search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தந்தையர் தினம் கொண்டாட்டம்
    X

    தந்தையர் தினம் கொண்டாட்டம்

    • குழந்தைகளின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் தந்தையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.
    • நாம் வாழ்க்கையில் அப்பாவின் பங்கு முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை.

    தாயிற் சிறந்த கோவிலும் இல்லை....

    தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பார்கள்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் முதல் சூப்பர் ஹீரோ அப்பாக்கள் தான்.

    ஒரு தந்தை தனது குடும்பத்திற்காக இரவும் பகலும் அயராது உழைக்கிறார், அதனால் அவர் தனது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும், தனது குடும்பத்தை ஆதரிக்கவும் செய்கிறார்.

    இந்த கடின உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையிலும், அன்னையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம் என எல்லாவற்றிக்கும் ஒரு தினம் இருக்கையில், தாய்க்கு அடுத்தபடியாக போற்றப்படும் தந்தைக்கு ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 3-வது ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.

    இந்தியா உள்பட 52 நாடுகளில் இதே தேதியில் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. 'தந்தையர் தினம்' என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான, அர்த்தபூர்வமான ஒரு நாள் என்பதனை யாரும் மறுக்க முடியாது.

    குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பொறுப்பு எப்படி தாய்க்கு இருக்கிறதோ, அதேபோல் குழந்தைகளின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் தந்தையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.

    குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்வதுடன், கனிவான கண்டிப்பையும், மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தந்தையிடம் குழந்தைகளுக்கும் பாசம் எப்போதும் குறைந்து போய்விடுவதில்லை. ஆம், 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! நீ தந்தை ஆகும் வரை, உன் தந்தையின் அருமை உனக்கு தெரியாது.

    தந்தையர் தினத்தை கொண்டாடுவதற்கு இரண்டு முக்கிய கதைகள் உள்ளன.

    உலகில் முதல் முறையாக தந்தையர் தினம் 1910 ஆண்டு ஜூன் 19-ந் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய் இல்லாமல் தந்தையில் அரவணைப்பில் வளர்ந்த பெண் ஒருவர் தந்தையர் தினத்தை தோற்றுவித்தார்.

    சொனாரா ஸ்மார்ட் டாட், அமெரிக்காவை சேர்ந்த இவர் ஒரு நாள் அன்னையர் தினத்தை கொண்டாடிய பின், தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என நினைத்தார். இவரின் தாய் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர் உயிரிழந்துவிட்டார். அதன் பின் ஆறு குழந்தைகளையும் தந்தை பாசத்துடன் வளர்த்தெடுத்தார். இதனால், இவர் தனது தந்தையை கொண்டாட முடிவு செய்தார்.

    முன்னதாக, 1907ம் ஆண்டு மேற்கு விர்ஜினியா பகுதியில் நிகழ்ந்த நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் சிக்கி 362 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 1908 ஆண்டு மேற்கு விர்ஜினியா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தையர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே நடத்தப்பட்ட முதல் நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.

    இந்த சம்வபத்திற்குப் பிறகு, சொனாரா ஸ்மார்ட் டாட் என்பவர் தந்தையர் தினத்தை தேசிய நாளாக அறிவிக்க கோரிக்கை விடுத்தார். உள்ளூர் சமுதாயம் மற்றும் அரசாங்கத்திடம் தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என கோரி பலமுறை மனு கொடுத்து வந்தார்.

    இவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வாஷிங்டன் 1910, ஜூன் 19-ந்தேதி முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தந்தையர் தின கொண்டாட்டத்தை நடத்த அனுமதி வழங்கியது.

    கொண்டாடும் முறைகள்:

    தந்தையர் தினத்தை ஒவ்வொருவரும் கொண்டாடும் முறை உள்ளது. இந்த நாளில் பலர் நல்ல உணவை உண்பதற்காக வெளியே செல்கிறார்கள். குழந்தைகள் தங்கள் தந்தைக்கு பரிசுகளை வழங்குவார்கள், அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள், அட்டைகள் மற்றும் பூக்களை வழங்குவார்கள்.

    இந்த நாளில், ஒவ்வொரு குழந்தையும் தனது தந்தைக்கு நன்றி செலுத்துகிறது.

    தன் குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பவருக்கும் தாய்க்கு இணையான மரியாதை கிடைக்க வேண்டும்.

    எப்படி அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாடுகிறோமோ, அதே போன்று தந்தையின் அன்பை போற்றும் வகையில் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும்.

    தன் துக்கத்தையும், வேதனையையும் வெளிக்காட்டாமல் தன் கடமைகளை எல்லாம் செய்பவர் தந்தை. அம்மாவுக்குப் பிறகு நம் மனதுக்கு மிக நெருக்கமானவர் என்றால் அது நம் அப்பாதான்.

    தந்தையின் அன்பு அன்னையைப் போல் இல்லை, ஆனால் அப்பாதான் நம்மை உள்ளிருந்து வலிமையாக்குகிறார்.

    உலகில் உள்ள நல்லது கெட்டது பற்றி எங்கள் தந்தை நமக்கு பாடம் நடத்துகிறார். நம் தந்தையின் கை நம் நெற்றியில் இருக்கும் வரை நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

    எப்பொழுதும் துக்கத்தை தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறார்.

    நாம் வாழ்க்கையில் அப்பாவின் பங்கு முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை.

    குடும்பத்தில் சமத்துவத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவதில் உங்கள் இருப்பு முக்கியமானது. ஒருவர் வளரும்போது அவரைப் போல இருக்கத் தேவையான பண்புகளை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

    குடும்பத்தை பொறுப்பாக வழிநடத்தி, தன்னலமற்ற அன்பின் அடையாளமாக திகழும் தந்தைகள் ஒவ்வொருவரும் ஆண்டு முழுவதும் கொண்டாடப் பட வேண்டியவர்கள் தான்.

    Next Story
    ×