என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வாழ்க்கை ஒரு யாத்திரை: கண்ணதாசனின் தத்துவக் கவிதை - முனைவர் கவிஞர் இரவிபாரதி- 29
    X

    வாழ்க்கை ஒரு யாத்திரை: கண்ணதாசனின் தத்துவக் கவிதை - முனைவர் கவிஞர் இரவிபாரதி- 29

    • நமக்குக் கிடைத்திருக்கின்ற இந்த அபூர்வமான மானுடப் பிறப்பை உணர்ந்து நல்லதுக்கு மகிழ்ந்து.
    • நமது முன்னோர்கள் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் ஒரு அர்த்தம் வைத்துள்ளார்கள்.

    ஒரு மனிதனின் பிறப்பும் இறப்பும் அவன் கைகளிலே இல்லை... அது ஆண்டவன் கைகளிலேதான் இருக்கிறது. ஆனால் அவன் வாழும் வாழ்க்கை என்பது அவனுடைய கரங்களிலேதான் இருக்கிறது.

    எளிமையான இந்த தத்துவத்தை உணர்ந்து கொண்டு வாழ்ந்தால் எந்த மனிதனுடைய வாழ்க்கையிலும் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

    புழுவாகப், பூச்சியாக, விலங்காகப் படைக்காமல் ஆறறிவுள்ள, மனிதனாகப் படைத்ததற்கு ஒவ்வொரு மனிதனும் அந்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். ஆனால் கஷ்டமும் நஷ்டமும் வந்தால்தான் ஆண்டவனை நாம் நினைக்கிறோம். மற்ற நேரங்களில் ஏனோ நினைப்பதில்லை. தன்னை நினைப்பதற்காகவே கடவுள் கஷ்டங்களை கொடுக்கிறானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    நமக்குக் கிடைத்திருக்கின்ற இந்த அபூர்வமான மானுடப் பிறப்பை உணர்ந்து நல்லதுக்கு மகிழ்ந்து, கெட்டதுக்கு அஞ்சி வாழ்க்கையை வகுத்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தால் எந்தப் பழுதும் ஏற்படப் போவதில்லை.

    நமது முன்னோர்கள் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் ஒரு அர்த்தம் வைத்துள்ளார்கள். குறுகிய தூரம் சென்று வருவதை "பயணம்" என்ற சொல்லாலும், நீண்ட நெடிய தூரம் சென்று வருவதை "யாத்திரை" என்ற சொல்லாலும் அழைத்து வந்துள்ளார்கள்.

    அண்ணல் காந்தியடிகள் தனது அரசியல் பயணத்தில் ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிர்த்து பலமுறை யாத்திரை மேற்கொண்டு, அதிலே வெற்றியும் அடைந்துள்ளதை நாம் அறிவோம்.

    காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற மகா சுவாமிகள் இந்த தேசம் முழுக்க, ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு, தங்களின் கால்களால் அளந்து, பாத யாத்திரை செய்து, தங்கள் கொள்கை, கோட்பாடுகளை நிலைநாட்டி வெற்றியும் பெற்றுள்ளார்கள். அதையும் நாம் அறிந்துள்ளோம்.

    மக்களே மனமுவந்து, கோவில்களை நோக்கிச் செல்லும் பாத யாத்திரை கொஞ்சம் வித்தியாசமானது. பழநிக்கு பாதயாத்திரை செல்பவர்களும், ஐயப்பனை தரிசிக்க பாத யாத்திரையாகச் செல்பவர்களும், மேல்மருவத்தூர் அம்மாவை தரிசிக்க கால்நடையாகச் செல்பவர்களும் காலணி எதுவும் அணிவதில்லை. எந்த தெய்வத்தை தரிசிக்க கால்நடையாகச் செல்கிறார்களோ அந்த தெய்வம் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து அவர்களுடைய பாதங்களைப் பாதுகாக்கிறது என்பது அவர்களின் திடமான நம்பிக்கை.

    அந்த நம்பிக்கை வீண் போனதாக வரலாறில்லை. அதனால்தான் இந்த யாத்திரைகள் ஆதி காலத்தில் இருந்து, இந்த நாள் வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இந்த யாத்திரைகள் அனைத்தும் தொடங்கிய இடத்திற்கே அவரவர்கள் வந்து சேருகிற யாத்திரைகள்.

    ஆனால் நமது கவியரசர் கண்ணதாசனின் யாத்திரைப் பார்வை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. மானுடப் பருவங்களின் ஒவ்வொரு காலகட்டத்தையும் "யாத்திரை" என்ற சொல்லால் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். இந்த யாத்திரைகள் அனைத்தும் அந்தப் பருவத் தோடு முடிந்து விடுகிற யாத்திரைகள்.

    பிறப்பில் இருந்து இறப்பு வரை ஒவ்வொரு பருவ யாத்திரையையும் படிப்படியாக விளக்குகிறார்.

    கருவினில் தொடங்கிய

    குழந்தையின் யாத்திரை

    உருவினில் முடிகின்றது

    உருவத்தில் தொடங்கிய

    மழலையின் யாத்திரை

    பருவத்தில் முடிகின்றது

    பருவத்தில் தொடங்கிய

    காதலின் யாத்திரை

    பாதியில் முடிகின்றது-வரும்

    பாசமும் நேசமும்

    மோசமும் வேஷமும்

    ஞானத்தில் முடிகின்றது.

    ஞானத்தில் தொடங்கிய

    கிழவனின் யாத்திரை

    நமனிடம் முடிகின்றது-அவன்

    நமன்டம் போனதும்

    நல்லதும் தீயதும்

    நாட்டுக்குத் தெரிகின்றது.

    தாயின் வயிற்றிலே ஒரு குழந்தை கருவாகி, உருவாகி... பூஞ்சிட்டாக வெளியே வந்து இந்தப் பூமியைப் பார்க்கிற வரைக்கும் ஒரு கால கட்டமாகவும். அதற்கு பிறகு அந்தக் குழந்தை மெல்ல மெல்லத் தவழ்ந்து, வளர்ந்து பருவம் எய்திய நிலைவரைக்கும் ஒரு கால கட்டமாகவும் யாத்திைர தொடர்கிறது. பின்னர் காதல் அலை வீசும் காலகட்டம் ஆரம்பம் மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்ற பழமொழிகேற்ப அந்த யாத்திரை பாதியோடு முடிந்து விடுகிறது.

    அதற்கு பின்னர் பாசமான உறவுகள். நேசமான நிகழ்வுகள் இவற்றையெல்லாம் கடந்து, மோசடிகள் நிறைந்த உலகத்தையும் வேடதாரிகள் நிறைந்த உலகத்தையும் காண நேரிடுகிறது. யாத்திரை தொடர்கிறது. இதற்கு பின்னர் தான் அனுபவம் என்னும் ஆசானால் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் மெல்ல மெல்ல ஞானக் கதவு திறக்கிறது.

    இந்த ஞானம் கைகூடி வருவதற்குள் மனிதன் பல பருவங்களைக் கடந்து வயோதிகமே வந்து விடுகிறது. வயோதிகம் என்பது இயற்கையின் நியதி. அந்த வயோதிகம் வந்துவிட்டால் அதைத் தடுத்து நிறுத்த எந்த ஆண்டவனாலும் முடியாது. இதற்கு மாற்று வழியில்லை. அந்த எமனிடம் போய் சேரவேண்டியது என்பது காலம் செதுக்கி வைத்த கல்வெட்டு என்கிறார் கண்ணதாசன்.

    இந்த அனுபவங்களை எல்லாம் வைத்து கூட்டிக் கழித்துப் பார்க்கும் போதுதான் மனிதனுக்கு நல்லது எது? கெட்டது எது? என்பதே இறுதியில் புரியவும், தெரியவும் ஆரம்பிக்கிறது என்கிறார் கண்ணதாசன்.

    கண்ணதாசனின் யாத்திரைக் கவிதையில் அடுத்த படியாக பல்வேறு செய்திகளைத் தருகிறார் கவியரசர்.

    கணிகையின் யாத்திரை

    மேகங்களானதும்

    கவலையில் முடிகின்றது... ஒரு

    கவிஞனின் யாத்திரை

    நினைத்ததைச் சொல்கின்ற

    கவிதையில் முடிகின்றது.

    குருடனின் யாத்திரை

    கூடுந்துணைக்கென

    கோலொன்று கேட்கின்றது.. அந்தக்

    கோலுடனே அவன்

    கூடும் விழுந்தொரு

    கொள்ளியில் வேகின்றது.

    செல்வனின் யாத்திரை

    தினம் தினம் பணமெனத்

    தெருவினில் நடக்கின்றது- அவன்

    சேர்த்ததை அனுபவிக்

    காதொரு நாளில்

    திடுமென முடிகின்றது.

    உடலில் வனப்பும், செழிப்பும் இருக்கும் வரைக்கும் தான் கணிகையரின் வாழ்க்கை. ஆனால் நல்ல கவிஞனின் வாழ்க்கை அப்படி அல்ல நினைத்ததை எழுதி முடிக்கிற ஆற்றலும், கற்பனை வளமும் சேர்ந்துவிட்டால் போதும். எத்தனை வயதானாலும் நல்ல கவிதைகளை வாரி வழங்குகிற அளவுக்கு அந்த கவிஞனின் யாத்திரை அமைந்து விடுகிறதென்கிறார் கண்ணதாசன்.

    கண் பார்வையற்ற குருடனின் யாத்திரை அவனுடைய ஊன்றுகோலோடு முடிந்துவிடுகிறது. ஆனால் செல்வந்தனின் யாத்திரைகள் தினம், தினம், பணம்... பணம் என்று மனதை அரித்து எடுக்கிறது. அந்த ஆசை அதிகரிக்க... அதிகரிக்க சேர்த்ததை அனுபவிக்கக் கூட முடியாமல் ஒரு கட்டத்தில் அவனுடைய வாழ்க்கையே எதிர்பாராத வகையில் முடிந்து விடுகிறது என்று உலக நடப்பை இந்த கவிதையில் பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.

    "செத்தாத் தெரியும் செட்டியார் வாழ்வு" என்பது போல "பொய்யாய்- கனவாய்- பழங்கதையாய்- மெல்ல மெல்லப் போனதுவே" என்று பட்டினத்தார் பாடியது போல மனித வாழ்வின் நிலைமையை எடுத்து இயம்புகிறார் கண்ணதாசன்.

    "பார்த்தா பசுமரம்

    படுத்துவிட்டா நெடுமரம்

    சேர்த்தா விறகுக்காகுமா

    ஞானத் தங்கமே

    தீயிலிட்டா... கரியுமிஞ்சுமா?

    பொன்னும் பொருளும் மூட்டைகட்டி

    போட்டு வச்சாரு... இவரு

    போன வருஷம் மழையை நம்பி

    விதை விதைச்சாரு

    ஏட்டுக்கணக்கை மாத்தி மாத்தி

    எழுதி வச்சாரு... ஈசன்

    போட்ட கணக்கு மாறவில்லை

    போய் விழுந்தாரு"

    என்று திருவிளையாடல் படத்திலே வருகிற இந்த பாட்டுக்குள்ளே மனித வாழ்வின் நிலையாமையை நிரந்தர மின்மையை எத்தனை அருமையாக படம் பிடித்து காட்டுகிறார் கண்ணதாசன். அவருடைய மகத்துவமே 'கவிதையில் தனித்துவம்' என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

    அரசியல் வாதிகள் அடக்கமாக இருந்து மக்கள் தொண்டு செய்திட வேண்டும். அதை விட்டு விட்டு ஆடம்பரமாக, ஆர்ப்பாட்டமாக வாழ நினைத்தால் அவர்கள் அடிப்பட்டு கீழே விழுந்து விடக்கூடும். ஆடிய மேடை அப்படியே தான் இருக்கும். ஆனால் ஆட்டம் போட்டவரின் யாத்திரை அத்தோடு முடிந்து விடும் என்று எச்சரிக்கிறார் கண்ணதாசன்.

    வரவுக்கும் செலவுக்கும் இடைப்பட்ட வாழ்க்கையை இறைவன் தான் நமக்கு வகுத்துக் கொடுக்கிறான். அவனுடைய வழிகாட்டல் படியே வருவதும், மறைவதும் நடந்து முடிகிறது. ஆதியும் அந்தமும் அவனே என்பது போல், முதலும் அவனே முடிவும் அவனே என்பதை நிலைநாட்டும் வகையிலே இந்த "யாத்திரை" கவிதையை வழங்கியிருக்கிறார் கண்ணதாசன்.

    அரசியல் வாதியின்

    ஆனந்த யாத்திரை

    அடிபட்டு விழுகின்றது... அவன்

    ஆடிய மேடைகள்

    வாழ்ந்திருக்க... அவன்

    யாத்திரை முடிகின்றது..

    வருவன யாவையும்

    வழிநடை போட்டபின்

    மறைவது தெரிகின்றது... இந்த

    வரவுக்கும் செலவுக்கும்

    வழிவிட்ட இறைவனின்

    வழி மட்டும் தொடர்கின்றது....

    முதலுக்கு முன்னவன்

    முடிவுக்கு பின்னவன்

    முறுவலைக்கண்டு கொண்டேன்

    முடிவது நிஜமெனத் தெரிந்தது. துயர்களை

    முடித்திடத்துணிவு கொண்டேன்

    என்று கவிதையை நிறைவு செய்கிறார் கண்ணதாசன்

    "போனால் போகட்டும் போடா இந்தப்பூமியில்

    நிலையாய் வாழ்ந்தவர் யாரடா...." என்று "பாலும் பழமும்" என்ற படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாட்டை இந்தக்கவிைத யோடு பொருத்திப்பாருங்கள்... உண்மையும் உட் பொருளும் விளங்கும்...

    அடுத்த வாரம் சந்திப்போம்.

    Next Story
    ×