என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உடல் நலம் காக்கும் அவல்
    X

    உடல் நலம் காக்கும் அவல்

    • மண்ணீரலைப் பலப்படுத்தத் தேவையான இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவை சமைக்கப்படாத அரிசிக்கே உண்டு.
    • அவுலை ஊற வைத்து, காய்ச்சிய வெல்லப்பாகில் போட்டு, தேங்காயத் துருவல், சுக்கு, ஏலக்காய் பொடியும் போட்டு கிளறினால் அற்புதமான இனிப்பு தயார்.

    அவல் அன்றாட சிறுதீனியில் ஒன்றாகவும், சிற்றுண்டித் தயாரிப்பதற்கான ஒன்றாகவும் இருந்து வந்தது. இன்றைய உணவு உற்பத்திப் பெருக்கமும், மாவாட்டும், கிரைண்டரும், மாவினைப் பதப்படுத்துவதற்காக வீட்டிற்குள் நுழைந்த குளிர்சாதனப் பெட்டியான ப்ரிட்ஜும் பரவலாக ஆவதற்கு முன்னர் நடுத்தரக் குடும்பங்களில் அவசர சிற்றுண்டித் தயாரிப்பிற்கு வீட்டில் எந்த நேரமும் அவுலை வைத்திருப்பார்கள். ஆழாக்கு அவுலை எடுத்து நீரில் மூழ்கப்போட்டு அடுப்பில் வாணலி ஏற்றி வெங்காயம், பச்சை மிளகாய் தாளிப்புப் போட்டு ஊறின அவுலை எடுத்துப் போட்டுப்பிரட்டினால் அற்புதமான சத்துணவு தயார்.

    இன்றைய தலைமுறையினருக்கு மெள்ளும் பழக்கம் அற்றுப் போனதால் அவல் பயன்பாடு அறுகி விட்டது. உலர் அவுலை நேரடியாக வாயிலிட்டு மென்றால் துவர்ப்பு, இனிப்பு, மென் கசப்பு ஆகிய சுவைகள் மாறி மாறி வாயில் தோன்றும். எந்தப் பொருளை வாயிலிட்டு மெள்ளும்போது சுவை மாறி மாறி வருகிறதோ அது சத்தான உணவு என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மாம்பழத்தை எடுத்துத் தோலைக் கடித்தால் கசப்பும் துவர்ப்பும் சேர்ந்த சுவை. அடுத்து உள்ளே சதையைக் கடித்தால் நாவில் படரும் புளிப்பு, அடுத்த தேமதுரம் என்று சொல்லக் கூடிய தேனினிப்பு. இத்தேனினிப்பு நாவில் பட்ட நொடியில் உள்ளே சுரப்பிகள் சிலிர்த்தெழுந்து உடலின் ஆரோக்கியத்திற்கு உரிய நற்சுரப்பிகளைத் தூண்டும்.

    பிள்ளைகள் மாங்காயை உப்பு, கார கலவையில் தொட்டுக்கடித்துத் தின்பார்கள். அது அவர்களுக்குச் சொர்க்கத்தை எட்டிய நிறைவைக் கொடுக்கும். பிள்ளைகளின் பள்ளிக் கூடத்திற்கு வெளியே உழைத்துத் தேய்ந்த தாய்மார்கள் பாட்டிகளாக சாக்கு விரித்து மாங்காய்க் கடைப் போட்டிருப்பார்கள். மாங்கீற்றையோ, மாங்காயையோ வாங்கிக் கடித்து வீடு சேறும் பிள்ளைகளுக்கு பள்ளி வகுப்பறையில் பெற்ற சலிப்பும், சோர்வும் கூடிய நிமிடத்தில் தொலைந்து சுறுசுறுப்படைந்து மீண்டும் விளையாட்டிற்குத் தயாராகி விடுவார்கள்.

    ஆனால் சுத்தம், சுகாதாரம் என்ற பெயரில் அந்தப் பாட்டிக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. நமது பிள்ளைகள் தமது வகுப்பறைக் களைப்பைப் போக்க நேராக பேக்கரிகளை நோக்கி ஓடுகிறார்கள். மிகச் சுத்தமாகப் பளபளப்பாக அடுக்கி வைக்கப்பட்டுக் கண்களைச் சுண்டி இழுக்கும் வண்ணத்தில் நிரம்பி உள்ள தின்பண்டங்கள் பார்க்க என்னவோ அழகாய்த்தான் இருக்கின்றன. இவை நம்முடைய இளம் பிஞ்சு நாவின் சுவை மொட்டுக்களில் இருந்து சிறுநீரகம் வரை அனைத்தையும் காவு வாங்குபவை. பெற்றோரின் பணப் பையையும் பதம் பார்ப்பவை.

    மாங்காய், கலாக்காய், நெல்லிக்காய், கொடிக்காய் என்று இன்றும் கிடைக்கிற வகைவகையான காட்டுக் காய்கள் பல்வேறு சுவைகளை நாவிற்குக் கொடுப்பதுடன் உடலின் சுரப்புகளையும் நிறைவு செய்பவை. ஆனால் அவற்றில் இருந்து வெகுதூரம் விலகி வந்து விட்டதால் தான் பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கும் சிறுநீரகக் கல், பித்தப்பைக் கல், தைராய்டு ஏற்ற இறக்கம், தோல்தடித்தல் மாதாந்திர உதிரப்போக்கு தள்ளிப் போதல் ஆகிய தொடர் உபாதைகளுக்குக் காரணமாக இருக்கின்றன.

    பூப்பெய்திய பெண்கள் பலர் அடிக்கடி அரிசியை எடுத்து வாயில் போட்டு மெள்ளுவதைப் பார்த்திருப்போம். இது தவறான பழக்கம் என்றே நம்மில் பலரும் கருதுகிறோம். இவர்களுக்கு நுண் சத்துக்கள் பற்றாக்குறை, மண்ணீரல் பலமிழந்து விட்டது என்று பொருள். அதனை ஈடுசெய்யக் கூடிய சத்துகள் விட்டமின் மாத்திரைகளிலோ, பாதாம் – முந்திரிப் பருப்புகளிலோ, தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் சத்துப் பானங்களிலோ இல்லை.

    மண்ணீரலைப் பலப்படுத்தத் தேவையான இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவை சமைக்கப்படாத அரிசிக்கே உண்டு. அதைக் காட்டிலும் சிவப்பு அவுலுக்கு உண்டு. சிவப்பான கெட்டி அவலை வாயில் இட்டு ஊற வைத்த உடன் இனிப்பும், துவர்ப்பும் கலந்த எச்சில் ஊறும். எச்சில் ஊற ஊற அவல் மெள்ளுவதற்கு ஏற்றதாக மாறும். இப்பொழுது நன்றாக மென்று மென்று அவுலைத் தின்னத் தின்ன மண்ணீரல் பலம் பெற்று இரத்த உற்பத்திப் பெருகும். பெண்களுக்கு உரிய மாதாந்திர உதிரப் போக்கு சீர்படும். இன்றைய தலைமுறைப் பெண்களில் கிட்டத்தட்டப் பாதிக்கும் மேற்பட்டோருக்கு மாதாந்திர உதிரப் போக்கு சீராக இல்லை. ஏனென்றால் இன்றைய உணவு எதை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் போதிய சத்துக்கள் இல்லை.

    இப்படி இல்லாது போன சத்துக்களை உடனடியாக ஈடுசெய்ய வல்லது சிவப்பரிசி கெட்டி அவல். அவுலானது மற்ற தின்பண்டங்களைப் போல பளீரென்ற நிறத்தில் இல்லாமல் மங்கிய நிறத்தில் இருப்பதால் நம்மவர்கள் பலருக்கும் அதனைச் சாப்பிடத் தகுந்த பொருளாகக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. சுவையும் நாவினை சுண்டி இழுப்பதில்லை. எனவே பலரும் அவுலை விரும்புவதில்லை. ஆனால் அவல் தரும் சத்துக்கள் வேறெந்த தின்பண்டத்திலும் இல்லை.

    அவுலை ஊற வைத்து, காய்ச்சி வெல்லப்பாகில் போட்டு, தேங்காயத் துருவலும் சுக்கு ஏலக்காய்ப் பொடியும் போட்டுக் கிளறினால் உடலுக்கு உபத்திரவம் தராத அற்புதமான இனிப்பு தயார். இந்த இனிப்பு உடலுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். நாட்பட்டக் காய்ச்சலில் கிடந்து தேறியவர்களுக்கு நல்லதோர் சத்தக் கொடுக்கும் உணவாகும் இது. சிலர் இயல்பிலேயே மெலிந்து காணப்படுவார்கள். எப்போதும் ரத்த சோகை பிடித்தது போல சோர்வாகவே காணப்படுவார்கள். அவர்களுக்கு அரிசி அவல் மட்டுமல்ல அனைத்துத் தானிய அவுலும் மாற்றி மாற்றிக் கொடுக்க ரத்த உற்பத்தி அதிகரித்து விரைவில் தேறுவார்கள்.

    சிலருக்கு எதைத் தின்றாலும் அடுத்த சில நிமிடங்களிலேயே எதையாவது உண்ண வேண்டும் போலிருக்கும். இது கெட்ட பழக்கம் என்றே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருப்போம். இவர்களுக்கு சிவப்பரிசிக் கெட்டி அவுலை ஊற வைத்து உடன் தேங்காய்த்துருவல், நாட்டுச் சர்க்கரை, உலர் திராட்சை, உடன் ஒரு வாழைப்பழத்தை அரிந்து போட்டு கலக்கிக் கொடுத்தால் மிகவும் நல்லது.

    மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் இந்தக் கலவை மிகவும் பயன்தரும். நார்ச்சத்து மிகுந்திருப்பதால் செரிமானப் பாதையைச் சுத்தம் செய்யும் என்பதால் வாயுத்தொல்லை உள்ளவர்களுக்கும் அவல் வாழைப்பழக் கலவை பேருதவியாக இருக்கும்.

    இட்லி, தோசை மாவு புளிப்பேறி விட்டால் அதனைச் சரிசெய்ய வெங்காயத்தை வெட்டிப்போடுவார்கள். புளிப்புமாவில் காரச் சுவைக் கூடுவதால் புளிப்பின் தன்மை குறைவாகத் தோன்றலாம். புளிப்பின் கேடுகள் வயிற்றைப் பாதிக்கவே செய்யும். குறிப்பாக வயிற்றில் அமிலத்தன்மை மிகுந்தவர்களுக்கு மேற்படி மாவு வயிற்றில் சேரும்போது வயிற்றுப் புண் அதிகரித்து அது பல்வரைப் பதம் பார்க்கும். அவுலை எடுத்து மிக்ஸியில் இட்டு அரைத்தால் ரவைப் பதத்திற்கு வரும் அதனை எடுத்துப் புளிப்பு மாவுடன் கலக்கி சற்றுநேரம் ஊறவைத்தால் புளிப்புக் குறைவதுடன் சுவையும் நன்றாக இருக்கும்.

    குடல்புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள், சோறு குழம்பு என்று வழக்கமான உணவு உண்ணும்போது புண் ஆறுவதற்கு இடமில்லை. அந்தப் பிரச்சனை உள்ளவர்கள் அவுலுடன் தேங்காய்ப்பூ சேர்த்து உண்ணும் பொழுது அது நல்ல சத்தான உணவாகவும் இருக்கும். புண்ணும் விரைவில் ஆறும். பல் கூச்சம் உள்ளவர்கள் தங்களது பிரச்சனை பல்லில் தோன்றவில்லை வயிற்றில் அமிலத் தேக்கமே பிரச்சனைக்கு வேர்க் காரணம் என்பதைப் புரிந்து கொண்டால் அவல் சேர்ந்த உணவை சேர்த்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.

    அவுலுடன் சில சேர்மானங்களைச் சேர்த்து உண்பதன் மூலம் தொப்பையைக் குறைக்க முடிவதுடன் நெஞ்செரிச்சல் புளித்த ஏப்பம் போன்ற பல்வேறு நிரந்தர தொல்லைகளுக்குத் தீர்வுகாண முடியும்.

    மிக விரைவில் தயாரிக்கும் எளிய அவல் உணவுகள் குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்.

    Next Story
    ×