்கள் அழகுக்கு தரும் உச்சபட்ச முக்கியத்துவத்தில் பாதியை கூட அவர்களின் உடல் நலத்தில் காட்டுவதில்லை என்பதும் வருத்தம் தான்.

    காலையில் சூரியன் உதித்தது முதல் இரவு வரை குடும்பத்தலைவியாக அவர்கள் பங்கு அளப்பரியது. அவர்களின் பங்களிப்பால் தான் ஆண்கள் சமூகத்தில் சாதிக்கவும், நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்பதும் நிகழ்கிறது என்பது இலைமறை காய். இப்போது புரியும் ஏன் பெண்களை நாட்டின் கண்கள்? என்று அடைமொழியிட்டு புகழுகிறோம் என்று.

    இவ்வாறு குடும்பத்திற்கென அயராது உழைத்து, பிள்ளைகளை பெற்றெடுத்து, வளர்த்து என்றும் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கும் அவர்களின் வாழ்க்கையில் இடைவெளி என்பதே இல்லை. அதில் எங்கு ஆரோக்கியத்தை நாடுவது? என்று பலருக்கும் ஆதங்கம் தான். இதனால் தான் என்னவோ அவர்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களை விட குறைவு.

    இவ்வாறு நவீன வாழ்வியலில், ஓடை போல் ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் பலரின் வாழ்க்கை மருந்து மாத்திரைகளில் தான் ஓடுகிறது என்றால் அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

    இத்தகைய பெண்கள் வயது வந்தது முதல் (முதல் பூப்பு) கடைசி பூப்பு (மெனோபாஸ்) வரை உடலியல் மூலமாகவும், உளவியல் மூலமாகவும் எண்ணற்ற நலமின்மைகளை சந்திக்க நேரிடுகிறது. குடும்பம் சார்ந்த பிரச்சினைகள் ஒரு புறமிருக்க, ஹார்மோன் செய்யும் கலகத்தினால் ஏற்படும் உடல் சார்ந்த பிரச்சினைகள் மறுபுறம்.

    பெண்கள் பிறந்து, வளர்ந்து, அவர்கள் வாழ்க்கை செல்லும் பிரதான பாதையே 'மருந்து சாலை' தான் என்ற வெளிநாட்டினர் கூற்று ஒன்று உண்டு. அதாவது மருந்து மாத்திரைகள் இல்லாமல் அவர்கள் வாழ்க்கை கிடையாது என்பது இதன் பொருள். நான் இங்கு அழுத்தமாக சொல்ல வருவது என்னவெனில், அது வெளிநாட்டு பெண்களுக்கு தான் பொருந்தும். பாரம்பரிய சித்த மருத்துவத்தை பாட்டி வைத்தியமாக பழகி வரும் நம் நாட்டு பெண்களுக்கு இல்லை. ஏனெனில் மகளிரின் பருவ காலத்தில் நிகழும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு பாட்டி சொல்லும் சித்த வைத்தியம், பட்டு வஸ்திரத்தை விட சிறந்ததாக இருக்கும். அதில் பலருக்கும் அனுபவம் இருக்கும்.

    "மாதவிடாய் நேரம் முதல் நாள் பாட்டி, வயிறு பிசைய ஆரம்பம் ஆகிடுச்சு, என்ன பண்றதுனு சொல்லுங்க" என்று பாட்டி சொல்லைத் தட்டாத பிள்ளைகள் செல்லும் பாதை, ஆரோக்கியமான பாதை தான்.

    சீரகமும், ஓமமும் லேசாக வறுத்து கஷாயம் வச்சி குடிமா, அடி வயிறு மேல கொஞ்சம் விளக்கெண்ணெய் தடவு, செல்போன் பட்டனை அழுத்தாமல் கொஞ்சம் நேரம் ஓய்வு எடு, என்று பாட்டியின் வீட்டு வைத்திய குறிப்பினை கேட்டதும் அவர்களுக்கு நிம்மதி.

    இவ்வாறு பெண்களுக்கு உடல், மனம் சார்ந்த பல்வேறு பாதிப்புகளில் பாட்டி வைத்தியமாக சித்த வைத்தியம் உடன் இருப்பதால் தான், பலரின் உணர்வுகளுக்கு எளிதில் தீர்வு எட்டப்படுகிறது. எனவே, பெண்கள் நலத்தில் சித்த மருத்துவத்தின் பங்கு என்பது அளப்பரியது.

    சிசேரியனுக்கு பிறகு இடுப்பும்,முதுகும் அதிகம் வலிக்குது பாட்டி என்று சொன்னதும், பிரசவ காலத்தில் வீட்டு வேலைகள் செய்வதே மிகப்பெரும் யோகாசனம் தான். அதை மறந்து போனதால் தான் அதிகரிக்கும் ஆபரேஷன்கள் என்று சொல்லிக்கொண்டே பாட்டி ஆரவாரமில்லாமல் தரும், உளுந்து களியும், எள்ளு உருண்டையும், முருங்கை கீரை சூப்பும் மகளிருக்கு பக்க பலம் தான்.

    இடுப்பு வலி, முகுது வலி போன்றவற்றை வாழ்க்கை முழுதும் வழக்கமாக கொண்டு செல்லும் அவர்களுக்கு உளுந்து கஞ்சியும், தினை புட்டும் சேர்த்துக்கொண்டால் இடுப்பும் முதுகும் வலுப்பெறும் என்கிறது சித்த மருத்துவம்.

    சித்த மருத்துவத்தில் 'உணவே மருந்து' என்பது வழக்கு. நோய்களை வாதம்,பித்தம்,கபம் என்ற மூன்று குற்றங்களின் அடிப்படையில் 4448 வியாதியாக விவரித்து அதற்கான மருத்துவ முறைகளை கூறி நோய்களை வராமல் தடுக்கவும், தீர்க்கவும், நம்முடனே பல ஆயிரம் ஆண்டுகளாக பயணித்து வருவது நம் பாரம்பர்ய சித்த மருத்துவம்.

    சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள அறுசுவையும் நம் நாக்கிற்கு மட்டுமல்ல, நம் மரபணுவிற்கும் சுவை தான். தற்போது மறந்து போன பாரம்பரியத்தால், அறுசுவை உணவால், மருத்துவத்தால் கொஞ்சம் காலம் ஒளிந்திருந்த புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் எல்லாம் தழைத்தோங்க துவங்கியுள்ளன என்பது வருத்தமே. முக்கியமாக மார்பக புற்றுநோயும், கருப்பை புற்றுநோயும் மகளிருக்கு நவீன கால சவால்கள்.

    மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி அரிசி, காளான் சம்பா, கிச்சடி சம்பா போன்ற ஒவ்வொரு பாரம்பரிய அரிசி வகைக்கும், சிறு தானியத்திற்கும் பல்வேறு மருத்துவ குணம் உள்ளதை சித்த மருத்துவ நூல் பதார்த்த குண சிந்தாமணி கூறுகின்றது. அரிசியில் மட்டும் இந்த ஆச்சர்யமூட்டும் ஆராய்ச்சி இல்லை. இன்னும் ஆயிரம் ஆயிரம் மூலிகைகளுக்கும் தான்.

    நம் நாட்டு கீரைகளுக்கும், பழங்களுக்கும், மூலிகைகளுக்கும் பல்வேறு மருத்துவ குணங்களை கூறும் சித்த மருத்துவம், இவ்வாறு காலம் காலமாக பழகி வந்த மருத்துவ முறைகளை கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து, பயன்படுத்தி வந்தால் போதும், நம் உடலில் வேர் விடும் நோய்களை அடியோடு நீக்க முடியும்,

    அந்த வகையில் மகளிர் நலனில் சித்த மருத்துவத்திற்கு தனிப்பங்குண்டு. சித்த மருத்துவத்தில் மிகப்பெரும் பலம் மகளிருக்கான மருத்துவ முறைகளும் கூட தான். சித்த மருத்துவத்திற்கு ஆதாரமான தமிழ் இலக்கியங்களில் பெண்ணின் பருவங்களை ஏழு பருவங்களாக கூறுகின்றது. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,தெரிவை, பேரிளம் பெண். இவை ஏழும் தான் அவை.

    அதாவது பேதை: 5-7 வயது, பெதும்பை: 8-11 வயது, மங்கை: 12-13 வயது, மடந்தை: 14-19 வயது, அரிவை: 20-25 வயது, தெரிவை:26-31 வயது, பேரிளம்பெண்: 32-40 வயது என்று பருவங்களுக்கு ஏற்றாற் போல வயதும் பிரிக்கப்பட்டு கூறப்பட்டுள்ளது சிறப்பு.

    பேதைப் பருவம் முதல் பேரிளம் பெண்கள் வரை மகளிர்க்கு வரும் உடல் உபாதைகளை பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் சித்த மருத்துவ நூல்களில் காணக்கிடக்கிறது. மகளிர் நலனுக்கென தனியான மூலிகைகளையும், உணவுகளையும் குறிப்பிட்டுள்ளது.

    பூப்பு அடையும் காலத்தில் என்ன உணவு முறைகள் பின்பற்ற வேண்டும்? பிரசவ காலத்தில் என்ன உணவு முறைகள்? சுலப சுக பிரசவத்திற்கு சித்த மருத்துவம் காட்டும் வழிகள் என்ன? பிரசவத்திற்கு பின் தாய் சேய் நலம், அதன் பிறகு ஏற்படும் கருப்பை சார்ந்த பிரச்சினைகள், இறுதி பூப்பு எனும் மெனோபாஸ், அதன் பின் தொடரும் உடலியல், உளவியல் மாற்றங்களும் மருத்துவ முறைகளும், அதிகமாகும் மார்பக மற்றும் கருப்பை வாய் புற்று நோய், எச்சரிக்கை விடும் உலக சுகாதார நிறுவனம், சித்த மருத்துவம் கூறும் பாரம்பர்ய உணவு வகைகளும், மருத்துவ முறைகளும், திருமூலர் அதற்கு அருளிய யோகாசன பயிற்சி முறைகள், மொத்தத்தில் வாழ்நாளை ஆரோக்கியமுடன் நீட்டிக் கொள்ள மகளிருக்கு சித்த மருத்துவம் தரும் வழிமுறைகளை இனி வரும் கட்டுரைகளில் விரிவாக பார்ப்போம்.

    தொடர்புக்கு:-

    drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×