search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முதல்வர் ராஜாஜியின் குதர்க்கமான பேச்சும் காமராஜரின் கோபமும்- முனைவர் கவிஞர் இரவிபாரதி
    X

    முதல்வர் ராஜாஜியின் குதர்க்கமான பேச்சும் காமராஜரின் கோபமும்- முனைவர் கவிஞர் இரவிபாரதி

    • ராஜாஜி முதல்வராகப் பொறுப்பேற்று நன்றாகச் செயல்படுவதற்கு வசதியாக, தனது தமிழ்நாடு காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்தார் காமராஜர்.
    • காமராஜர் கட்சியைப் பார்த்துக் கொள்ளட்டும், நான் ஆட்சியைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி எல்லோரையும் சமாதானப்படுத்தினார் ராஜாஜி.

    மூதறிஞர் ராஜாஜி ஓர் அறிவாளி, தலைசிறந்த மதியூகி என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. காந்திஜி, நேருஜி போன்றோர் அவரைப் பெரிதும் மதித்தனர். அவரோடு கருத்து வேறுபாடுகள் நிறையவே இருந்த காலத்திலும், அவரைப் பெரிதும் மதித்தவர் காமராஜர். அதைப் போலவே காமராஜரோடு கருத்து மோதல்கள் இருந்தபோதும், காமராஜரின் உழைப்பின் மீதும், நேர்மை, ஒழுக்கத்தின் மீதும் பெருமதிப்பு கொண்டிருந்தார் ராஜாஜி.

    இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான கவர்னர் ஜெனரல் பதவியை யாருக்கு கொடுப்பதென ஆங்கிலேய அரசாங்கம் ஆலோசித்தபோது, ராஜாஜியின் பெயர்தான் முன்மொழியப்பட்டு, அதுவும் ஏற்கப்பட்டது. அதே போல வங்காள கவர்னர் பதவியை நிர்வகித்த அனுபவசாலியாகவும் விளங்கினார் ராஜாஜி.

    வெளி மாநிலத்தில் எவ்வளவு பெரிய செல்வாக்குள்ள பதவி வகித்தாலும் உள்ளூரிலே தான் மதிக்கப்பட வேண்டுமென்ற எண்ணம், எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பு தானே. அப்படித்தான் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக வந்து விடவேண்டும் என்பதிலே மிகவும் குறியாக இருந்தார் ராஜாஜி. அதற்காக நேரம் பார்த்துக் காத்திருந்தார்.

    காமராஜரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்பதையும் நன்கு உணர்ந்திருந்தார் ராஜாஜி. அதே போன்று ராஜாஜி போன்றோர் முதல்-அமைச்சராக வந்தால் ஊழல் இல்லாத அரசு நடக்கும். தமிழகம் நிச்சயம் முன்னேறும் என்பதிலும் நல்ல நிர்வாகம் நடக்கும் என்பதிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் காமராஜர். எனவே ராஜாஜிக்கு முழு ஒத்துழைப்பையும் நல்கினார்.

    தமிழகத்தின் அரசியலையும் தாண்டி அகில இந்திய அளவிலும் காமராஜர் சிந்திக்கத் தவறவில்லை. அப்போது பாரதப் பிரதமராக இருந்த நேருவின் கரங்களைப் பலப்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து செயல்பட்டார் காமராஜர். அகில இந்தியக் காங்கிரசின் தலைவராக இருந்த "தாண்டன்" நேருவைக் குறை சொல்வதிலேயே குறியாக இருந்தார். அகில இந்தியத் தலைவராக இருப்பவரும், பாரதப் பிரதமராக இருப்பவரும் கைகோர்த்துக்கொண்டு இணக்கமாகச் செயல்பட்டால்தான் நாட்டின் நிர்வாகம் நன்றாக நடக்கும் என்பது காமராஜரின் நம்பிக்கை. அதற்கேற்றவாறு தாண்டன் நடந்து கொள்ளவில்லை.

    1951 செப்டம்பர் 8-ம் நாளில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பண்டித நேருவே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தை தாண்டி, கேரளாவிலும், ஆந்திராவிலும், தீவிர சுற்றுப்பயணம் செய்து நேருவுக்கு ஆதரவு திரட்டினார் காமராஜர். அதற்கு நல்ல பலனும் கிடைத்து நேருவும் வெற்றி பெற்று தலைவரானார்.

    அறிவினால் அனைவரையும் ஈர்த்தவர் ராஜாஜி என்றால் அயராத உழைப்பினால் அனைவரையும் ஈர்த்தவர் காமராஜர் என்ற பெயர் அகில இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் நல்ல பேரை எடுத்தார் காமராஜர்.

    ஆனால் நாட்டின் அப்போதைய சூழ்நிலை நன்றாக இல்லை. மழை இல்லாமல் போனதால் 1948 முதல் 1952 வரை, பஞ்சம் நிலவிய காலமாக இருந்தது. நாடெங்கும் கஞ்சித்தொட்டி திறக்க வேண்டும், தீய்ந்து கருகியுள்ள நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தன.

    உணவுப் பொருள் தட்டுப்பாடு அதிகரித்தது. 16 அவுன்சாக வழங்கப்பட்டு வந்த அரிசியின் அளவு, 1952-ல் 6 அவுன்சாக குறைத்து வழங்கப்பட்டது. கள்ளச்சந்தையில் அரிசி பெரிதும் விற்கப்பட்டது. வயது வந்தோருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட நேரம் என்பதால் வருகிற 1952 தேர்தலை எப்படிச் சந்திக்கப் போகிறோம்? வெற்றி கிடைக்குமா? என்ற கேள்வி காங்கிரஸ்காரர்கள் எல்லோரையும் சிந்திக்க வைத்தது. இப்படிப்பட்ட அசாதாரணமான பஞ்சம் நிலவும் சூழ்நிலை அமைந்து விட்டதால் எதிர்க்கட்சிகளுக்கு அதுவே கொண்டாட்டமாகிப் போனது. பொதுமக்கள் மனதிலும் அதிருப்தி நிலவியது. நடைபெற்ற 1952-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மொத்தம் உள்ள 375 தொகுதிகளில் 152 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.

    அப்போது முதல்-அமைச்சராக இருந்த குமாரசாமி ராஜா, பக்தவச்சலம், கோபால் ரெட்டி, காளா வெங்கட்ராவ், கே.சந்திர மவுலி, கே.மாதவமேனன் போன்ற முக்கிய தலைவர்கள் எல்லாம் தோல்வியைத் தழுவினர். அதிக எண்ணிக்கை உடையது காங்கிரஸ் கட்சி என்ற பெருமை மட்டுமே நிலைத்தது.

    கம்யூனிஸ்டு கட்சி 59 இடங்களிலேயும், கிசான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி 35 இடங்களிலும், சோசலிஸ்ட் கட்சி 13 இடங்களிலும், கிருஷிக் லோக் கட்சி 15 இடங்களிலும், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19 இடங்களிலும், காமன் வீல் பார்ட்டி 6 இடங்களிலும் மற்ற 63 இடங்களில் சுயேச்சையும் வெற்றி பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் இணைந்து ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பினை பிரகாசம் தலைமையில் தோற்றுவித்து ஆட்சி அமைக்க முயன்றனர்.

    இப்படிப்பட்ட முயற்சி வெற்றி பெற்றால் தமிழகம் கம்யூனிஸ்டு கையில் அல்லவா போய் விடும் என்ற கவலை காங்கிரஸ்காரர்களை கவலை கொள்ளச் செய்தது. அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் பெரிதும் வருந்தினார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது? என்று காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசித்தனர். கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்கு சரியான ஆள் ராஜாஜிதான். எனவே அவரையே முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கலாம் என்ற டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராம்நாத் கோயங்கா யோசனையை அனைவருமே ஏற்றுக்கொண்டனர். நேருவும் ஒரு நிபந்தனையோடு அதனை ஏற்றுக்கொண்டார்.

    முதல்-அமைச்சராக வரவிரும்புபவர் சட்டமன்றத் தேர்தலிலே நின்று, மக்களைச் சந்தித்து, தேர்வு பெற்று வருவதே நல்லது என்று நேரு சொல்லி விட்டார். அதுவே தனது நிலைப்பாடு என்று காமராஜரும் சொல்லி விட்டார். ஆனால் ராஜாஜிக்கு தேர்தலில் நின்று வெற்றி பெற்று வருவதில் உடன்பாடில்லை. அப்போது அமைச்சரவையின் தலைவராக இருந்த குமாரசாமி ராஜாவிடம், தம்மை மேலவை உறுப்பினராக நியமிக்கும்படி கவர்னர் டி.பிரகாசாவுக்கு பரிந்துரை செய்திட வேண்டிக் கேட்டுக்கொண்டு அப்படியே மேலவை உறுப்பினராகவும் ஆகி விட்டார் ராஜாஜி.

    இந்த ஏற்பாட்டில் கவர்னர் டி.பிரகாசாவுக்கு சிறிதும் உடன்பாடில்லை. என்றாலும், காலத்தின் தேவை கருதி இறுதியில் இணைந்ததால் ராஜாஜி மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

    நான் ஒரு தொகுதியில் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டால் அந்தத் தொகுதிக்கு மட்டுமே பிரதிநிதி. இப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் 150 பேருக்கும் நானே பிரதிநிதி என்று விளக்கம் சொல்லி சமாளித்தார் ராஜாஜி.

    ராஜாஜி முதல்வராகப் பொறுப்பேற்று நன்றாகச் செயல்படுவதற்கு வசதியாக, தனது தமிழ்நாடு காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்தார் காமராஜர். அதைத் தொடர்ந்து டாக்டர் பி.சுப்பராயன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சரியாகச் செயல்பட முடியாததால், மீண்டும் காமராஜரே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    முனைவர் கவிஞர் இரவிபாரதி

    காமராஜர் கட்சியைப் பார்த்துக் கொள்ளட்டும், நான் ஆட்சியைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி எல்லோரையும் சமாதானப்படுத்தினார் ராஜாஜி. ஆட்சி, நிர்வாகம் நன்றாக நடந்தால் அதுவே தனக்கு மிக்க மகிழ்ச்சி என்று பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் காமராஜர்.

    இந்த நேரத்தில்தான், இலங்கை இந்தியர்கள் விடுத்த அழைப்பினை ஏற்று 1953-ல் இலங்கைக்கும், 1954 பிப்ரவரியில் மலேயாத் தமிழர்கள் விடுத்த அழைப்பினை ஏற்று மலேயாவுக்கும் சென்று வந்தார் காமராஜர். முதல்-அமைச்சர் பொறுப்பேற்றதற்குப் பிறகு ராஜாஜியின் போக்கிலே மிகப்பெரிய மாறுதல் காணப்பட்டது. அவரது பேச்சும், செயல்பாடும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. தானென்ற கர்வம் தலைதூக்க தொடங்கியது. நாட்டிற்கு கிடைக்க வேண்டிய சுதந்திரம் கிடைத்துவிட்டது. இனிமேல் காங்கிரஸ் கட்சி இந்த நாட்டிற்குத் தேவையில்லை என்ற ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார் ராஜாஜி. இந்தப் பேச்சால் எல்லோரும் அதிர்ந்து போய் முகம் சுளித்தனர்.

    "காய் பழமாகிறது" பழமானதற்குப் பின்னாலே பழத்திற்கும், மரத்திற்கும் உள்ள தொடர்பே அத்துப் போய்விடுகிறது என்று உதாரணத்தையும் சொல்லி எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தார் ராஜாஜி. இது போதாதென்று "தியாகிகளுக்கு நிலம் கொடுக்கக்கூடாது" அவர்கள் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று பேசி அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டு எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தார் ராஜாஜி.

    ராஜாஜி பிறப்பித்த இந்த உத்தரவுகள் காங்கிரசார் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இவர் மட்டும் சம்பளம் இல்லாமலா வேலை பார்க்கிறார்? ஏற்கனவே கவர்னர் ஜெனரலாக இருந்ததற்காக பென்ஷனும் பெற்றுக் கொண்டிருப்பவர் இப்படியெல்லாம் உத்தரவு பிறப்பிப்பது எந்த வகையில் நியாயம்? என்று நாடெங்கும் எதிர்ப்புக் குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கின.

    "பிராமணர்-சூத்திரர்" என்ற சொற்களை இதற்கு முன்னர் ராஜாஜி அதிகம் பயன்படுத்தி வெளிப்படையாகப் பேசியதில்லை. ஆனால் இப்போது தான் நாட்டின் முதல்-அமைச்சர் என்ற அதிகார தோரணையில் பிராமணர்களை உயர்த்திப் பேசியது எல்லோரையும் ஆத்திரப்பட வைத்தது. வேலையில் இருந்து விலகிய பிராமணர்களுக்கு மீண்டும் வேலை கொடுத்தது, கல்வி நிலையங்களில் பிராமணர் அல்லாதவர்க்கு ஒதுக்கப்பட்ட இடங்களை ரத்து செய்தது போன்ற மக்கள் விரோதச் செயல்களைச் செய்ததன் மூலம் பிராமணர் அல்லாதவர்க்கு எதிராக ராஜாஜி செயல்படுகிறார் என்று தலைவர்களாலும் மக்களாலும் விமர்சிக்கப்பட்டார். மேலும் இதனால் மந்திரி சபையிலும் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

    இதற்கு முன்னர் எதிலும் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் ராஜாஜி, முதல்-அமைச்சர் பதவி ஏற்றதற்குப் பின்னாலே, அதிகார போதைக்கு ஆட்பட்டவராகவே அவரது செயல்பாடுகள் அமைந்திருந்தன. மக்கள் நலனை பின்னுக்குத் தள்ளிவிட்டு, தான் நினைத்ததையெல்லாம் சாதிக்க வேண்டும் என்று, ஏதோ ஒரு வேகத்தில் சுயநலத்தோடு செயற்பட்டுக் கொண்டிருந்தார் இந்தப்போக்கு காமராஜருக்கும் பிடிக்கவில்லை. மற்றவர்களுக்கும் பிடிக்கவில்லை.

    ராஜாஜி காங்கிரஸ் கட்சியாலேதான் பெரிய பதவிகளை எல்லாம் அடைந்தார். அனுபவித்தார். இப்போது வகிக்கின்ற முதல்-அமைச்சர் பதவியும் அப்படி வந்ததுதானே. அதை எல்லாம் மறந்து விட்டு, காங்கிரஸ் கட்சி இனி நாட்டிற்குத் தேவையில்லை என்ற பேச்சு அபத்தமானது என்பது மட்டுமல்ல, ஆபத்தானது என்று தான் எல்லோரும் நினைக்கத் தொடங்கினர். பிராமணர் சூத்திரர் என்ற பேச்செல்லாம் இப்போது தேவைதானா?

    தந்தை பெரியார், அண்ணா போன்ற சமூக சீர்திருத்த தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் ராஜாஜியின் போக்கை கடுமையாக விமர்சித்ததோடு, பொங்கி எழுந்தனர். மற்ற கட்சித் தலைவர்களும் ராஜாஜியை கடுமையாக வெறுத்தனர். 1953-ல், மதுரையில் டி.வி.எஸ். குழுமம் கட்டிய கட்டிடத் திறப்பு விழாவில், ராஜாஜி, காமராஜர், சர்.சி.பி.ராமசாமி ஐயர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அந்தக் கூட்டத்திலே ராஜாஜி பேசும்போது, சூத்திரன் செய்ய வேண்டிய மோட்டார் தொழிலை, பிராமணரான டி.வி.எஸ். செய்து கொண்டிருக்கிறார். வயதான காரணத்தால் டி.வி.எஸ். சுந்தரம் அய்யங்கார் தன் பிள்ளைகளிடம், அதாவது இளைஞர்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பது பாராட்டுக்குரியது என்று ராஜாஜி பேசியதில் ஏதோ ஒரு உட்குறிப்பு இருப்பதாக கருதிய காமராஜர்." ராஜாஜி ராஜ்ய நிர்வாகத்திலும் இந்தக் கொள்கையைப் பின்பற்றலாமே" என்று பதிலடி கொடுத்துப் பேசியதை எல்லோரும் வரவேற்று மகிழ்ந்தனர்.

    ராஜாஜியால் காமராஜரின் இந்தப் பேச்சுக்கு பதில் சொல்ல முடியவில்லை. தேவை இல்லாமல் பேசி விட்டோமோ என்று ராஜாஜியையே அந்த நிகழ்வு சிந்திக்க வைத்தது.

    காமராஜரிடம் தந்திரங்கள், சூழ்ச்சி இருக்காது. பதட்டமில்லாமல், பொறுமையாகச் சிந்திக்கும் புத்திசாலித்தனம் இருந்தது என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சரியான சான்றாக அமைந்தது.

    - அடுத்த வாரம் சந்திப்போம்

    Next Story
    ×