என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஆசைகளை நிறைவேற்றும் லாப ஸ்தானம்
- சில அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் இருந்தால் நிச்சயமாக அந்த ஜாதகர் தனவானாக தர்ம பிரபுவாக கோடீஸ்வரனாக வாழ்வார்கள்.
- பிறவியில் ஏழையாக இருந்தாலும் அதீத பொருளாதார வளர்ச்சி உண்டு.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது புத்தரின் வாக்காகும். ஆனாலும் ஆசைப்படாத மனிதர்களே உலகத்தில் இருக்க முடியாது. 50 ரூபாய் சம்பாதிப்பவர்களுக்கு ஐந்தாயிரம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வரும். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆசையும் விருப்பங்களும் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஒருவரின் ஆசையும் விருப்பமும் நிறைவுபெறுமா? என்பதை ஒரு ஜாதகத்தில் 11-ம் மிடமான லாப ஸ்தானத்தின் மூலமே அறிய முடியும். ஒருவர் தன் வாழ்வில் விரும்பிய அனைத்தையும் அடைய லாப ஸ்தானம் உதவ வேண்டும். எந்த ஒரு பாவக பலனை ஒரு ஜாதகர் அடைய விரும்புகிறாரோ அந்த பாவகத்திற்கு 11-ம்மிடம் சுபத்துவமாக இயங்கினால் மட்டுமே ஜாதகருக்கு கைமேல் பலன் கிடைக்கும். உதாரணமாக ஒரு ஜாதகரின் செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவம், தோற்றப் பொலிவு, வாழ்க்கை நிலை போன்றவற்றை லக்ன பாவகத்தின் மூலமே அறிய முடியும்.
லக்ன பாவத்திற்கு லாப ஸ்தானமான 11-ம்மிடம் வலிமையாக செயல்பட்டால் மட்டுமே ஜாதகருக்கு செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவம், போன்றவைகள் நிலைத்து நிற்கும். ஒருவரது விருப்பங்கள் லட்சியங்கள் கனவுகள் ஆசைகள், பலவிதமான வழிகளில், லாபங்கள், செல்வ செழிப்பு, நல்ல வருமானம் நிலை, பலமொழி தேர்ச்சி ஆகியவற்றை கூறுவது 11-ம்மிடமான லாப ஸ்தானமாகும். 11-ம் பாவக பலன்களை ஒருவர் பரிபூரணமாக அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு லாப ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் அதற்கான கொடுப்பினை பதியப்பட்டு இருக்க வேண்டும். அதாவது ஒன்பதாம் இடம் என்பது ஜாதகரின் பாக்கியஸ்தானம்.
ஜாதகரின் முன்னோரும் ஜாதகரும் கடந்து வந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருந்தால் இந்த ஜென்மத்தில் ஜாதகர் செல்வந்தராக பல தொழில் வித்தகராக வாழ முடியும். அதேபோல் ஒருவருக்கு குழந்தை பிராப்தம் இல்லை எனில் 5-ம், 9-ம்மிடத்தையும் குருவின் நிலையையும் பார்க்க கூடாது. இந்த 5,9-ம் பாவகம் மூலம் பூர்வ புண்ணிய ஸ்தானப்படி. பாக்கிய ஸ்தான பலப்படி இந்த ஜாதகருக்கு குழந்தை பாக்கியத்தை அனுபவிக்க கூடிய கொடுப்பினை உள்ளதா என்பதை அறிய முடியும். ஆனால் வீரியம் (3ம் பாவகம்) இருந்தால் மட்டுமே 5-ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய பலப்படி குழந்தை பிறக்கும். 5-ம் பாவகத்திற்கு லாப ஸ்தானம் 3-ம்மிடம் சிறப்பாக இயங்கினால் ஜாதகர் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். பல்வேறு சூட்சுமங்களையும் அடக்கியது ஜோதிடம். கீழ்கண்ட சில அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் இருந்தால் நிச்சயமாக அந்த ஜாதகர் தனவானாக தர்ம பிரபுவாக கோடீஸ்வரனாக வாழ்வார்கள்.
11-ம் அதிபதி சர ராசியில் நின்றால் தடையில்லாத பண வரவு இருக்கும். 11-ம் அதிபதி ஸ்திர ராசியில் நின்றால் லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் மாத வருமானம் அல்லது வருட வருமானமாக இருக்கும்.
11-ம் அதிபதி உபய ராசியில் நின்றால் வரக் கூடிய வருமானம் நிலையற்றதாக இருக்கும். 11-ம் அதிபதியின் சாரத்தில் ஏதாவது ஒரு கிரகம் நின்றால் ஜாதகருக்கு உபரியான சரளமான பணப்புழக்கம் உண்டு.
11-ம் பாவகத்தை ஏதாவது ஒரு கிரகம் பார்த்தாலும் நின்றாலும் தேவைக்கு அதிகமாக பணம் வரும். 11-ம் பாவக அதிபதி யோகியின் நட்சத்திரத்தில் இருந்தால் சிறப்பான பொருளாதாரம் உண்டு.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
11-ம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றால் தொடர்ச்சியாக நல்ல வருமானம் வந்து கொண்டே இருக்கும். 11-ம்மிடத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற கிரகம் நின்றாலும் தாராளமான தனவரவு இருக்கும்.
கிரகச் சேர்க்கையை பொருத்தவரை 11-ம்மிடமான லாப ஸ்தானத்திற்கு குரு+சுக்ரன், குரு+சந்திரன், சனி + சுக்ரன், சனி + குரு சேர்க்கை சம்பந்தம் இருந்தால் ஜாதகருக்கு பொருளாதாரத்தில் மேன்மையான பலன்கள் உண்டாகும். ஒருவருக்கு சுய ஜாதக ரீதியான பணம் வரக்கூடிய அமைப்பு இல்லை என்றால் கோட்ச்சார கிரகங்கள் 11-ம் மிடமான லாபஸ்தானத்திற்கு சம்பந்தம் வரும்போது பணவரவை ஏற்படுத்தி தரும்.
ஒரு கேந்திராதிபதியும் ஒரு திரிகோணாதி பதியும் சேர்ந்து 11-ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றால் அதன் தசா புத்தி காலங்களில் ஜாதகருக்கு அதிகப்படியான பணம் வரும். இதில் 11ம் மிடம் பாதகஸ்தானமாக இருந்தால் தேவைக்கு அதிகமாக பணம் இருந்தாலும் ஜாதகரால் அதை பயன்படுத்த முடிவதில்லை. அது ஜாதகரைச் சார்ந்தவர்களுக்கே பெரும்பான்மையாக பயன்படும்.
9-ல் குரு 11-ல் சுக்கிரன் ஜாதகர் மிகப்பெரிய தனவானாக இருப்பார். தன அதிபதி 11-ல் நின்றால் ஜாதகர் எப்பொழுதும் பணம் சம்பாதித்துக் கொண்டே இருப்பார்.
ஒருவர் எந்த ராசியாக இருந்தாலும் லக்னத்திற்கும் தனஸ்தானத்திற்கும் முன்பின் ராசிகளில் சுப கிரகங்கள் இருந்தால் வாழ்நாள் முழுவதும் உபரி லாபம் கிடைத்துக் கொண்டே இருக்கும். பல்வேறு வகையில் தனபிராப்தி, சொத்து சேருதல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து பல வகையில் வருவாய், லாபம் போன்றவற்றை குறிப்பது 11-ம் மிடமான லாப ஸ்தானம்.
ஒரு ஜாதகத்தில் லாபாதிபதி சாரத்தில் அதிக கிரகம் இருக்கலாம். 11-ம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் பலம் பெற்ற கிரகம் நின்றால் ஜாதகர் அதிர்ஷ்டப்பிறவி. கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பா, மூத்த சகோதரருடன் வசதியான கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வாழ்வார்கள்.
அவர்களால் லாபமும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கோடீஸ்வர யோகம், சமுதாய அந்தஸ்து, அரசியல் ஆர்வம், அதிகாரம், கவுரவம் உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் நடத்துவார்கள். கூட்டுத் தொழில் வெற்றி தரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். அதிகமான ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். சிலருக்கு இரண்டாவது குடும்பம் அமைந்த பிறகு பண வரவு அதிகமாகும். ஜாதகருக்கு பணம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் லாபம் தரும். சிறுவயதிலேயே வருமானம் ஈட்டத் துவங்குவார்கள். வங்கித் தொழில், வட்டித் தொழில், பைனான்ஸ், சீட்டு பிடித்தல் போன்றவற்றில் நல்ல ஆதாயம் உண்டு. பேச்சை ழூலதனமாக கொண்ட தொழிலில் சாதனை படைப்பார்கள். அடுத்தவர் பிரச்சினையை தீர்த்து வைப்பவர். தன் சுய சம்பாத்தியத்தில் வீடு, வாகனம், சொத்து சுகம் போன்ற வசதிகளை அடைவார்கள். ஜாதகருக்கு மூத்த சகோதரத்தால், சித்தப்பாவால் ஆதாயம் உண்டு. பிறவியில் ஏழையாக இருந்தாலும் அதீத பொருளாதார வளர்ச்சி உண்டு.
லாப ஸ்தான அதிபதியின் நட்சத்திர சாரத்தை எந்த கிரகமும் பெறவில்லை எனில் பொது வாழ்க்கையில் பிரச்சினைகள், ஏமாற்றங்கள் வரும். தீய சகவாசத்தால் பெயர் கெடும். எவ்வளவு சம்பாதித்தாலும் இவர்களால் பணத்தை சேமித்து வைக்கவே முடியாது. பொருளாதாரத்தில் தன் நிறைவற்ற நிலையைத் தரும்.
இருதார யோகமும் லாப ஸ்தானமும் ஒரு காலத்தில் இலை மறைவு காய் மறைவாக நடந்த இரண்டாம் திருமணங்கள் அல்லது சட்டத்திற்கு உட்படாத மறைவான திருமண வாழ்க்கை இருந்து வந்தது. தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் வெகு சாதாரணமாகிவிட்டது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற மரபு மறைந்துவிட்டது.
இதற்குக் காரணம் சமூக சீர்கேடா அல்லது ஜாதகமா என்று ஆய்வு செய்தால் சமூகச் சீர்கேடு தான் என்பது என்னுடைய கருத்து. சுமார் 20 வருடங்களுக்கு குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் பெரியவர்களின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். தற்போது ஆண் பெண் இருவரும் படித்து வேலைக்கு செல்வதால் சுய முடிவு எடுத்து தமது வாழ்க்கை சீரழிவதற்கு தாமே காரணமாகிறார்கள்.
7-ம் அதிபதிக்கு லாப ஸ்தான சம்பந்தம் இருந்தால் தம்பதிகள் திரண்ட சொத்து, ககம் நிரம்பியவர்கள். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமும் அனுகூலமும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு நிரம்பிய வாழ்க்கை துணை உண்டு. வருமானம் எந்த வழியில் வருகிறது என்று உணர முடியாத வகையில் குபேர சம்பத்து கிடைக்கும். பெரும்பாலும் கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள். நல்ல வசதியான வாழ்க்கைத் துணை அமையும். அல்லது திருமணத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நிலையான பொருளாதார வளர்ச்சி வீடு, வாகன யோகம் உண்டு. வாழ்க்கைத் துணை மற்றும் நண்பர்களுடன் இணைந்து கூட்டுத் தொழிலில் ஈடுபடுவார்கள்.
நல்ல வாடிக்கையாளர்கள் அமைவார்கள். ஏழாமிடம் பலம் குறைந்தால் இருதார யோகத்தைத் தந்து விடும். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு பொருளாதார வளர்ச்சி உண்டாகும். சிலருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு இரண்டாம் திருமணம் நடக்கும். பொதுவாக 7,11 சம்பந்தம் உள்ளவர்கள் ஊருக்கு ஒன்று, உல்லாசத்திற்கு ஒன்று என்று தான் வாழ்கிறார்கள். இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் எத்தனை திருமணம் நடத்தாலும் திருமண வாழ்க்கை நரகமாகவே இருக்கும். ஊரார் மத்தியில் நன்றாக வாழ்வது போல் தோன்றினாலும் வெறுமையே மிஞ்சும்.
ஒரு ஜாதகத்தில் 7,11-ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் இருதார யோகம் உண்டாகும்.
7-ம் அதிபதி பலம் குறைந்து 11-ம் அதிபதி வலுப்பெறும் போது வெகு சுலபமாக மறு திருமணத்திற்கு அழைத்துச் செல்லும். 2,7-ம் அதிபதிகள் 11-ம் பாவகத்தோடு சம்பந்தம் பெறுதல்,11-ம் அதிபதி 2,7-ம் பாவகத்தோடு சம்பந்தம் பெறுவது, வலுவான தார தோஷம் ஆகும்.
11-ம் பாவகத்திற்கு திரிகோணதிபதிகள் சம்பந்தம் பெறும் போது சட்டப்படியான மறுமணமாகவும், அசுப மற்றும் லக்ன பாவிகள் சம்பந்தம் பெறும் போது சட்டத்திற்கு புறம்பான உறவும் ஏற்படுகிறது.
11-ல் இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்ந்தாலும் 1, 11-ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெறும் போது இரு தாரம் ஏற்படுகிறது.
7-ம் அதிபதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கிரகம் சம்பந்தம் பெறுவது இரண்டுக்கும் மேற்பட்ட திருமணத்தை கூட தரும். கூட்டுத் தொழிலும் லாப ஸ்தானமும் நான்காவது உப ஜெய ஸ்தானம் 11-ம் பாவகம். 3-ம் பாவகத்திற்கு பாக்கிய ஸ்தானம் 11-ம் பாவகம். 10-ம் பாவகத்திற்கு தன ஸ்தானம் 11-ம் பாவகம். லாப ஸ்தானம் பலம் பெற்றால் பல தொழில் வித்தகர்கள். அண்ணன், தம்பி என குடும்பமே முன்னேற்றத்திற்காக முயற்சி செய்வார்கள். கூட்டுக் குடும்பமாக இருந்து தொழில் முயற்சியில் வெற்றி பெற்றவர்களுடைய ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கும்.
தேவைக்கு அதிகமாக பணம் பொன், பொருள் உள்ளவர்கள் ஜாதகத்தில் 11ம் மிடமான லாப ஸ்தானம் வலிமையாக இயங்கும். ஒரு சிலர் குறுகிய காலத்தில் பணம், புகழ், அந்தஸ்து, வெற்றி பெறுவது 11-ம் அதிபதியின் தசை புக்தி காலங்களில் மட்டுமே என்றால் அது மிகையாகாது. கூட்டுத் தொழிலுக்கு உகந்த கிரக அமைப்பு. பொருளாதார அந்தஸ்து மிகுந்தவர்கள். பொதுச் சேவையில் ஆர்வம் அதிகம். அரசாங்க, அரசியல் ஈடுபாடு, ஆதாயம் அதிகம் உண்டு.
ஒரு ஜாதகத்தில் 11-ம்மிடமான லாப ஸ்தானம் பலம் பெற்று இருந்தால் தீராத நோய், தீர்க்க முடியாத கடன், வழக்கு போன்றவற்றிற்கு பரிகாரம் பலன் தரும். வாழ்க்கையில் வெற்றி பெற 11-ம் இடம் பலம் பெற வேண்டும். 11-ம்மிடமான லாபஸ்தானம் பலம் குறைந்தால் வாழ்க்கை நித்திய கண்டம் பூரண ஆயுளாகவே இருக்கும்.
மனிதனாக பிறந்தவர்கள் அனைவரின் பூர்வ புண்ணிய பலத்திற்கு ஏற்பத்தான் பணம் வரும். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் விதி பயனுக்கு மீறிய பலன் யாருக்கும் நடக்கப்போவது இல்லை. எனவே அவரவரின் ஜாதகத்தில் 11-ம் பாவகத்திற்கு ஏற்ப திட்டமிட்டு நடந்து கொண்டால் வாழ்க்கை பயணம் இனிமையாக இருக்கும். சுய ஜாதக ரீதியாக 11-ம்மிடம் வலிமை இல்லாதவர்கள் வியாழக்கிழமை குபேரனை வழிபாடு செய்வதால் மேன்மையான பலன்களை பெற முடியும்.
செல்: 98652 20406






