search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அரசியலிலும் சாதிப்பார் குஷ்பு...!
    X

    அரசியலிலும் சாதிப்பார் குஷ்பு...!

    • இரவு பகலாக படப்பிடிப்பில் கஷ்டப்பட்டாலும் தனது குழந்தைகளுக்காக காலையிலே எழுந்து சமையல் செய்து கொடுக்க தவறமாட்டார்.
    • எனது வலது புறம் ஒருவரும், இடது புறம் ஒருவருமாக இருந்து கொண்டு அவர்கள் கேலி, கிண்டல் செய்வதற்கு அளவே இருக்காது.

    சினிமாவையும் தாண்டி எங்களோடு வாழ்பவர் குஷ்பு. எங்கள் வீட்டில் கடைக்குட்டி தங்கை குஷ்பு என்று சொன்னேன் அல்லவா. அப்படித்தான் எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டார்.

    என் தங்கை பிருந்தாவும், குஷ்புவும் பிரிக்க முடியாத சகோதரிகள் போன்றவர்கள். ஒன்றாக ஊர் சுற்றுவது முதல் கலாய்ப்பது வரை இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

    இருவருக்கும் பிறந்த நாள் வந்தால் போதும் நள்ளிரவு 12 மணிக்கு போன் பண்ணி கடுப்பேத்துவாங்க.

    ஏய், வாடி-போடி என்று இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். அவ்வளவு நெருக்கமாக, உரிமையுடன் பழகி வருகிறார்கள்.

    குஷ்பு எங்கள் வீட்டுக்கு வந்தால் போதும் எங்கள் அம்மாவிடம் போய் முதலில் கேட்பது 'அம்மா இன்று என்ன சமையல் என்று தான் கேட்பார். புளிச்ச கீரை சாதம் என்றால் போதும் ஒரு பிடி பிடிப்பார். எங்க அம்மா சமைத்து கொடுப்பதில் புளிச்சகீரை சாதத்துடன் அரைத்த சாம்பார். இந்த இரண்டும் கிடைத்தால் போதும் நன்றாக ருசித்து சாப்பிடுவார்.

    அது மட்டுமல்ல குஷ்புவே நன்றாக சமையல் செய்யக்கூடியவர். அவர் பிரியாணி மிக நன்றாக சமைப்பார். வீட்டில் பிரியாணி செய்தால் போதும் ஒன்றாக ஷுட்டிங் செல்வதாக இருந்தால் அங்கே பிரியாணி எடுத்து வந்துவிடுவார். இரவு பகலாக படப்பிடிப்பில் கஷ்டப்பட்டாலும் தனது குழந்தைகளுக்காக காலையிலே எழுந்து சமையல் செய்து கொடுக்க தவறமாட்டார்.

    படப்பிடிப்புகளை பொறுத்தவரை பாடலுக்கு ஏற்ற நடனங்களை காட்சிப்படுத்தியதும் நான் சென்றுவிடுவேன். ஆனால் கலை நிகழ்ச்சிகளில் தான் முழு நேரமும் நாங்கள் ஒன்றாக இருப்போம். பயங்கர ஜாலியாக இருக்கும். துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் ஒரு நாள் இரு நாள் அல்ல. தொடர்ந்து ஒரு மாதம் வரை ஷோக்கள் நடத்துவோம். மோகன்லால் உள்பட பல நட்சத்திரங்கள் அதில் பங்கேற்றிருக்கிறார்கள். மலையாளம் சேர்ந்திருப்பதால் காட்சி நடக்கும்போதே திரைக்கு பின்னால் இருந்து சிரித்து விடுவோம்.

    அதிலும் சிரிப்பது மட்டுமல்ல நீண்ட நேரம் அடக்க முடியாமல் சிரித்து விட்டு காட்சிக்கு செல்வதை கூட மறந்தது உண்டு. அப்படி தான் ஒரு நிகழ்ச்சியில் திரைக்கு பின்னால் இருந்து வாய்விட்டு நானும், குஷ்புவும் சிரித்து கொண்டு இருந்தோம். அந்த நேரத்தில் குஷ்புவின் காட்சி வந்து இருக்கிறது. அதை நாங்கள் மறந்து விட்டோம். திரைக்கு பின்னால் இருந்த குஷ்பு துள்ளி குதித்து மேடையில் போய் நின்று சமாளித்து காட்சியை பிரமாதமாக ஆடி முடித்தாள்.

    இலங்கையில் முழுக்க முழுக்க இளையராஜாவின் பாடல்களை வைத்து ஒரு ஷோ நடத்தினோம். அது பிரமாதமாக இருந்தது. அந்த ஷோவில் குஷ்பு ஆடியது மட்டுமல்ல தொகுப்பாளினி வேலையும் செய்தார். அவர் தொகுப்பாளினியாகிவிட்டால் பிரமாதமாக பண்ணுவார்.

    குஷ்பு ரொம்ப ஜாலியான பெண். அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் இவ்வளவு நேரம் தான் ஆடவேண்டும் என்றெல்லாம் நினைக்கமாட்டார். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆடுவார். குஷ்புவும், பிருந்தாவும் ஒன்று சேர்ந்துவிட்டால் அவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே கிடையாது. நான் நடன காட்சிகளுக்காக கம்போஸ் பண்ணிக்கொண்டு இருப்பேன். எனது வலது புறம் ஒருவரும், இடது புறம் ஒருவருமாக இருந்து கொண்டு அவர்கள் கேலி, கிண்டல் செய்வதற்கு அளவே இருக்காது. நான் கொஞ்சம் கோபப்பட்டு சத்தம் போட்டால் தான் இருவரும் எழுந்து செல்வார்கள்.

    குஷ்பு எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று நாங்கள் சொல்வதற்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும் என் அம்மா இறந்த தருணத்தில் அந்த தகவலை கேட்டதும் உடனடியாக வீட்டிற்கு ஓடி வந்தார். சொந்த அம்மாவை இழந்த மாதிரி எங்களுடன் அழுது புரண்டார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை தேற்றிக்கொண்டு எங்களை தேற்றத் தொடங்கினார். அருகிலேயே அமர்ந்து கொண்டு அக்கா சாப்பிடுங்க, அக்கா சாப்பிடுங்க என்று சோறு கூட ஊட்டிவிட்டார். அந்த அளவுக்கு அக்கறையோடு எங்களை பார்த்துக்கொண்டவர்.

    குஷ்புவை பற்றி பேசிகிட்டே போகலாம். என்ன துணிச்சல்? என்ன தைரியம்? யாருக்கும் பயப்படமாட்டார். மனசாட்சிக்கு மட்டும்தான் பயப்படுவார்.

    தமிழே தெரியாமல் தமிழகத்துக்கு வந்த குஷ்புவை சினிமாவில் அறிமுகப்படுத்தியதையும் அவரது முயற்சியால் இன்று அடைந்திருக்கும் உயரத்தை பற்றியும் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சார் ஒரு நிகழ்ச்சியில் பெருமையாக கூறினார்.

    அதே போல் 24 வருடங்களுக்கு முன்பு கஸ்தூரிராஜா நாட்டுப்புற பாட்டு என்ற படத்தை தொடர்ந்து எடுக்க முடியாமல் சிரமப்பட்டதையும் அந்த படத்தில் 'ஒத்தை ரூபாய் தாரேன்' என்ற பாடலுக்கு இரவு, பகலாக 36 மணி நேரம் நடித்து கொடுத்ததையும் அதற்காக தலையில் ஒரு இரும்பு கிளிப்பை மாட்டிக் கொண்டு அந்த வலியையும் தாங்கி கொண்டு நடித்ததை உணர்ச்சி பூர்வமாக அவர் கூறியபோது நானும் உணர்ச்சி வயப்பட்டேன்.

    அவருக்கு இருக்கும் திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும் சினிமாவை போல் அரசியலில் நிச்சயம் சாதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

    Next Story
    ×