என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கேது தோஷம் நீக்கும் விநாயகர் வழிபாடு
    X

    கேது தோஷம் நீக்கும் விநாயகர் வழிபாடு

    • நவகிரகங்களில் தலைமை கிரகம் கேது பகவான்.
    • சுய ஜாதகத்தில் கேதுவும் புதனும் பலம் பெற வேண்டும்.

    ஆன்மீக வழிபாட்டில் முழு முதற் கடவுள் விநாயகருக்கே முன்னுரிமை உண்டு. விக்னங்களைக் களைவதில் விநாயகருக்கு இணையாக வேறு எந்த கடவுளையும் கூற முடியாது.

    ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சகல விதமான தடைகளையும் நீக்குவதில் வல்லவராக கருதப்படுபவர் விநாயகர். எந்த செயலையும் தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபட்டால் வெற்றி நிச்சயம் என்பது அனுபவ உண்மை. இதை பலரும் உணர்ந்திருப்பீர்கள். வினைகளை களைவதில் இவருக்கு மேலாக வேறு யாரும் இல்லை என்பதை விநாயகர் என்ற பெயர் உணர்த்துகிறது. ஒரு ஜாதகத்தில் கேதுவால் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய சக்தி படைத்தவர் விநாயகர்.

    ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் வல்லமை வாய்ந்தவர் கேது பகவான். ஒருவரின் வாழ்க்கையில் முத்திக்கு காரணமாக இருப்பவர் கேது பகவான். வாழ்க்கையில் லவுகீக ஆசையில் எவ்வளவு தவறு செய்தாலும் முடிவில் சரணாகதியை அடைய வேண்டும் என்று உணர்த்துபவர். வெறுமையையும் வெறுப்பையும் ஞானம் என்ற அனுபவத்தையும் சேர்ந்தே கொடுப்பார் கேது. சுய ஜாதகத்தில் கேது வலுப்பெற்றவர்கள் ஞானிகளாக, சன்னியாசிகளாக, ஆன்மீக வாதியாக மாறுகிறார்கள். தடை, தாமதங்கள் மூலம் சோதனைகள் தந்து சாதனையாளராக மாற்றுபவர் கேது.

    ஒரு ஜாதகத்தில் தனித்த கேதுவால் எந்த பிரச்சினையும் வராது. ஆனால் கேதுடன் சேர்ந்த கிரகங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் அந்த கிரகம் சார்ந்த காரகத்துவ பலன்களை முழுமையாக அனுபவிக்க விடாமல் வாழ்க்கை பாடம் கற்பித்துக் கொண்டே இருக்கும். இந்த கட்டுரையில் கேதுடன் இணைந்த கிரகங்களால் உண்டாகும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

    சூரியன்+கேது

    நவகிரகங்களில் தலைமை கிரகம் கேது பகவான். சுய ஜாதகத்தில் சூரியனும் கேதுவும் பலம் பெற்றால் நிர்வாகத்திறன் நிறைந்தவர்கள். எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை ஆர்வம் அதிகம். ஆயுள் அதிகம். அறிவும், தெளிவும் உண்டு. மற்றவர்களை மதிப்பவர்கள். பிரசித்தி பெற்ற சங்கங்கள், இயக்கங்களில் நிர்வாகியாக இருப்பார்கள். ஆரம்ப கால வாழ்க்கை வறுமையாகவும் 50 வயதுக்கு மேல் திடீர் தனலாபமும் அடைவார்கள். சொந்தத் தொழில் செய்யவே இவர்கள் விரும்புவார்கள். சூரியன் என்றால் அரசியல் அரசாங்கம். கேது என்றால் கொடி. வாழ்க்கையில் ஒரு முறையாவது கொடி வைத்த காரில் செல்வார்கள். சூரியன் கேது பலம் பொருந்திய நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கொடி வைத்த காரில் செல்லக்கூடிய யோகம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

    சூரியன் பலம் குறைந்து கேது பலம் பெற்றால் கண் பாதிப்பு, இருதயக் கோளாறு, எலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். அரசாங்கத்தாலும் தந்தையாலும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இவரது தந்தை பல சிரமங்களை சந்திக்க நேரிடும். சூரியன் கேதுவுடன் இணைந்து கிரகண தோஷ பாதிப்பால் வாழ்க்கையில் முன்னேற முடிவதில்லை.

    பரிகாரம்: சூரிய ஓரையில் விநாயகருக்கு வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும்.

    சந்திரன் + கேது

    சுய ஜாதகத்தில் சந்திரன் கேது சம்பந்தம் இருந்தால் நேர்மை, நியாயம் நிறைந்தவர்கள். தான் வாழ பிறரை கெடுக்க விரும்பாதவர்கள். அமானுஷ்ய சக்தி நிறைந்தவர்கள். உள்ளுணர்வால் அனைவரின் எதிர்கால பலனையும் கூறுவார்கள். இவர்கள் எளிதில் காதல் வலையில் சிக்க கூடியவர்கள். இவர்களுக்கு குடும்ப வாழ்கையில் நிம்மதி இருக்காது. மேலும் குடும்ப வாழ்க்கை சுகம் தராது. கற்பனை பயம் அதிகம் உண்டு. இதனால் மன அமைதியின்மை மற்றும் அச்சம் அதிகமாக இருக்கும். தீயவழியில் சென்று தனக்கு தானே ஆபத்தையும் அசிங்கம் அவமானங்களையும் தேடிக்கொள்வார்கள்.

    அனைத்து காரியங்களும் தடை தாமதத்துடன் தான் நடக்கும். மனம் அமைதி குறைவு. வாழ்வதற்காக உழைக்கலாம் ஆனால் உழைப்பே வாழ்க்கையாக இருக்க கூடாது என்ற எண்ணம் உடையவர்கள். இரவில் வேலை செய்து பகலில் உறங்குவார்கள். கிடைத்த வேலையைச் செய்து இருப்பதை உண்டு படுத்த இடத்தில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

    பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படித்து வர வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

    செவ்வாய்+கேது

    ஒரு ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் கேது சேர்ந்து இருந்தால் உடன் பிறந்தவர்களால் ஏதேனும் மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கிறது. மிகக் குறிப்பாக சொத்தால் பிரிவினை உண்டாகுகிறது. சிலருக்கு வில்லங்கமான சொத்தால் பண முடக்கம் ஏற்படும். சொத்து வாங்கி ஏமாறுவது அல்லது புறம் போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்பவர்களிடம் நிலம் வாங்கி ஏமாறுவார்கள். அதனால் சொத்து தொடர்பான வழக்கு, தொடர் சட்ட சிக்கல் இருந்து கொண்டே இருக்கும். பெண்களுக்கு இந்த கிரக சேர்க்கை 27 வயதிற்கு மேல் தான் திருமணத்தை நடத்துகிறது. திருமணம் ஆன பிறகு ஏன் திருமணம் நடந்தது என்று வருந்தும் வகையில் தான் வாழ்க்கை இருக்கும். கணவனை கடும் பகையாளியாக்கி நீதிமன்ற படி ஏறிய பெண்களே அதிகம். வெகு சில பெண்கள் குடும்பம், குழந்தைகள், மானம், மரியாதைக்கு அஞ்சி அனுசரித்து வாழ்கிறார்கள். வெகு சில தம்பதிகள் விதிவிலக்காக கருத்து வேறுபாடு இன்றி தொழில் நிமித்தம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் வாழ்நாளின் பெரும் பகுதியில் பிரிந்தே வாழ்கிறார்கள்.

    பரிகாரம்: தினமும் எமகண்ட நேரத்தில் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும்.

    ஐ.ஆனந்தி

    புதன்+கேது

    சுய ஜாதகத்தில் கேதுவும் புதனும் பலம் பெற வேண்டும். ஞானத்தை வாழ்க்கை தத்துவத்தை, ஆன்மீக நாட்டத்தை வழங்கக் கூடிய கேது.

    தேவர்களில் அறிவுக்கும், புத்திக்கும், பெயர் பெற்ற விஷ்ணுபகவானின் முழுக்கடாட்சமும் பொருந்திய புதனுடன் சம்பந்தம் பெறுவது சிறப்பு. வலை கிரகமான கேதுவும், காதல் கிரகமான புதனும் சேருவதால் மக்களைக்கவர்வதில் இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை. எழுத்தாளர் பணியில் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். பேனாநண்பர்கள் அதிகம் உடையவர்கள். அரசியல் துறையிலும், அதிர்ஷ்டம் உடையவர்கள். இவர்கள் எந்த வியாபாரமும் செய்யலாம். பொது ஜன ஆதரவு உண்டு. இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும். சுய ஜாதகத்தில் கேது மற்றும் புதன் பலம் குறைந்தால் இவர்கள் சுயநலம் சூழ்நிலை வஞ்சகம் பொறாமை ஆகியவைகளால் எதிரிகளை வீழ்த்துவார்கள். இதுவே இவர்களுக்கு பெரும்பாலான எதிரிகளை உருவாக்கி விடும். கூட்டுத் தொழில் செய்யக் கூடாது. தீராத கடன், நோயை தந்து வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது.

    பலர் தரங்கெட்ட காதல் வாழ்க்கையில் சிக்குகிறார்கள். தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய அன்பிற்கு ஆசைப்பட்டு தவறான காதலில் மாட்டுகிறார்கள்.

    பரிகாரம்: சதுர்த்தி நாட்களில் விரதம் இருந்து விநாயகரை அருகம்புல் சாற்றி வழிபடவும்.

    குரு+கேது

    ஒரு ஜாதகத்தில் குருவும் கேதுவும் சேர்ந்து நின்று பலம் பெற்றால் ஆன்மீக மார்க்கத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். எல்லாவித வியாபாரமும் நிறைவேறும்.

    வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும். எப்போதும் இவரைச் சூழ்ந்து 10 பேர் இருப்பார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டம், பொது ஜன ஆதரவு உண்டு.இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும். வாக்கு சொல்லுதல், குறி சொல்லுதல், மத போதனை செய்தல், சமூக சீர்திருத்தம் செய்தல் போன்ற பணியில் தமக்கென்று தனி முத்திரை பதிக்கிறார்கள். தர்ம ஸ்தாபனங்கள், கோயில் நிர்வாகம், ஊர்த்தலைமை,

    போன்றவற்றில் கவுரவப் பதவி வகிப்பார்கள். அரசியலில் நன்கு பிரகாசிப்பார்கள். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவார்கள் குரு பலம் குறைந்து கேது பலம் பெற்றால் விசேஷமாக தொடங்கிய வாழ்க்கை போகப் போகச் சுமாரான நிலைக்கு வரும். புகழ் மட்டும் மிஞ்சும். இவர்களது வாழ்வில் பெரும ளவிற்கு பொருளாதாரம் பெருகாது.

    வாழ்வில் குறிப்பிட்ட காலத்திற்கு கடனால் அவஸ்தை உண்டு. இவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டுத் தாங்கள் செய்யும் தொழிலை அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். ஆன்மீக போர்வையில் சுய நலவாதியாக, மதவாதிகளாக அதிகம் சம்பாதித்து அதிகம் இழக்கிறார்கள். குரு கேது சம்பந்தம் கோடீஸ்வரர் போர்வையில் வாழும் கடனாளிகள்.

    பரிகாரம்: விநாயகருக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட நல்ல மாற்றம் தெரியும்.

    சுக்ரன்+கேது

    ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் கேதுவும் சேர்ந்து இருந்தால் அமைதியின்மை, கோபம், பிடிவாதம், சோகம், இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் போன்ற மனநிலை பாதிப்பு ஏற்படும். ஒரு தெளிவான சிந்தனை, முடிவு எடுக்க முடியாது. உண்மையான அன்பை அனுபவிக்க முடியாமல் ஏமாற்றமடைகிறார்கள். பல ஆண்களுக்கு திருமணத்தையே நடத்தி தராத கிரகச் சேர்க்கை. திருமணத்திற்கு முன்பு பெண் தேடியே திருமணத்தில் வெறுப்பை ஏற்படுத்தும்.

    திருமணம் நடந்த பிறகு குடும்ப பிரச்சினைக்காக பஞ்சாயத்திற்கு நடந்தே வாழ்க்கை முடிந்து விடும். இந்த அமைப்பு பல கணவன், மனைவியை விரோதியாகவே வாழ வைக்கிறது. ஆண்களுக்கு எத்தனை திருமணம் செய்தாலும் திருமணத்தில் நிம்மதி இல்லாத நிலை. சிலருக்கு முதல் திருமணம் மாறுபட்டதாக அமைந்தாலும், இரண்டாவது திருமணம் நல்ல நிம்மதியைத் தருகிறது. பலர் சுக்கிரனின் பலவீனத்தால் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சிினைகளைச் சந்திக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில், இந்த கிரகச் சேர்க்கையானது குழந்தை இல்லாமை, ஆண்மைக் குறைவு அல்லது தாமதமாகப் பிறந்த குழந்தை அல்லது பலவீனமான குழந்தைகளின் பிரச்சிினைகளை எதிர் கொள்வார்கள். பலர் போதைப் பழக்கங்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    பரிகாரம்: விநாயகருக்கு மாதுளை சாரால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்

    சனி+கேது

    ஒரு ஜாதகத்தில் சனியும் கேதுவும் சேர்ந்து இருந்தால் மிகுதியான கர்ம வினைப்பதிவினை அனுபவிப்பார்கள். கேது தடை, தாமதம். சனி கர்ம வினை, தொழில். திருமணத் தடை அதிகம் உண்டு.

    வியாபாரம், சுய தொழில் சிந்தனை அதிகம் இருக்கும். பெரிய முதலீட்டில் தொழில் செய்து வாழ்வாதாரத்தை இழந்த பலருக்கு இது போன்ற சம்பந்தம் இருக்கும். இவர்களுக்கு தொழிலில் நிதானமற்ற நிலையை ஏற்படுத்தி விடுகிறது. தொழிலில் இவர்களுக்கு வராக்கடனே அதிகம் இருக்கும். முதலாளி தொழிலாளி கருத்து வேறுபாடு அதிகம் இருக்கும். இந்த யோகம் உள்ளவர்கள் தனிபட்ட வாழ்க்கை அல்லது பொருளாதாரத்தில் தோற்றுப் போனாலும் நிச்சயம் புகழை அடைவார்கள். சிலர் 6 மாதம் தொழில், 6 மாதம் உத்தியோகம் என்ற நிலைப்பாட்டில் இருப்பார்கள் அல்லது ஒரு வருடத்திற்கு தேவையான பொருளாதாரத்தை 6 மாதத்தில் சம்பாதித்து விட்டு மீதமுள்ள ஆறுமாதம் ஓய்வு எடுப்பார்கள்.

    தொழில் சார்ந்த நல்ல வாய்ப்புகள் இவர்களுக்கு வரும் போது அந்த வாய்ப்புகளை இவர்கள் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். தொழிலில் இவர்களுக்கு நிரந்தரமான வருமானம் எப்போதும் இருக்காது வருமானம் வரும் ஆனால் வராது என்பது போல் தான் இவர்களுடைய வாழ்க்கை இருக்கும். முதலீடு இல்லாத தொழிலில் கொடி கட்டி பறப்பார்கள்.

    பரிகாரம்: சனி ஓரையில் வன்னி மரத்தை 108 முறை வலம் வரவேண்டும். வாழும் வாழ்க்கை அர்த்தம் உள்ளது என்ற வாழ்வியல் தத்துவத்தை புரிய வைப்பவர் கேது. வாழ்க்கையே அர்த்தமாக்க விநாயகர் வழிபாடு மிக அவசியம்.கேதுவினால் இன்னல்களை அனுபவிப்பவர்கள் மேலே கூறிய பரிகாரங்களை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    செல்: 98652 20406

    Next Story
    ×