search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆரோக்கியம் நம் கையில்- மகிழ்ச்சிக்கோர் சப்தகோணாசனம்
    X

    ஆரோக்கியம் நம் கையில்- மகிழ்ச்சிக்கோர் சப்தகோணாசனம்

    • மனிதன் என்றாலே மகிழ்ச்சியானவன். பிறரையும் மகிழ்ச்சி அடையச் செய்பவன் என்பது பொருள்.
    • அடி முதுகு வலி உள்ளவர்கள், உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் யோகாசன வல்லுனரின் ஆலோசனைப்படி நேரில் பழகவும்.

    மனிதன் என்றாலே மகிழ்ச்சியானவன். பிறரையும் மகிழ்ச்சி அடையச் செய்பவன் என்பது பொருள். ஆனால் இன்று மனிதர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவில்லையே ஏன்? எப்பொழுது மகிழ்ச்சி இருக்குமென்றால் உடல் இயக்கம், மன இயக்கம் சரியாக இருந்து உடலில் ஆரோக்கியம் இருந்தால்தானே மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆம், அந்த ஆரோக்கியத்தை தருவது, பெறுவது, அடைவதற்கு ஆசனம் ஒன்று தானே வழி, ஆசனத்தை பிடித்துக் கொண்டால் ஆனந்தம், மகிழ்ச்சி வாழ்வில் தானே வரும்.

    ஆசனம் என்றாலே நிலையான இருக்கை, இந்த உடல் எழுந்ததில் இருந்து இரவு படுக்கும் வரை எதாவது ஒரு அசைவு இருந்து கொண்டேதானில் இருக்கிறது. கையை அசைப்போம், கண்ணை மூடி முழிப்போம், தலையை அசைப்போம், உடல் நிலையாக ஒரு நிமிடம் கூட இருப்பதில்லை. இதனால் உடலில் பிராணன் சமமான ஓட்டத்தில் உடல் முழுவதும் இயங்குவதில்லை. பிராணன் சமநிலை இழப்பதால் மனமும் சமநிலை இழந்து பல வகையான எண்ணங்கள் எழுகின்றது.

    இந்நிலை மாற வேண்டிதான் உடலை ஒரு ஆசன நிலையில் நிலையாக நிறுத்தும்போது பிராணனும் உடலில் நிலையாக சீராக நடைபெறுகின்றது. இதனால் மனதில் எண்ணங்களும் சீரடைகின்றது. உடல், மனம், பிராணன் சமநிலை அடையும் பொழுது உடலில் உள்ள 72000 நாடி நரம்புகளிலும் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சீராக இயங்குகின்றது. அதனால் ஆரோக்கியமும், ஆனந்தமும் நம்மில் தவழ்கின்றது.

    இவ்வளவு பெரிய அற்புத கலையாம் யோகக்கலை இருக்கும் பொழுது இதனை சட்டை பண்ணாமல் வாழ்வதினால் தான் இன்று பல வித நோய்களுக்கு மனிதர்கள் வசப்பட்டு அல்லல்படுகின்றனர். இதோ உடல், மனதிற்கு உற்சாகமளிக்கும், நரம்பு மண்டலத்தை சிறப்பாக இயங்கச் செய்யும் சகல நோய்களையும் நீக்கும் "சப்த கோணாசனம்" செய்முறை பற்றி அறிவோம்.

    செய்முறை

    விரிப்பில் நேராக அமரவும். இரு கால்களையும் எவ்வளவு தூரம் அகற்ற முடியுமோ அகற்றவும்.

    இரு கால் பெருவிரலையும் இரு கைகளால் பிடிக்கவும்.

    மெதுவாக இரு கால்களையும் உயர்த்தவும்.

    படத்தில் உள்ளது போல் சாதாரண மூச்சில் பத்து முதல் பதினைந்து வினாடிகள் இருக்கவும்.


    பின் மெதுவாக கால்களை கீழே வைத்து கைகளை எடுத்து சாதாரணமாக அமரவும்.இரண்டு முறைகள் செய்யவும்

    குறிப்பு: இந்த ஆசனத்தை அவசரப்படாமல் நிதானமாக பழகவும்.

    அடி முதுகு வலி உள்ளவர்கள், உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் யோகாசன வல்லுனரின் ஆலோசனைப்படி நேரில் பழகவும்.

    படிக்கின்ற மாணவர்கள் உடல் நலமுள்ளவர்கள் எளிமையாக பழகலாம்.

    முதலில் காலை ஒரு அடி அகற்றி பழகவும். பின் படிப்படியாக கால்களை இரு அடி, மூன்றடி, பின்பு படத்தில் உள்ளது போல் கால்களை அகற்றி பழகலாம்.

    பலன்கள்

    மூலம், மலச்சிக்கல், உள்மூலம், வெளிமூலம் நீங்கும். ரத்த மூலமும் நீக்கும்.

    உடலில் உள்ள நரம்பு மண்டலம் அனைத்தும் சிறப்பாக இயங்கும். நரம்புகள் வலுப்பெறும், நரம்பு தளர்ச்சி நீங்கும்

    சிறுநீரகம் சிறப்பாக இயங்கும். அதில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும். கோனாடு சுரப்பியும் ஒழுங்காக சுரக்கும். பசி எடுக்காமல் வயிறு உப்பிசமாக இருந்தால் சிறுநீரகம் சரியாக இயங்கவில்லை என்று அர்த்தம். இந்த ஆசனத்தால் சிறுநீரகமும் நன்றாக இயங்கும். பசி நன்கு எடுக்கும். வயிறு உப்பிசம் நீங்கும்.

    இளமை

    தசைகட்டுப்பாடு ஏற்படும். அதிக தொடை, இடுப்பு சதை குறையும், மேலும் என்றும் இளமையுடன் இருக்கலாம். பெண்களுக்கு கால் தொடை, இடுப்பு சதை, வயிறு குறைய நல்ல ஆசனமிது

    வாயு சம்மந்தமான பிரச்சினைகள் நீங்கும். அதனால் மூட்டு வாயு நீக்கி மூட்டு வலியும் நீங்குகின்றது

    கால் பாதம் வீங்குதல், பாத வலியை நீக்கும்.

    ஆண்களின் உயிர் சக்தியை அதிகரிக்க செய்யும். பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும்.

    இந்த ஆசனத்துடன் மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை வாரம் இருமுறை உண்ணுங்கள், ரத்த சுத்திகரிப்பு ஏற்படும். சுறுசுறுப்பாக வாழலாம்.

    வாசகர் கேள்வி

    நமது தனிப்பட்ட திறமை வெளிப்பட்டு அதன் மூலம் நாம் வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ என்ன யோக முத்திரைகள் உள்ளது. சில நபர்களுக்கு நல்ல திறமை இருக்கும். ஆனால் அவர் தனது திறமைக்கேற்ற வேலை கிடைக்காமல் வேறு ஒரு தொழில் புரிவார். மன உளைச்சலும் இருக்கும், நமது திறமைக்கேற்ற வாய்ப்புக்கள் கிடைக்க என்ன வழி?

    பதில்

    இன்று நிறைய நபர்களுக்கு இந்த பிரச்சினை இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுடைய திறமை வெளிப்படவும், அதனை பயன்படுத்தி முன்னேற வாய்ப்பு கிடைக்க குபேர முத்திரையை பயில வேண்டும். இதன் மூலம் நமது திறமை வெளிப்படும். திறமைக்கேற்ற வேலையிலும் நாம் அமரலாம். தன்னம்பிக்கை கிடைக்கும். இம் முத்திரையை காலை, மதியம், மாலை மூன்று வேளையும் ஐந்து நிமிடங்கள் செய்ய வேண்டும். சாப்பிடுமுன் செய்யவும்.

    குபேர முத்திரை செய்முறை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமரவும். மோதிரவிரல், சுண்டு விரலை மடித்து உள்ளங்கையில் வைக்கவும். ஆள்காட்டி விரல், நடு விரலை மடித்து அதன் மையத்தில் கட்டை விரலை தொடவும். இரு கைகளிலும் செய்யவும். கைகளை முட்டியின் மேல் வைக்கவும். கண்களை மூடி மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும் ஐந்து முறை. பின் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும்.

    ஆள் மனதில், எனது திறமை நிச்சயம் வெளிப்படும். என் திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். அதில் நான் சிறப்பாக பணி செய்வேன், நல்ல பொருளாதார மேன்மை கிட்டும். அதனை நல் வழிக்கு பயன்படுத்துவேன் என்று மூன்று முறை கூறி விட்டு சாதாரண மூச்சில் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.

    தொடர்ந்து 48 நாட்கள் இடைவிடாமல் காலை / மதியம் / மாலை பயிற்சி செய்யவும். அளவிடற்கரிய பலன்கள் கிட்டும். பண்புகள் மாறும், திறமை வெளிப்படும். திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் .இது ஒரு சங்கல்ப முத்திரையாகும். நாம் நினைத்ததை நிச்சயம் அடையலாம்.

    தினமும் காலை எழுந்தவுடன் நிமிர்ந்து அமர்ந்து இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடுங்கள். பத்து முறைகள், இதே போல் மதியம், மாலை பயிற்சி செய்யுங்கள் நல்ல பிராண சக்தி உடல் முழுவதும் பாயும். தெளிந்த சிந்தனை பிறக்கும். அறிவில் மலர்ச்சி உண்டாகும். அத்துடன் காலை எழுந்து குளித்துவிட்டு கிழக்கு முகமாக ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து சிறிய நாடிசுத்தி என்ற பயிற்சியை செய்யவும்.


    இடது கை சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும்.

    வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடவும். இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். பின் இடது நாசியை மோதிரவிரலால் அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து வலது நாசியிலேயே மூச்சை மெதுவாக வெளிவிடவும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும்.

    பின் வலது நாசியை அடைத்து இடது நாசியில் மூச்சை இழுத்து இடதை அடைத்து வலது நாசியில் மூச்சை விடவும். இடதில் இழுத்து வலதில் மூச்சை விடவும். பத்து முறைகள் செய்யவும்.

    பின் இடது நாசியை அடைத்து வலதில் இழுத்து இடது நாசியில் வெளிவிடவும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும். இதனை காலை / மாலை இரு வேளை செய்யவும்.

    இந்த பயிற்சியின் மூலமாக மூளை செல்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாயும். சுறுசுறுப்பாகவும். உற்சாகமாகும் இருக்கலாம். சிந்தனை தெளிவு பிறக்கும். அறிவில் மலர்ச்சி உண்டாகும். நமது திறமை நன்கு வெளிப்படும்.

    திறமை வெளிப்பட அன்றாட வாழ்க்கைமுறை

    அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிட வேண்டும். காலை கடன்களை முடித்துவிட்டு எளிய குபேர முத்திரை, மூச்சு பயிற்சி செய்துவிட்டு கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடங்கள் இருக்கவும். இது ஒரு தியானமாகும். நமது மூச்சில் கவனம் செலுத்தும் பொழுது மனம் ஒருமுகப்படும். மன அமைதி கிடைக்கும். நமக்குள் உள்ள திறமை வெளிப்படும்.

    காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் காலை உணவு அருந்தவும். மதியம் 1 மணி முதல் 1.30 மணிக்குள் மதியம் உணவு அருந்தவும்.

    இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இரவு உணவு அரைவயிறு சாப்பிடவும். இரவு 10 மணிக்கு படுத்துவிட வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஆழ்ந்த உறக்கம் வேண்டும்.

    எண்ணைய் பண்டம், மைதாவினால் ஆன உணவு, அதிக காரம், அதிக புளிப்பு, தவிர்த்து காய்கறிகள், கீரைகள், பழங்கள், உணவில் அதிகம் சேர்க்கவும். இப்படி வாழ்வை அமைத்தால்தான் உடல் ஆரோக்கியம் கிட்டும். உடல் உள் உறுப்புக்கள் நன்கு இயங்கினால்தான் திறமை வெளிப்படும். அதனை பயன்படுத்தி வளமாக வாழலாம்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    6369940440

    pathanjaliyogam@gmail.com

    Next Story
    ×