என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஆன்மிக அமுதம்- வளர்ப்புத் தாய்!
- தான் பெற்ற பிள்ளை ராமனோடு ஒப்பிட்டு, தான் வளர்த்த பிள்ளை பரதன் ராமனை விடவும் கோடி மடங்கு உயர்ந்தவன் என்று புகழ்கிறாள் கோசலை.
- கண்ணனின் தாய்க்கும் கர்ணனின் தாய்க்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு.
பெற்ற தாயா, வளர்ப்புத் தாயா, இந்த இருவரில் யார் உயர்ந்தவர் என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வது? மகன்மேல் கொண்ட பாசத்தில் ஒருவரை ஒருவர் மிஞ்சுபவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒரு கண்ணோட்டத்தில் வளர்ப்புத் தாய் பெற்ற தாயை விட உயர்ந்தவள் என்றும் சொல்லலாம்.
வளர்ப்புத் தாய்கள் தாங்கள் வளர்த்த பிள்ளைமேல் எத்தனை ஆழ்ந்த பாசத்தைக் கொண்டிருந்தார்கள் என்பதை நம் இதிகாசங்களும் புராணங்களும் உள்ளம் உருகச் சித்தரிக்கின்றன.
ராமனும் கண்ணனுமாகிய நம் இதிகாசத் தெய்வங்கள் இருவருக்குமே வளர்ப்புத் தாய்கள் உண்டு. ராமனை அவனைப் பெற்ற கோசலை மட்டுமா வளர்த்தாள்? அவளுடன் இணைந்து அவளின் சக்களத்திகளான கைகேயி, சுமித்திரை இருவரும் கூட வளர்த்தார்கள்.
ராமன் தன் வளர்ப்புத் தாயான கைகேயி மேல் வைத்திருந்த பாசத்தைப் பற்றியும் கைகேயி தன் வளர்ப்பு மகன் ராமன் மேல் வைத்திருந்த பாசத்தைப் பற்றியும் அபூர்வ ராமாயணங்கள் பல சித்தரிக்கின்றன.
ஜனகர் அவைக்கு விஸ்வாமித்திரரோடு வந்திருந்த ராமன் விஸ்வாமித்திரர் சொன்னபடி, அங்கு வைக்கப்பட்டிருந்த வில்லில் நாணேற்றினான். வில் ஒடிந்தே போயிற்று.
வில்லொடித்த ராமனுக்குத் தன் வளர்ப்பு மகள் சீதையைத் திருமணம் செய்துவைக்க விரும்பினார் சீதையின் தந்தையான ஜனகர். ராமனிடம் சீதையை மணந்துகொள்ளச் சம்மதமா என்று கேட்டார்.
ராமபிரான், 'நான் யாரை மணப்பது என்பதை நான் மட்டும் எப்படி முடிவு செய்ய முடியும்? உங்கள் மகள் எனக்கு ஏற்ற பெண்தானா என்பதைக் கண்டறிந்து அதை முடிவு செய்ய வேண்டியவர்கள் என் தாய்மார்கள் அல்லவா? முக்கியமாக என் அன்னை கைகேயி என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டுத்தான் நான் என் முடிவைச் சொல்ல முடியும்!' என்று பதில் சொன்னானாம்!
இந்த சம்பவத்தைத் தன் கானக வாழ்வின்போது அத்திரி மகரிஷியின் மனைவி அநசூயா தேவியிடம் பகிர்ந்து கொள்கிறாள் சீதாதேவி.
அநசூயா தேவி வியப்போடு, 'அப்படி ராமன் சொன்னபோது உன் மனநிலை எப்படி இருந்தது?' என வினவினாள். அதற்கு சீதாதேவி சொன்ன பதில் என்ன தெரியுமா?
'தாய் சொல்லைத் தட்டாத பிள்ளை கட்டாயம் நல்லவராகத்தான் இருப்பார் என்ற எண்ணத்தில் எனக்கு அவர் மேல் நம்பிக்கை வந்தது!'
* திருமணம் முடிந்து சீதையும் ராமனும் மிதிலையிலிருந்து அயோத்தி செல்கிறார்கள். சில நாட்கள் சென்றபின் ஒரு நாள்..
ராமன் மாலை நேரத்தில் நந்தவனத்தில் அமர்ந்திருந்தான். அப்போது, அவனைத் தேடிவந்த சீதை, தான் வளர்க்கும் கிளியை ராமனிடம் கொடுத்து அதற்குப் பெயர் வைக்கச் சொன்னாள்.
'உலகிலேயே நான் அதிகம் நேசிக்கும் பெண்ணின் பெயரை இந்தக் கிளிக்கு வைக்கப் போகிறேன்!' என்று ராமன் சொன்னதும் சீதை தன் பெயரைத்தான் அவன் வைப்பானோ என்ற எண்ணத்தில் நாணித் தலைகுனிந்தாள்.
ராமன் கிளியின் இறகுகளைப் பரிவோடு தடவிக்கொடுத்து அதை 'கைகேயி!' எனப் பெயரிட்டு அழைத்தானாம். இந்தச் சம்பவம் கம்ப ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் சொல்லப்படுகிறது.
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை. பின்னாளில் மந்தரை சொன்னதையெல்லாம் கேட்டு அதையே கைகேயி திரும்பச் சொல்லப்போகிறாள் என்பதை உணர்ந்திருந்த ராமன், அதனால்தான் கிளிக்குக் கைகேயியின் பெயரை வைத்தான் என்றும் இதற்கு விளக்கம் சொல்வதுண்டு.
* ராமாயணத்தில் ராமனின் வளர்ப்புத் தாய் கைகேயி என்றால் பரதனின் வளர்ப்புத் தாய் கோசலை. மூன்று தாய்மார்களும் சேர்ந்துதானே நான்கு குழந்தைகளை வளர்க்கிறார்கள்?
கானகம் சென்று பதினான்கு ஆண்டுகள் ஆன பின்னும் ராமபிரான் அயோத்திக்குத் திரும்பி வராததால் பரதன் கடும் துயரில் ஆழ்கிறான். இனி வாழ்ந்து பயனென்ன? தீக்குளித்து இறக்க முடிவெடுக்கிறான்.
பரதனின் அந்த முடிவை அறிந்த கோசலை பரதன் இருக்குமிடம் தேடி ஓடோடி வருகிறாள். பரதனின் உயர்ந்த பண்புகளை எடுத்துச் சொல்லி அவனை மனமாரப் பாராட்டி தீக்குளிப்பதை நிறுத்தச்சொல்லி மன்றாடுகிறாள். அப்போது கோசலை சொல்வதாகக் கம்பர் எழுதும் வரிகள் இவை:
'எண் இல் கோடி ராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?' (பாடல் எண் 10181)
ஆயிரம் ராமர் நின்கேழ் ஆவரோ என்று குகன் பரதனைப் பாராட்டினான் அல்லவா? கோசலையோ கோடி ராமர்களும் பரதனுக்கு நிகராக மாட்டார்கள் என்கிறாள்.
தான் பெற்ற பிள்ளை ராமனோடு ஒப்பிட்டு, தான் வளர்த்த பிள்ளை பரதன் ராமனை விடவும் கோடி மடங்கு உயர்ந்தவன் என்று புகழ்கிறாள் கோசலை என்றால் வளர்த்த பாசத்தின் பெருமையை நாம் புரிந்துகொள்ளலாம்.
திருப்பூர் கிருஷ்ணன்
* மகாபாரதக் கண்ணனுக்கும் இரண்டு தாய்மார்கள் உண்டு. கண்ணனைப் பெற்ற தாய் வசுதேவரின் மனைவி தேவகி. வளர்த்த தாய் நந்தகோபரின் மனைவி யசோதை.
அதனால்தான் 'ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர...' என பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் உள்ளம் உருகிப் பாடுகிறாள்.
ராமாயணத்தில் வளர்ப்புத் தாய்மார்கள் இருந்தாலும், பெற்ற தாய்மார்கள் மூவருக்குமே தங்கள் தங்கள் பிள்ளைகளையும் வளர்க்கும் பாக்கியம் கிடைத்தது.
ஆனால் கண்ணனைப் பொறுத்தவரை அவனைப் பெற்ற தாய் தேவகி, குழந்தை பிறந்தபோது அதன் முகம் பார்த்தாளே அன்றி, அதன்பின் குழந்தையை வளர்க்கும் பாக்கியத்தை அவளால் ஒருசிறிதும் பெற இயலவில்லை.
பிறந்த அன்றே இன்னொரு வீடு சென்ற கண்ணனை முழுவதுமாக வளர்த்து அவன் பிள்ளை விளையாட்டுக்களை எல்லாம் ரசித்து அனுபவிக்கும் பெரும்பேற்றைப் பெற்றவள் யசோதைதான். பெற்றவள் பெறாத பேற்றைப் பெற்றவள் யசோதை.
அதனால்தான், 'பிரம்மனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள உரலில் கட்டி வாய்பொத்தி கண்ணனைக் கெஞ்சவைத்த' யசோதையைப் பற்றி, 'எங்கும் நிறை பரப்பிரும்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை?' எனத் தன் பாடலில் வியக்கிறார் ஊத்துக்காடு வேங்கடகவி.
கண்ணனைப் போலவே மகாபாரதத்தில் இரண்டு தாய்மார்களைக் கொண்ட இன்னொரு பாத்திரம் கொடை வள்ளலாகத் திகழ்ந்த கர்ணன். கண்ணனின் தாய்க்கும் கர்ணனின் தாய்க்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு.
கண்ணனின் தாய் தன் குழந்தைக்கு ஆபத்து நேரும் என்றஞ்சி அந்தக் குழந்தையைத் தன் கணவர் வசுதேவர் மூலம் நந்தகோபர் வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். அவள் தன் குழந்தையைப் பிரியக் காரணம் குழந்தை மேல் கொண்ட அக்கறை. அதில் சுயநலக் கலப்பு எதுவுமில்லை.
ஆனால் கர்ணனின் பெற்ற தாயான குந்தியின் நிலை அதுவல்ல. அவள் குழந்தையின் பாதுகாப்பை எண்ணியல்ல, தனக்கு அவமானம் விளையுமே என்ற அச்சத்தால்தான் பெற்ற குழந்தை கர்ணனைத் துறந்தாள்.
ஓடும் நதியில் ஒரு கூடையில் தன் குழந்தையை விதிவழியே செல்லட்டும் என அனுப்பி வைத்தாள். அந்த நதிநீரோடு குந்தியின் கண்ணீரும் கலந்தது உண்மைதான். என்றாலும் குந்திதேவி தான் பெற்ற குழந்தையைத் துறக்கக் காரணம் அவமானத்தில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற சுயநலம்.
குந்தியால் துறக்கப்பட்டு நதியில் விடப்பட்ட அந்தக் குழந்தை தேரோட்டியால் தேரோட்டி மகனாகவே வளர்க்கப்படுகிறது. அவனைக் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறாள் தேரோட்டியின் மனைவியான ராதை.
அவளின் வளர்த்த பாசம் பெற்ற பாசத்தை விட எல்லை மீறுகிறது. தன் வளர்ப்பு மகன்மேல் உயிரையே வைத்திருக்கிறாள் ராதை.
கர்ணன் போரில் அர்ச்சுனனால் அம்பு எய்யப்பட்டு மரணப் படுக்கையில் கிடக்கிறான் என்பதை அறிந்ததும் ஓடோடிப் போர்க்களத்திற்குப் போகிறாள். அம்பு பாய்ந்த வலியால் துடித்துக் கொண்டிருக்கும் தன் வளர்ப்பு மகன் கர்ணனைப் பார்த்துக் கதறுகிறாள்.
கிருஷ்ணர், அவளிடம் குந்தியைக் காட்டி குந்திதான் கர்ணனைப் பெற்ற தாய் என விளக்குகிறார். தானே அவன் தாய், குந்தியல்ல எனச் சீறுகிறாள் ராதை.
கர்ணன் உயிர் பிரிந்ததும் 'மகனே போய்விட்டாயா?' எனப் பெற்ற தாய் குந்தி அழுது அரற்றுகிறாள். ஆனால் வளர்ப்புத் தாய் ராதையிடமிருந்து எந்தக்குரலும் வரவில்லை. திகைப்போடு ராதையை உற்றுப் பார்க்கிறார் கிருஷ்ணர்.
வளர்ப்பு மகன் கர்ணன் இறந்த துயரத்தைத் தாங்காமல் அவன் உடல்மேலேயே விழுந்து காலமாகி விடுகிறாள் அந்த வளர்ப்புத் தாய் என்பதைப் பதிவு செய்துள்ளது மகாபாரதம். வளர்ப்புத் தாயின் பாசம் பெற்ற தாயின் பாசத்தை விடவும் மேலானது.
இக்காலத்தில் குழந்தைகளைப் பராமரிக்கும் நர்சரிப் பள்ளிகளில் பலர் தாங்கள் பெறாத குழந்தை மேல் அளவற்ற பாசம் செலுத்தி அவர்களை அன்போடு வளர்ப்பதைப் பார்க்கிறோம்.
இந்த வளர்ப்புத் தாய் மரபு என்பது, தமிழகத்தில் தொன்று தொட்டு வரும் மரபுதான். சங்கப் பாடல்களெல்லாம் பெற்ற தாயோடு செவிலித் தாய் என வளர்ப்புத் தாய் பற்றியும் நிறையப் பேசுகின்றன. நற்றாய் எனப் பெற்ற தாயையும் செவிலித் தாய் என வளர்ப்புத் தாயையும் சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
பெற்றால்தான் தாயா? வளர்த்தாலும் தாய்தான். அநாதையா விடப்படும் தொட்டில் குழந்தைகளை எடுத்து வளர்க்கும் தாய்மார்கள் போற்றத்தக்கவர்கள் அல்லவா? அநாதைக் குழந்தையை வளர்ப்பதை விடவும் உயர்ந்த புண்ணியச் செயல் உலகில் வேறென்ன உண்டு?
எல்லாக் குழந்தைகள் மேலும் பாசம் செலுத்தும் தாய் மனம் எந்தப் பெண்களுக்கெல்லாம் வாய்க்கிறதோ, அவர்களெல்லாம் குழந்தை பெற்றிருந்தாலும் பெறாதிருந்தாலும் உன்னதமான தாய்மார்களே. அத்தகைய பெண்களாலேயே உலகம் தழைக்கிறது.
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com






