search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வித்தியாசமான பொண்ணு ஜோதிகா
    X

    வித்தியாசமான பொண்ணு ஜோதிகா

    • எவரது மனமும் புண்படும்படி பேச மாட்டார். ஒரு வித்தியாசமான பொண்ணு.
    • ஜோதிகா ஒரு வைர வளையலையும் எனக்கு பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

    ஜோதிகா...

    திரை உலகில் நான் பார்த்து, அதிசயித்த பொண்ணு! பொதுவாக நடிப்புக்கு வருபவர்களை பார்க்கும் போது அவர்களை பற்றிய ஒரு அபிப்பிராயம் நமது மனதுக்குள்ளேயே வரும். அப்படித்தான் காதலுக்கு மரியாதை படத்தின் இந்தி தயாரிப்பில் நடிக்க ஜோதிகா வந்த போது எனக்கு ஏற்பட்டது..

    படப்பிடிப்பு கீழ்ப்பாக்கம் பகுதியில்தான் நடத்தப்பட்டது. நடனம் சொல்லி கொடுப்பதற்காக நாயகி எங்கே என்று பார்க்க சென்றேன். ஜோதிகாவை பார்த்ததும் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு திரைத்துறைக்கு வந்திருந்த நேரம் அது. மிகவும் சின்ன பொண்ணு. அவரை பார்த்ததும் என்னால் அதிர்ந்து பேசுவதற்கு கூட மனம் வராது.

    மிகவும் சின்ன பெண்ணாக இருந்தாலும் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை பொறுப்போடு செய்வதில் கில்லாடி. பார்ப்பதற்கு குடும்ப பாங்காக இருப்பார். குறிப்பாக அதிகம் பேச மாட்டார். எப்போதும் அமைதியாகவே காணப்படுவார்.

    எப்படித்தான் கலைத்துறையில் வரப்போகிறாரோ என்ற சந்தேகமும் பலரிடம் இருந்தது. நான் பலமுறை அவரிடம் உன்னால் முடியும் என்று சொல்லி ஊக்கப்படுத்தியதும் உண்டு. நடிகர் சங்கத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் ஆடுவதற்கு அழைத்தோம். அதை கேட்டதும் அய்யய்யோ மேடையில் ஆடுவதா எனக்கு பழக்கமே இல்லையே.... நான் வரவில்லை அக்கா என்று என்னிடம் கெஞ்சாத குறையாக கெஞ்சினார்.

    நான் அவருக்கு தைரியம் சொன்னேன். நிச்சயமாக உன்னால் நன்றாக ஆட முடியும். தைரியமாக ஆடு என்று சொன்னேன். ஒரு வழியாக சம்மதிக்க வைத்தோம். மேடையில் அர்ஜூன் ஜோடியாக நடனம் ஆடினார். அதைப்பார்த்ததும் ஜோதிகாவா இப்படி என்று ஆச்சரியப்படும் வகையில் ஆடி அசத்தினார்.

    அதன்பிறகுதான் மேடையில் நடனம் ஆட முடியும் என்ற தன்னம்பிக்கை அவருக்கும் ஏற்பட்டது. அதன்பிறகு முதன் முதலாக துபாயில் நடந்த கலை நிகழ்ச்சியில் காக்க... காக்க... என்ற பாடலுக்கு நடிகர் சூர்யாவுடன் ஆடினார்.

    அதன்பிறகு கலை உலகில் அவருக்கு திருப்புமுனை தந்தது என்றும் சொல்லலாம். அவரை எல்லோரும் திரும்பி பார்க்க வைத்த படம் என்றும் சொல்லலாம். எல்லோருக்கும் தெரிந்தது சந்திரமுகி. சந்திரமுகி இப்படித்தான் இருப்பாளோ என்று ஜோதிகாவின் நடிப்பை பார்த்து நினைத்துக்கொண்டார்கள். அவர் ஆடியதை ரசிகர்கள் நிச்சயம் என்றும் மறக்க மாட்டார்கள்.

    "ரா ரா ....ரா ரா.............

    சரசுக்கு ரா ரா .....

    ரா ரா ....

    ல..க..ல..க..ல..க..லகலகலக .........

    தாம் தரிகிட தீம் தரிகிட தொம் தரிகிட

    நம் தரிகிட ....... என்ற பாடல் தியேட்டரில் நிசப்தத்தை உருவாக்கி ரசிகர்களின் கண்களை அகல விரிய வைத்துவிட்டது.

    நாக்கை சுழற்றி பாடியபடியே கண்களையும் உருட்டிக்கொண்டு ஆடும் அந்த ஒரு பாடல்தான் அந்த படத்துக்கே இதயம் போன்றது. அதனால்தான் அந்த ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

    ரஜினி சார் அடிக்கடி அந்த பாடல் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். அந்த பாடலுக்கு ஜோதிகா ஆடுவதற்காக நான் கம்போஸ் பண்ணி வைத்திருந்ததை பார்த்ததும் ஜோதிகாவும் என்னிடம் கேட்டார். "அக்கா... எனக்கு இதெல்லாம் ஆட வருமா" என்றார். ஏனென்றால் நாட்டியம் அவருக்கு தெரியாது என்பதும் ஒரு காரணம்.

    அப்போது நான்தான் சொன்னேன். "பயப்படாதே நான் செய்து காட்டுவதை போல் நீ உடல் பாவனைகளை வைத்தால் போதும். நிச்சயமாக உன்னால் நன்றாக ஆட முடியும்" என்றேன்.

    ஐதராபாத்தில் அந்த பாடல் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு ரஜினி சார் என்னிடம் கேட்டார். கலா ஜோதிகா சின்னப்பொண்ணாக இருக்கிறாரே, மூவ்மெண்ட் எல்லாம் கொஞ்சம் கடினமாக இருக்கும். அவரால் நன்றாக ஆட முடியுமா என்று கேட்டார். அவரிடமும் அதே வார்த்தையை தான் சொன்னேன். நன்றாக ஆடுவார் சார் கவலைப் படாதீங்க என்றேன்.

    அந்த பாடலுக்கான ஒவ்வொரு ஷாட்டையும் ஒரு மணி நேர இடைவெளி விட்டு எடுத்தோம். படப்பிடிப்பு நடந்த போது ஜோதிகாவோடு வினித் ஆடுவார். வினித் முறைப்படி நடனம் கற்றவர். மிக அற்புதமாக ஆடுவார். அவர் ஆடுவதை பார்த்ததும் ஜோதிகா பயந்து போய் அக்கா எனக்கு சரியாக வருமா என்று கேட்பார். அப்போது நான் சொல்வேன் நீ ஏன் வினித்தை பார்க்கிறாய். நான் சொல்வது போல் கைகளையும், கால்களையும், முகத்தையும் வைத்துக்கொள். கேமிரா முன் நிற்கும் என்னை மட்டும் பார் என்பேன்.

    பின்னர் படப்பிடிப்பு முடியும் வரை அதேபோல் என்னை பார்த்து நான் ஆடுவதை போல் அவரும் ஆடி நடித்து முடித்தார். 2 நாட்களில் முழு பாடலையும் படமாக்கினோம்.

    அந்த பாடலில் தரையில் முட்டி போட்டு சுழன்று ஆட வேண்டும். அவ்வாறு முட்டிப்போட்டு ஆடியதில் ஜோதிகாவின் 2 மூட்டுகளும் வீங்கி ரத்தக்கட்டு ஏற்பட்டு இருந்தது. ரத்தக்கட்டு இருந்ததால் ஏற்பட்ட வலியையும் தாங்கி, அதனால் முக பாவனையில் எந்த மாற்றமும் தெரிந்து விடாதபடி அவர் நடித்துக்கொடுத்ததை நினைத்து எனக்கே மெய் சிலிர்த்து போனது.

    தனக்கு எவ்வளவு கஷ்டம் நேர்ந்தாலும், அதை தாங்கிக் கொண்டு ஒரு காட்சியை மீண்டும், மீண்டும் படமாக்கும் நிலையை ஏற்படுத்தமாட்டார்.

    செட்டில் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் அமைதியாக, ஒரு ஓரமாக உட்கார்ந்திருப்பார். அதே நேரம் ஜாலியாக பேசும்போது ஜாலியாக பேசுவார். எவரது மனமும் புண்படும்படி பேச மாட்டார். ஒரு வித்தியாசமான பொண்ணு.

    படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்த ரா...ரா.. சரசுக்கு ரா...ரா... பாடல் காட்சியை போட்டு பார்ப்பதற்காக அழைத்தார்கள். சிவாஜி புரொ டெக்ஷன் அலுவ லகத்திற்கு சென்றி ருந்தேன். அங்கு நான் ரஜினி சார், ஜோதிகா, வினித் உள்பட எல்லோருமே இருந்தோம். ஏற்கனவே அவர்கள் ஒரு முறை போட்டு பார்த்திருக்கி றார்கள். ஆனால் என்னிடம் எந்த விசயத்தையும் சொல்லவில்லை. பாடல் காட்சியை திரையில் ஓட விட்டு பார்த்துக்கொண்டிருந்தோம். நன்றாக அமைந்திருந்தது.

    எல்லோரும் பாராட்டினார்கள். அதன் பிறகுதான் எனக்கும் சந்தோஷம். நன்றாக ஆடுபவர்களுக்கு சொல்லிக்கொடுத்து பேர் வாங்குவதை விட ஆடத் தெரியாதவர்களை ஆட வைத்து பேர் வாங்குவதில் தனி சந்தோஷம் கிடைக்கும். அந்த சந்தோஷம் ஜோதிகா மூலம் எனக்கு அதிகமாகவே கிடைத்தது.

    அவருக்கு மிகப்பெரும் புகழை தேடி கொடுத்த அந்த பாடலை, அதில் நடித்ததை அடிக்கடி மகிழ்ச்சியுடன் பேசுவார். எல்லாம் உங்களால்தான் அக்கா... என்று என்னை கட்டிப்பிடித்து நன்றி சொன்ன ஜோதிகா ஒரு வைர வளையலையும் எனக்கு பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அது என்னால் மறக்க முடியாதது.

    அவருக்கு நானும் ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் உடனடியாக கொடுக்க முடியவில்லை. பின்னர் விலை உயர்ந்த ஒரு புடவையை அவருக்கு வாங்கி பரிசளித்தேன்.

    Next Story
    ×