search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கண்ணதாசனின் நெஞ்சில் எழுந்த தத்துவ அலைகள்- முனைவர் கவிஞர் இரவிபாரதி
    X

    கண்ணதாசனின் நெஞ்சில் எழுந்த தத்துவ அலைகள்- முனைவர் கவிஞர் இரவிபாரதி

    • நமக்கு நல்லது நடக்கும் போது மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொள்கிறோம்.
    • காலம் என்னும் அற்புதப் படைப்பையும் கடவுள் நமக்கு வழங்கி உள்ளார்.

    கடவுளின் படைப்புக்கள் அனைத்துமே அற்புதமானவை. இந்த உலகை இயங்கச் செய்வது பஞ்ச பூதங்களே. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் ஐந்து மாபெரும் சக்திகளில் ஒன்று குறைந்தாலும் இந்த உலகம் இயங்காது.

    அதே போன்று தான் 'காலம்' என்னும் அற்புதப் படைப்பையும் கடவுள் நமக்கு வழங்கி உள்ளார். காலம் என்பது ஒரு சக்கரம் போன்றது. இருபத்தி நான்கு மணி நேரமும் சுழன்று கொண்டே இருப்பது. காலம் ஒரு பம்பரம் போன்றது. மனித குலத்தையே ஆட்டுவிப்பது என்றும் பொருள் கொள்ளலாம்.

    காலத்தை 'காலதேவன்' என்னும் ஆண் வடிவத்திலும் அழைக்கலாம். 'காலமகள்' என்னும் பெண் வடிவத்திலும் அழைக்கலாம். அது ஆண் வடிவமாக இருந்தாலும், பெண் வடிவமாக இருந்தாலும், அவர்களின் கரங்களிலும் நன்மை, தீமைகள் எடைபோட்டுப் பார்க்கின்ற ஒரு துலாக்கோல் என்னும் தராசையும் இறைவன் கொடுத்துள்ளான் என்பதே உண்மையாகும்.

    நீதிதேவன் கைகளில் உள்ள தராசைப்போல் தான் இதுவும். நீதியை, நியாயத்தை, தர்மத்தை எடை போட்டுப்பார்த்து நீதிதேவன் எப்படி பரிபாலனம் செய்கிறானோ, அதைப்போலவேதான் இந்தக் 'காலம்' என்னும் சக்தியும் நாம் செய்யும் நன்மை, தீமைகளுக்கு ஏற்ப நம்மை இயக்குகிறது. அந்த தராசிற்கு இறைவன் சூட்டியுள்ள பெயர் 'விதி' என்பதாகும்.

    கருவில் குழந்தை கருவாகி உருவாகும் பொழுது அதன் விதி எழுதப்பட்டு விடுகிறது. அந்தக் கணக்கை யாராலும் மாற்ற முடியாது. ஜனனம் ஆகும் முன்பே விதிக்கப்படுவதால் அது விதியாயிற்று.

    நமக்கு நல்லது நடக்கும் போது மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் துன்பமும், துயரமும் நம்மைத் துரத்தும் பொழுது விதி செய்த சதி என்று விதியின் மீது எறிந்து விழுகிறோம்.

    கோபம் வந்து விட்டால் கண்ணதாசன் யாரையும் விட்டு வைக்க மாட்டார். ஒரு பிடி பிடித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். ஒரு கவிதையிலே கோபக்கனல் கொப்பளிக்க.

    'விதி என்னும் படுபாவி வாவென்று

    விடுக்கின்ற கடிதம் வருமுன்'-என்று

    விதியை படுபாவி என்றே அழைக்கிறார் கண்ணதாசன். ஆக நன்மை செய்யும் போது கண்டுகொள்ளாமல் இருப்பதும், துன்பம் வரும்போது விதியைச் சபிப்பதும் எல்லா மனிதர்களுக்கும் வழக்கமான ஒன்று தான். இருந்தாலும், நமது கவியரசர் எல்லா நிலைகளையும் சீர்தூக்கிப் பார்த்து 'காலமகள் போடுகிற கோலம்' எப்படி எல்லாம் இருக்கும் என்பதை அருமையாய்ப் படம்பிடித்துத் தருகிறார்.

    காலமகள் தேவமகள்

    கையிலுள்ள துலாக் கோலில்

    எந்த எடை எப்பொழுது

    எவ்வளவென் றாறிவார்

    மன்னுமொரு காலம் உனை

    மலையேற்றி வைத்தாலும்

    பின்னுமொரு காலமதில்

    பெருவெள்ளம் தோன்றிவிடும்

    வளமான காலம்வரின்

    வணிகருக்கு வரவு வரும்

    அழிவாகும் காலம்வரின்

    அத்தனையும் ஓடிவிடும்.

    ஒருநாள் உடல் உனக்கு

    உற்சாக மாயிருக்கும்..

    மறுநாள் தளர்ந்து விடும்

    மறுபடியும் தழைத்து விடும்... என்று நம்பிக்கை ஊட்டுகிறார். அதே சமயம் கால மகள் கையில் உள்ள துலாக்கோல் எந்தப் பக்கம், தூக்கும் எந்தப் பாக்கம் சரியும் என்று எவருக்கும் தெரியாது. உன்னை மலையேற்றி வைத்து அழகு பார்த்த அடுத்த நாளே வெள்ளம் வந்து அடித்துக் கொண்டு போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார் கண்ணதாசன்.

    வணிகர்களுக்கு ஓகோ என்று சொல்லுகிற அளவுக்கு வரவு வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் நேரம் சரியில்லை என்றால் வந்த வரவெல்லாம் காணாமல் ஓடி விடுவதற்கும் வாய்ப்பிருக்கிறதென்கிறார். இன்று தங்கம் போல் மிணுமிணுக்கிற உடம்பு. நாளையே தளர்ந்து விடுவதற்கும் பின்னாளில் தழைத்து விடுவதற்கும் நேரம்தான் காரணம் என்கிறார் கண்ணதாசன்.

    ஆளம்பு சேனையுடன்

    அழகான வாழ்வு வரும்

    நாள்வந்து சேர்ந்து விட்டால்

    நாலும் குருகி விடும்

    ஜாதகத்து ராசியிலே

    சனிதிசையே வந்தாலும்

    பாதகத்தைப் பார்க்காமல்

    பரிசு தரும் காலம் வரும்

    எல்லோர்க்கும் ஏடெழுதி

    இறைவனவன் வைத்திருக்க

    பொல்லாத காலமெனப்

    புலம்புவதில் லாபமென்ன...

    எவனோ ஒருவன் உனை

    ஏமாற்றிப் புகழ்வதுண்டு

    மகனே தலை எழுத்தாய்

    மாற்றம் பெறுவதுண்டு

    சுட்டு விரலை நீட்டினால் போதும். ஐயா கூப்பிட்டீர்களா? என்று கேட்டு ஒரு சேனைப்படையே உனது சேவைக்காக காத்திருக்கும். ஆனால் அதே சமயம் உனக்குச் சோதனையாக நாெளான்று வந்து விட்டால் இந்த ஆள், அம்பு, சேனை அத்தனையும் காணாமல் போய் விடும் என்கிறார் கவியரசர்.

    ஜாதகத்திலே சனி திசை என்றாலே எல்லோருக்கும் ஒருவிதமான பயம்தான். அப்படிப்பட்ட சனி திசையிலும் உனக்கு நேரம் நல்லபடி அமைந்து விட்டால், சனி திசையே உனக்கு அள்ளிக் கொடுக்கும் காலம் வரவும் வாய்ப்பு உண்டு என்கிறார் கண்ணதாசன்.

    பிறந்த உடனே ஒவ்வொரு மனிதனுக்கும் சித்திர குப்தன் என்ற நீதிமான் தலையெழுத்தை நிர்ணயம் செய்து ஏடு தயாரித்து விடுகிறார். அப்படியிருக்க இடையிலே... பொல்லாத காலம் வந்து விட்டதே என்று வருந்துவதில் எந்த லாபமும் ஏற்படப் போவதில்லை.

    எவனோ ஒருவன் வந்து புகழ்ந்து பேசி உனை ஏமாற்றி விட்டுப் போனாலும், நேரம் சரியாக அமைந்தால் உனது மகன் தலை எடுத்து மாற்றத்தை ஏற்படுத்துவான் கவலைப்படாதே என்கிறார் கண்ணதாசன்.

    அடுத்து வரும் கவிதையிலும் எதையும் நிரந்தரம் என நினைக்காதே நாம் வாழும் வாழ்க்கை நீர்க்குமிழி வாழ்க்கை என்பதை ஒருபோதும் நீ மறந்து விடாதே என்பதை தெள்ளத் தெளிவாகவே எழுதி இருக்கிறார்.

    பழிகாரன் கூட உந்தன்

    பாதம் பணிவதுண்டு

    பலகாலம் தின்றவனே

    பகையாகிப் போவதுண்டு

    மழைக்காலம் மாறிஒரு

    மார்கழியில் வருவதுண்டு

    வெயிற்காலம் ஐப்பசிக்கும்

    விரிந்து பரப்பதுண்டு

    பல்லாயிரம் ஆண்டு

    பாராண்ட தலைமுறையும்

    செல்லாத காசாகித்

    தெருவில் அலைவதுண்டு

    மன்னவர்கள் போனதுண்டு

    மந்திரிகள் வந்ததுண்டு

    மந்திரியைத் தீர்த்து விட்டு

    மாசேனை ஆள்வதுண்டு என்று காலமகள் கோலத்தை வரிசைப்படுத்து கிறார்.

    உன் மீது தீராத பழி கொண்டு ஜென்ம விரோதியாக இருப்பவனே கூட, ஒருநாளில் மனந்தி ருந்தி நமக்குள்ளே எதற்குச் சண்டை. இந்தச் சண்டையால் எந்த பலனும் விளையப் போவதில்லை என்று நட்பு பாராட்டும் காலம் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    உன்னிடமே இருந்து மூன்று வேளையும் மூக்குப்பிடிக்கத் தின்று விட்டு உண்ட வீட்டுக்கு துேராகம் செய்கிற ஈனச் செயலைச் செய்து விட்டு அவன் பகைவனாகிப் போவதற்கும் வாய்ப்பு உண்டு என்கிறார் கண்ணதாசன்.

    ஐப்பசியோடு மழைக்காலம் முடிந்து விடும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் திடீரென மார்கழியில் மழை பெய்கிறதே? அது மட்டுமல்ல வெயில் காலம் என்பது ஆவணி மாதத்தோடு முடிந்து விடும் என்பது தானே நாட்டிலே உள்ள வழக்கு.

    ஆனால் ஐப்பசியில் கூட வெயில் கொளுத்து கிறதே அது எப்படி? இவை அனைத்துமே "காலம் போடுகிற கோலம்" என்கிறார் கண்ணதாசன்.

    இந்தியாவையே தன் கைக்குள் வைத்திருந்த கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாமல் தவிக்கிறதே? குறைவான உறுப்பினர்களைப் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை தட்டுதடுமாறி பெற்ற கட்சியெல்லாம் இன்று எட்ட முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறதே?

    ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட போது மன்னராட்சி முறை தானே இங்கு இருந்தது. பண்டித் நேருவின் காலத்தில் மன்னராட்சியும், மானியமும் ஒழிக்கப்பட்டு, மந்திரிகள் ஆளுகிற மக்களாட்சி மலர்ந்து விட்டதே. இவை எல்லாமே காலத்தின் கோலம்தான்.

    பாகிஸ்தானில் ராணுவ அதிகாரியாய் இருந்த முஷ்ரப் மந்திரிகளை எல்லாம் நீக்கி விட்டு, கணநேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றி நீண்ட காலம் பதவியில் இருந்தாரே? இவை அனைத்தும் "காலம் போட்ட கோலம் இல்லாமல் வேறு என்ன என்கிறார் கண்ணதாசன்.

    இந்தக் கவிதையில் காலம் எழுதுகிற தீர்ப்புக்கு யாராயிருந்தாலும் கட்டுப்பட்டுத் தானே ஆக வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளார் கண்ணதாசன்.

    இதை எல்லாம் படிக்கும் போது சொந்தமாக கப்பல் கம்பெனி வைத்திருந்த "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி." தனது மகனுக்கு வேலை கேட்டு அலைந்ததும், அவரே மளிகைக் கடை நடத்தியது எல்லாம் நம் நினைவுக்கு வருகிறது.

    கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது காலமகள் "எதுவும் செய்வாள்" என்ற கண்ணதாசனின் கருத்து அனைத்தும் முழுக்க முழுக்க உண்மைதானே.

    அடுத்த வாரம் சந்திப்போம்.

    Next Story
    ×