என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

வருமானமும் வளர்ச்சியும் தரும் மியூச்சுவல் பண்ட்
- முதலீட்டையும் ஆன்லைன், ஆ ப்லைன் என்ற இரண்டு முறையில் செய்ய முடியும்.
- ஒவ்வொரு முதலீட்டுக்கும் சாதகமான ஒரு கால கட்டம் உண்டு.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே "பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை" என்று வள்ளுவப் பெருமான் நமக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆகவே நாம் செல்வம் என்னும் சிம்மாசனத்தில் அமரும் வழிகளைத் தேடி வருகிறோம். போஸ்ட் ஆபீஸ், வங்கிகள், தங்கம், வீடு, பங்குச்சந்தை என்று ஒவ்வொன்றாகப் பார்த்து வரும் வேளையில் நாம் இப்போது நிற்பது மியூச்சுவல் பண்ட் எனப்படும் புதிய வழியின் முன்னால்.
நாம் பார்த்த முதலீட்டு வழிகளில் சில வருமானம் தரும்; சில வளர்ச்சி தரும். பப்ளிக் ப்ராவிடென்ட் பண்ட், ஆர்பிஐ பாண்ட் மாதிரியான கவர்ன்மென்ட் சேமிப்பு, பேங்க் சேமிப்பு, போஸ்ட் ஆ பீஸ் சேமிப்பு எல்லாம் வருமானம் தரும். ரியல் எஸ்டேட், தங்கம், பங்குகள் ஆகியவை வளர்ச்சி தரும். இவை இரண்டையும் தரக்கூடிய முதலீடு என்றால் அது மியூச்சுவல் பண்ட்தான். அது நமக்கு ஓரளவு புதியது என்பதால் அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மியூச்சுவல் பண்ட் என்றால் என்ன? பங்குச் சந்தை முதலீடு அதிகபட்ச வருமானம் தரக்கூடியது என்பதால் அதில் முதலீடு செய்ய நாம் அனைவருமே விரும்புகிறோம். ஆனால் முன்பே கூறியது போல் பங்குச்சந்தை என்பது யாருக்கும் அடங்காத குதிரை; முன்னால் சென்றால் முட்டும்; பின்னால் சென்றால் உதைக்கும். இதில் சவாரி செய்து சம்பாதிக்க திறமை, பொறுமை, விஷயஞானம், கம்ப்யூட்டரைக் கையாளும் திறன் ஆகியவை இன்றியமையாதவை. இவை இல்லாதவர்களால் சந்தை தரும் கூடுதல் வருமானத்தைப் பெறமுடியுமா? கண்டிப்பாக முடியும். அதற்கு உதவுவது மியூச்சுவல் பண்ட்.
மியூச்சுவல் பண்ட் நிறுவனம் நாம் முதலீடு செய்ய விரும்பும் பணத்தைத் திரட்டும். அதனை நிர்வகிக்க பல நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை நியமிக்கும். முக்கியமாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் பங்குச்சந்தையின் உள்ளும், புறமும் நன்கு அறிந்த ஒரு திறமையான பண்ட் மேனேஜர் இருப்பார். அவர், பொதுமக்களிடம் இருந்து திரட்டிய அந்தப் பணத்தை பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வார். பிறகு காலநேரத்துக்குத் தகுந்தாற்போல அவைகளை வாங்கி, விற்று, லாபம் சம்பாதிப்பார். அதில் ஒரு கணிசமான பங்கு, முதலீடு செய்த நமக்கு வந்து சேரும். செபி (Securities and Exchange Board of India) என்னும் அரசு அமைப்பு இதனை கண்காணிப்பதால் ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை ஆகியவை இதில் நிறைந்துள்ளன.
டெட் பண்ட்ஸ், ஈக்விட்டி பண்ட்ஸ், ஹைப்ரிட் பண்ட்ஸ், இண்டெக்ஸ் பண்ட்ஸ், மனிமார்க்கெட் பண்ட்ஸ் என்ற ஐந்து வகைகள் இதில் உண்டு. இவை ஒவ்வொன்றின் கீழும் பல திட்டங்கள் உள்ளன. இவற்றில் அதிக முக்கியத்துவம் பெறுவது ஈக்விட்டி பண்ட்ஸ்.
ஈக்விட்டி பண்ட்ஸில் இருந்து வரக்கூடிய வருமானம் சந்தை சார்ந்தது என்பதால் நிலையானதாக இருக்காது. சந்தையின் போக்கைப் பொறுத்து கூடலாம்; குறையலாம். ஆனாலும் நிலையான வருமானம் தரும் சேமிப்புக்களை விட இதில் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சமீபத்தில் இதில் நூறு ரூபாயில் கூட முதலீட்டை ஆரம்பிக்கும் வசதி எஸ்.பி.ஐ. வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணம் தேவைப்படும் நேரம் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பண்டுகளை பலவிதமாக வகைப்படுத்தலாம். ஓப்பன் எண்டட், க்ளோஸ் எண்டட், இன்டர்வல் பண்ட்ஸ் என்பது ஒரு வகை. ஓப்பன் எண்டட் பண்டுகளில் தேவை ஏற்படும்போது நம் பணத்தைத் திருப்பி எடுத்துக் கொள்ள முடியும். க்ளோஸ் எண்டட் என்றால், வங்கி பிக்சட் டிபாசிட் மாதிரி. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகுதான் திருப்பித் தரப்படும். இன்டர்வல் பண்ட்ஸ்களில் குறிப்பிட்ட காலகட்டங்களில் மட்டும்தான் வாங்க, விற்க முடியும்.
ஆக்டிவ் பண்ட், பாஸிவ் பண்ட் என்பது இன்னொருவிதமான வகைப்படுத்தல். ஆக்டிவ் பண்டில் பண்ட் மேனேஜர் அடிக்கடி வாங்கி விற்று லாபம் சம்பாதிப்பார். பாஸிவ் பண்டில் பண்ட் மேனேஜருக்கு அதிக வேலை இருக்காது.
உதாரணமாக, சென்செக்ஸ் இண்டெக்ஸ் பண்ட் என்பது, சென்செக்ஸ் எனப்படும் குறியீட்டில் இருக்கக்கூடிய 30 பங்குகளையும், அங்கு இருக்கிற அதே விகிதத்தில் பண்டிலும் வாங்குவதாகும். பாஸிவ் பண்டில் மேனேஜருக்கு அதிக வேலை இல்லை என்பதால் முதலீட்டாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டணமும் குறைவு.
க்ரோத் பண்டில் நன்கு வளரக்கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். டிவிடெண்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படாது. இன்கம் பண்டில் அவ்வப்போது வருமானம் தரக்கூடிய பங்குகளிலும், பத்திரங்களிலும் முதலீடு செய்வார்கள். ஹைப்ரிட் பண்டில் வளர்ச்சி, வருமானம் என்ற இரண்டுமே ஓரளவு கிடைக்கும்படி பங்குகள் மற்றும் கடன்கள் என்ற இரண்டு வகை சொத்துக்களிலும் முதலீடு செய்யப்படும். மல்ட்டி அசெட் பண்டில் மூன்று வகையான சொத்துக்களில் முதலீடு செய்யப்படும். இதில் கடன் மற்றும் ஈக்விட்டியோடு தங்கத்திலும் முதலீடு செய்யப்படுவதால் சமீப காலங்களில் அதிகம் விரும்பப்படுகிறது.
சுந்தரி ஜகதீசன்
இத்தன பண்ட் பற்றிக் கூறுகிறீர்களே? இவற்றில் எதில் முதலீடு செய்யலாம் என்றுதானே கேட்கிறீர்கள்? அது நம் ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் பொறுத்தது. இதை முழுவதுமாகப் புரிந்துகொள்ள ஒரு மியூச்சுவல் பண்ட் ஏஜென்ட்டை நாடுவது நல்லது. நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் டைரக்ட் ப்ளான் மற்றும் ரெகுலர் ப்ளான். ஒரு ஏஜென்ட் அல்லது டிஸ்ட் ரிப்யூட்டர் மூலம் முதலீடு செய்தால் அது ரெகுலர் ப்ளான் எனப்படும். அதில் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ எனப்படும் கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் வருமானம் குறையும். டைரக்ட் ப்ளானில் ஏஜென்ட் துணையின்றி நேரடியாக நாமே முதலீடு செய்வதால் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ குறையும்; வருமானம் சற்று அதிகமாக இருக்கும்.
இவை தவிர, க்ரோத் ஆப்ஷன், ஐடிசிடபிள்யூ ஆப்ஷன் என்று இரண்டு விஷயங்கள் உண்டு. க்ரோத் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால் நமக்கு வர வேண்டிய வருமானம் மறுபடி அதே திட்டத்திலேயே முதலீடு செய்யப்படும். அதனால் லாபம் அதிகமாகும். ஐடிசிடபிள்யூ ஆப்ஷனில் ஒவ்வொரு காலாண்டிலும் டிவிடெண்ட் வருமானம் நம் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
இவற்றில் நாம் முதலீடு செய்யவும் பல விதங்கள் இருக்கின்றன. கையில உள்ள பணத்தை மொத்தமாக முதலீடு செய்வதை லம்ப்சம் முதலீடு என்பார்கள். இதை சந்தை சற்று சரிவில் இருக்கும்போது செய்தால் லாபம் அதிகம் வரும். அல்லது எஸ்ஐபி (சிப்) மூலம் குறிப்பிட்ட கால அவகாசத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். மாதாந்திர வருமானம் பெறுபவர்கள் சேமிக்க இது உதவும். எஸ்டிபி என்றால், மொத்தப் பணத்தையும் ஒரு லிக்விட் பண்டில் போட்டு குறிப்பிட்ட கால அவகாசத்தில் நாம் விரும்பும் வேறு பண்டுக்கு மாற்றும்படி செய்வது. இன்டர் ஸ்கீம் ஸ்விட்ச் என்றால் ஒரு திட்டத்தில் உள்ள மொத்தப் பணத்தையும் அதே ஏஎம்சி நிறுவனத்தில் உள்ள வேறு ஒரு திட்டத்துக்கு மாற்றுவது.
எஸ்டபிள்யூபி என்றால் சிஸ்டமேடிக் வித்ட்ராவல் ப்ளான். நமக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக வேண்டுமென்றால் இந்த எஸ்டபிள்யூபி மூலம் பெறமுடியும். மாதாமாதம் சற்று உபரி வருமானம் வேண்டும் என்பவர்களுக்கும், ரிட்டயர் ஆனவர்களுக்கும் இந்த வகை ப்ளான் மிகவும் உபயோகமாக இருக்கும்.
மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய முக்கியமாக பான் கார்ட் மற்றும் பேங்க் அக்கவுன்ட் தேவை. ஒரு மியூச்சுவல் பண்ட் ஏ.எம்.ஸி.க்கு அல்லது ஏஜென்ட் அலுவலகத்துக்கு அட்ரஸ் ப்ரூ ப், ஐ.டி.ப்ரூ ப், போட்டோ போன்றவற்றை எடுத்துச்சென்று, கேஒய்சி செயல்முறையை முடித்தபின், அக்கவுன்ட் தருவார்கள். அதன்பின் நம் முதலீட்டுப் பயணத்தை ஆரம்பிக்கலாம். கம்ப்யூட்டரை சிறப்பாகக் கையாளத் தெரிந்தவர்கள் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் இணைய தளத்திலேயே கே.ஒய்.சி. முடித்து, முதலீட்டை ஆரம்பிக்கலாம்.
முதலீட்டையும் ஆன்லைன், ஆ ப்லைன் என்ற இரண்டு முறையில் செய்ய முடியும். ஆப்லைன் என்றால், அதற்கான விண்ணப்பத்தை நிரப்பி, குறிப்பிட்ட தொகைக்கு ஒரு காசோலையை இணைத்து, அந்த மியூச்சுவல் பண்ட் நிறுவனத்திலோ, சர்வீஸ் சென்டரிலோ அல்லது டிஸ்ட்ரிப்யூட்டர் அலுவலகத்திலோ சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் என்றால், அந்த குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் இணையதளத்துக்கு சென்று, லாக் இன் செய்து முதலீட்டைத் துவங்கலாம். பணத்தை வெளியே எடுக்கவும், இந்த இரண்டு முறைகளையும் பின்பற்றலாம்.
அடிக்கடி என்.ஏ.வி. என்னும் வார்த்தையை கேள்விப்படுகிறோம். என்.ஏ.வி.என்றால், நாம் வாங்க/ விற்க விரும்பும் பண்டின் ஒரு யூனிட் விலை. நாம் வாங்க/ விற்க விரும்பும் பண்ட் இன்று என்ன விலையாக இருக்கிறது என்பதை, ஆம் பி இணையதளம், மியூச்சுவல் பண்ட் இணையதளம், தினசரி பத்திரிக்கைகள் போன்றவற்றில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
மியூச்சுவல் பண்டில் முக்கியமாக நாம் செய்யவேண்டிய ஒரு விஷயம் நாமினேஷன். இது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவர் இறந்து விட்டால், அவருடைய முதலீட்டை நாமினியாக யார் இருக்கிறார்களோ, அவர்களிடம்தான் மியூச்சுவல் பண்ட் கொடுக்கும். இதனால் கோர்ட், கேஸ் என்று அலைய வேண்டியிருக்காது. முதலில் ஒருவர் பெயரை நாமினேஷனாகக் கொடுத்தாலும், பிறகு விரும்பினால் அதனை மாற்றலாம்.
பொதுவாக எந்த முதலீட்டுப் பயணத்திலும் ஏதாவது குறைபாடு வருவது சகஜம். அப்படி எதுவும் குறைபாடுகள் இருந்தால் முதலில் அந்த மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் ரிலேஷன்ஷிப் மேனேஜரைத் தொடர்பு கொள்ளவேண்டும். அவருடைய பெயர், இமெய்ல் ஐடி எல்லாம் மியூச்சுவல் பண்டின் இணையதளத்தில் கிடைக்கும். ஒருவேளை நம் பிரச்னை தீரவில்லை என்றால், செபியின் ஸ்கோர்ஸ் (SCORES) என்னும் வெப்சைட்டில் புகார் தரலாம்.
ஒவ்வொரு முதலீட்டுக்கும் சாதகமான ஒரு கால கட்டம் உண்டு. தற்சமயம் தங்கம் ஏறுகிறது; சில சமயம் ரியல் எஸ்டேட் அபரிமிதமாக வளரும். சென்ற வருடம் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட்களின் காலம். பொதுமக்களில் 30 சதவீதம்-35 சதவீதம் இப்போது இந்த முதலீடுகளை மேற்கொள்கிறார்கள். மேலை நாடுகளில் சுமார் 90சதவீதம் மக்கள் சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். இது குறித்த விழிப்புணர்வு அதிகமாகும்போது இந்தியாவிலும் நிறைய மக்கள் சந்தைசார் முதலீடுகளுக்குள் வருவார்கள். அப்போது இந்த முதலீட்டு வழி இன்னும் அதிகமாக பலன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே மியூச்சுவல் பண்ட் வைத்திருக்கிறீர்களா? அவற்றின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் என்ன?






