என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- கல்லூரி முதல்வர் செய்த உதவி!
    X

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- கல்லூரி முதல்வர் செய்த உதவி!

    • கல்லூரி நண்பர்களில் பெரும்பாலானவர்கள் சிக்கனமாக இருப்பதை அப்போது அவர் உணர்ந்தார்.
    • முதல்வர் ராஜாராம் தன்னிடம் தனி அன்பு வைத்து இருக்கிறார் என்பது சிவாஜி ராவுக்கும் தெரியும்.

    திரைப்படக் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததை நினைத்து சிவாஜி ராவ் தவிப்பின் உச்சத்துக்கே சென்று விட்டார். நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் வருகிறது என்று நினைத்துப் பார்த்தார். கல்லூரி நண்பர்களில் பெரும்பாலானவர்கள் சிக்கனமாக இருப்பதை அப்போது அவர் உணர்ந்தார்.

    தன்னைப் பொறுத்தவரை சிகரெட் புகைப்பதற்கு அதிகம் பணம் செலவாகிறது என்பது அவருக்கு நன்றாக தெரிந்தது. அவர் ஒவ்வொரு தடவையும் சிகரெட் புகைக்கும் போது ஏன் இப்படி காசை வீணாக்குகிறாய் என்று நண்பர்கள் அறிவுரை சொல்வதை நினைத்துப் பார்த்தார். சாப்பிடாமல் கூட இருந்து விடுவேன். ஆனால் சிகரெட் புகைக்காமல் என்னால் இருக்கவே முடியாது என்று ஒவ்வொரு தடவையும் சிவாஜிராவ் சொல்வது உண்டு. சிகரெட் வாங்க முடியாத சூழ்நிலையில் பீடி வாங்கி புகைக்கவும் அவர் தயங்கியது இல்லை.

    ஒரு தடவை பீடி கூட வாங்க முடியாத அளவுக்கு சுத்தமாக கையில் பணம் இல்லாமல் தவித்தார். என்ன செய்வது என்று அங்கும் இங்கும் பார்த்த அவரது கண்களில் திரைப்படக் கல்லூரி பியூன் வீரைய்யா தென்பட்டார். வீரைய்யாவுக்கு பீடி புகைக்கும் பழக்கம் உண்டு. அவரிடம் ஓடிச்சென்று ஓசி பீடி வாங்கி சிவாஜி ராவ் புகைத்தார். அந்த அளவுக்கு புகை பிடிப்பதில் சிவாஜி ராவ் இன்பம் கண்டு இருந்தார். ஆனால் அதுதான் அவரை துன்ப நிலைக்கும் தள்ளி இருந்தது. அத்தகைய துயரத்துடன் திரைப்படக் கல்லூரி முதல்வர் அறைக்குள் சென்றார்.

    திரைப்படக் கல்லூரி முதல்வர் ராஜாராம் தனது இருக்கையில் தலை குனிந்தபடி எதையோ எழுதிக் கொண்டிருந்தார். சிவாஜி ராவை பார்த்ததும் "வா...வா... சிவாஜி உட்கார்" என்று அன்போடு கூறினார். இதுதான் சிவாஜி ராவுக்கு அவரையும் அறியாமல் அவரது குல தெய்வமும், இஷ்ட தெய்வமும் அமைத்துக் கொடுத்த அருமையான வழிகாட்டல் என்று சொல்லலாம். ஆம், உண்மையிலேயே அந்த கல்லூரி முதல்வர் காட்டிய அன்பும் பரிவும் குலதெய்வத்தின் கருணைக்கு ஈடானது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு சிவாஜிராவ் மீது பாசத்தைக் காட்டி அவரது நடிப்பு ஆர்வத்தை பல தடவை முதல்வர் ராஜாராம் பாராட்டி இருக்கிறார்.

    அதனால்தான் சிவாஜி ராவின் ஏழ்மையை கருத்தில் கொண்டு அவரையும் அறியாமல் பல தடவை பல உதவிகள் செய்து இருக்கிறார். முதல்வர் ராஜாராம் தன்னிடம் தனி அன்பு வைத்து இருக்கிறார் என்பது சிவாஜி ராவுக்கும் தெரியும். அந்த நன்றி உணர்வுடன் அவர் முன்பு பவ்வியமாக அமர்ந்து இருந்தார். "என்ன விஷயம். எதற்காக என்னைப் பார்க்க வந்து இருக்கிறாய்?" என்று முதல்வர் ராஜாராம் கேட்டார். சிவாஜி ராவுக்கு ஒரு பக்கம் வேதனை கலந்த வெட்கமாகவும், மறுபக்கம் தாங்க முடியாத துயரமாகவும் இருந்தது. விட்டால் கதறி... கதறி... அழுதுவிடுவார் என்ற நிலையில்தான் அவர் இருந்தார்.

    மெல்லிய குரலில் மிகவும் தயங்கியபடி, "சார்... என் கல்லூரி கட்டணம்..." என்று முடிக்காமல் வார்த்தையை இழுத்தார். சிவாஜிராவை நிமிர்ந்து பார்த்த ராஜாராம், "அதற்கு என்னப்பா?" என்று மென்மையாக கேட்டார். சிவாஜி ராவுக்கு சற்று தைரியமும், தன்னம்பிக்கையும் வந்தது. ஆனால் அவரிடம் காணப்பட்ட தயக்கமும், வெட்கமும் அவர் வாயில் இருந்து வார்த்தையை வரவிடாமல் செய்தன.

    "பரவாயில்லை. எதுவாக இருந்தாலும் என்னிடம் தைரியமாக சொல்லலாம்" என்று ராஜாராம் தன்னம்பிக்கை அளித்தார். இதையடுத்து சிவாஜிராவ் பேசத் தொடங்கினார். "சார்... கல்லூரி கட்டணம் கட்டுவதற்கு இன்றுதான் கடைசிநாள். நான் எவ்வளவோ முயற்சி செய்து விட்டேன். எனக்கு பணம் கிடைக்கவில்லை. இப்போது என்னிடம் கையில் ஒருபைசா கூட கிடையாது. வீட்டில் இருந்து வந்த பணம் அனைத்தும் சாப்பாடுக்கு சரியாகி விட்டது. என்ன செய்வது எனக்கு ஒன்றும் தெரியவில்லை" என்றார்.

    அவர் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு சொட்டு... சொட்டாக... விழ ஆரம்பித்தது. முதல்வர் ராஜாராம் பொறுமையாக "அழாதே பார்த்துக் கொள்ளலாம்" என்றார். என்றாலும் சிவாஜி ராவுக்கு கண்ணீர் நிற்கவில்லை. அலை அலையாக வந்தது. சற்று தெம்பை வரவழைத்துக் கொண்டு சிவாஜிராவ் தொடர்ந்து பேசினார். "சார்... எனக்கு கொஞ்சம் நாட்கள் அவகாசம் கொடுங்கள். 10 நாள் கொடுத்தால் கூட போதும். அதற்குள் நான் கல்லூரி கட்டணத்துக்கான பணத்தைத் தயார் செய்து விடுவேன். எப்படியும் சீக்கிரம் பணம் கட்டி விடுவேன். எனக்கு ஒரே ஒரு வாய்ப்புத் தாருங்கள்" என்றார்.

    இதைக் கேட்டதும் முதல்வர் ராஜாராம் சிரித்தார். "அடடா... இதற்காக ஏன் அழுகிறாய்? கண்ணைத் துடைத்துக் கொள். நீ கவலைப்படாதே. உன் கல்லூரி கல்விக் கட்டணத்தை நேற்றே நான் கட்டி விட்டேன். நீ வகுப்புக்கு போ. நன்றாக பயிற்சி எடுத்துக் கொள். ஒவ்வொரு பயற்சி பாடத்தையும் நன்றாக கவனி. அந்த அர்ப்பணிப்புதான் உன்ைன வாழ்க்கையில் உயர்த்தும்" என்றார்.

    இதை கேட்டதும் சிவாஜிராவுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. வாய் விட்டு கதறி அழுதார். தனது ஏழ்மை நிலை காரணமாக இந்த சூழ்நிலை உருவாகிவிட்டதாக ராஜாராமிடம் கதறினார். பிறகு கை எடுத்து கும்பிட்டு நன்றி கூறினார். இருக்கையில் இருந்து எழுந்து வந்த முதல்வர் ராஜாராம் அப்படியே சிவாஜிராவை அரவணைத்துக் கொண்டு அவர் முதுகில் தட்டிக் கொடுத்தார். கவலைப்படாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. நீ போகலாம் என்றார். சிவாஜி ராவுக்கு மனதில் ஏற்பட்ட கவலை மிகப்பெரிய பாரமாக மாறியது.

    கல்லூரி முதல்வர் ராஜாராமை தெய்வமாகவே பார்த்தார். இதற்கு முன்பும் ஒருமாதம் கல்லூரி முதல்வர் ராஜாராம், சிவாஜிராவுக்கு கல்லூரி கட்டணம் கட்டி இருந்தார். இது 2-வது தடவை. அவரை மனதுக்குள் வணங்கியபடியே சிவாஜி ராவ் வகுப்புக்கு புறப்பட்டு சென்றார்.

    வழிநெடுக அவருக்கு பெங்களூர் வாழ்க்கையின் பழைய நினைவுகள் வந்தது. அனுமந்தராவ் நகர், கவிபுரம், குட்டஹள்ளி பகுதிகளில் எந்த கவலையும் இல்லாமல் சுதந்திர பறவைப் போல சுற்றி திரிந்த நாட்களை அசைப்போட்டு பார்த்தார். அந்த வயதில் சிவாஜிராவ் எப்போதும் கழுத்தில் சைக்கிள் செயினை தொங்க விட்டு இருப்பார்.

    யாராவது அவரிடம் வம்பு செய்தாலோ அல்லது எதிர்மறையாக பேசினாலோ சிவாஜிராவ் அந்த சைக்கிள் செயினை எடுத்து அடிக்கத் தொடங்கி விடுவார். அப்படி பல தடவை பலர் சிவாஜி ராவிடம் சைக்கிள் செயினால் அடி வாங்கி இருக்கிறார்கள். இதனால் அவரை சகோதரர் சத்திய நாராயணராவ் பல தடவை அழைத்து கண்டித்துள்ளார்.

    ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்வார். அந்த அறிவுரை சிவாஜிராவ் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போனது. சென்னைக்கு வந்த பிறகு தனது வாழ்க்கை பாதையும் நடவடிக்கைகளும் முற்றிலுமாக மாறி விட்டதை சிவாஜி ராவ் உணர்ந்தார்.

    திரைப்படக் கல்லூரி ஆசிரியர்களின் அறிவுரைகள் மற்றும் நண்பர்களின் பழக்க வழக்கங்கள் சிவாஜி ராவிடம் அடுத்தடுத்து மாற்றங்களை கொண்டு வந்தன. சிறு வயது பிடிவாதமும், சேட்டைகளும் அவரிடம் குறைந்து இருந்தன. ஒருவித பக்குவ நிலைக்கு அவர் வந்திருந்தார். ஆனால் சிவாஜி ராவுக்குள் உருவாகி இருந்த அந்த பக்குவ நிலையை பரிசோதிப்பது போலதான் கைகளில் சில்லரை காசுகள் கூட இல்லாத பரிதாப நிலை அடிக்கடி உருவானது. என்றாலும் சிவாஜிராவ் மனதுக்குள் சினிமா உலகில் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற தன்னம்பிக்கை மட்டும் போகவில்லை. வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்று உறுதியாக நம்பினார்.

    அன்று திரைப்படக் கல்லூரி வகுப்பு முடிந்ததும் நண்பர்கள் ரகுநந்தன், விட்டல், சதீஷ் மற்றும் சிலருடன் அவர் ஜெமினி பாலம் அருகே நடைபாதையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த பகுதியில் ஏராளமான சினிமாப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. பொதுவாகவே சினிமா போஸ்டர்களை பார்த்தால் சிவாஜி ராவ் அங்கு ஒரு நிமிடம் நின்று உன்னிப்பாக பார்த்து விட்டுதான் அந்த இடத்தை விட்டு நகர்வார்.

    அன்றும் சிவாஜி, எம்.ஜி.ஆர். படப் போஸ்டர்களை ஒருவித எதிர்பார்ப்புடன் ஆசை... ஆசையாக பார்த்தார். அவரது கண்கள் ஏக்கத்துடன் மாறியது. அருகில் இருந்த நண்பர்களிடம், "டேய் நானும் இப்படி சினிமாவில் புகழ் பெற முடியுமா? என் படமும் இப்படி போஸ்டர்களில் அழகாக வருமா?" என்று ஆதங்கத்தோடு கேட்டார்.

    நண்பர்கள் அனைவரும் ஏகோபித்த குரலில், "கவலைப்படாதே சிவாஜி. உனது நேர்மைக்கும், கடினமான உழைப்புக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும். சினிமா உலகில் நீ பெரிய நடிகனாக வருவாய்" என்றனர். என்றாலும் சிவாஜி ராவுக்குள் திருப்தி ஏற்பட வில்லை.

    அந்த பகுதியில் ஒட்டப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் போஸ்டரை பார்த்து, "இப்படி வருவேனா?" என்றார். நண்பர்களும் "நிச்சயமாக உனக்கு இப்படி புகழ் கிடைக்கும்" என்றனர். இதை கேட்டதும் சிவாஜிராவ் மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் கனவு உலகத்துக்குள் சென்று விட்டார்.

    ஒரு தடவை அல்ல... சிவாஜிராவ் எப்போதெல்லாம் சென்னை தெருக்களில் நண்பர்களுடன் நடந்து போகிறாரோ அப்போது எல்லாம் இத்தகைய சம்பவங்கள் நடந்தது. திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து 5 மாதங்கள் நிறைவு பெற்று இருந்தன. இந்த நிலையில் சிவாஜி ராவிடம் புதிய பழக்கம் ஒன்று உருவானது.

    அது அமைந்தகரையில் உள்ள லட்சுமி டாக்கீஸ் தியேட்டரில் தினமும் படம் பார்க்கும் பழக்கம் ஆகும்.

    அப்போது ஏற்பட்ட ஒரு ருசிகர தகவலை நாளை பார்க்கலாம்.

    Next Story
    ×