என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மகான் குருநானக்
    X

    மகான் குருநானக்

    • நானக் மகிழ்ச்சியோடு மாடுமேய்த்தார்.
    • கவர்னருக்கு நானக் ஒரு மகான் என்ற உண்மை புலப்பட்டது.

    தற்போது மேற்கு பாகிஸ்தானில் உள்ள தால்வண்டி கிராமம் தான் குருநானக் அவதரித்த சிற்றூர். இந்து முஸ்லீம் பேதம் பாராட்டாது வாழ்ந்த மாபெரும் சித்தர் அவர்.

    ஒரு கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்று மேதாகலூரா என்ற எளிய மனிதருக்கும் அவரது மனைவி மட்டாதிரிபாத் என்ற பெண்மணிக்கும் இரண்டாம் குழந்தையாகப் பிறந்தார்.

    அவதார புருஷரான அவருக்கு உலகியல் படிப்பில் நாட்டம் தோன்றவில்லை. நானக்கின் தந்தை அவரை மாடுமேய்க்க அனுப்பினார். நானக் மகிழ்ச்சியோடு மாடுமேய்த்தார்.

    மாடு மேய்ப்பது இழிவான தொழிலா என்ன? மாடுமேய்த்த கண்ணன் தானே கீதை சொன்னான்? மாடு மேய்க்கும்போது மனத்தை நினைவுகளில் மேயாதிருக்கப் பழக்குவோம். தியானம் செய்து இறைவனைத் தரிசிக்க முயல்வோம்.

    மாடுகளை ஓட்டிச் சென்று மேய்ச்சல் நிலத்தில் விட்டுவிட்டு நாள்தோறும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பல மணிநேரம் நானக் தியானம் பழகலானார்.

    மாடுகள் சமர்த்துப் பசுக்கள். கொஞ்ச காலம் நன்றாகத் தான் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றிற்கு மெல்ல மெல்லத் திருட்டுப் புத்தி வந்தது. கண்டிப்பார் யாருமில்லை. மேய்க்க வந்த சிறுவனோ மரத்தடியில் கண்மூடி உட்கார்ந்திருக்கிறான். இனி என்ன? மாடுகள் கூட்டம் கூட்டமாக அடுத்தவர் வயல்களை மேயலாயின.

    அதனால் பெருமளவில் பாதிக்கப்பட்ட ஒருவர் பஞ்சாயத்தைக் கூட்டினார். `என்ன அக்கிரமம் இது! மாடுகளை என் வயலில் மேய விட்டுவிட்டு இந்தப் பையன் கண்ணை மூடி உட்கார்ந்தவாறே தூங்கிக் கொண்டிருக்கிறான். கேட்பாரில்லையா இதை?`

    திருப்பூர் கிருஷ்ணன்


    நானக்கின் தந்தைக்குத் தலைகுனிவு ஏற்பட்டது. `என்ன அபராதம் சொல்லுங்கள். கட்டிவிடுகிறேன்.` என்றார் அப்பா. நானக் அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்றான். `உங்கள் வயல் நல்ல விளைச்சல் கண்டிருக்கும், கவலைப்படாதீர்கள்` என்று பாதிக்கப்பட்டவரிடம் சொன்னான். விளைச்சலைத்தான் மாடு மேய்ந்துவிட்டதே என்றார் அவர். `இல்லையில்லை. எனக்குத் தெரியும். உங்கள் வயல் நல்ல விளைச்சல் கண்டிருக்கும்.`

    திரும்பத் திரும்ப நானக் இதையே சொன்னதும் பஞ்சாயத்தில் அனைவரும் சலிப்போடு எழுந்து எவ்வளவு தூரம் பாதிப்பு என்றறிய வயலை நோக்கிச் சென்றார்கள். வயலின் சொந்தக்காரருக்கு மூர்ச்சையால் மயக்கம் வரும்போல் இருந்தது.

    சற்று முன் தாறுமாறாக இருந்த பயிர்களெல்லாம் இப்போது தளதளவென்று வளர்ந்து அந்தக் காலமில்லாத காலத்தில் அறுவடை செய்யுமளவு கதிர் விட்டிருந்தன! பஞ்சாயத்தார் வியந்து நின்றனர். இது சிறுவனாயிருந்தபோதே சித்தர் நானக் தம் வாழ்வில் நிகழ்த்திக் காட்டிய முதல் சித்து. இவன் அற்புதக் குழந்தை என்று நானக்கின் காலில் விழுந்து பணிந்தார் அந்த வயலின் உரிமையாளர்.

    நானக் அரசாங்கத்தில் தானியக் காப்பாளராகப் பணிபுரிந்தவர். திடீரென்று நாடெங்கும் பஞ்சம் தோன்றியது. மக்கள் பசியால் கஷ்டப்படத் தொடங்கினர். கவர்னர் நானக்கை அழைத்தார். நல்ல மனிதரான அந்த கவர்னர், மக்களுக்குக் குறைந்த விலைக்கு தானியங்கள் தருமாறு உத்தரவிட்டார்.

    நானக் கவர்னரின் ஆணைப்படியே குறைந்த விலையில் தானியங்களை மக்களுக்குக் கொடுக்கலானார். ஆனால் அடிக்கடி அவர் தியானத்தில் ஆழ்ந்து சமாதி நிலைக்குச் சென்றுவிடுவதை மக்கள் கண்டுகொண்டார்கள்.

    பிறகென்ன? காசு கொடுத்து வாங்கியவர்கள் சிலர். காசு கொடுக்காமல் அள்ளிச் சென்றவர்கள் பலர். சீக்கிரமே தானியங்கள் பெருமளவில் காலி!

    தானியம் குறைந்த விலைக்குத் தான் விற்கப்பட்டது என்றாலும் அதற்கான தொகை கஜானாவில் சேர வேண்டும் அல்லவா? கஜானாவும் ஏறக்குறையக் காலியாகவே இருந்தது. கவர்னருக்குத் தகவல் போயிற்று. நானக் விசாரிக்கப்பட்டார்.

    `நீ தானியத்தைக் குறைந்த விலைக்குக் கொடுத்தாயா? இல்லை இலவசமாகக் கொடுத்தாயா?` என்று கேட்டார் கவர்னர். `இறைவன் சித்தப்படிக் கொடுத்தேன்!` என்று வித்தியாசமாக பதில் சொன்னார் நானக். கஜானாவில் உள்ள நாணயங்களையும் தானியம் எவ்வளவு மீதி இருக்கிறது என்பதையும் கணக்கிடுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் கவர்னர்.

    என்ன விந்தை! கஜானா முழுவதும் பணத்தால் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. தானியக் கிடங்கும் ஒருசிறிதும் தானியம் குறையாமல் பொங்கி வழிந்துகொண்டிருந்தது. கவர்னருக்கு நானக் ஒரு மகான் என்ற உண்மை புலப்பட்டது. நானக்கின் பாதங்களில் விழுந்து பணிந்தார் அவர். தன் அரசாங்க வேலையைத் துறந்த குருநானக் இல்லறத்தையும் துறந்து துறவியானார்.

    *அமெனாபாத் என்ற ஊருக்கு அவர் சென்றபோது அந்த ஊர் கவர்னரான மாலிக்பாகோ அவரைத் தன் வீட்டு விருந்துக்கு அழைத்தான். நானக்கோ ஏழைத் தச்சரான பாய்லாலு வீட்டிலேயே உணவு உண்பதாகக் கூறி அவன் அழைப்பை மறுத்துவிட்டார். செல்வந்தனான கவர்னரின் சீற்றம் அதிகமானது. ஏன் தன் வீட்டு விருந்துக்கு வரவில்லை என்று நேரில் வந்து சீறினான்.

    `உன் வீட்டு உணவுக்கும் தச்சன் வீட்டு உணவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை உனக்கு நிரூபிக்கிறேன். உன் இல்லத்திலிருந்து ஒரு ரொட்டித் துண்டைக் கொண்டுவரச் சொல்!` என்றார் குருநானக்.

    ரொட்டித் துண்டு கொண்டுவரப்பட்டது. அடுத்த கணம் குருநானக் செய்த செயலின் விளைவைப் பார்த்து மக்கள் வியப்பில் மூழ்கினர்.

    அந்த ரொட்டித் துண்டை எடுத்துக் கையால் பிழிந்தார் நானக். ரொட்டித் துண்டிலிருந்து செக்கச் செவேல் என ரத்தம் வழிந்தது. `நீ ஏராளமான ஏழைகளின் உழைப்பைச் சுரண்டினாயே? அவர்களின் ரத்தம் தான் இது!` என்றார் நானக்.

    பிறகு அந்த ஏழைத் தச்சன் அளித்த ரொட்டியைக் கையிலெடுத்துப் பிழிந்தார். அதிலிருந்து வெள்ளை வெளேர் என்று பால் வடிந்தது.

    கவர்னர் மாலிக்பாகோ திகைப்படைந்தான். அவன் கால்கள் அந்த விளைவைப் பார்த்து நடுநடுங்கத் தொடங்கின. தன் இல்ல ரொட்டியிலிருந்து வழிந்த ரத்தம் அவன் மனத்தை மாற்றியது. அவர் மாபெரும் மகான் என்பதை உணர்ந்து வணங்கினான்.

    அன்றிலிருந்து ஏழைகளைக் கொடுமைப் படுத்துவதில்லை என்று அவருக்கு வாக்குறுதியும் கொடுத்தான். அவன் அவரின் அடியவனானான்.

    அதுசரி. சாதாரண ரொட்டியை எடுத்துப் பிழிந்தால் அதிலிருந்து எப்படி ரத்தம் வரும்? வரும்! சித்தர்கள் கைப்பட்டால் ஒரு பொருளின் உள்ளே அதற்கு உரியவரின் மன உணர்வுகள் பதிவாகி இருப்பதைக் கூட அந்தப் பொருள் சொல்லிவிடும்!

    அவர் பல்வேறு இடங்களுக்குப் பயணப்பட்டு அருளுரைகளை வழங்கலானார். ஒருமுறை சஜ்ஜன் என்கிற கொள்ளைக்காரன், அடியவன் போல் வந்தான். நானக்கிடம் ஏராளமான பணம் இருக்கும் என்றும் அவரைக் கொன்று அந்தச் செல்வத்தை அபகரிக்கலாம் என்றும் திட்டமிட்டான்.

    நானக்கிடம் பணமே இல்லை என்பதை அவன் நம்பத் தயாராயில்லை. கபட வேடதாரியான அவன் நானக்கைத் தன் வீட்டு விருந்துக்கு அழைத்தான்.

    ஒரு பார்வையில் உள்ளத்தை ஊடுருவி அனைத்தையும் உணரும் குருநானக் உடனே சம்மதித்தார். தன் அடியவர்களான மர்தானாவோடும் பாலாவோடும் அவன் இல்லத்திற்குச் சென்றார். திருடன் வீட்டு வாயிலில் சம்மணமிட்டு உட்கார்ந்துகொண்டார்.

    `மர்தானா! உன் இசைக்கருவியான ரூபாப்பை எடுத்து மீட்டு!` என்றார். ரூபாயைத் தவிர வேறெதுவும் அறியாத அந்தத் திருடன் அன்று ரூபாப் இசையைக் கேட்கலானான்.

    நானக் மனம் இறையனுபவத்தில் உயரே உயரே பறக்கலாயிற்று. அவரது தேனினுமினிய குரலிலிருந்து பாடல் பிறந்தது. திருட்டும் ஒரு தொழிலா, இத்தகைய பாவ வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா என்று தொடங்கிய பாடல் மெல்ல மெல்ல வளர்ந்தது. சஜ்ஜன் அதுவரை நிகழ்த்திய கொலை கொள்ளை போன்ற அனைத்தையும் அது புள்ளி விவரத்தோடு விவரிக்கலாயிற்று!

    முதலில் திகைத்த சஜ்ஜன் போகப் போகக் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினான். அவனால் கொள்ளையடிக்கப்பட்டவர்கள் பணம் போனதால் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பதை அவர் பாடலில் விவரித்தபோது சஜ்ஜனின் கண்ணீர் அவர் பாதங்களைக் கழுவிக் கொண்டிருந்தது.

    `மகனே! பாவ வாழ்வை விட்டுவிட்டுப் புண்ணிய நெறிக்கு வா!` என அவன் தலையை வருடி அறிவுரை சொன்னார் நானக்.

    `பிரபோ. இதுவரை செய்த பாவங்களை எப்படித் தொலைப்பேன்? அதற்கு ஏதாவது ஒரு வழிசொல்ல வேண்டும்!` என்று அவன் கெஞ்சினான்.

    குருநானக் அவன் பாவங்கள் தொலைய ஒரு வழி சொன்னார். குருநானக் சொன்ன அந்த வழி எந்த ஞானியும் சொல்லாத ஒரு விந்தையான வழி.

    சஜ்ஜன் திகைப்பில் ஆழ்ந்தான். அவன் எந்தெந்த வீடுகளில் கொள்ளையடித்தானோ அந்த வீடுகளுக்கெல்லாம் சென்று தான் கொள்ளையடித்த விவரத்தைச் சொல்லி, அந்தந்த வீட்டினரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார் குருநானக்.

    கன்னங்களில் கண்ணீர் வழிய வழிய அந்தக் கொள்ளைக்காரன் அவர் சொன்னபடியே செய்தான். மக்கள் முதலில் திகைத்தாலும் அவனை வெறுத்தாலும் அவனது கண்ணீரைக் கண்டு அவனை மன்னிக்கத் தொடங்கினார்கள். அவன் மனம் நிம்மதி அடைந்தது.

    அவன் குருநானக்கின் அடியவனாக மாறினான். தானே உழைத்துச் சாப்பிட்டு எளிய வாழ்க்கை வாழலானான். இப்படி எண்ணற்ற மனிதர்களைத் தம் பேச்சாலும் செயலாலும் வாழ்க்கை முறையாலும் தூயவர்களாக மாற்றினார் குருநானக். அவரது வாழ்க்கை இன்னும் பற்பல அதிசய சம்பவங்களைக் கொண்டது.

    குருநானக் தேவ்ஜி தம் எழுபதாவது வயதில் தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் கர்த்தார்பூரில் கடவுளுடன் இணைந்தார் என்று சொல்லப்படுகிறது.

    எளிமை, தூய்மை, உழைத்து வாழ்தல், எளியோருக்கு இரங்குதல் போன்ற அரிய பண்புகளை எல்லா மனிதர்களும் பின்பற்றுமாறு அவரது தூய தவ வாழ்க்கை அறிவுறுத்துகிறது.

    தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×