search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திருமண விஷயத்தில் காமராஜர் எடுத்த உறுதியான முடிவு- முனைவர் கவிஞர் இரவிபாரதி

    • உடற்பயிற்சி செய்வதிலும், சிலம்பம் கற்றுக்கொள்வதிலும் காமராஜருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.
    • காந்திஜி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தை முன்னின்று நடத்தினார் காமராஜர்.

    எந்த வேலையைச்செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பது காமராஜரின் வழக்கம். தாய்மாமன் கருப்பையா நாடாரின் ஜவுளிக்கடையிலும் அப்படித்தான் பணிகளைக் கவனித்தார் காமராஜர். புதிய வாடிக்கையாளர்களுடன் கலகலப்பாகப் பேசி நல்லபடி வணிகம் செய்ததில் தாய்மாமனுக்கு நிறைய மகிழ்ச்சி.

    காலையில் கோவிலுக்குச் செல்வது மார்கழி பஜனையில் கலந்து கொள்வது, ஊரின் மகமைக் கூட்டங்களில் கலந்து கொள்வது, கந்தசாமிப் புலவர் நடத்திய பஜனைக் கூட்டத்தில் சேர்ந்து முருக பக்திப் பாடல்களைப் பாடுவது, இதை எல்லாம் பார்த்து அன்னை சிவகாமி அகமகிழ்ந்து போனார். மகனைப் பற்றிய நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார்.

    உடற்பயிற்சி செய்வதிலும், சிலம்பம் கற்றுக்கொள்வதிலும் காமராஜருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. ஒருமுறை ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சந்தன மகாலிங்கம் கோவிலுக்குச் செல்லுகிற சைக்கிள் போட்டியில், வண்டியை விரைவாகச் செலுத்தி முதல் பரிசும், மாலையும் பெற்றார் காமராஜர்.

    அதைப் போலவே, பத்திரிகை படிப்பதிலும், நண்பர்களைச் சந்தித்து அளவளாவதிலும், அவர்களுடன் நாட்டு நடப்புகளைப் பற்றி விவாதிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார் காமராஜர்.

    அப்போது முதலாம் உலகப்போர் நடந்து கெண்டிருந்த நேரம். யுத்த செய்திகளையும், யுத்தத்தால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் பத்திரிகையில் படித்து மிகுந்த ஆதங்கத்தோடு பேசினார் காமராஜர்.

    டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் பேச்சு என்றால் காமராஜருக்கு மிகவும் பிடிக்கும். உணர்ச்சிகரமான அவரது பேச்சு காமராஜரின் அரசியல் பிரவேசத்துக்கு ஓர் உந்து சக்தியாக இருந்தது. அவரும், திரு.வி.க.வும், மதுரை வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப்பும் அடிக்கடி விருதுபட்டிக்கு வந்து காமராஜரின் தேச பக்திக்கனல் கொழுந்து விட்டு எரிவதற்கு நெய்வார்த்து விட்டு போவார்கள்.

    இந்த வரதராஜுலு நாயுடுதான், பின்னாளில் காமராஜர் மிகப்பெரிய தலைவராக வளர்ந்து எல்லோரும் போற்றுகிற அளவிலே உயர்ந்தபோது, தமிழகத்தின் முதல்-அமைச்சராக காமராஜர்தான் வர வேண்டும் என்று பாடுபட்டு அதிலே வெற்றியும் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் "நான் பொதுக்கூட்டம் கேட்கப் போகணும் கல்லாப்பெட்டிப் பொறுப்புக்கு ஆள் அனுப்புங்க. மாற்று ஆள் வராவிட்டால், அதற்கு நான் பொறுப்பில்லை" என்று சொல்லி ஜவுளிக்கடையிலிருந்து கிளம்பி விட்டார் காமராஜர்.

    "ஹோம் ரூல்" இயக்கத்தின் தலைவரான அன்னிபெசன்ட் அம்மையாரையும், வாடியாவையும் ஆங்கில அரசு ஊட்டியில் கைது செய்ததைக் கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய ஆளாக கலந்து கொண்டார் காமராஜர். இதைக் கவனித்த தாய்மாமன் கருப்பையா நாடார் இனிமேல் காமராஜர் இங்கிருப்பது நல்லதல்ல. திருவனந்தபுரத்தில் உள்ள இன்னொரு தாய்மாமன் காசி நாராயண நாடாரின் மரவாடிக்கு அனுப்பி வைத்திட்டார்.

    இருப்பிடத்தை மாற்றினால் இதயக் கொள்கை மாறி விடுமா என்ன? அங்கேயும் பத்திரிகைகளைத் தேடித் தேடிப் படிப்பதும், காங்கிரஸ் கூட்டங்களுக்குப் போவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் காமராஜர்.

    திருவாங்கூர் சமஸ்தானத்தில் "வைக்கம்" என்ற இடத்தில் மகாதேவர் ஆலயத்தை சுற்றியிருந்த தெருக்களில் ஈழவர், நாடார், புலையர் மற்றும் தீயர் என்னும் ஜாதியினர் நடக்கக்கூடாதென்ற ஒரு விதிமுறை அமலில் இருந்தது. இந்தக் கொடுமையை எதிர்த்து டி.கே.மாதவன், கேசவமேனன், வழக்கறிஞர் ஜோசப் கிளர்ச்சி செய்தனர். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வே.ரா.பெரியாரை அழைத்து வந்து போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டமைக்காகத்தான் ஈ.வெ.ரா. பெரியாரை வைக்கம் வீரர் என்று பின்னாளில் அழைத்தனர்.

    இப்படிப்பட்ட கூட்டம் நடக்கும்போது இளைஞன் காமராஜர் சும்மா இருப்பாரா? முதல் ஆளாகச் சென்று அதிலே கலந்துகொண்டு தனது அரசியல் தாகத்தை தீர்த்துக் கொண்டார் காமராஜர்.

    ஆக, திருவனந்தபுரத்திலும், காமராஜருக்கு இருப்புக் கொள்ளவில்லை. இதை உணர்ந்த தாய் மாமன்மார்கள் போடிநாயக்கனூர் கடைக்கு அனுப்பி வைத்துப் பார்த்தனர். அங்கு பணியாற்றிய சிறிது காலமும், கூட அரசியல் நடவடிக்கைகளிலே அதிக ஆர்வம் காட்டினார் காமராஜர். தந்தையில்லாப் பிள்ளை கோபிக்கவும் முடியவில்லை. எனவே வேறு வழியின்றி விருதுபட்டிக்கே அழைத்து வரப்பட்டார் காமராஜர். காமராஜரைப் பற்றிய கவலை எல்லோரையும் வாட்டத் தொடங்கியது. தவமிருந்து பெற்ற ஒரே ஆண் பிள்ளை. இவனால் இந்தக் குடும்பம் தழைக்க வேண்டுமே. பேசாமல் கால்கட்டுப் போட்டு கல்யாணம் செய்து வைத்து விட்டால் எல்லாமே சரியாகி விடும் என்று கணக்குப் போட்டார் அன்னை சிவகாமி அம்மாள். தாய்மாமன்மார்களும் அதனையே ஆமோதித்து பெண் பார்க்கும் படலத்தில் இறங்கினர். மற்ற ஏற்பாடுகளையும் ஓசைப்படாமல் செய்தனர். கல்யாணத் தேதியை உறுதி செய்யும் அளவுக்கு வேலைகள் வேகமாக நடந்தன.

    அப்போது காமராஜர் ஊரிலே இல்லை. கட்சி வேலையாக வெளியூர் சென்றிருந்தார். ஊர் திரும்பியதும், கல்யாண ஏற்பாடுகளை கண்டு, கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார் காமராஜர்.

    "கல்யாண ஏற்பாடுகளை இத்தோடு நிறுத்தி விடுங்கள். மேலும் திருமணத்திற்கு வற்புறுத்தினால் என்னை மறந்து விடுங்கள்" என்று கோபக்கனல் தெறிக்கப் பேசினார் காமராஜர். இதற்கு முன் இவ்வளவு கோபப்பட்டு பார்த்ததில்லை என்று நிலைமையை உணர்ந்த சிவகாமி அன்னையும், பார்வதிப் பாட்டியும், தாய்மாமன்மார்களும், திருமண ஏற்பாடுகளை நிறுத்தி விட்டனர். அதற்குப் பின்னர் திருமணப் பேச்சை யாரும் எடுக்கவில்லை.

    இந்தச் சூழ்நிலையிலேதான் அண்ணல் காந்தி அடிகள் மதுரைக்கு வருகை புரிந்தார். 1921-ம் ஆண்டு காந்தியடிகளின் உரையைக் கேட்பதற்காக, பொடிக்கடை ஞானம் பிள்ளை, சுப்பராய பந்துலு ஆகியோருடன் மதுரைக்கு புறப்பட்டுப் போனார் காமராஜர்.

    முனைவர் கவிஞர் இரவிபாரதி

    அன்று காந்தியடிகளின் உரையைக்கேட்டு உற்சாக வெள்ளத்திலே மிதந்தார் காமராஜர். ஏதோ, விவரிக்க முடியாத ஒரு எண்ணம், தன் மனதில் ஊற்றெடுத்து ஓடுவது போல் உணர்ந்தார் காமராஜர்.

    காந்தியடிகளின் எளிமைக்கோலம் காமராஜரைப் பெரிதும் கவர்ந்தது. நாட்டு விடுதலைக்காக துன்பங்களையும் துயரங்களையும் ஏற்றுக்கொண்டு உழைக்கிற பாங்கினை பார்த்து, மெய் மறந்து போனார் காமராஜர். இவர்தான் உத்தம புருஷர். இவரே நமது வழிகாட்டி என்று முடிவு கட்டிக் கொண்டார் காமராஜர்.

    தென்ஆப்பிரிக்க மக்களுக்கு காந்தி அடிகளால் எப்படி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டதோ அப்படி ஒரு விழிப்புணர்வு இந்திய மக்கள் மத்தியில் ஏற்படத்தான் போகிறது. விடுதலை பெறத்தான் போகிறோம் என்று உறுதியாக நம்பினார் காமராஜர்.

    காந்தியடிகளின், அகிம்சையும், சத்தியாகிரகமும், எளிமையும், உண்மையும், நேர்மையும் வெள்ளையரின் அடிமை விலங்கை உடைத்தெறிந்து சுக்கு நூறாக்கும் என்று உறுதியாக நம்பி, காந்திய வழியில் நடைபோட ஆரம்பித்தார் காமராஜர்.

    அதற்குப் பின்னர் காந்திஜி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தை முன்னின்று நடத்தினார் காமராஜர். வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் கலந்துகொள்ள சண்முகம் பிள்ளையுடன் சென்னை வந்து தனது பங்களிப்பை செய்தார் காமராஜர்.

    1922-ல் சாத்தூரில் ஈ.வெ.ரா. பெரியார் தலைமையிலே நடைபெற்ற தாலுகா காங்கிரஸ் மாநாட்டில் செயலாளராகப் பணியாற்றினார் காமராஜர். அப்போதெல்லாம் பெரியாருடன் நெருங்கிய தொடர்பு காமராஜருக்கு ஏற்படவில்லை. தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக பெரியார் இருந்ததால் தலைவர்-தொண்டன் என்றளவிலேதான் அந்தத் தொடர்பு அமைந்திருந்தது.

    பின்னாளிலே காமராஜர் தமிழ்நாடு காங்கிரசுக்கே தலைவராகி, பின்னர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆகி மிகப்பெரிய பேரும் புகழும் பெற்றபோது காமராஜருக்கு உறுதுணையாக இருந்தவர் தந்தை பெரியார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    1923-ம் ஆண்டு மதுரையிலே நடைபெற்ற கள்ளுக்கடை மறியலை முன்னின்று நடத்தினார். அப்போது விருதுநகரிலே வாள் ஏந்தும் போராட்டம் ஒன்றினை இளைஞர் சிலர் ஏற்பாடு செய்து நடத்தினர். 6 அங்குல நீளத்திற்கு மேல் யாரும் கத்தி வைத்துக் கொள்ளக்கூடாது என்ற சட்டம் இருந்த காலகட்டம் அது. அப்போது தனது பங்களிப்பாக ஐந்து வாள்களைத் தயார் செய்து கொடுத்தார் காமராஜர். அது மட்டுமின்றி அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள சிலர் தயக்கம் காட்டியபோது

    நெஞ்சில் உரமுமின்றி

    நேர்மைத்திறமுமின்றி

    வஞ்சனை செய்வாரடி கிளியே

    வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே

    என்ற பாரதியார் பாட்டை உரக்கப்பாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

    ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி சட்டசபைக்குச் செல்வதா? வேண்டாமா? என்பது பற்றி ஒரு பிரச்சினை ஏற்பட்டது.

    அப்போது தேசபந்து சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு, எஸ்.சீனிவாச ஐயங்கார், புலாபாய் தேசாய், சத்திய மூர்த்தி ஆகியோர் அங்கம் வகித்த சுயராஜ்ஜியக் கட்சி சட்டசபைக்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சியிடமிருந்து எந்த உத்தரவும் அப்போது வரவில்லை. காங்கிரஸ் சுயராஜ்ஜியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தால் வேலை செய்யலாம் என்று அறிவித்த பிறகுதான் களத்திலே இறங்கி வேலை செய்தார் காமராஜர். 1926-ல் ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஏரல் போன்ற ஊர்களுக்கு தொண்டர் படையுடன் சென்று சீனிவாச அய்யங்காரோடும், சத்தியமூர்த்தியுடனும் சேர்ந்து பிரசாரம் செய்தார் காமராஜர். அப்போது அவரின் உழைப்பு பல தலைவர்களின் கவனத்தையும கவர்ந்தது. "காமராஜர்" என்ற பெயரும் பிரபலமாகத் தொடங்கியது.

    அப்போது வடநாட்டில், நாகபுரி நகரில் ஒரு கொடிப் போராட்டம் ஒன்று நடந்தது. வெள்ளையர்கள் வசித்த ஒரு தெருவில் காங்கிரஸ்காரர்கள் கொடியை ஏந்திச் செல்லக் கூடாது என்ற தடையை போலீசார் விதித்தனர். இந்தத் தடைக்கு நாடெங்கும் மிகப்பெரிய எதிர்ப்புக் கிளம்பியது. இந்தியா முழுவதிலும் இருந்து இந்தத் தடையை உடைத்தெறிய தொண்டர்கள் சாரை சாரையாகக் கிளம்பினர். இதைக் கேள்வியுற்ற காமராஜர் தனது கைவசம் தயாராக இருந்த தொண்டர் படையினைத் திரட்டி முதற்கட்டமாக உடனே நாகபுரிக்கு அனுப்பி வைத்தார். அடுத்து காமராஜர் புறப்பட்டு அங்கு போய்ச் சேருவதற்குள் ஓர் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் நிறுத்தப்பட்டு விட்டது.

    இப்படித் தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்தியாவின் எந்த மூலையில் எது நடந்தாலும், வெள்ளையனை எதிர்ப்பதில் முதல் ஆளாக நின்று பேரெடுத்தார் காமராஜர். இதன் மூலம் காந்திஜி, நேருஜி, பட்டேல் போன்ற தலைவர்களின் கவனத்தை தனது கடினமான உழைப்பால் ஈர்த்து பேர் பெற்றார் காமராஜர்.

    நாளாக... நாளாக... வளர்ந்து வந்தார் காமராஜர்.

    அடுத்த வாரம் சந்திப்போம்.

    Next Story
    ×