என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அறிவோம் சிறுநீரகம்: தாம்பத்தியத்துக்கு தடை இல்லை! டாக்டர் சவுந்தரராஜன்- 21
    X

    டாக்டர் சவுந்தரராஜன்


    அறிவோம் சிறுநீரகம்: தாம்பத்தியத்துக்கு தடை இல்லை! டாக்டர் சவுந்தரராஜன்- 21

    • சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
    • சர்க்கரை வியாதியால் சிறுநீரகம் கெட்டு போவது ஒருவகை.

    எப்படியோ சிறுநீரகம் கெட்டு போனது. அதனால் டயாலிசிஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தது. இப்போது புதிய சிறுநீரகம் கிடைத்துவிட்டது. இனி அதை பொருத்த வேண்டியதுதான். அதன்பிறகு எந்த பிரச்சினையும் வராது என்றெல்லாம் சாதாரணமாக கணித்து விட முடியாது.

    புதிய சிறுநீரகம் கிடைத்தாலும் ஏற்கனவே உடலில் கெட்டுப்போன சிறுநீரகம் கெட்டுப்போவதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடித்தாக வேண்டும். முடிந்தவரை அதை கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.

    ஏனென்றால் சில நேரங்களில் அதை கண்டுகொள்ளாமல் புதிய சிறுநீரகத்தை பொருத்தினால் பழைய சிறுநீரகம் கெடுவதற்கு காரணமான நோய் புதிய சிறுநீரகத்திலும் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    அவ்வாறு தொற்றிக்கொண்டால் புதிய சிறுநீரகத்தையும் வேலை செய்ய விடாமல் செயலிழக்க வைத்துவிடும். எனவே இந்த விசயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    சின்ன வயதில் சிறுநீரகத்தில் கல் அடைப்பு வந்திருக்கலாம், அதை மருத்துவர்களிடம் சொல்ல மாட்டார்கள். வந்தது தெரியாமல் இருந்திருக்கலாம். அல்லது இதையெல்லாம் சொல்ல வேண்டுமா என்ற புரியாத எண்ணத்திலும் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

    இப்படி பல்வேறு சிறுநீரக சம்மந்தமான நோய்களை சந்தித்தவர்கள் சிறுநீரகம் பழுதான பிறகு தனக்கு ஏற்கனவே சிறுநீரகத்தில் வந்த பாதிப்புகள் பற்றி சொல்லாமல் விட்டுவிடுவார்கள். அது புதிய சிறுநீரகத்தையும் பாதிக்கும். இது ஒரு அதிசயமான வியாதி. இதை ஆக்சலோசிஸ் (oxalosis) என்று சொல்வார்கள்.

    இந்தமாதிரி பழைய சிறுநீரகம் கெட்டு போவதற்கான காரணத்தை கண்டுபிடிக்காமல் புதிய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டால் சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் போதே புதிய சிறுநீரகத்தில் அந்த நோய் தொற்றிவிட வாய்ப்பு உண்டு. அல்லது ஒரு மாதம் கழித்தோ அல்லது 3 மாதம் கழித்தோ கூட தாக்கலாம்.

    எனவே மருத்துவரை அணுகும் போது தனக்கு தெரிந்த எல்லா விசயங்களையும், தான் சந்தித்த நோய்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் தெளிவாக சொல்ல வேண்டும். குடும்பத்தில் யாருக்கேனும் சிறுநீரக பாதிப்பு இருக்கிறதா, யாரேனும் டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறார்களா, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் குடும்பத்தில் எவரேனும் இருக்கிறார்களா என்ற விவரங்களை குறைந்தபட்சம் 3 தலைமுறை வரை யோசித்து சொல்வது நல்லது.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை வியாதியால் சிறுநீரகம் கெட்டு போவது ஒருவகை. இன்னொரு வகையில் புதிய சிறுநீரகம் மாற்றப்பட்ட பிறகும் சர்க்கரை வியாதி வருவதுண்டு. அதற்கு காரணம் சிறுநீரகத்தில் ஒவ்வாமை ஏற்படாமல் இருப்பதற்காக ஸ்டீராய்டு போன்ற மருந்துகளை பயன்படுத்துவதால் சர்க்கரை வியாதி வருகிறது.' இந்த மாதிரி வரும் சர்க்கரை வியாதிகளை மருந்து, மாத்திரைகளின் அளவை நிர்ணயித்து கட்டுப்படுத்திவிட முடியும். அவ்வாறு சர்க்கரை நோய் வந்தால் பயப்படவும் தேவை இல்லை. அடுத்து முக்கியமான பிரச்சினை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவது வழக்கம். அவற்றை தவிர்க்க உணவு முறையில் கொஞ்சம் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

    சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவர்களிடம் ஏற்படும் இயல்பான, முக்கியமான மற்றொரு  சந்தேகம் குறைந்த வயதிலேயே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டால் திருமணம் செய்து கொள்ள முடியுமா? அவ்வாறு திருமணம் செய்து கொண்டாலும் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியுமா?என்பது தான். இந்த சந்தேகம் பலருக்கு இருக்கிறது. இது தேவையற்ற பயம்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு முன்பெல்லாம் 2 ஆண்டுகள் கழித்து தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம் என்போம். இப்போது அது ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு வரை சிறுநீரகம் நன்றாக இயங்கினால் போதும், மாதந்தோறும் வரும் மாதவிலக்கு ஒழுங்காக வந்தாலும் போதும் பெண்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடலாம். என்னுடைய அனுபவத்திலேயே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த பிறகு 2, 3 குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.

    என்னுடைய அனுபவத்தில் ஒரு சுவாரசிய சம்பவத்தையும் சந்தித்து இருக்கிறேன். திருமணம் முடியாத ஒரு வாலிபருக்கு சிறுநீரக மாற்று ஆபரேசன் செய்திருந்தேன். அதேபோல் இளம் பெண் ஒருவருக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தேன். அவர்கள் இருவருமே மாதந்தோறும் பரிசோதனைக்காக என்னை சந்திக்க வருவார்கள்.

    அப்போது சோதனை முடிவுகள் வரும் வரை 3 முதல் 4 மணி நேரம் வரை எனது அறைக்கு வெளியே காத்திருப்பார்கள். அவ்வாறு காத்திருந்தவர்களின் கண்கள் ஒருவரையொருவர் நோக்க அவர்களுக்குள் காதல் மலர்ந்திருக்கிறது. பின்னர் இருவரது பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொண்டார்கள்.

    திருமணம் செய்த பிறகுதான் அந்த பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. என்னிடத்தில் தங்களது தயக்கத்தை கூறினார்கள். அப்போது நான் ஆலோசனைகள் வழங்கினேன். இப்போது அந்த தம்பதி 2 குழந்தைகளுடன் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு உள்ளார்கள். எனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அத்துடன் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நினைத்து மனம் உடைந்து போகவேண்டியது இல்லை. அதன்பிறகு இயல்பான வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து அனுபவிக்கவும் முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.

    சரியான கண்காணிப்பும், கவனமும் இருந்தால் மட்டும் போதும். சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு சிறுநீரக தொற்று, ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அவைகளை முறையாக பரிசோதித்து தேவையான மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு காலத்தில் எச்.ஐ.வி. உலகம் முழுவதும் பரவிய போது அந்த நோய் பாதித்து சிறுநீரகம் செய லிழந்தவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது கிடையாது. இதற்காக எச்.ஐ.வி. பாதித்தவர்கள் அமெரிக்காவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். அதன்விளைவாக எச்.ஐ.வி.யால் பாதித்து சிறுநீரகம் கெட்டு போனவர்களுக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு அந்தநாடு இசைவு தெரிவித்தது. அதன்பிறகு அவர்களுக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இன்றுவரைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் முதல் முறையாக எச்.ஐ.வி. நோயாளிக்கு சென்னையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

    இந்தியாவில் எச்.ஐ.வி. நோயாளி ஒருவருக்கு மாற்று சிறுநீரகம் முதன் முதலில் பொருத்தப்பட்டது. 1991-ல் அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தவன் நான் என்ற பெருமை எனக்கு உண்டு. அப்போது நான் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருந்தேன். நைஜீரியாவை சேர்ந்த திருமணமாகாத இளம் நர்ஸ் ஒருவருக்கு எச்.ஐ.வி. தாக்கி சிறுநீரகமும் பழுதடைந்து போனது. அந்த நர்சுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது அபூர்வமானது. அதாவது எச்.ஐ.வி. தாக்கிய நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்து இருக்கிறார். அப்போது ஒரு நோயாளிக்கு ஊசி போட்டுவிட்டு அந்த ஊசியின் முனையை மூடும் போது எதிர்பாராத விதமாக ஊசி கையில் குத்தி இருக்கிறது. அந்த வழியாக எச்.ஐ.வி. தொற்று அந்த நர்சுக்கு ஏற்பட்டுள்ளது.

    சில காலம் கழித்து சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்றபோதுதான் அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிய வந்தது. அது முக்கியமான ஆபரேசன் என்பதால் இந்தியாவுக்கு வந்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனைக்கு வந்தார். அவருக்கு வெற்றிகரமாக மாற்று சிறுநீரக ஆபரேசனை செய்து முடித்தேன். சிகிச்சை முடிந்து நலமோடு நாடு திரும்பினார். இப்போதும் நலமோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    அதுமட்டுமல்ல தொழு நோயாளிகள், பாம்பு கடித்து இறந்தவரின் சிறுநீரகத்தை எடுத்து வந்து இன்னொரு நோயாளிக்கு பொருத்தியது போன்ற 6 அரிய வகை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை நானே வெற்றிகரமாக செய்திருக்கிறேன்.

    Next Story
    ×