என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நிதானமே பிரதானம்!
    X

    நிதானமே பிரதானம்!

    • வாழ்க்கையில் எதுவாக இருந்தாலும் அளவு மீறாமலும், குறையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • கசந்தாலும் பாகற்காய் உடம்பிற்கு மருந்தாகப் பயன்படக் கூடியது.

    வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதில் ஆர்வமாய் இருக்கும் அன்பின் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    நிதானம் என்பது, எதையும் கூடாமலும் குறையாமலும் பார்த்துக்கொள்வது; தேவையான அளவை எப்போதும் சரியான முறையில் கையாள்வதும் ஆகும். மனிதன் பல்வேறு உணர்வுகளின் கூட்டுக் கலவையாக இருக்கிறான்; அவனுக்கு படக்கென்று கோபம் பொத்துக்கொண்டு வந்து விடும்; கோபம் மட்டுமா? அழுகையும்கூட சில வேளைகளில் கண்ணீரை ஆறாய்ப் பெருக்கி அவனைச் சோகத்தில் தத்தளிக்க வைத்துவிடும். சிரிப்பு, கருணை, இளக்காரம், அச்சம், பெருமைப் பீத்தல், சந்தோஷம் என்று எல்லாவகையான உணர்வுகளும் அவ்வவற்றின் கட்டுக்குள் அடங்காமல், நிதானம் மீறி, எல்லை தாண்டும்போது அவனை மனிதநிலை தாண்டிய தள்ளாட்டத்திற்குள் தள்ளிவிடும். போதைப் பழக்கத்தில் ஈடுபடும்போது அதற்குள்ளும் ஒரு நிதானம் தேவை என்று எல்லாரும் வலியுறுத்துவது உண்டு. ஏனென்றால் நிதானம் தவறிய போதை மனிதனை, இழிமனிதனாக ஆக்கிவிடும்; அவன் செய்வது இன்னதென்று அவனே அறியமுடியாத போது, அவனது போதையே நஞ்சாக மாறி அவனைப் பிணநிலைக்கு மாற்றிவிடும்.

    "துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்

    எஞ்ஞான்றும்

    நஞ்சுண்பார் கள்ளுண்பவர்"

    மதுவுண்பவர் நஞ்சுண்பவர் ஆவர் என்று வள்ளுவர் குறிப்பிடுவதை ஒப்பிட்டுப் பார்த்தால், நிதானம் மீறுதல் என்பதே செத்துப் போவதற்குச் சமமானது ஆகும். 'சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி' எனும் வள்ளுவ வாக்கியமும் கூட அளவுக்கு மீறிய கோபம், கொண்டவனையும் அழித்துவிடும் என்று எச்சரிக்கை செய்கிறது.

    வாழ்க்கையில் எதுவாக இருந்தாலும் அளவு மீறாமலும், குறையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். 'மிகினும் குறையினும் நோய் செய்யும்' என்பது உடல்நிலை சார்ந்த பராமரிப்புக்கு மட்டுமல்ல; வாழ்நிலை சார்ந்த எல்லாவற்றிற்கும் பொருந்தி வருவது ஆகும். அருந்துபவர்க்குச் சாவா மூவா நிலையை அளிக்கக் கூடியது அமுதம் ஆகும்; ஆனால் அந்த அமிர்தத்தையும் கூட நிதானமின்றி அருந்தக்கூடாது என்பதை, 'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்னும் பழமொழி எடுத்துக் கூறுகிறது. 'இனிப்பாக இருக்கிறது' என்பதற்காக லட்டுப் பலகாரத்தை உணவில் அதிகமாக எடுத்துக்கொள்வதும், கசப்பாக இருக்கிறது என்பதற்காகப் பாகற்காயை அளவைக் குறைத்து உணவில் எடுத்துக்கொள்வதும் கூடாது. கசந்தாலும் பாகற்காய் உடம்பிற்கு மருந்தாகப் பயன்படக் கூடியது.

    நிதானமான சூட்டில் அதிகாலைக் குளியலில் தொடங்குகிற அன்றாட வாழ்க்கை, நிதானமான காற்றோட்டத்தில் காற்றாடி சுழல உறங்கப் போவது வரை நிதானமாக இயங்கினால், வாழ்க்கை நிதானமான இன்பத்தோடு நிலைத்து நீடிக்கும். நிதானமாகப் பேசுவது, நிதானமாக உண்பது, நிதானமாகப் பணிகள் மேற்கொள்வது, நிதானமாக உறக்கம் கொள்வது என்று எல்லாவற்றிலும் ஒரு நிதானத்தைக் கடைப்பிடித்தால், எதிர்பார்ப்பிலும் எல்லைமீறாது! ஏமாற்றமும் விரக்தியும் இல்லவே இல்லாமல் போய்விடும்.

    ஒரு சாம்பார் வைக்கப்படுகிறது என்றால், அதில் சேர்க்கப்படுகிற பருப்பு, மிளகாய், புளி, மல்லி, வெங்காயம், தக்காளி, காய்கறிகள் என்று எல்லாச் சேர்மானங்களிலும் ஒரு நிதானம் இருந்தால் அதில் இயல்பான சுவை இருக்கும். நிறைவாகத் தாளித்து இறக்குவதற்குப் பயன்படுத்துகின்ற எண்ணெய், கடுகு உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் உப்பு ஆகியவற்றிலும்கூட சரியான அளவைநிலை இருந்தால் சாம்பாரின் மணமும் சுவையும் தூக்கலோ தூக்கல்தான். நிதானம் என்பது நிறுத்தல், முகத்தல், நீட்டல் அளவைகளால் மட்டும் வருவது அல்ல; கண் அளக்காததைக் கை அளப்பதில்லை; கருவிகளும் அளப்பதில்லை. கண்ணும் மனமும் அனுபவத்தால் அளந்து அளந்து 'போதும்' என்கிற நிதானத்திற்குள் கொண்டு வருவதே சரியான அளவை ஆகும்.

    சுந்தர ஆவுடையப்பன்


    சமையலுக்குச் சாம்பார் வைப்பது போன்றதுதான் சமுதாய வாழ்க்கையில் ஒரு குடும்பதை அமைத்து வழிநடத்துவதும். கணவன் மனைவி குழந்தைகள், மூத்தோர் என அனைத்துச் சேர்மானங்களும் நிதானமான உணர்வுச் சேர்க்கைகளோடு ஒருங்கிணைந்து, கருத்து மேடுபள்ளங்களை விட்டுக் கொடுத்தல் வழியாகச் சமப்படுத்தி, விருப்பங்களையும் ஆசைகளையும் நிதானப்படுத்தி வாழ்ந்தால் அதுவே ஆனந்தக் குடும்பம்.

    "அளவறிந்து வாளாதான் வாழ்க்கை

    உளபோல

    இல்லாகித் தோன்றாக் கெடும்"

    எனும் வள்ளுவர் வாசகமும் வருவாய்க்கேற்ப வாழ்க்கையைச் சிறுகக் கட்டிப் பெருக வாழ்! என்பதை வலியுறுத்துகிறது. இதில் வரும் 'அளவு' என்கிற சொல்லின் சரியான பொருள், வருகிற வருவாயின் அளவிற்கேற்ப மாறுபடும். எப்படியாயினும், அளவிற் சுருங்கி விடாமலும், அளவிற் பெருகிவிடாமலும், நிதான அளவில் செயல்படுவதே அளவான செயல்பாடு ஆகும். மயில்தோகை மென்மையானதுதான் என்றாலும் அதற்கும் ஓர் எடை இருக்கிறது; ஏற்றுகிற வண்டி ஐந்து டன் எடைமட்டுமே சுமக்கும் வலிமைமிக்கது என்றால், ஏற்றப்படுவது மென்மையான மயில்தோகைதானே என்று எடைக்குமீறிய சுமையை ஏற்றினால் நிச்சயம் வண்டியின் அச்சு முறிந்துபோகும்தானே?. இதைத்தான் வள்ளுவப் பேராசான்,

    "பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

    சால மிகுத்துப் பெயின்"

    எனும் குறளில் எடுத்து விளக்குகிறார். பணியிடங்களில், குடும்பப் பொறுப்புகளில், திறமைக்கு மீறிய, தகுதிக்கு மீறிய பணிச் சுமைகளில் அகப்பட்டுக்கொண்டு சிலர் அல்லாடும் நிலையை இக்குறளோடும் பொறுத்திப் பார்த்துத் திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். நிதானம் அறிந்து ஏற்றுக்கொள்வதும் விலகிக் கொள்வதும் முக்கியமானது ஆகும்.

    நிருவாகத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், தமக்குக் கீழுள்ள பணியாளர்களிடம் பணியைப் பகிர்ந்து தருவதைக் காட்டிலும், நிரந்து தருவதில் அக்கறை காட்ட வேண்டும். சிலர் ஆர்வத்தோடும் நேர்த்தியோடும் விரைவோடும் தட்டாமலும் பணிகளைச் செய்கிறார்கள் என்பதற்காக அவர்களிடமே அதிகப் பணிகளை வழங்கி, அவர்கள்மீது பணிச் சுமைகளை ஏற்றி வைக்கக் கூடாது; வண்டி அச்சு முறிந்துபோக நேரிடும். பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போதும் நிதானத்தோடு செயல்பட வேண்டும். 'காரியம் முக்கியமா? வீரியம் முக்கியமா?' என்று கேட்டால் காரியம்தான் நமக்கு முக்கியம். எனவே, அவ்வாறு சண்டித்தனம் புரிபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்போது, 'கடிதோச்சி மெல்ல எறிக!' எனும் புதுமையான உத்தி ஒன்றை நமக்குக் கற்றுத் தருகிறார் திருவள்ளுவர். 'குறிவைப்பதிலும் எறியும் விசை அசைவிலும் விரைவு காட்டுங்கள்! தண்டனை மெலிதானதாகவே இருக்கட்டும்!' என்கிறார். 'அடிக்க ஓங்குவது பலமாக விரைவாக இருக்கட்டும்!; அடி மெதுவாக மட்டுமே விழட்டும்!'.

    சிலர் எப்போதும் பரபரப்பாகவே இருப்பார்கள்; எல்லாவற்றையும் நிதானமின்றி அவசரகதியிலேயே செய்து முடிப்பார்கள். எந்தச் செயலிலும் முழுமையும் திருப்தியும் அடையவே மாட்டார்கள். நிதானம் நமது தாவித் திரியும் ஆசைகளுக்குக் கடிவாளம் போடுகிறது; எல்லாச் செயல்களிலும் ஒரு நேர்த்தியைக் கொண்டுவந்து சேர்க்கிறது; நிதானமும் மன அமைதியும் கூடிவிட்டால் எல்லையற்ற அமைதி எப்போதும் நம்முடையதாகவே இருக்கும்.

    புத்தரிடம் ஒருவன் புதிதாகச் சீடனாகச் சேர்ந்தான்; அவன் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். சேர்ந்ததிலிருந்து எப்போதும் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கி கொண்டிருந்தான்; யார் என்ன சொன்னாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை. எதைச் செய்தாலும் விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்; மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டுமென்று கூறினான். 'எடுத்தேன்! விடுத்தேன்!' என்பதைப்போல எல்லாச் செயல்களும் அவனுக்கு உடனுக்குடன் நடைபெற்றாக வேண்டும்.

    இந்தப் பணக்காரச் சீடனின் பரபரப்பு நடவடிக்கைகளைச் சிலநாள்கள் தொடந்து கவனித்த புத்தர் ஒருநாள் அவனது அறைக்குள் திடீரென நுழைந்தார். அவரது வருகைக்கு மகிழ்ந்த சீடன் அவரை வரவேற்றான். சீடனின் அறைக்குள் புத்தம்புதிய வீணை ஒன்று இருந்தது. "ஆகா! புத்தம்புதிய வீணையா? எனக்கு வீணை வாசிக்க வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது!. வாசிக்கட்டுமா?" என்று சீடனிடம் கேட்டார் புத்தர். "தங்களின் திருக்கரம் படுவதற்கு இந்த வீணை என்ன புண்ணியம் செய்ததோ?; தாராளமாக வாசியுங்கள் குருவே! " என்றான் சீடன்.

    புத்தர் வீணையை எடுத்து, வாசிப்பதற்காக நரம்புகளை முறுக்கேற்றத் தொடங்கினார். முறுக்கேற்றத் தொடங்கியவர், தொடர்ந்து நரம்புகளை முறுக்கேற்றிக் கொண்டே போனார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சீடன், " இவ்வாறு தொடர்ந்து முறுக்கேற்றிக் கொண்டே சென்றால், நரம்புகள் முறுக்கேறி, முறுக்கேறி அறுந்துபோக நேரிடும்; பிறகு வீணை வாசிக்கவே முடியாது!" என்றான். உடனே புத்தர், முறுக்கேற்றிய நரம்புகளைத் தளர்த்தும் வேலையில் ஈடுபட்டார். இப்போது நரம்புகள் தளர்ந்து தளர்ந்து தொய்ந்து தொங்கிப் போக ஆரம்பித்தன. இப்போதும் சீடன் புத்தரைப் பார்த்துக் கூறினான்," குருவே! நரம்புகளை அதிகமாகத் தளர்த்தினாலும் அதனை வாசிக்க முடியாது; நீங்கள் இப்போது மிகவும் தளர்த்தி விட்டீர்கள்!".

    இப்போது புத்தர், சீடனைப் பார்த்துக் கூறினார், " மிகச் சரியாகக் கூறினாய்!. அளவுக்கு அதிகமாக நரம்புகள் முறுக்கேற்றப்பட்டாலும் வீணையை வாசிக்க முடியாது; அளவுக்கு அதிகமாக நரம்புகள் தளர்ந்து போனாலும் வாசிக்கமுடியாது. ஒரு நிதானமான அளவில் நரம்புகளின் முறுக்கு இருந்தால் மட்டுமே வாசிக்க முடியும். வாழ்வில் நமது செயல்களும் அப்படித்தான்; அதிகக் கூடுதலான பரபரப்புகளோடும் எதிர்பார்ப்புகளோடும் செயலில் ஈடுபடக்கூடாது; முறிந்து போகும். அதே போல எந்தவிதமான ஈடுபாடும் ஆர்வமும் இல்லாமல் ஒரு செயலில் ஈடுபட்டால் அது சோம்பலில் கருகி அழிந்து போகும். எல்லாவற்றிலும் நிதானம் தேவை!" என்றார் புத்தர்.

    விரைவான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; நம்மைவிட விரைவாக நாம் கண்டுபிடித்த இயந்திரங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கணக்குப்போட்டு நமக்கு முன்பாக நமக்குச் சொல்லிவிடுகின்றன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனிதம் கண்டுபிடித்த மனிதகுலச் சவாலாக இப்போது பேருருவம் எடுத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் 60 கிலோமீட்டர் வேகம் அதிவேகம் என்று இருந்தது, இப்போது 120 கிலோமீட்டர் வேகம் நல்வேகம் எனப் போக்குவரத்து வேகமெடுத்திருக்கிறது. போர்களும் போர்க்கருவிகளும் அறிவின் கொடைகளாய், அறிவியலின் படைகளாய் ஒருபக்கம் அணிவகுத்து அமைதிகலைத்து நிற்கின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் கேள்விக்குறிகளே பதில்கள் என்றால் எதிர்காலம் என்னாவது?.

    இந்தச் சூழ்நிலையில், சிந்தனையில் நிதானம், செயலில் நிதானம், நிதானத்திலும் காலப் போக்கிற்கேற்ற நிதானம் கடைப்பிடித்தால் நிலைத்த அமைதியும் ஆனந்தமும் நமதே!

    தொடர்புக்கு 9443190098

    Next Story
    ×