என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஆரோக்கியம் அளிக்கும் அஞ்சறைப்பெட்டி: அஞ்சறைப்பெட்டியின் அரசன் 'மிளகு'
- உணவில் மருந்தாக சேர்க்கப்படும் பொருட்களில் மிளகு முக்கிய இடத்தை பிடிக்கின்றது.
- “பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்” என்பது பழமொழி.
நானூறு ஆண்டுகள் நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்தமைக்கு அஞ்சறைப்பெட்டி கடைசரக்கான மிளகும் ஒரு காரணம் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து. அஞ்சறைப்பெட்டி எனும் நறுமணமூட்டிகளின் நாட்டில் அரசன் என்ற பெயரையும், புகழையும் தட்டிச் செல்லும் சிறப்புடையது மிளகு.
நவீன மருத்துவத்தின் தந்தை எனக்கருதப்படும் 'ஹிப்போகிரேட்ஸ்' தனது நூல்களில் 'மருந்து என்பது நாம் உண்ணும் உணவாக இருக்க வேண்டும் மற்றும் உணவு என்பதே மருந்தாக இருக்க வேண்டும்' என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறியிருப்பது, சித்த மருத்துவம் கூறும் 'உணவே மருந்து' கோட்பாட்டை ஒத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் உணவில் மருந்தாக சேர்க்கப்படும் பொருட்களில் மிளகு முக்கிய இடத்தை பிடிக்கின்றது. கிட்டதட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பல உலக நாடுகளில் மிளகு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. எகிப்து நாட்டில் மம்மிகளை பதப்படுத்த மிளகு தூளை பயன்படுத்தியதாகவும் அறியக்கிடக்கின்றது. ஆனால் மிளகின் மருத்துவ குணத்தை அறிந்துகொண்டு அதிகம் பயன்படுத்திய பெருமை நம் முன்னோர்களையே சாரும்.
மிளகு என்றாலே உலகம் முழுவதிலும் தனிச்சிறப்பு உண்டு. உணவில் மிளகினை பயன்படுத்தாத நாடுகளே இல்லை எனலாம். ஆனால் சிறப்பு என்னவெனில், அதிக அளவு மிளகினை உற்பத்தி செய்து உலகிற்கு கொடையாக கொடுக்கும் பெருமை நம் நாட்டிற்கு உரியது.
போர்த்துகீசியர்கள் இந்தியாவில் நுழைந்த பிறகு தான், மிளகாய் நம் நாட்டில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்னர் வரை மிளகு என்ற ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மணமூட்டியை மட்டுமே தமிழர்கள் உணவில் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
மிளகாய் என்பதன் பொருள் மிளகு+ஆய். அதாவது மிளகு போன்ற காரத்தை உடையது என்று பொருள் விளங்குகிறது. காரம் மட்டும் மிளகு போன்று தருமே தவிர, மருத்துவ குணம் என்பதே மிளகாய்க்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் மிளகாய் பயன்படுத்த மூலநோய் போன்ற நோய்கள் வரும் என்கிறது சித்த மருத்துவ நூலான அகத்தியர் குணவாகடம். ஆக, நம்மை அடிமையாக்கி ஆட்சி செய்தவர்கள் நமது ஆரோக்கியத்தை சிதைக்கும் மிளகாயை விட்டுச்சென்று, பொன், பொருளை மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் பறித்து சென்றது இதில் வெளிப்படையாகிறது.
"பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்" என்பது பழமொழி. இந்த பழமொழியை இருவகையாக பொருள் கொள்ளமுடியும். அதில் ஒன்று மருத்துவ ரீதியாகவும், மற்றொன்று வணிக ரீதியாகவும் உள்ளது. வணிக ரீதியாக பொருள் அறியமுற்பட்டால், ஒரு காலத்தில் தங்கத்திற்கு இணையான மதிப்புள்ளதாக கருதப்பட்ட மிளகினை, கடல் கடந்து வணிகம் மேற்கொள்ள சென்ற நம் முன்னோர்கள் பத்து மிளகினை தம்முடன் வைத்திருந்தால் பகைவன் வீட்டிலும் அரச மரியாதையை கிடைக்குமாம். அதனால் தான் மிளகு 'கருப்பு தங்கம்' என்று கருதப்பட்டது. மறுமுனையில் மருத்துவ ரீதியாக உற்றுநோக்கினால், பகைவன் வீட்டில் நமக்கு அளிக்கும் உணவில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் நஞ்சுத்தன்மை இருந்தாலும், மிளகு அதனை முறித்துவிடும் என்கிறது சித்த மருத்துவம். அந்த அளவுக்கு மருத்துவ நன்மைகளை உள்ளடக்கியது மிளகு.
மிளகின் மருத்துவ நன்மைகளுக்கு முதன்மைக்காரணம் அதில் உள்ள மோனோ டெர்பீன் வகை அல்கலாய்டு வேதிப்பொருட்கள் தான். பல்வேறு வேதிப்பொருட்களை மிளகு கொண்டிருப்பினும் பைப்பரின், பைப்பரிடின் எனும் வேதிப்பொருள்கள் அதன் மருத்துவ குணத்தில் முக்கிய பங்காற்றுகிறது. உலக அளவில் முக்கிய ஆராய்ச்சி பொருளாகவும் உள்ளது. நவீன மருத்துவத்திலும் இந்த 'பைப்பரின்' வேதிப்பொருள் தனியே பிரித்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுவது கூடுதல் சிறப்பு.
மிளகின் மருத்துவ நன்மைகளை பெறுவதற்கு மிளகினை இளவறுப்பாக வறுத்து, பொடித்து உணவில் பயன்படுத்துவது நல்லது. இருமல் போன்ற கப நோய்களில் இருந்து காத்துக்கொள்ள தினசரி பாலில் மஞ்சள் பொடியுடன் மிளகு சேர்த்து எடுத்துக்கொள்வது சிறந்தது. இந்த மஞ்சள், மிளகு சேர்ந்த கலவை அளப்பரிய மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. உடலுக்கு மிகப்பெரும் நன்மைகளை தரவல்ல மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் வேதிப்பொருளுடன், மிளகில் உள்ள பைப்பரின் கூடும்போது மஞ்சளின் செயல்திறன் பலமடங்கு இரட்டிப்பாவதாக நவீன ஆய்வுகள் கூறுவது பாரம்பரிய மூலிகைகளின் குணத்திற்கு கூடுதல் வலிமை.
நோய்களுக்கு காரணமாக சித்த மருத்துவம் கூறும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் மிளகு கொடியின் விதையானது முதன்மையாக பித்த குற்றத்தை தணிப்பதால் இதற்கு 'பித்தமணி' என்ற பெயரும் உண்டு. ஆனால் மிளகு, பித்ததோடு வாதம்,கபம் ஆகிய மற்ற இரண்டு குற்றங்களையும் குறைக்கும் தன்மையுடையதாக உள்ளது. எனவே மூன்று குற்றங்கள் சார்ந்த நோய்நிலைகளில் இருந்து காத்து, ஆரோக்கியத்தை தரவல்லது என்பது மிளகின் தனிப்பெரும் சிறப்பு.
ஒவ்வாமை, பூச்சிக் கடி இவற்றால் உண்டாகும் சரும அரிப்பால் பாதிக்கப்படுவர்கள் அருகம்புல் ஒரு கைப்பிடியுடன், நுனியும் காம்பும் நீக்கிய வெற்றிலை இரண்டு சேர்த்து, அத்துடன் அஞ்சறைப்பெட்டியின் அரசனாகிய மிளகினை பத்து தட்டிப்போட்டு காலை, மாலை இரண்டு வேளை வெறும் வயிற்றில் எடுத்துகொள்ள ஒவ்வாமையை நீக்கி நலம் பயக்கும். ஒவ்வாமை இருமலுக்கு மஞ்சள் பொடியுடன், மிளகு பொடி சேர்த்து தேன் கலந்து எடுத்துக்கொள்ளவது நல்லது. தலையில் சுருள் சுருளாய் முடி உதிர்ந்து கடினமான தோற்றத்தை ஏற்படுத்தும் புழுவெட்டு நோய் நிலையில் மிளகு பொடியை, நறுக்கிய வெங்காய துண்டுடன் சிறிது உப்பும் சேர்த்து தினசரி தேய்த்து வர அந்த இடத்தில் முடி திரும்ப முளைக்கும்.
மிளகு அதில் கலந்துள்ள வேதிப்பொருள்கள் காரணமாக அசீரணம் போன்ற செரிமானக் கோளாறுகள், இருதய நோய்கள், நுரையீரல் நோய்கள், மூட்டு வலி, கல்லீரல் நோய், கட்டிகள், பூச்சிக்கடி, ஒவ்வாமை, காக்கை வலிப்பு போன்ற பல்வேறு நோய்நிலைகளில் பயன்தருவதாக சித்த மருத்துவம் மட்டுமின்றி, நவீன அறிவியல் ஆய்வுகளும் கூறுவது கூடுதல் சிறப்பு.
சுரத்திற்கு பின் உண்டாகும் உடல் வலிக்கும், மேல் சுவாசப்பாதை சார்ந்த குறிகுணங்களுக்கும், ஆஸ்துமா உள்ளவர்களும் வெந்நீரில் மிளகினை போட்டு ஆவி பிடிக்க கபம் வெளியேறி நன்மை பயக்கும். (அல்லது) மிளகினை வெந்நீரில் இட்டு காய்ச்சி கஷாயமாக்கி சிறிது தேன் சேர்த்து குடிக்கவும் சிறந்த நன்மை பயக்கும். தொண்டை கரகரப்புக்கும், தொண்டை கட்டிற்கும் மிளகினை வாயில் போட்டு சுவைத்து வரும் பழக்கம், காலம் காலமாக இன்றளவும் இருந்து வரும் பாரம்பரிய வழக்குமுறை.
சித்த மருத்துவத்தில் பெரும்பாலான மருந்துகளில் மிளகு சேருகிறது. மூன்று குற்றங்களையும் சமப்படுத்த உதவும் திரிகடுகு சூரணம் எனும் சித்த மருந்தில் சுக்கு, திப்பிலியுடன் மிளகு சேருகின்றது. நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், தாளிசாதி சூரணம் போன்ற கபத்தை நீக்கும் மருந்துகளில் மிளகு சேருவது சிறப்பு. மிளகை முதன்மையாகக் கொண்டு உருவாகும் மிளகு கல்ப சூரணம், மிளகு தைலம் போன்றவைகளும் குறிப்பிடத்தக்கது. நீங்காத ஒவ்வாமை இருமலுக்கு வெள்ளெருக்கம் பூவுடன், மிளகும், கிராம்பும் சேர்த்து அரைத்து மாத்திரையாக்கி கொடுக்க நல்ல பலன் தரும். இதுவே 'சுவாசகுடோரி மாத்திரை' என்ற பெயரில் சித்த மருந்தாக கிடைக்கிறது. சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் பல் பொடிகளில் மிளகு முக்கிய பங்காற்றுவதும் குறிப்பிடத்தக்கது. தோலிற்கு அழகையும், பளபளப்பையும் தரக்கூடிய சித்த மருத்துவ குளியல் பொடியாகிய 'நலங்கு மா'விலும் மிளகு சேர்வதாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முருங்கைக்கீரை சூப்பில் மிளகு சேர்த்து எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும். அதாவது முருங்கை இலை, ஈர்க்கு இவற்றுடன் மிளகு, மஞ்சள், இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து உப்பிட்டு சூப் செய்து குடிக்கலாம். மேலும் எலும்புகளையும், மூட்டுகளை வன்மைப்படுத்தும். மூட்டு வீக்கங்களை குறைக்கும். உடல் பலவீனத்தைப் போக்கும். ரத்தசோகையை போக்கும் மிகச்சிறந்த உணவு இது.
அடிக்கடி சளி, இருமல், ஆஸ்துமா இவற்றால் அவதிப்படுபவர்கள் எந்த விதத்திலேனும் தினசரி மிளகு சேர்த்துக்கொள்வது நல்லது. தூதுவளை கீரையுடன் மிளகு, இஞ்சி, மஞ்சள் சேர்த்து சிறிது உப்பிட்டு சூப் வைத்து குடிக்க சுவாச மண்டலத்திற்கு நன்மை பயக்கும். மார்பில் உள்ள கோழையை வெளியேற்றி ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். மூச்சு சுவாசத்தை சீராக்கும். அடிக்கடி உண்டாகும் சுவாசப்பாதை ஒவ்வாமையை தடுக்கும்.
நவீன வாழ்வியல் நெறிமுறைகளால் அதிகமாகிவிட்ட தொற்றா நோய்களில் பலரையும் அச்சத்தில் ஆழ்த்துவது புற்றுநோய் தான். ஏனெனில் உலகம் முழுக்க அதிக அளவில் இறப்புகளை உண்டாக்கும் நோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது இதுவே. கண்ணெதிரே பல கொடுமைகளை அனுபவிக்கும் இந்த நோய்நிலையை வருமுன் காத்துக்கொள்வதே சிறந்தது. அவ்வாறு வருமுன் காத்தலுக்கு உதவ முன் வருவது மஞ்சளுக்கு அடுத்த அஞ்சறைப்பெட்டி நாயகன் மிளகு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
குடல் சார்ந்த புற்றுநோயை வரவிடாமல் தடுக்க அவ்வப்போது மிளகினை சேர்த்துக்கொள்ள நன்மை பயக்கும் என்கின்றன நவீன ஆய்வுகள். எலிகளில் மார்பக புற்றுநோய் உண்டாக்கி நடத்திய சோதனையில், மிளகு சேர்ந்த உணவை எலிகளுக்கு கொடுக்க ஆயுட்காலம் அதிகரிப்பதையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நவீன ஆய்வுகள், உணவில் மிளகினை சேர்ப்பது பல்வேறு குடல் சார்ந்த நோய்கள் வரவொட்டாமல் தடுக்கும் என்கின்றன. சைவ உணவாக இருந்தாலும் சரி, அசைவ உணவாக இருந்தாலும் சரி, மிளகு இல்லாமல் தமிழர்களின் உணவு இல்லை. சைவத்தில் அன்றைய மிளகு ரசம் துவங்கி இன்றைய பெப்பர் தூவிய பாப்கார்ன் ,பெப்பர் காளான் வரையிலும், அசைவத்தில் அன்றைய மிளகு கறி குழம்பு முதல் இன்றைய பெப்பர் சிக்கன் வரையிலும், மிளகு இன்றி பாரம்பரிய உணவும், நவீன உணவும் முழுமை பெறாது. அந்த அளவுக்கு நமது உணவில் ஒரு பகுதியாகவே மிளகு ஒன்றியுள்ளது.
வெறும் மணத்திற்காக என்றில்லாமல் மருத்துவ குணங்களுக்காவே மிளகு பயன்படுத்தப்பட்டு நம் முன்னோர்களால் உணவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பாரம்பரிய அஞ்சறைப்பெட்டி கடைசரக்கினை நாமும் பயன்படுத்தி நல வாழ்வுக்கு வழிவகை செய்வோம்.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com






